Published:Updated:

``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’

``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’
பிரீமியம் ஸ்டோரி
News
``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’

அந்த நாள் வி.எஸ்.சரவணன் - படங்கள் : ராபர்ட் செல்வராஜ்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26... அன்றுதான் இந்திய மக்களுக்கு, ‘சுனாமி’ எனும் சொல் அறிமுகமானது. ஆனால், பல்லாயிரக்கணக்கில் மரணங்கள், லட்சக்கணக்கில் உறவுகளைத் தொலைத்த மனிதர்கள் என அதற்கு நாம் கொடுத்த விலை அதிகம்.  பூமியில் ஏற்படும் நில அதிர்வினால் கடலில் தோன்றும் ராட்சத அலைகளே சுனாமி. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் உருவான பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி... இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைத் தாக்கியது. தமிழகத்தில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கடலூர், சென்னை உள்ளிட்ட இடங்கள் அளவிட முடியாத பேரழிவுக்கு உள்ளாகின. குறிப்பாக, நாகப்பட்டினம் பகுதியில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் மாண்டுபோயினர்.

நாகப்பட்டினம் கடற்கரையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கடலையே வாழ்க்கையாகக்கொண்ட மீனவர்கள் எனக் கொத்துக் கொத்தாகப் பிணங்கள் கிடந்தன. உயிர் தப்பினால் போதும் என்று பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றவர்கள் தங்கள் மகனை, மகளை, கணவனை, மனைவியை, தாயை, தந்தையைக் காணாது பரிதவித்தனர். கட்டியிருந்த உடையோடு, அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாது சொந்த ஊரிலேயே அகதிகளாகினர். உறவுகளைத் தேடலாம் எனக் கிளம்பியவர்களையும், ‘மீண்டும் சுனாமி வரப்போகிறது’ எனும் வதந்தி தடுத்தது. முதல் நாள்தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. வேளாங்கண்ணியில் அப்பண்டிகையைக் கொண்டாடியவர்கள், அடுத்த நாளும் கடல் குளியலுக்காக இறங்க, பேரலையில் சிக்கி உயிரைப் பலி கொடுத்தனர்.

சுனாமியின் பேரழிவு துயரம் நிகழ்ந்து 13 ஆண்டுகளாகின்றன. என்றாலும், தங்கள் எதிர்காலம் என நம்பியிருந்த உறவுகளை இழந்தவர்களின் சிதைந்த வாழ்க்கை இன்னும் சீராகவில்லை. பெண்களால் அந்தக் கொடூர நினைவைவிட்டு வெளியேறவே முடியவில்லை என்பதை, அவர்களோடு நாம் பேசியதிலிருந்து உணர முடிந்தது.

``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’

“வீட்டுக்காரரோடு நிம்மதியும் போயிடுச்சு...”

கீச்சாங்குப்பம் மீனவர் கிருஷ்ணராஜின் மனைவி வசந்தா. “எங்களுக்கு அஞ்சு பசங்க, ஒரு பொண்ணு. சொந்தமா போட் வெச்சிருந்தோம். நாலு பேரு கூட்டா சேர்ந்து தொழிலுக்குப் போவாங்க. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துவெச்சு, வீடு கட்டினோம். சுனாமிக்கு முந்தின நாள் அவரோட வலை பிய்ஞ்சுடுச்சு. அதனால, அடுத்த நாள் தொழிலுக்குப் போகாம, வீட்டு வாசல்ல உக்காந்து வலையைத் தைச்சுட்டு இருந்தாரு. அப்பதான் எல்லோரும் கடல் பொங்குதுனு ஓடிட்டு இருந்தாங்க. நானும் வீட்டுல இருந்த பொண்ணை இழுத்துகிட்டு ஓடினேன். அவரையும் கூப்புட்டேன். ‘நீ மொதல்ல ஓடு, நான் வர்றேன்’னு சொன்னாரு. அதுதான் அவரைக் கடைசியா பார்த்தது (உடைந்து அழுகிறார்). `கடல் தண்ணிதானே... நீந்தி வந்துடுலாம்'னு நினைச்சிட்டாரு போல. அது இப்படி ராட்சத அலையா இருக்கும்னு நினைக்கலை.

