Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
14 நாள்கள்

பெண் உலகம்நிவேதிதா லூயிஸ்

பிரியங்காவின் பிரச்னை முதல் தமிழ்நாட்டுப் பெண்களின் விழிப்பு உணர்வு வரை... இந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

14 நாள்கள்

பிரியங்காவையும் விட்டுவைக்காத ஆணாதிக்க மோசடி!

பாலிவுட் நடிகைகளிலேயே மிகவும் தைரியமானவர் என அறியப்படும் பிரியங்கா சோப்ரா, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை எதிர்க்கும் `மீ டூ’ பிரசாரத்தில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், “நடிக்க வந்த புதிதில் என்னைத் தூக்கிவிட்டு நடிகர் அல்லது இயக்குநரின் கேர்ள் ஃப்ரெண்டை ஹீரோயினாக்கிப் படத்தைத் தொடர்வார்கள். இதுவும் ஆணின் அதிகார துஷ்பிரயோகம்தான். அந்த நேரத்தில் என் குடும்பம் என்னை அரவணைத்துக்கொண்டது. குடும்பம், நல்ல நட்பு என ஆதரவு எதுவுமில்லாத பெண்களின் பாடு திண்டாட்டம்தான்” எனக் கூறியுள்ளார் பிரியங்கா.

“தனக்கு நேர்ந்த கொடுமையைத் தானாக முன்வந்து சொல்வது என்பது எந்தப் பெண்ணுக்கும் எளிதானது அல்ல. ஆனால், துணை இருந்தால், அதை எளிதாக எதிர்கொள்ள முடியும். பெண்ணை எப்போதும் நான் பாதிக்கப்பட்டவளாகப் பார்ப்பதில்லை. தப்பிப் பிழைத்தவளாக, மீண்டு எழுந்தவளாகவே பார்க்கிறேன். பெண்கள் `ஏதோ வாழும்’ உலகம் வேண்டாம்; `செழித்து வாழும்' உலகம் வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

பியூட்டி வித் ப்ரெயின்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
14 நாள்கள்

புயலுக்கு நடுவே இரு பெண்கள்!

குல்பூஷன் ஜாதவ் - மரண தண்டனை விதிக்கப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் மார்ச் 2016 முதல் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதி. உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இவர், முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி. சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், அவர் மனைவி சேத்னா மற்றும் தாய் அவந்தி இருவரையும் ஒருவழியாக பாகிஸ்தானிய சிறையில் சந்திக்க அனுமதித்தது அந்நாட்டு அரசு. தாலியை அகற்றி, பொட்டு, வளையல்களைக் கழற்றச்செய்து பெண்கள் இருவரையும் கண்ணாடிக்கு அப்பால் ஜாதவின் முன் நிறுத்தியது பாகிஸ்தான் சிறைத்துறை. தாய்மொழியான மராத்தியிலும் அவர்கள் உரையாடத் தடை செய்தது.

45 நிமிட சந்திப்புக்குப்பின் பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அலுவலகத்தின் வாசலில் காத்திருந்த சேத்னா மற்றும் அவந்தியைச் சூழ்ந்துகொண்ட பாகிஸ்தான் ஊடக நிருபர்கள், `காதில் கி மா’ (கொலைகாரனின் தாய்) என கோஷம் எழுப்பினர். “ஆயிரக்கணக்கான அப்பாவி பாகிஸ்தானியர்களின் ரத்தக்கறை உங்கள் கொலைகார மகன் கைகளில் உள்ளதே, இப்போது உங்களுக்கு நிம்மதியா?” எனச் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பினர். பாகிஸ்தான் சென்று குல்பூஷனைச் சந்தித்த அவரது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக அமைச்சர் சுஷ்மா தெரிவித்திருக்கிறார். ஆரம்பம் முதலே குல்பூஷன் உளவாளி அல்ல என அவர் தரப்பும், இந்தியாவும் மறுத்துவந்திருக்கின்றன. பாகிஸ்தானோ, அவர் உளவாளியே எனச் சாதித்துவருகிறது. இரண்டு அப்பாவிப் பெண்கள் இந்தப் புயலுக்கு நடுவே சிக்கி, உளவியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

`எந்தப் போரிலும் முதல் பலி பெண்கள்தான்’ என்று ஹிலாரி கிளின்டன் சொன்னது எத்தனை உண்மை!

14 நாள்கள்

மாதவிடாய் அனுகூல மசோதா!

நாட்டில் முதன்முறையாக `மாதவிடாய் அனுகூல மசோதா, 2017’ என்கிற தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறார் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் நினாங் எரிங். `தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் வேளையில், ஒவ்வொரு மாதமும் இரண்டு நாள்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும்' என்பதுதான் மசோதாவின் சாராம்சம். `மாதவிடாய் நாள்களில் பெண்கள் ஓய்வெடுக்கத் தகுந்த வசதிகளைப் பணியிடங்களில் செய்ய வேண்டும்' எனவும் மசோதா வலியுறுத்துகிறது.

ஏற்கெனவே இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகளில் இதுபோன்ற மாதவிடாய் விடுப்பு, தொழிலாளர் சட்டப்படி உள்ளது. 2017 ஜூலையில், மும்பையைச் சேர்ந்த ‘கல்ச்சர் மெஷின்’ என்ற நிறுவனம் பெண் தொழிலாளர்களுக்கு, ‘மாதவிடாய் முதல் நாள் விடுப்பு’ செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதைத் தொடர்ந்து மகளிர் அமைப்புகள் மாதவிடாய் விடுமுறை குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்த, இப்போது நாடாளுமன்றத்தில் மசோதா குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. பெண்களை மேலும் அடிமையாக்கும் முயற்சி, பிற்போக்கான செயல்பாடு எனப் பெண்ணியவாதிகள் சிலர் இந்த மசோதா மற்றும் விடுப்புமீது விமர்சனங்கள் வைத்தாலும், மாதவிடாய் குறித்த வெளிப்படையான விவாதங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடப்பதே ஆரோக்கியமான முன்னெடுப்பு என்றுதான் கொள்ள வேண்டும்!

ஆபீஸ்ல ‘அந்த நாளுக்கு’ லீவு குடுப்பாங்க… வீட்டுலங்க எசமான்?

14 நாள்கள்

புரட்சிப் பெண்மணி!

46 வயதுப் பெண். ரஷ்யாவின் மிகப்பெரிய இஸ்லாமிய ஊடக நிறுவனமான `இஸ்லாம்.ஆர்யூ’-வை வெற்றிகரமாக நடத்திவருபவர். சூஃபி இஸ்லாமியர் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர். ரஷ்யாவின் டாகிஸ்தான் மாகாண தலைமை முஃப்தி அஹ்மத் அப்துலேவின் மனைவி. முதல் கணவர் சையது முகம்மது அபுபக்கரோவை, வஹாபி முஸ்லிம் தீவிரவாதிகளின் கார் வெடிகுண்டுக்குத் தாக்குதலுக்குப் பறிகொடுத்தவர். வஹாபி இஸ்லாமுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சமூகப் போராளி. இத்தனை முகங்கள்கொண்ட ஆய்னா கம்சதோவா, 2018 மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ரஷ்ய அதிபர் தேர்தலில் அதிபர் புடினை எதிர்த்துப் போட்டியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார். 14 கோடி மக்கள்தொகையில், ஒரு கோடி  இஸ்லாமிய வாக்காளர்கள்கொண்ட ரஷ்யாவில் தான் வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை அறிந்துவைத்திருக்கும் ஆய்னா, “நான் தேர்தலில் போட்டியிடுவது புடினுக்கு எதிராக அல்ல. பழைமைவாத வஹாபி இஸ்லாமுக்கு எதிரான என் குரலை உரக்கச் சொல்லவே தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

`ரஷ்யா நம் நாடு. இதில் நாம் முஸ்லிம், கிறிஸ்தவர், காக்கேசியர், ரஷ்யர் எனப் பிரிந்துகிடந்தால், அரசு முடங்கிப்போகும்' என்றும் தன் முகநூல் பக்கத்தில் கூறியிருக்கிறார். வடக்கு ரஷ்யாவின் காகஸ்ஸஸ் மலைப் பகுதிகளில் தனி இஸ்லாமிய நாடு கோரி ஆயுதப் போராட்டம் மேற்கொண்டு இருக்கும் வஹாபி போராளிகளுக்கு எதிராக ரஷ்ய அதிபரின் நடவடிக்கைகள் அத்தனை கடுமையாக இல்லை என்பதை அவரது இந்த அறிக்கை உணர்த்துவதாகச் சொல்கிறது, அல்-ஜஸீரா செய்தி நிறுவனம்.

ரஷ்யாவில் ஒரு பெண்ணால் மீண்டும் புரட்சி மலரட்டுமே!

14 நாள்கள்

கனிவு காட்டும் தெலங்கானா அரசு!

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் நிறையவே நடைமுறைப்படுத்தப்பட்டாலும், திருமணம் என வரும்போது ஒரு மனத்தடை சமுதாயத்தில் இருக்கவே செய்கிறது. இதைத் தகர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2015-ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாற்றுத்திறனாளிகளின் திருமண ஊக்கத்தொகையான 50 ஆயிரம் ரூபாயை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த தன்னால் இயன்ற அனைத்தும் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

தெலங்கானா அரசின் முதல்வர் சந்திரசேகர் ராவ், ஜனவரி 1, 2018 முதல் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டாலோ, அல்லது மாற்றுத்திறனாளி ஒருவர், மாற்றுத்திறனாளி அல்லாத நபரை மணம் முடித்தாலோ, ஊக்கத்தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என அரசு ஆணை பிறப்பித்திருக்கிறார். தமிழகத்தில் இந்த ஊக்கத்தொகை பட்டதாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கமாகவும், பட்டதாரி அல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கமாகவும் வழங்கப்படுகிறது.

தெலங்கானா வழியைத் தமிழகமும் பின்பற்றலாமே?

14 நாள்கள்

திருவளர்ச்செல்வன் யூட்டோ நினகா... திருவளர்ச்செல்வி சிகரு ஒபட்டா!

ஜப்பானைச் சேர்ந்த காதல் ஜோடி சிகரு ஒபட்டா மற்றும் யூட்டோ நினகா. 2017, ஏப்ரல் 1 அன்று ஜப்பானில் சிறிய நிகழ்வு ஒன்றில் திருமணம் செய்துகொண்ட இருவரும், கடந்த டிசம்பர் 31 அன்று மதுரையில் தமிழ் முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். ஆரஞ்சு வண்ண சட்டை அணிந்து அரக்கு வண்ணக் காஞ்சிப் பட்டும், தங்க நிற ரோஜா மாலையும் அணிந்து, அழகுக் குவியலாகக் காட்சி தந்தார் மணப்பெண் சிகரு. மாப்பிள்ளை யூட்டோ பளபள வெண்பட்டு வேட்டி சட்டை அணிந்து நெற்றியில் விபூதி குங்குமத்துடன் சாட்சாத் அழகிய தமிழ் மகனே தோற்கும் அளவுக்குக் கம்பீரத்துடன் தாலி கட்டினார். சிகருவின் தோழியான மதுரையைச் சேர்ந்த வினோதினி மற்றும் அவர் கணவர் வெங்கடேஷ் தம்பதி, வரவேற்பு உட்பட இந்தத் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

ஜப்பானில் மொழியியல் படித்த சிகரு, தமிழால் ஈர்க்கப்பட, 2014 மற்றும் 2015-ல் தமிழகம் வந்திருக்கிறார். அழகு தமிழில் பேசும் சிகரு, தமிழ்ப் பண்பாடு தனக்கு மிகவும் பிடித்ததாகவும், அதனால்தான் இந்திய முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் தெரிவித்தார். சிகருவுக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததால் ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நெருங்கிய நட்பாகி, இன்று தன் குடும்பத்தில் ஒருவராகத்தான் சிகருவை தான் உணர்வதாகக் கூறுகிறார் அவரின் தோழி வினோதினி. நலுங்கு, வரவேற்பு, காசி யாத்திரை என தமிழ்த் திருமணச் சடங்குகள் அத்தனையும் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி, மதுரை மீனாட்சியம்மனையும் வழிபட்டனர்.

வாழ்த்துகள்... தமிழ்நாட்டு ஜப்பானிய மகளுக்கும் மகனுக்கும்!

14 நாள்கள்

வியக்க வைக்கும் விழிப்பு உணர்வு!

சிஎஸ்டிஎஸ் (சென்டர் ஃபார் ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ்) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தேசிய தேர்தல் ஆய்வு முடிவுகள், பெண் வாக்காளர்களிடம் அதிகரித்துவரும் அரசியல் விழிப்பு உணர்வை உணர்த்துகின்றன. கடந்த 2016-ல் நடைபெற்ற தமிழக மற்றும் மேற்குவங்க தேர்தல்களில், பெண் வாக்காளர்களே வெற்றியை நிர்ணயம் செய்திருக்கின்றனர் என்று தெரிவிக்கிறது ஆய்வு முடிவு. கடந்த பத்தாண்டுகளில், படிப்பறிவு முன்னேற்றத்தாலும், தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகம் உபயோகிப்பதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு ஆய்வு முடிவுகளில் 61% பெண்கள் செய்தி ஊடகங்கள் குறித்த விழிப்பு உணர்வுடன் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழ்நாட்டு அம்மணிங்கன்னா சும்மாவா?!