பிரீமியம் ஸ்டோரி

முத்தலாக்... இதுதான் இப்போதைய பேசுபொருளாக இருக்கிறது.

பெண்களைப் பொறுத்தவரை, மதம் சார்ந்த கட்டுப்பாடுகளுக்கு எந்த மதத்திலும் குறைவில்லை. காலம் மாற மாற, அவையெல்லாம் உடைபட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், இஸ்லாமிய சமூகத்தில் சமீபகாலமாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் ஒரு விஷயம்தான், முத்தலாக். இஸ்லாமிய மதத்தைப் பொறுத்தவரை `தலாக்' என்று மூன்றுமுறை சொல்லியே மனைவியை எளிதாக விவாகரத்து செய்துவிட முடியும்.

நமக்குள்ளே!


துபாயில் இருக்கும் கணவர், தொலைபேசி வழியாக மும்முறை தலாக் சொல்ல, தன் இரண்டு குழந்தைகளுடன் அநாதரவாக விடப்பட்டார் இஷ்ரத். இது நடந்தது, கடந்த 2014-ல். ஸ்பீடு போஸ்ட் தபால்மூலம் வந்த முத்தலாக் கடிதத்தால் விவாகரத்துக்கு ஆளானார் ஷாயரா பானு. இவர்களைப்போல குல்ஷன் பர்வீன், அஃப்ரீன் ரஹ்மான், அதியா சாப்ரி என பாதிக்கப்பட்ட இன்னும் பலருடன் `பாரதிய முஸ்லிம் மஹிளா ஆந்தோலன்' என்கிற அமைப்பும் இணைந்து தொடர்ந்த வழக்கு ஒன்றில், `முத்தலாக் சட்ட விரோதமானது’ என்று சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதைத்தொடர்ந்து, முத்தலாக் தடை மசோதாவை (முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா) மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கும் மத்திய அரசு, மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

விவாகரத்து எனும்போது, இஸ்லாமியப் பெண்களுக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்பதைத்தான் உச்ச நீதிமன்றம் உரக்கச் சொன்னது. அதனடிப்படையில் உருவான இந்த மசோதா, சட்டமாக்கப்படுவதற்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தந்திருக்க வேண்டும். ஆனால், எதிர்ப்பு கிளம்பியிருப்பதற்கு என்ன காரணம்? `இந்தச் சட்டமும் பெண்களுக்குச் சமநீதி வழங்கும்விதமாக இல்லாமல், மேலும் சிக்கலை உண்டுபண்ணும் வகையில் இருக்கிறது’ என்பதுதான் எதிர்ப்பவர்களின் வாதம்.

முத்தலாக் என்பதைக் குற்றவியல் விதிகளுக்குள் கொண்டுவரும் இந்த மசோதா, அவ்வாறு செய்யும் ஆண்களுக்கு ஜாமீன் ஏதுமின்றி மூன்றாண்டுக் காலம்வரை சிறைத் தண்டனை வழங்க வழி வகை செய்கிறது. அதேபோல, உடனடியாகக் கணவனைக் கைது செய்துவிட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு யார் ஜீவனாம்சம் தருவது என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இஸ்லாமியப் பெண்கள் மட்டுமல்லர்; எந்த மதத்தைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும், நலன்காக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், குழப்பங்களற்ற, தெளிவான சட்டக் கூறுகளுடன், தவறிழைக்காதவர்களுக்கு அநீதி இழைக்காத வகையிலும் சட்டங்கள் அமைய வேண்டும் என்பதுதான் முக்கியம். அதேபோல, விவாகரத்துக்குப் பின் கண்ணியமான வாழ்க்கை வாழும் உரிமையை, சாதி மதப் பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு பெண்ணும் பெற வேண்டும் என்பதையும் அந்தச் சட்டங்கள் உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதுதான் சமநீதி சொல்லும் சட்டமாக இருக்கமுடியும்!

உரிமையுடன்,

நமக்குள்ளே!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு