Published:Updated:

சைபர் க்ரைம்

சட்டம் பெண் கையில்!எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி - ஓவியம் : ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

சைபர் க்ரைம் ஆபத்துகளையும், மார்ஃபிங் பட வக்கிரங்களையும் பெண்கள் எதிர்கொள்வது எப்படி என்பது குறித்துச் சென்ற இதழில் விவரித்த வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, இந்த இதழில் மேலும் சில விஷயங்களைப் பகிர்கிறார்.

சைபர் க்ரைம்

ருவரின் அலைபேசி எண்ணிலோ, சமூக வலைதளப் பக்கங்களிலோ ஆபாசமாகப் பேசுவது, ஆபாசக் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அனுப்புவது, மிரட்டுவது, அவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து வெளியிடுவது உள்ளிட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அனைத்துமே சைபர் க்ரைம்கள்தாம். அப்படியான சிக்கலில் இருக்கும் பெண்கள், தனியாகவோ, பெற்றோர், கணவர், வழக்கறிஞர் துணையுடனோ சென்று, தங்கள் வசிப்பிடத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் கொடுக்க வேண்டும்.

காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட சைபர் க்ரைம் புகார், அந்த மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் சைபர் க்ரைம் செல்லுக்கு அனுப்பப்படும். உங்கள் மாவட்டத்தில் அப்படி இயங்கும் சைபர் க்ரைம் செல்லுக்கு நேரில் சென்று தகுந்த ஆதாரங்களுடன் உங்களது தொலைபேசி எண், இ-மெயில் ஐடி, குற்றம் நடந்ததற்கான ஆவணம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். சைபர் க்ரைம் மூத்த அதிகாரி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார். சைபர் குற்றம் நடந்த தளம், வெளிநாட்டில் இயங்கும் நிறுவனமாக இருப்பின் அவர்களுக்கு மெயிலில் தகவல் அனுப்பி, குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்கும் வகையில் செயல்பாடுகள் முடுக்கப்படும்.

நகராட்சிக்குள் வசிப்பவர்கள் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். சைபர் க்ரைம் குற்றங்களை விசாரிக்கும் தலைமையகம் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் உள்ளது. சைபர் க்ரைம் புகார்களை, தமிழகக் காவல் துறையின் பொதுப் புகார்களுக்கான இணையப் பக்கத்திலும் (https://goo.gl/n6xsyX) தெரிவிக்கலாம். தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67-ன் கீழ், சைபர் க்ரைம் குற்றவாளிக்குக் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இரண்டு வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதும் எதிர்கொள்வதும்  எப்படி?

* காதலன், கணவனாகவே இருந்தாலும் உங்களை அரைகுறை ஆடையில் செல்போனில் படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். நீங்களும் எடுத்து அனுப்ப வேண்டாம். அஜாக்கிரதையினால் அவர்களின் மொபைலிலிருந்து படங்கள் திருடப்பட வாய்ப்பிருக்கிறது.

 * நண்பர்களோடு எடுக்கும் புகைப்படங்கள் உரிய எல்லைக்குள் நாகரிகமாக இருக்கட்டும்.

* ஒருவேளை மார்ஃபிங் படங்கள் உங்களின் முகநூல் சுவரில் பதிவேற்றப்பட்டாலோ, குற்றவாளி தன் சுவரில் பதிவேற்றி உங்களை `டேக்’ செய்திருந்தாலோ, அவற்றை டெலீட் (delete), ஹைடு (hide), ரிமூவ் டேக் (remove tag) போன்ற வசதிகளின் மூலம், உங்கள் நட்பு வட்டத்தின் பார்வையில் படாதிருக்கும்படி செய்யவும். படத்தை வெளியிட்ட நபர் உங்கள் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருந்தால் அவரை நீக்கவும். பிரைவஸி செட்டிங்ஸை வலிமையாக்கவும்.

* ‘என்மீது வன்மம்கொண்ட யாரோ என் புகைப்படத்தை அருவருக்கத்தக்க வகையில் மார்ஃபிங் செய்து பதிவிட்டுள்ளார். காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறேன்’ என்பது போன்ற நிலைத்தகவல் மூலம் நிலைமையை நட்பு வட்டத்துக்குத் தெளிவுபடுத்திவிட்டு, தைரியமாகப் பிரச்னையை எதிர்கொள்ளவும். அல்லது சூழலைப் பொறுத்து அக்கவுன்ட்டை டீ-ஆக்டிவேட் செய்துவிடவும்.

* எல்லாவற்றையும்விட முக்கியமானது, உங்களின் தவறு எதுவும் இல்லாத இந்த விஷயத்துக்கு உங்களை நீங்களே குற்றவாளியாக நினைத்துக் குறுகுவது கூடவே கூடாது.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு