Published:Updated:

மேரி கோல்வின் - சிரியாவிலிருந்து

மேரி கோல்வின் - சிரியாவிலிருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
மேரி கோல்வின் - சிரியாவிலிருந்து

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

பிரேசிலிலிருந்து மேரி கோல்வின் திரும்பிவருவதற்குள் அவருடன்  பள்ளியில் படித்தவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கல்லூரியில்  இடம் கிடைத்துவிட்டது. பல இடங்களில் வகுப்புகளும் ஆரம்பித்துவிட்டன.

மேரி கோல்வின் - சிரியாவிலிருந்து

‘நீ என்ன செய்யப்போகிறாய் மேரி' என்று வருத்தப்பட்டார் அவருடைய அம்மா ரோஸ்மேரி கோல்வின். அமெரிக்க மாணவர்கள் சிலரை பிரேசிலுக்கு அனுப்பி, அங்கிருந்து சிலரைப் பெற்றுக்கொள்ளும் மாணவர் பரிமாற்ற முறையில் மேரி கோல்வினும் அவருடைய உயர்நிலைப் பள்ளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு  அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். சாவகாசமாக அமெரிக்கா திரும்பியபோது அம்மாவின் சோகமான முகத்தையே அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கோல்வின் யோசிக்கவேயில்லை. `இதோ வருகிறேன்' என்று காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். நேராக யேல் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்தார். `அனுமதி முடிந்துவிட்டது' என்னும் அறிவிப்பைப் புறந்தள்ளிவிட்டு புயல்போல அலுவலக அறைக்குள் நுழைந்தார். ‘என் பெயர் மேரி கோல்வின். இவை என்னுடைய சான்றிதழ்கள். என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும்.’

`அவகாசம் முடிந்துவிட்டது, எங்காவது ஊர் சுற்றிக்கொண்டிருந் தாயா?' என்று கேட்கப்பட்டபோது கோல்வின் சளைக்காமல் பதிலளித்தார். ‘பிரேசில் போயிருந்தேன். ஊர் சுற்றுவதற்கு அல்ல. அங்கே இருந்த சில மாதங்களில் போர்ச்சுகீஸ் மொழி கற்று வந்திருக்கிறேன். எனக்கு இடம் கிடைக்குமா, கிடைக்காதா?’

கோல்வினின் துணிச்சலை ரசித்தபடி மானுடவியல் பிரிவில் இடம் ஒதுக்கிக்கொடுத்தார்கள். இது நடந்தது 1978-ம் ஆண்டில். ஆர்வத்துடன்தான் படிக்க ஆரம்பித்தார். ஆனால், கல்லூரி இதழான யேல் டெய்லி நியூஸில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்ததும் அவருடைய ஆர்வம் திசை மாறிவிட்டது. இனி மகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று அம்மா நிம்மதியடைவதற்குள், `நான் பத்திரிகையாளராகப் போகிறேன்' என்று அறிவித்தார் மேரி கோல்வின்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மேரி கோல்வின் - சிரியாவிலிருந்து

வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கப் பிடிக்கவில்லை அவருக்கு. நேரடியாகக் களத்துக்குச் சென்று சுற்றித் திரிந்து, மக்களுடன் பேசி, செய்திகளைச் சேகரிக்க விரும்பினார். `அப்படியென்றால் பிரச்னைக்குரிய பிரதேசங்களுக்கும் நீ போக வேண்டியிருக்குமா?' என்று கேட்ட அம்மாவிடம், `கவலைப்படாதீர்கள் அம்மா, அப்படிப்பட்ட இடங்களுக்கு மட்டும்தான் போகப்போகிறேன்' என்று பதிலளித்தார் கோல்வின். 1985-ம் ஆண்டு `தி சண்டே டைம்ஸ்' கோல்வினைப் பணியில் அமர்த்தியது. ஒரே ஆண்டில் மத்தியக் கிழக்கு நாடுகளின் நிருபராக அவர் உயர்த்தப்பட்டார்.

அம்மா பதறுவதைப் பொருட்படுத்தாமல் போர், உள்நாட்டுக்குழப்பம், கலகம், கலவரம் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் ஓடோடிச்சென்று ‘கவர்’ செய்வது அவர் வழக்கம். நாள் கணக்கில், வாரக்கணக்கில் மேரியிடமிருந்து தொலைபேசி அழைப்புகூட வராது. `குண்டு வீசிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு மெல்லிய கூடாரத்தில் அவர் தங்கியிருப்பதை நினைத்து நினைத்து வருந்திகொண்டிருப்பேன். நான் துவண்டுபோயிருக்கும் நேரத்தில் மேரி தொலைக்காட்சியில் மைக் பிடித்து நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கேட்பேன். உயிர் திரும்பிவந்ததுபோல் இருக்கும்' என்பார் அம்மா.
லிபிய அதிபர் கடாபியுடன் மேரி கோல்வின் மேற்கொண்ட நேர்காணல் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. செசன்யாவும் கொசோவாவும் பற்றி எரிந்தபோது, மேரி கோல்வின் அங்கே இருந்தபடி உலகுக்குச் செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.  கொசாவோவிலும் சியாரா லியோனிலும் என்ன நடக்கிறது என்பதை மேரி கோல்வினின் கட்டுரைகளிலிருந்தும் அவர் சந்தித்துப் பேட்டிகண்ட மனிதர்களிடமிருந்தும்தான் தெரிந்துகொண்டது அமெரிக்கா. ஜிம்பாப்வேவையும் கிழக்கு திமோரையும் நெருங்கிச்சென்று அங்குள்ள மக்களின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள முயன்றார்.

`போனேன், பார்த்தேன், எழுதினேன்' வகை நிருபரல்லர் அவர். ஒரு மண்புழுவைப்போல நிதானமாக... ஆனால், விடாப்பிடியாக ஒரு நாட்டுக்குள் ஊர்ந்து ஊர்ந்து சென்று அதன் இதயத்தைக் காணத் துடித்தார் அவர். செய்தியை அல்லது செய்தி குறித்த கருத்தை உதிர்த்துவிட்டுப் போவதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று அவர் நினைக்கவில்லை. இதை உலகம் உணர்ந்து கொண்டது 1999-ம் ஆண்டுதான். இந்தோனேஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெறுவதற் காகக் கிழக்கு திமோர் போராடிக் கொண் டிருந்த நேரம் அது. ஓரிடத்தில் 1,500 கிழக்கு திமோர் மக்கள் ஆண் களும் பெண்களும் குழந்தைகளுமாக ஓரிடத்தில் ஒடுங்கிக் கிடந்ததைக் கண்டார் மேரி கோல்வின். இந்தோனேஷியப் படைகள் அவர்களை வாகாகச் சுற்றி வளைத்திருந்தன. மேரி கோல் வினோடு அப்போது பல நாடுகளைச் சேர்ந்த 22 நிருபர்கள் உடனிருந்தார்கள்.

நிராயுதபாணிகளாக நின்றுகொண்டிருந்த அந்த மக்களின் குரலை மேரி கோல்வின் தனது பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் பதிவுசெய்தார்.  ஐக்கிய நாடுகள் சபையின் படை அவர்களை மீட்பதற்காக விரைந்து வந்தது. `மேரி, நம் வேலை முடிந்தது. வா, போகலாம்' என்று அழைத்தார்கள் பத்திரிகை நண்பர்கள். `நீங்கள் கிளம்புங்கள். ஐ,நா வந்து இந்தோனேஷியப் படைகளை வீழ்த்தி இவர்களை மீட்கும்வரை நான் இங்கேதான் இருக்கப்போகிறேன்' என்று உட்கார்ந்துவிட்டார் மேரி கோல்வின். 22 நிருபர்களையும் வழியனுப்பிவிட்டு நான்கு நாள்கள் அவர்களுடன் கழித்தார். உக்கிரமான போர் நடைபெற்ற நேரங்களில்கூட அவர் விலகிச் செல்லவில்லை. ஐ.நா அந்த 1,500 பேரையும் மீட்ட பிறகே வீடு திரும்பினார். வந்து குவிந்த பரிசுகளையும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தூக்கி ஒரு மூலையில் வைத்துவிட்டு இலங்கைக்குப் புறப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான நீண்ட கால மோதலை நேரில் கண்டு பதிவு செய்ய வேண்டாமா?

மேரி கோல்வின் - சிரியாவிலிருந்து

ஏப்ரல் 2001 இலங்கையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மேரி கோல்வினுக்கு 44 வயது ஆகியிருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்திலிருந்து அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அவர் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் தொடங்கியது. `தாக்க வேண்டாம்... அவர் ஒரு பத்திரிகையாளர்' என்று யாரோ கத்துவது கேட்டது. பிறகு சுருண்டு விழுந்துவிட்டார். விழித்து பார்த்தபோது ஒரு கண்ணை நிரந்தரமாக இழந்துவிட்டது தெரிந்தது. ஒரு காது முழுக்கவே அடைத்துக்கொண்டுவிட்டது. `இப்போது என்ன செய்யப் போகிறாய்?' என்றார் அம்மா. `டெட்லைன் இருக்கிறது, கட்டுரை எழுதி முடித்துவிட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டார். சொன்னபடியே மூவாயிரம் வார்த்தைகளில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதி முடித்த பிறகே மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தார்கள்.

துனீஷியா, எகிப்து, லிபியா என்று அதற்குப் பிறகு அவர் சென்றுவந்து எழுதிய இடங்கள் ஏராளம். அவர் உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்ட மதிப்புமிக்க பத்திரிகையாளராக உயர்ந்திருந்தார்.

`துயரப்படும் மக்களின்மீதும் கொந்தளிக்கும் பிரதேசங்களின்மீதும் வெளிச்சம் பாய்ச்சுவதே என் பணி... அதைத்தான் நான் செய்துவருகிறேன்' என்றார் மேரி கோல்வின். அவர் மூளையில் இன்னமும் ஒரு சிறிய உலோகத் துண்டு தங்கியிருந்தது. இலங்கையில் வெடித்த குண்டின் ஒரு துகள் அது.

அவருடைய திருமண முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்துவந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயணத்திலும் எழுத்திலும் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்திவந்தார். பார்வையிழந்த கண்ணில் கறுப்பு துணியைத் திரையிட்டு மறைத்துக்கொண்டார். `உலகம் சிதறிக்கொண்டிருக்கிறது. என்னைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லை' என்று முதுகுப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டார். இந்த முறை சிரியாவுக்கு.

மேரி கோல்வின் - சிரியாவிலிருந்து

சிரியா சிதறிக்கொண்டிருக்கும் செய்தியை ஒவ்வொருமுறை தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் அம்மாவுக்கு தூக்கி வாரிப்போடும். `கடவுளே, என் மகளைத் திருப்பிக்கொடு' என்று வேண்டிக்கொள்வார். சில நேரம் மேரியே போனில் வருவார். அவர் குரலைக் கேட்கும்போது கவலைகள் எல்லாம் மறைந்துபோகும். அந்த மகிழ்ச்சியில் மேலும் சில தினங்களைத் தைரியமாகக் கழித்துவிடுவார். குறிப்பாக, இலங்கை அனுபவத்துக்குப் பிறகு அவருடைய அச்சங்களும் கவலைகளும் பலமடங்கு அதிகரித்துவிட்டன என்றாலும், தன் மகளிடம் அவர் எதையும் வெளிக்காட்டிக்கொண்டதில்லை.

சிஎன்என் சேனலில் ஒருநாள், மேரி கோல்வினைப் பேட்டி கண்டார்கள். மகிழ்ச்சியுடன் அமர்ந்து பார்த்தார். தான் திரும்பிவருவதாகச் சொன்ன தேதி கடந்து சில தினங்கள் ஆகியிருந்தன. ஆனால், ரோஸ்மேரி கோல்வின் கவலைப்படவில்லை. இது வழக்கமாக நடப்பதுதான். `அடுத்த புதன் வந்துவிடுவேன் அம்மா' என்று உறுதிபடச் சொல்லிவிட்டு மேலும் பத்து நாள்கள் எடுத்துக்கொள்வது இயல்பானதுதான். எனவே, அவர் அமைதியாகக் காத்திருந்தார். ஒரு போன் அடித்துக் கேட்கலாமா? முயன்றார். கிடைக்கவில்லை. இதுவும் அவருக்கு இயல்பானதுதான். அழைத்தால் உடனே எடுத்துப் பேசும் இடத்துக்கு மேரி கோல்வின் இதுவரை சென்றிருக்கிறாரா என்ன? பிறகு, ஒருநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டுத் தொலைபேசி அடித்தது. அதை எடுத்துப் பேசுவதற்கு முன்பே அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. இத்தனை அதிகாலையில் அழைப்பு வருவது நிச்சயம் இயல்பானதல்ல.

22 பிப்ரவரி 2012 அன்று 56 வயது மேரி கோல்வின் சிரியாவில் ஒரு ஷெல் தாக்குதலில் இறந்துபோனார். பயங்கரவாதத் தாக்குதல் அல்ல; சிரிய அரசாங்கமே அவர் கொலைக்குக் காரணம் என்பது பின்னர் தெரியவந்தது.  `உங்கள் மகளின் பை' என்று சொல்லி வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டுப்  போனார்கள். மாற்றுத்துணி, இரண்டு சாட்டிலைட் போன்கள், ஒரு கறுப்புப் பெட்டியில் 387 பக்கங்களில் மேரி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவை உள்ளே காணப்பட்டன. இறப்பதற்கு முன்பே அவர் தன் கட்டுரையை அனுப்பிவிட்டிருந்தார்.