Published:Updated:

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

ஏ டு இஸட்வே.கிருஷ்ணவேணி - ஆ.சாந்தி

ரியாவுக்கு ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் இருப்பதைப்போல இன்று செயற்கைக் கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கை பெருகிவருகின்றன. நமக்கு முந்தைய தலைமுறைகளில், தாயும் மகளும் ஒரே நேரத்தில் கருத்தரித்த சம்பவங்கள்கூட நடந்திருக்கின்றன.

மாம், அந்தக் காலத்தில் 50 வயதுவரைகூட பெண்கள் பிள்ளை பெற்றிருக்கிறார்கள். இன்றோ, 27 வயதுப் பெண்களெல்லாம் இன்ஃபெர்ட்டிலிட்டி சென்டருக்குச் செல்கிறார்கள். திருமணமாகி இரண்டு, மூன்று வருடங்கள் குழந்தையில்லாமல் கழிந்தாலே அந்தத் தம்பதிக்குக் கேள்விகளால் மன உளைச்சல் தருவதுடன், ‘அந்த வைத்தியரைப் பாருங்க’, ‘அந்த டாக்டர் கைராசிக்காரராம்’ என, பல மருத்துவர்களின் முகவரியையும் சேர்த்துத் திணித்துவிடுகிறது சமூகம். இந்தச் சூழலில், செயற்கைக் கருத்தரிப்பு மையங்களே அவர்களின் கண்முன்னே உள்ள பெரிய நம்பிக்கையாக இருக்கிறது.

இன்ஃபெர்ட்டிலிட்டி சென்டர்கள் பற்றிய மருத்துவத் தகவல்கள் முதல், கட்டணச் சுமைகள், சிகிச்சை பெற்றவர்களின் அனுபவங்கள் வரை விரிவாக அலசும் சிறப்புக் கட்டுரை இது.

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

குழந்தையின்மை... காரணங்கள் என்னென்ன?

ஓர் ஆணோ, பெண்ணோ, ‘இனி இவரால் கருத்தரிக்க முடியாது, செயற்கைக் கருத்தரிப்பு ஒன்றே வழி’ என்ற முடிவு எடுக்கப்படும் மருத்துவச் சூழல்கள் பற்றி விளக்குகிறார், மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.

``பெண்களைப் பொறுத்தவரை, மரபுரீதியான காரணங்கள், ரசாயனம் தெளித்த உணவுகள், துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட வாழ்க்கைமுறைக் காரணங்கள், இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுபோவது, காசநோய் போன்ற நோய்கள், இரண்டு கரு இணைக்குழாய்களும் அடைபட்டுப்போயிருப்பது, ஏற்கெனவே கரு உருவாகி அது கர்ப்பப்பையை அடையாமல் கரு இணைக்குழாயில் வளர்ச்சியடைந்த நிலையில், கரு இணைக் குழாய் அறுவைசிகிச்சை செய்து நீக்கப் பட்டிருப்பது, அடைப்புகளற்ற - ஆனால், நோய்வாய்ப்பட்ட கரு இணைக்குழாய்கள் செயலிழந்துபோயிருப்பது, `பெல்விக் இன்ஃப்ளமேட்ரி டிசீஸ்' என்று சொல்லக்கூடிய அடிவயிற்றில் வீக்கம், வலியுடன்கூடிய நோய் ஏற்பட்டிருப்பது, எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் கருப்பையின் உள்வரி ஜவ்வு வெளியில் சிதறிய நிலை, எண்டோமெட்ரியம் திசுக்கள் அளவுக்கதிகமாகக் கருப்பையின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் வளர்ந்திருப்பது, சிலருக்குக் கருப்பையின் உள்ளே பிறவியிலேயே ஒரு தடுப்புச்சுவர் இருப்பதால் கருத்தரித்தும் கரு தங்காத நிலை, அபூர்வமாகச் சில பெண்களுக்குப் பிறப்புறுப்பின் துளையே மிகச்சிறியதாக இருப்பது, சினைப்பையில் நீர்க்கட்டிகள், கருப்பையில் நார்க்கட்டிகள், IUI (Intrauterine Insemination) முறையில் நான்கு தடவை கருத்தரிப்புக்கு முயன்றும் வெற்றி கிடைக்காத நிலை... இந்தச் சூழல்களில் எல்லாம் செயற்கைக் கருத்தரிப்பு முறை அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

ஆண்களுக்கான  காரணங்கள் என்று வரும்போது, மரபுரீதியான கோளாறுகள், விறைப்புத்தன்மை குறைவாக இருப்பது, விரைவில் விறைப்புத்தன்மை இழப்பது, விதைப்பையில் உள்ள ரத்தநாளங்களில் வீக்கம், விதைப்பை அதற்குரிய இடத்தில் இல்லாமல் வயிற்றுக்குள்ளேயே இருப்பது, விந்தணுக்கள் உற்பத்தியில்லாமல் இருப்பது, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விந்தணுக்களின் அசைவு, வீரியத்தில் குறைபாடு இருப்பது ஆகியவற்றிலும் சில ஆண்களின்  உடலில் அவர்களின் விந்தணுக்களுக்கு எதிரான எதிர்ப்பொருள் காணப்படுவது (ASAB) மற்றும் விவரிக்க இயலாத மலட்டுத்தன்மை போன்றவை செயற்கைக் கருத்தரிப்பு முடிவெடுக்கக் காரணமாகின்றன’’ என்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

சிகிச்சை வகைகள்

குழந்தையின்மைக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றிச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத்.

``1982-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO), ‘ஆணின் ஒரு துளி விந்தில் குறைபாடற்ற 8 கோடி உயிரணுக்கள் இருந்தால் நார்மல்’ என்று அறிக்கை வெளியிட்டது. இன்று அதே உலக சுகாதார அமைப்பு, ‘ஆணின் ஒரு  துளி விந்தில் 2 கோடி உயிரணுக்கள் இருந்தாலே நார்மல்தான்’ என்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நம் உணவு முறையும் வாழ்க்கை முறையும் அந்தளவுக்கு மனிதனின் ஆரோக்கியத்தைச் சிதைத்திருக்கின்றன’’ என்கிற டாக்டர், இன்ஃபெர்ட்டிலிட்டி சிகிச்சைகள் பற்றித் தொடர்கிறார்.

 * ``  திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே கழிந்திருக்கும் நிலையில், சுற்றம் தரும் அழுத்தத்தால் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்கு வரும் தம்பதிகளுக்கு, அடிப்படைப் பரிசோதனைகள் மட்டும் செய்துவிட்டு, தாம்பத்திய முறை குறித்த கவுன்சலிங்கும் தைரியமும் கொடுக்கப்  படும். 

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

* திருமணமாகி இரண்டு வருடங்களாகி யும் குழந்தை இல்லையென்றால், எல்லா பரிசோதனைகளும் மேற்கொண்டு, அவை நார்மல் என்றால், கருமுட்டை உருவாக மருந்து தரப்படும். தாம்பத்திய உறவில் ஒருநாள் விட்டு ஒருநாள் ஈடுபட வலியுறுத்தப்படும்.  அதில் வெற்றி கிடைக்கவில்லை எனில், ஸ்கேன் செய்து கருமுட்டை விடுபடுகிற நாளைக் கணித்து, அந்நாள்களில் உறவில் ஈடுபடப் பரிந்துரைக்கப்படும்.  

* முந்தைய பரிந்துரையில் கரு உருவாகாத நிலையில், லேபரோஸ்கோப்பி அல்லது ஹிஸ்டெரோசால்பிங்கோகிராம் (Hysterosalpingogram) பரிசோதனை முறைகளில் கருப்பை, சினைப்பைகள், கருக்குழாய்களில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பது கண்டறியப்படும். சம்பந்தப்பட்ட பெண்ணின் பிரச்னையைப் பொறுத்து, அவர் கணவரின் ஆரோக்கியமான உயிரணுக்கள் ஊசி மூலம் அவருடைய கருப்பையில் செலுத்தப்படும் (IUI - Intrauterine Insemination). அல்லது, மனைவியின் கருமுட்டை, கணவரின் உயிரணு இரண்டையும் டெஸ்ட் டியூபில் ஒன்று சேர்த்து, 48-96  மணி நேரம் வரை வளர்த்து, கருப்பையினுள் செலுத்தப்படும் (IVF - In Vitro Fertilization). 

* எண்டோமெட்ரியம் பிரச்னை இருக்கும் பெண்கள், இரண்டு கருக்குழாய்களும் அடைபட்டிருக்கும் பெண்கள், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் ஆகியோருக்கு `டெஸ்ட் டியூப்' முறைதான் பயனளிக்கும். இந்தச் சிகிச்சைக்கான செலவு அதிகம்; மருந்துகளும் அதிகமாக இருக்கும். தவிர, கரு கலைந்துபோவதற்கும், குறைப்பிரசவத்துக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

* கணவருக்கு உயிரணுக்கள் உற்பத்தியே இல்லாதபட்சத்தில், உயிரணு தானம் பெற்று, IUI அல்லது டெஸ்ட் டியூப் முறையில் கருவாக்கலாம்.

* ஆணிடம் குறைபாடு இருக்கும்பட்சத்தில், ஓர் உயிரணுவை எடுத்து நுண்ணிய ஊசியின் மூலமாக நேரடியாகக் கருமுட்டையில் செலுத்தப்படும் ICSI (Intracytoplasmic Sperm injection) சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படும்.

* பெண்ணிடம் குறைபாடு இருக்கும்பட்சத்தில், கருமுட்டை தானம் பெற்று சிகிச்சை மேற்கொள்ளலாம் அல்லது வாடகைத்தாய் மூலமாகக் குழந்தைப்பேறு பெறலாம். 

* பிரிஇம்ப்ளான்ஷன் ஜெனெடிக் டயக்னோசிஸ் (பிஜிஸ்) அதாவது எம்ப்ரியோ பயாப்சி இணைந்த கருவினை பிளாஸ்டோசிஸ்ட் (6 – 8 செல்களாக) திசுக்களாக வளர்த்து, அதிலிருந்து ஒரேயொரு திசுவைப் பிரித்து எடுத்து பிஜிஎஸ் எனும் பரிசோதனை செய்யப்படும். இந்த அதிநவீன முறைமூலம் பொதுப்படையாக உள்ள இனக்கீற்றுக் குறைபாடுகளைக் கண்டறிய முடியும். இயற்கையாகவே இணைந்த கருவில் 60% - 70% வரையில் குறைபாடு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்தப் பரிசோதனையில் குறையற்ற இணைக்கருவைத் தேர்வு செய்து IVF-ET செய்வதனால் வெற்றியின் இலக்கை அதிகரிக்க முடியும். இதன்மூலம் குறைபாடுள்ள குழந்தைப் பிறப்பை அறவே தடுக்கலாம்.

  * இஆர்ஏ - எண்டோமெட்ரியல் ரிசப்டிவிட்டி அர்ரே டெஸ்ட் (endometrial receptivity array test) சோதனையில் 238 மரபணு மூலக்கூறுகளையும் ஆராய்ந்து, உள்வரிச் சவ்வின் ஏற்றுக்கொள்ளும் நிலையையும் அறிய முடியும். கருப்பையின் உள்வரிச் சவ்வானது, இணைந்த கருவைப் பதியும் நிலையில் உள்ளதா என்றும் அறிய முடியும். எந்த நாளில் இணைந்த கரு பதிவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்கலாம்.

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி - செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

சம்பந்தப்பட்ட தம்பதியின் உடல்நலனைப் பொறுத்து, இப்படிப் பல வகையான குழந்தைப்பேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன’’ என்கிறார் டாக்டர்  ஸ்ரீகலா பிரசாத்.

செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்கான அரசு அங்கீகார வரையறைகள், இம்மையங்களின் மீது வைக்கப்படும் புகார்கள், அதையொட்டிய தம்பதிகளின் பகீர் அனுபவங்கள், குழந்தையின்மைப் பிரச்னையைச் சரிசெய்ய மாற்று மருத்துவங்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகள்...

(அடுத்த இதழில்)

செயற்கை முறை கருத்தரித்தல் ... சில தகவல்கள்!

ன்ஃபெர்ட்டிலிட்டி சிகிச்சை குறித்த சந்தேகங்களுக்கு விடைதருகிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

செயற்கை முறை கருத்தரித்தல் சிகிச்சையை அதிகபட்சமாக எத்தனை முறை மேற்கொள்ளலாம்?

``எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சிசெய்யலாம். ஆனால், அந்த சிகிச்சையைத் தாங்கும் அளவுக்குச் சம்பந்தப்பட்ட  பெண்ணுக்குப் பண வசதியும், உடல் தகுதியும், மன தைரியமும் இருக்க வேண்டும்.’’

பெண்கள் எந்த வயதுவரை முயற்சி செய்யலாம்?

``ஒரு பெண், 42 வயதுவரை தன் கருமுட்டை மூலமோ, அதைத் தானமாகப் பெற்றோ குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். 45 வயதுக்கு மேல் என்றால், கருமுட்டை தானம் மூலமாக மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். மொத்தத்தில், ஒரு பெண்ணுக்கு 50 வயதுவரை செயற்கைக் கருத்தரித்தல் சிகிச்சையை மேற்கொள்ளலாம் (ஐ.சி.எம்.ஆர் வரையறைப்படி).’’

செயற்கைக்  கருத்தரித்தல் சிகிச்சையின் பக்கவிளைவுகள் என்னென்ன?

இந்த IVF தொழில்நுட்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டைகளை உற்பத்தி செய்ய சில ஹார்மோன் ஊசிகளைச் செலுத்த வேண்டியிருக்கிறது. அப்படி செலுத்தும்போது மிகச் சிலருக்கு மட்டும் ஒவேரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் (அடி வயிற்றில் நீர் சேரும்) (Ovarian Hyper Stimulation Syndrome) எனப்படும் கருவக வீக்கம் ஏற்படலாம். இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுச் சரி செய்துகொள்ளலாம்.