Published:Updated:

டான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை  என் சாய்ஸ்!
டான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை என் சாய்ஸ்!

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்ஆர்.வைதேகி - படங்கள் : க.பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி

சினிமா... வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆடம்பரமும் பகட்டும் நிறைந்த மாய உலகம். உள்ளே இருப்பவர்களுக்கோ அது மெய்நிகர் உலகம்.

இல்லாத சந்தோஷங்களை இருப்பதாக நினைத்துக்கொண்டும், இருக்கும் பிரச்னைகளை இல்லாதவையாகக் கற்பனை செய்துகொண்டும் அந்த மெய்நிகர் உலகில் தாக்குப்பிடிப்பது மாபெரும் சவால். ஆண்களே அதிகம் ஆட்சி செய்கிற திரைத் துறையில் பெண்களுக்கான இடமும் வெற்றியும் அத்தனை சுலபத்தில் அகப்படுவதில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு அப்படியொரு வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் ரேகா. தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகின் பிஸியான டான்ஸ் மாஸ்டர்.

‘குட்டி’, ‘கதகளி’, ‘வெளுத்துக்கட்டு’, ‘வால்மீகி’ எனத் தமிழிலும், ‘ரோமியோ’, ‘கங்காரு’, ‘பருந்து’, ‘சைக்கிள்’, ‘சைனா டவுன்’ என மலையாளத்திலும் பல படங்களுக்கு கொரியோகிராபராகப் பணிபுரிந்தவர் ரேகா. இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கும் படத்திலும் இவரே கொரியோகிராபர்.

டான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை  என் சாய்ஸ்!

‘`அப்பா ஷ்யாம்சுந்தர் ராவ், ஸ்டன்ட் மாஸ்டரா இருந்தவர். தெலுங்கு மக்களுக்கு இயல்பிலேயே சினிமா ஆசை கொஞ்சம் அதிகம். அப்படியோர் ஆசையிலதான் அப்பாவும் ஆந்திராவிலேருந்து சென்னைக்கு வந்தார்.  அப்பாவின் முகம்கூட எனக்குச் சரியா மனசுல பதியலை. எனக்கு ஆறு வயசிருக்கும்போதே அப்பா தவறிட்டார். பிறந்த குழந்தையா இருந்தபோதே சினிமாவுக்குள்ள வந்தவள் நான்.

எம்.ஜி.ஆர் - `வெண்ணிற ஆடை’ நிர்மலா நடிச்ச ஒரு படத்துல குழந்தையா நடிக்க, அம்மா என்னைக் கொடுத்திருக்காங்க... அம்மா பேர் சாவித்ரி. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தாங்க. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் நிறைய படங்கள்ல நடிச்சிருக்காங்க.  வீட்டின் வறுமை காரணமாதான் பிறந்த குழந்தையான என்னை அந்தப் படத்துக்குக் கொடுத்தாங்களாம். அந்தப் படத்துல என்னை நடிக்கக் கொடுத்ததுக்காக பால் பாக்கெட்டும் கொஞ்சம் சோறும் பணமும் தந்ததா அம்மா சொல்லியிருக்காங்க. ‘நீ சினிமாவுக்காகவே பிறந்திருக்கே போல’னு அம்மா அடிக்கடி சொல்வாங்க.  ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்துல ராதாவுடன் வரும் குழந்தைகள்ல நானும் ஒருத்தி. ‘ஆண் பாவம்’ படத்துல நடிகர் தவக்களை கூட நடிச்சிருக்கேன். இப்படி நிறைய படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன்...’’ - சினிமா இலக்கணப்படி ஹீரோயினாகியிருக்க வேண்டியவர். ஆனால், டான்ஸ் மாஸ்டராகிவிட்டார்.

‘`என்னுடைய நிஜப் பெயர் பரமேஸ்வரி. ‘கடலோரக் கவிதைகள்’ படத்துல குழந்தை கேரக்டருக்கு நான்தான் டப்பிங் பேசினேன். அதுல ரேகா மேடம் ஹீரோயினா பண்ணின தால என்னை ‘பேபி ரேகா’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அப்போதிலிருந்து என் பேர் ரேகாவா மாறிடுச்சு.

அப்பா தவறினதும் அம்மாதான் குடும்பச் சுமையை முழுக்கத் தாங்கினாங்க. எனக்குச் சின்ன வயசுல ஸ்ரீதேவிதான் இன்ஸ்பிரேஷன். அவங்களைப் பார்த்து டான்ஸ்ல ஆர்வம் அதிகமானது. இப்போ பிரபலமா இருக்கிற டான்ஸ் மாஸ்டர் ஷோபியோட பெரியப்பா அந்தோணி மாஸ்டர் எனக்கு டான்ஸ் குரு. டான்ஸ் மாஸ்டர் ரகுராம் ஆபீஸ்லேருந்து குரூப் டான்ஸர்களை செலக்ட் செய்ய வந்தபோ என்னையும் செலக்ட் பண்ணினாங்க. முதன்முதல்ல நான் குரூப் டான்ஸ் ஆடினது ஓர் இந்திப் படத்துக்கு.

அப்பா இருக்கிறவரை கான்வென்ட்டுல படிச்சுட்டிருந்த நான், அவர் போனதும் கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு மாற வேண்டிய கட்டாயம். ஒன்பதாவது பாஸ் பண்ணினதுமே படிப்புக்கு குட்பை சொல்லியாச்சு. படிப்பு, ஃப்ரெண்ட்ஸ்னு அந்த வயசுக்கே உரிய விஷயங்களைப் பயங்கரமா மிஸ் பண்ணினேன். குடும்பக் கஷ்டம் எல்லாத்தையும் சகிச்சுக்கக் கத்துக் கொடுத்தது.

ரகு மாஸ்டருக்குப் பிறகு கிரிஜா மாஸ்டர், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர்னு எல்லாரோடவும் வேலை செய்திருக்கேன்.  உதவியாளரா வேலை செய்த நாள்கள்ல சந்தோஷங்களுக்கும் குறை இருந்ததில்லை.

சாமானியர்கள் பார்க்க முடியாத இடங்கள், நம்பர் ஒன் நட்சத்திரங்களைக்கூட நமக்குப் பக்கத்துல பார்க்கிற பிரமிப்புனு அந்த உலகம் சொர்க்கத்துக்கு இணை யானது...’’ - டான்ஸ் மாஸ்டராகப் போகிற நாளை நெருக்கத்தில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவருக்குத் திடீர்த் திருமணம் திருப்புமுனையாகியது அடுத்த அத்தியாயம்.

‘`அசிஸ்டென்ட் டான்ஸ் மாஸ்டரா இருந்தபோதே  லவ் மேரேஜ். கல்யாணத்துக்குப் பிறகும் அம்மாவைக் கவனிச்சுக்கிற பொறுப்பை நானே எடுத்துக்கிட்டேன். அப்பா இறந்ததும் அம்மா அனுபவிச்ச கஷ்டங்கள் கொஞ்சமில்லை. சினிமாவுல வேலையில்லாம இருந்த நாள்கள்லயும் வீட்டுலேயே சின்னதா டான்ஸ் கிளாஸ் நடத்தி அந்தக் காசை அம்மாவுக்குக் கொடுத் திருக்கேன். முழுக்க சினிமாவை மறந்து நான், என் கணவர், எங்கக் குழந்தை, மாமியார்னு வேற உலகத்துக்குப் பழகிட்டேன்.

டான்ஸ் மாஸ்டர் ரேகா - பாசிட்டிவ் பார்வை  என் சாய்ஸ்!

2008 அக்டோபர் மாசம் திடீர்னு ஒரு போன் வந்தது. தமிழ்ல ‘தென்காசிப்பட்டணம்’ பட டைரக்ட் பண்ணின ரஃபி மெக்கர்ட்டின் சாரின் அழைப்பு அது. அவர் ஒரு மலையாளப் படம் தயாரிக்கப்போறதாகவும் அதுல டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ண முடியுமான்னும் கேட்டார்.  எதுக்காக நான் சின்ன வயசுலேருந்து கனவு கண்டேனோ, அந்தக் கனவு நனவாகிற தருணம் நான் எதிர்பார்க்காதபோது தேடிவருது. ஆனா, என்னால உடனே `ஓகே’ சொல்ல முடியலை. ரெண்டு நாள்கள் அவகாசம் கேட்டேன்.

`மாஸ்டரா வொர்க் பண்றதால ஸ்க்ரீன்ல வர மாட்டேன். அம்மாகிட்ட கேட்டு பர்மிஷன் வாங்கித் தாங்க’னு அழாத குறையா கணவர்கிட்ட தயங்கித் தயங்கி அனுமதி கேட்டேன். அப்புறம் அரை மனசோடு சம்மதிச்சாங்க. வீட்டுலேருந்து கிளம்பும்போது சுடிதார்ல போவேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனா ஜீன்ஸ்லதான் வொர்க் பண்ண முடியும். வேலை முடிந்து மறுபடி வீட்டுக்கு வரும்போது டிரஸ் மாத்திக்கிட்டு வருவேன். எனக்குப் பிடிச்ச சினிமாவுக்காக எதையும் தாங்கிக்கத் தயாரானேன்.

என் கனவு நனவானது. ‘ரோமியோ’ மலையாளப் படம் மூலமா டான்ஸ் மாஸ்டரா புரமோஷன் கிடைச்சது. முதல் படத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம். அடுத்தடுத்து எக்கச்சக்கப் படங்கள்.

வீட்டுக்குக்கூட வர முடியாத அளவுக்கு மாசம் முழுக்க பிஸியா இருந்தேன். குழந்தையைப் பார்க்காம தவிப்போடு வேலை பார்த்திருக்கேன். என் ஒரே அண்ணன் மஞ்சள்காமாலையில இறந்துட்டார். அந்த அதிர்ச்சியில அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அவங்களை ஆஸ்பத்திரியில சேர்த்தேன். ஆஸ்பத்திரி, ஷூட்டிங் ஸ்பாட், வீடுனு 24 மணி நேரம் போதாம ஓடினேன்.

சினிமாக்காரங்க நேரம், காலம் பார்த்து வேலை செய்ய முடியாது. வேலை வரும்போது போயாகணும். பொங்கல், தீபாவளி கொண்டாடணும்னெல்லாம் ஆசைப்பட முடியாது. இந்த வாரம் ஊட்டியில ஷூட்டிங் நடக்கும். அடுத்த வாரம் அதுக்கு நேரெதிரா ராஜஸ்தான்ல கொளுத்தற வெயில்ல ஷூட்டிங் நடக்கும். சட்டுசட்டுனு இந்த வானிலை மாற்றங்களுக்கு உடம்பு பழகாது. பீரியட்ஸ் டைம்லகூட ஹெவியான மூவ்மென்ட்ஸ் இருக்கிற டான்ஸ் பிராக்டீஸ் இருந்தாலும் பண்ணித்தான் ஆகணும். எந்த வலியையும் வேதனையையும் வெளியில சொல்லிக்க முடியாது.

எந்த விஷயத்தையுமே ரெண்டுவிதமா பார்க்கலாம். என் சாய்ஸ் எப்போதும் பாசிட்டிவ் பார்வை. ஒரு சாதாரண மனித ராலே குறிப்பிட்ட சில இடங்களுக்குத்தான் டூர் போக முடியும். ஆனா, சினிமாக் காரங்களான எங்களுக்கு உலகத்தையே வலம்வரும் வாய்ப்புகள் கிடைக்கும்.

நிறைய படிக்கணும்னு ஆசைப்பட்டேன். சூழ்நிலை அதுக்கு இடம்கொடுக்கலை. ஆனா, நான் நேசிச்ச சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கு. உலகம் முழுக்க சுத்தவும் நிறைய மொழிகள் பேசவும் கத்துக்கிட்டிருக்கேன்.

வளசரவாக்கத்துல `ரேகாஸ் ஸ்டெப் 1’ என்ற பெயர்ல டான்ஸ் அகாடமி நடத்தறேன்.

இது முழுக்க முழுக்க பெண் களுக்காக ஆரம்பிச்சது. அம்மா இறந்த பிறகு அதுலே ருந்து என்னை மீட்டெடுத்தது டான்ஸ்தான்.  மன அழுத்தத் துல இருக்கிறவங்களுக்கு டான்ஸ் மூலமா நல்ல தீர்வு கிடைக்கும். நான் என் வாழ்க்கையில உச்சக்கட்ட மன அழுத்தத்துக்குப் போன போதெல்லாம் அதுலேருந்து என்னை மீட்டெடுத்தது டான்ஸ்தான். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் அவங்க குழந்தைகளுக்கும் அதிக ஃபீஸ் வாங்காம டான்ஸ் சொல்லித் தரேன். மலையாளத்துல பிரபல சேனல்ல ரியாலிட்டி டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா இருந்திருக்கேன். எனக்குப் பேர், புகழ், அந்தஸ்துனு எல்லாத்தையும் கொடுத்தது என் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நான் வெச்சிருக்கிற பேர் சினிமா!’’

- நடனத்தைப் போலவே நளினமாக இருக்கிறது ரேகாவின் பேச்சும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு