Published:Updated:

ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீப்ரியா

அவள் அரங்கம்தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி - படங்கள் உதவி: கிரண் சா

மிழ்த் திரையுலகின் சீனியர் நடிகை ஸ்ரீப்ரியா. சினிமா, சின்னத்திரை எனக் கலக்கியவர், இப்போது நடிப்புக்குச் சிறிய இடைவேளை விட்டிருக்கிறார். எனினும், சமூக வலைதளத்தில் நாட்டு நடப்பு பற்றிய தன் கருத்துகளைப் பகிர்வதன் மூலமாக, ரசிகர்களுக்கும் தனக்குமான தொடர்பை விடாமல் தொடர்ந்துகொண்டிருப்பவர். இப்போது, 'அவள்' வாசகிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.

ஸ்ரீப்ரியா

பெண்களுக்கு சினிமாத் துறை பாதுகாப்பான இடமில்லை என சில நடிகைகள் முன்பு கூறியிருக்கிறார்கள். இப்போதைய சினிமாத் துறை எப்படியிருக்கிறது?

- வத்சலா, காரைக்கால்

எந்தத் துறையில் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு இருக்கிறது என்று முதலில் சொல்லுங்கள். பிறகு, இந்தக் கேள்விக்கு வரலாம். எங்கிருந்தாலும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தெரிந்தால் கவலை தேவையில்லை.

நீங்கள் ஓர் இயக்குநராக யாரை வைத்துப் படமெடுக்க விரும்புவீர்கள்?

- தமிழ்ச்செல்வி, மதுரை

நயன்தாரா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்ரீப்ரியா

நீங்கள் அதிகமாகக் கோபப்படுவீர்களாமே?

- அகிலா நரசிம்மன், சென்னை-91


உங்களுக்கு யாரோ தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். நான் அதிகமாகக் கோபப்பட மாட்டேன். ஆனால், நியாயமான காரணங்களுக்குக் கோபப்படுவேன். தேவையான இடத்தில் ரெளத்ரம் பழகியே ஆக வேண்டும்.

ரஜினி, கமல் இருவருடனும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவர்களுக்கு இடையேயான வேறுபாடுகளைச் சொல்ல முடியுமா?

- ராஜேஸ்வரி குமார், பெங்களூரு-3

கமல், எல்லோருடனும் சட்டெனப் பழகிவிடுவார். ரஜினி, ஒருவரைப்பற்றி நன்கு அறிந்தபின்னரே அவரை நண்பராக ஏற்பார். ஆனால், இருவருமே நட்புக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். என்னிடம் முன்னர் பழகிய அதே நட்புடன் அவர்கள் இன்றுவரையிலும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.

இவ்வளவு துணிச்சலாகப் பல பிரச்னைகளுக்கும் குரல்கொடுக்கும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது?

- கிருத்திகா தேவி, திருநெல்வேலி

துணிச்சலாக இருப்பவர்கள் எல்லோருமே அரசியலுக்கு வர வேண்டுமா என்ன? அரசியலுக்கு வெளியில் இருந்தபடியும் நம் கருத்து களைத் துணிச்சலாகச் சொல்லலாம். அப்படியான ஒரு ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோம்.

ஸ்ரீப்ரியா

சின்னத்திரையில் உங்களின்   அடுத்த இன்னிங்ஸை எப்போது ஆரம்பிக்கப்போகிறீர்கள்?

- ரேவதி ஜெயகுமார், சென்னை-12

அதைப் பற்றி இப்போதைக்கு ஐடியா இல்லை.

ஓய்வுநேரத்தை உருப்படியாகச் செலவழிக்க ஐடியா சொல்லுங்களேன்.

- பூங்கொடி, சிவகங்கை.


ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் திறமையான வராக இருப்பார்கள். அதில் ஆர்வத்தையும் கவனத்தையும் செலுத்தலாம். அப்படித்தான் நான் என் ஓய்வுநேரங்களில் பெயின்ட்டிங், எம்ப்ராய்டரி கற்றுக்கொண்டேன். இப்படி நம்மை பிஸியாக வைத்திருக் கும்போது, வீட்டில் சும்மா இருக்கிற மாதிரியான ஃபீலிங் வராது.

அரசியல்வாதிகளுக்கு நீங்கள் தரும் அட்வைஸ்?

- மங்கையர்க்கரசி, திருச்சி

அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் கொடுக்கும் அளவுக்கெல்லாம் எனக்கு அரசியல் தெரியாது. நான் ஓட்டுப்போடுவேன். என் ஓட்டுக்குத் தகுதியுடைய கட்சியைத் தேர்வு செய்வேன். அதுதான் எனக்குத் தெரிந்த அரசியல்.

உங்கள் பேரன்ட்டிங் பற்றிச் சொல்லுங்கள்...

- அமுதா ரமணன், புதுச்சேரி

ஓர் ஆண், ஒரு பெண் என எனக்கு இரண்டு பிள்ளைகள். பால் வேறுபாடு இல்லாமல் இருவருக் கும் சம உரிமை கொடுத்து வளர்த்து வருகிறேன். வீட்டைப் பொறுத்தவரை அவர்கள் நல்ல பிள்ளைகள். அவர்களின் நட்பு, வெளியுலகப் பழக்க வழக்கங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். சக பெற்றோர்களுக்கும் அதையே வலியுறுத்துகிறேன்.

ஸ்ரீப்ரியா

நடிகை ஸ்ரீப்ரியாவுக்கும் நிஜ ஸ்ரீப்ரியாவுக்கும் என்ன வித்தியாசம்?

- நிர்மலா சுந்தர், ஸ்ரீரங்கம்


நடிகை ஸ்ரீப்ரியா, நாய் வேஷம் போடச் சொன்னால் நாயே ஆச்சர்யப்படும் அளவுக்குச் சிறப்பாக நடிப்பார். நிஜ ஸ்ரீப்ரியா, ஓர் அலமேலு (ஆட்டுக்கார அலமேலு)!

விருதுகள்தான் கலைஞர்களை மெருகேற்றக்கூடியவையா?

- புவனேஸ்வரி, கோயம்புத்தூர்-8

இங்கு `வழங்கப்படும்’ விருதுகளும் உள்ளன; ‘வாங்கப்படும்’ விருதுகளும் உள்ளன. நடிகர் திலகம் சிவாஜிக்குத் தேசிய விருது இறுதிவரை கொடுக்கப்படவே இல்லை. உழைப்பு, திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காதபோது சோர்ந்துபோகும் கலைஞர்கள் எல்லோரும், ‘அவருக்கே கொடுக்கலை, நமக்குக் கொடுக்கலைன்னா என்ன?’ என்று எங்களை நாங்களே சமாதானம் செய்துகொள்வோம். விருதுகள் நிச்சயமாகக் கலைஞர்களை ஊக்குவிக்கக் கூடியவை. ஆனால், விருதுகள் மட்டுமே அங்கீகாரம் என்பதில்லை. என் இத்தனை வருட அனுபவத்தில் எனக்குக் கிடைத்த விருது, ‘அவள் அப்படித்தான்’ படத்துக்கான ஸ்டேட் அவார்டு. அதிலும்கூட, ஜூரி அவார்டு. விருதுகள் கிடைக்கவில்லை என்பதற்காக நான் நடிப்பில் ஆர்வம் இழந்துவிடவில்லை. இன்றும் மக்கள் மனங்களில் ஸ்ரீப்ரியா பிரியமாக இருப்பதைத்தான், நான் பெரிய விருதாக நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து அதைவிடப் பெரிய விருது இல்லை.

சமீபகாலமாக உங்களைத் துளைத்தெடுக்கும் ஒரு விஷயம் எது?

- மைனாவதி சேகர், வேடந்தாங்கல்

சும்மாவே எனக்கு அரசியல் புரியாது. இப்போது சுத்தமாகப் புரியவில்லை.

சினிமாவுக்கு வரவில்லை என்றால், ஸ்ரீப்ரியா என்னவாகியிருப்பார்?

நான் சட்டம் படிக்க ஆசைப்பட்டேன். ஒரு வேளை, வழக்கறிஞராகி இருக்கலாம்.

‘பிக் பாஸ்’ ஓவியாவை ஏன் அவ்வளவு பிடிக்கும்? அவரை நேரில் சந்தித்தீர்களா?

- திக்‌ஷிகா, சென்னை-19

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவரை எல்லோருக்கும் பிடிக்கக் காரணம் தான், எனக்கும் அவரைப் பிடிக்கக் காரணம். அவரை நேரில் சந்தித்ததில்லை.

ஸ்ரீப்ரியா

‘பிக் பாஸ்’ காயத்ரியைத் திட்டினீர்களே, இப்போது ராசியாகிவிட்டீர்களா?

- வர்ஷினி, சமயபுரம்


காயத்ரியை நான் எப்போது திட்டினேன்? அவருக்கும் எனக்கும் என்ன தனிப்பட்ட விரோதம்? அந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் அவரவரின் கருத்தைச் சொன்னதுபோல, நான் என் கருத்தைச் சொன்னேன். அவ்வளவுதான். நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்தப் பேச்சுகளையும் முடித்துக்கொள்ள வேண்டும்.

‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற நிகழ்ச்சிகள் குறித்து விமர்சனம் செய்தீர்கள். ‘கேமரா இல்லாமலும் நல்லது செய்யலாம்’ என்று கூறியிருந்தீர்களே...

- வித்யாஸ்ரீ, பொன்னேரி

ஆம், சொல்லியிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைத்தால், அதை ஊருக்குத் தண்டோரா போட்டுச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கேமரா இல்லாமல் உதவிகளைச் செய்யலாம். இது ஒரு விழிப்பு உணர்வு நிகழ்ச்சி என்றால், உண்மைச் சம்பவங்களைக் கலைஞர்களைக்கொண்டு நடிக்கவைத்து, ‘சித்திரிக்கப்பட்டது’ எனச்சொல்லிக் காட்டலாம். பாதிக்கப்பட்டவர்களை உலகத்துக்கே காட்டுவது, அவர்களுக்குச் செய்கிற நியாயம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். ‘சம்பந்தப்பட்டவங்களே முழு விருப்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கிறாங்க, அதை ஏன் விமர்சனம் பண்ணணும்?’ என்று சிலர் கேட்கிறார்கள். அந்த நிகழ்வுகளை நீங்கள் ஷூட் செய்து, சி.டி-யாகப் போட்டு, உங்கள் வீட்டில் பார்த்தால் பிரச்னை இல்லை. ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது, அதைப்பற்றி விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அப்படித்தான் நானும் என் கருத்தைச் சொன்னேன்.

‘நடிகர் என்கிற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வருவதா?’ என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறாரே?


- விஜி பழனிசாமி, சேலம்

நடிகர் என்கிற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக் கூடாது என ஏதாவது இருக்கிறதா? இதில் ஏன் ‘நடிகர்கள்’ எனப் பிரித்துப் பார்க்கிறீர்கள்? ஓட்டுப்போடுகிற உரிமை இருக்கும் அனைவருக்கும், தேர்தலில் நிற்கிற உரிமையும் இருக்கிறது.

ஸ்ரீப்ரியா

நடிகர், நடிகைகளைப் பற்றிய மீம்ஸை எப்படிப் பார்க்கிறீர்கள்?

- சுபஸ்ரீ சம்பத், தஞ்சாவூர்

மீம்ஸை நகைச்சுவைக்காக உருவாக்குவது நன்று. அதையே அடுத்தவர்களைக் காயப்படுத்தும்விதமாக உருவாக்குவது வருத்தமான விஷயம். மீம்ஸ் பலவற்றில் கிரியேட்டர்களின் பெயர்கள் குறிப்பிடப் படுவதில்லை என்பதால், தைரியமாக அநாகரிகக் காரியங்களைச் செய்கிறார்கள்.  

நடிகை ராதிகாவுக்கும் உங்களுக்கும் இடையேயான நட்பு பற்றி...

- கலாதேவி, நாகர்கோவில்

கிட்டத்தட்ட தொட்டில் பழக்கம்போல என்று சொல்லலாம். நல்ல நட்பு தொடரும்.

இப்போதைய தமிழ் சினிமாவில் சோஷியல் மீடியாவின் தாக்கம் என்ன?

- சொர்ணவல்லி, விழுப்புரம்

சாதகம், பாதகம் இரண்டும் உள்ளன. தியேட்டரில் பாதி படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அதைப் பற்றிய விமர்சனத்தைப் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்கிறார்கள். அந்தக் குழுவின் மொத்த உழைப்பையும் தங்களின் நேர்மையற்ற, முதிர்ச்சியற்ற விமர்சனத்தால் விரயமாக்குகிறார்கள். ஒரு படைப்பை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

ஸ்ரீப்ரியா

சமீபத்தில் உங்களைக் கவர்ந்த நடிகர்கள்?

- சுவேதா, சென்னை-40

விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். நடிப்பு மட்டுமல்ல, இயல்பிலும் இருவரும் அருமையானவர்கள். 

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சாவி எதுவென்று நினைக்கிறீர்கள்?

- மீனாட்சி, மதுராந்தகம்

‘பொல்லாங்கு எல்லாம் தவிர்’. மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

அவள் அரங்கத்தில் அடுத்து..?