ஒரு வீட்டோட மொட்டை மாடியில எல்லாரும் நின்னுட்டு இருந்தாங்க. நானும் பொண்ணும் அவங்களோடு சேர்ந்துக்கிட்டோம். என் மத்த புள்ளைங்களுக்கும் வீட்டுக்காரருக்கும் என்னாச்சோன்னு உசுரைக் கையில பிடிச்சுட்டு இருந்தேன். சாயந்திரம் புள்ளைங்க கிடைச்சுட, எங்களைத் திருவாரூர்ல இருக்கிற மண்டபத்துக்கு அழைச்சுட்டுப் போயிட்டாங்க. அதுக்கு அப்புறம்தான், என் வீட்டுக்காரர் இறந்துட்டாருனு தெரியவந்துச்சு. எல்லாமே எங்களை விட்டுப் போனமாதிரி இருந்துச்சு. பிறகு, அரசாங்கம் கொடுத்த ‘போட்’டை வெச்சு, சரியா தொழில் செய்ய முடியல. பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு, தனித்தனியா போயிட்டாங்க. கடைசிப் பையன் மட்டும் படிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கான். நான் மீன் வித்துட்டு இருக்கேன். கடலைப் பார்க்கும்போதெல்லாம், `அவர் உயிரோட இருந்திருந்தா நல்லா இருந் திருப்போம்'னு கண்ணு பொங்கும். அவரோட சேர்ந்து எங்க நிம்மதியும் போயிடுச்சு” என விரக்தியோடு சொல்கிறார் வசந்தா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’

‘`அவரு செத்துட்டாருனு எல்லாரும் சொன்னப்பவும் நான் நம்பலை...”

அக்கரைப்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்த ஜெயா, இப்போது சுனாமி குடியிருப்பில் தங்கியிருக்கிறார். குழந்தைப் பாதுகாப்புக் குழுவில் தற்காலிகப் பணியிலிருக்கிறார். ‘`என் வீட்டுக்காரரு பேரு ஞானசம்பந்தம். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. அவரு மீன் பிடிக்கிற தொழில் செஞ்சுட்டு இருந்தாரு. அன்னிக்கு காய்கறி வாங்கிட்டு, பக்கத்துல மாமியார் வீட்டுக்குப் போயிருந்தேன். திடீர்னு அந்த இடமெல்லாம் கடல் தண்ணி வந்துடுச்சு. என் கழுத்துவரை தண்ணி. புள்ளைங்களுக்கு என்னாச்சோன்னு என் வீட்டுக்கு ஓடப் பார்த்தேன். அங்கிருந்தவங்க என்னை விடல. நேரமாக ஆக, தண்ணி கூடிக்கிட்டே போச்சு. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லைனு என் வீட்டுக்கு ஓடினேன். வீடே மூழ்கிக் கிடந்துச்சு.

அக்கம்பக்கத்துல மேட்டு மேல நின்னவங்கள்ல, என் புருஷன், புள்ளைங்க இருக்காங்களானு தேடிப் பார்த்தேன். தெருமுனையில இருந்த மாடி வீட்டு மேல என் புள்ளைங்க இருந்தாங்க. அவங்களைச் சொந்தகாரங்ககிட்ட கொடுத்துப் பார்த்துக்கச் சொல்லிட்டு, வீட்டுக்காரரைத் தேடிப் போனேன். எங்க தேடியும் கிடைக்கலை.

உயிர் பிழைச்சவங்களையெல்லாம்  சிக்கல் கோயிலுக்கு அனுப்பிவெச்சாங்க. என்னையும் வலுக்கட்டாயமா அனுப்பினாங்க. அப்புறம் அங்கேயும் தண்ணி வந்தாலும் வரும்னு சொல்லி, திருவாரூர், வலிவலம் வள்ளலார் மன்றத்துல தங்கவெச்சாங்க. ரெண்டு, மூணு நாளு அங்க இருந்தோம். அப்புறம் ஊருக்கு வந்து மறுபடியும் வீட்டுக்காரரைத் தேடியும் கிடைக்கல. எல்லாரும், என் வீட்டுக்காரர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லைனு சொன்னாங்க. நான் நம்பலை. `தண்ணி அடிச்சுட்டுப்போய் எங்கேயாச்சும் கரை ஒதுங்கிப் பிழைச்சுக் கிடப்பாரு, வந்துடுவார்'னு நம்பிக்கிட்டு கிடந்தேன். ஆனா, மாசம், வருஷமாகியும் வரலை. இப்பகூட, திடீர்னு வந்துட மாட்டாரான்னு இருக்கு” என்று ஏக்கத்துடன் பேசும் ஜெயாவின் மகனும் மகளும் இப்போது கல்லூரியில் படித்துவருகின்றனர்.

``அவர் திடீர்னு வந்துட மாட்டாரானு இன்னமும் ஏங்குறேன்...’’

``கடல் கொண்டுபோறதுக்குத் தான் அவனை வளர்த்தேனா?’’

கீச்சாங்குப்பம் ரேவதி - ரவிச்சந்திரன் வீட்டினர் உறங்கும்போது, கூடுதலாக ஒரு மூச்சுக்காற்றுச் சத்தம் கேட்கும். அது கடலலையின் ஓசை. அந்தளவுக்குக் கடலுக்கு மிக நெருக்கத்தில் உள்ள வீடு. கனத்த மனதோடு பேசத்தொடங்குகிறார் ரேவதி. ‘`எங்களுக்கு மூணு புள்ளைங்க. என் நாலு வயசுப் பையன் பன்னீர்செல்வத்தை கடற்கரைக்கு அழைச்சுட்டுப் போயிருந்தேன். மூத்தவ பால்மொழி, எங்கேயோ விளையாடப் போயிருந்தா. கடைசிப் பையன் துரைமுருகன் வீட்டுல இருந்தான். அன்னிக்கு வீட்டுக்காரரு தொழிலுக்குப் போகல. `குளிக்கணும், தண்ணி கொண்டு வந்து ஊத்து’ன்னாரு. பையனுக்கு அம்பது காசுக்குப் பட்டாணி வாங்கிக் கொடுத்துட்டு, வீட்டுக்கு வந்தேன்.

ஒரு குடம்தான் தண்ணி எடுத்துட்டு வந்திருப்பேன்... ஊரே திபுதிபுன்னு ஓடுச்சு. ‘வீடுங்க எரியுது போலருக்கு’னு வீட்டுக்காரரு சொன்னாரு. அதனால, ரேஷன் கார்டு, எல்.ஐ.சி பத்திரத்தை எடுத்துட்டுப் போலாம்னு வீட்டுக்குள்ள நுழைஞ்சேன். ஆனா, எனக்கு முன்னாலேயே தண்ணி
புகுந்துடுச்சு. அப்படியே சின்ன மகனைத் தூக்கிட்டு ஓடினேன். வீட்டு மதில் சுவரை என் வீட்டுக்காரரு தாண்டிட்டாரு. புள்ளையத் தூக்கிட்டு என்னால தாண்ட முடியல. அதனால, பையனை அவருகிட்ட தூக்கிக்கொடுத்து, தாண்டி குதிக்கிறதுக்குள்ள, பேய் அலை வந்து என்னைக் கடல் பக்கமா இழுத்துருச்சு. `அவ்வளவுதான்... எல்லாம் முடிஞ்சுபோச்சு’னு நெனச்சேன். மீன் வலையில இருக்குற நூலு கையில மாட்டிக்க, அதை இறுகப் புடிச்சுக்கிட்டேன். தண்ணி வத்திப்போனதும், வீட்டுக்காரரும் சின்னப் பையனும் இருந்ததைப் பார்த்தேன், மகளையும் நடுப்பையனையும் காணோம். எங்களை எல்லாம் நாகப்பட்டினம் மண்டபத்துல தங்க வெச்சிருந்தாங்க.

எதிர்வீட்டு வாசல்ல என் பையன் செத்துக் கிடந்தான்னு, சேதி வந்துச்சு (சொல்லி முடிப்பதற்குள் கண்ணீர் பெருகி, அடக்க முடியாமல் அழுகிறார்) கருத்துள்ள புள்ள அவன். பேட் (கிரிக்கெட்) விளையாடணும்னு சொல்லிட்டுப் போவான். ராத்திரி கனவுல வந்து, ‘ஏம்மா என்னை விட்டுட்டுப் போன’னு கேட்குகிறான். நான் என்னத்தச் சொல்றது? கடல் கொண்டுபோறதுக்குதான் அவனை வளர்த்தேனா? என் பொண்ணும் செத்துட்டானுதான் எல்லாரும் சொன்னாங்க. வீட்டுக்காரரு ஊர், ஊரா அலைஞ்சு, கடைசியா மன்னார்குடி முகாம்ல இருந்த அவளைக் கண்டுபிடிச்சுக் கூடிட்டு வந்தாரு. இப்ப காலேஜ்ல படிக்கிறா” என்று விசும்பியபடி முடிக்கிறார்.

சுனாமியிலிருந்து மீண்டவர்களுக்கு, அந்தக் காயத்தின் வடுக்கள் இன்னமும் வலியைத் தருவதாகவே உள்ளன.