Published:Updated:

``குழந்தைகளை பாரம்பர்யத்தோட வளர்க்கணும்" - `வளைகாப்புப் பாடல்' பாடி அசத்திய பெண்கள்!

வெ.வித்யா காயத்ரி
``குழந்தைகளை பாரம்பர்யத்தோட வளர்க்கணும்" - `வளைகாப்புப் பாடல்' பாடி அசத்திய பெண்கள்!
``குழந்தைகளை பாரம்பர்யத்தோட வளர்க்கணும்" - `வளைகாப்புப் பாடல்' பாடி அசத்திய பெண்கள்!

ரு பெண் அமர்ந்திருக்க... மற்ற இரண்டு பெண்களும் பாடுகிற வளைகாப்புப் பாடல் நெட்டில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. தாய்மையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கும், உள்ளே வளரும் சிசுவுக்குமான அட்சரசுத்தமான அழகுத் தமிழில் பாடப்பட்ட அந்தப் பாட்டை கேட்டதுமே உற்சாகம் நமக்குப் பீறிடுகிறது. அதைப் பாடிய இரு பெண்கள் சிங்கப்பூரில் வசிக்கிறார்கள். அட என்கிற ஆச்சர்யத்தோடு மிகுந்த சிரமத்துக்குப் பிறகு இருவரையும் வாட்ஸ் அப் காலில் பிடித்தேன்.

ஒருவர் சுந்தரி மற்றொருவர் பிரியா. சுந்தரி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிங்கப்பூரில் குழந்தைகளுக்குப் பாடல் கற்றுக் கொடுத்து வருகிறார். அவருடைய மாணவி பிரியா. சுந்தரியும், பிரியாவும் இணைந்துதான் இந்தப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். 

``என்னுடைய பெயர் சுந்தரி. என் சொந்த ஊர் ராங்கியம். என் அப்பத்தா குரல் சூப்பரா இருக்கும். அவங்க தாலாட்டு பாட்டு அருமையா பாடுவாங்க. அவங்கதான் என் ரோல் மாடல். அவங்க பாடின மாதிரியே நானும் பாடுவேன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நான் 5  வயசுலேருந்தே கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டேன். காலேஜ் படிக்கும்போது பார்ட் டைமா அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலை பார்த்தேன். அங்கே பாட்டுக்கு இடையில் வருகிற ஜிங்கிள்ஸ் நான்தான் பாடுவேன். கிட்டத்தட்ட 500 விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் பாடியிருப்பேன். அங்கே சேர்ந்ததுக்கு அப்புறமாதான் லைட் மியூசிக்கும் பாட கத்துக்கிட்டேன்'' ''என்றவரிடம் அவருடைய மியூசிக் டீச்சர் பயணம் ஆரம்பித்த விதம் குறித்துக் கேட்டோம்.

``திருமணத்துக்குப் பின்னர் சிங்கப்பூருக்கு வந்துட்டேன். இங்கே வந்ததும், கடந்த பத்து வருஷத்துக்கும் மேலாக மியூசிக் கிளாஸ் எடுக்கிறேன். சின்ன வயசுல இருந்தே என்னால தனியா பாட முடியாது. கையில் கிடைக்கிற ஏதாவது பொருளை தாளமாப் பயன்படுத்திப் பாடுவேன். அதுதான் என் வழக்கம். என் கணவர் ஐடியில் வேலை பார்க்கிறார். என் பொண்ணுங்க பாட்டு கத்துகிட்டு இருக்காங்க. சிங்கப்பூரில் நிறைய மேடைகளில் நான் பாடியிருக்கேன். ஏப்ரல் மாதம் இங்கே அரசாங்கத்தில் இருந்து `தமிழ்மொழி மாதம்'னு கொண்டாடுவாங்க. ஒரு மாசம் முழுக்க அந்தக் கொண்டாட்டம் இருக்கும். அங்கே கலந்துகிட்டு நானும், என் மாணவர்களும் நிறைய பாடல்கள் பாடியிருக்கோம். இந்தக் காலத்துப் பசங்களுக்கு தமிழ்மொழியோட அருமை புரியுறது இல்ல. ஆங்கிலத்துல பேசுறவங்களுக்கு நம்ம தாய்மொழியில் நாம சொல்ற சின்னச் சின்ன வார்த்தைக்கான அர்த்தம் கூட புரியல. எல்லோருக்கும் புரியுற மாதிரி எளிமையான வார்த்தைகளில் நம்முடைய கலாசாரத்தைப் பற்றிய புரிதலை அவங்ககிட்ட ஏற்படுத்தணும்னு நினைச்சேன் என்றவரிடம் `வளைகாப்புப் பாடல்' தோன்றிய விதம் குறித்துக் கேட்க குஷியாகிறார்.

``மக்கள் கூடுற இடத்துல எல்லாம் தமிழ்ப் பாடல்களைப் பாடி நம் கருத்தைப் பதிவு செய்யணும்னு நினைச்சேன். என் மாணவி பிரியா, யோகா டீச்சர். என் வீட்டுக்கு அருகில் இருக்காங்க. சொல்லப்போனா, அக்கா, தங்கை மாதிரி தான் ரெண்டு பேரும் பழகுவோம். அவங்க கடந்த 4 வருஷமா என்கிட்ட மியூசிக் கத்துக்குறாங்க. நான் எப்படிப் பாடுறேனோ அதை அப்படியே தாளம் தப்பாமல் பாடுவாங்க. அதனால, ரெண்டு பேரும் சேர்ந்து விழிப்பு உணர்வு பாடல்களைப் பாடலாம்னு நினைச்சேன். அப்பதான் பிரியாவுடைய சொந்தக்காரப் பொண்ணுக்கு வளைகாப்பு ஏற்பாடு பண்ணிட்டு இருந்தாங்க. அந்தப் பொண்ணை பிரியா சொந்தப் பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டாங்க. அவங்களுக்காக நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு வளைகாப்பு பாட்டு பாடலாம்னு முடிவு பண்ணோம்.

பானுமதின்னு ஒரு அம்மா `வளைகாப்பு' குறித்து ஒரு கவிதை மாதிரி எழுதியிருந்தாங்க. அவங்களுடைய பொண்ணு அர்ச்சனா அதை தன் முகநூலில் பகிர்ந்திருந்தாங்க. அவங்களுடைய அனுமதி வாங்கி அந்த வரிகளை எடுத்தோம். அதில் எங்களுக்குத் தோன்றிய வரிகளையும் சேர்த்து `வளைகாப்புப் பாடல்' உருவாக்கினோம். அந்தப் பாட்டை பாடிய போது எங்களுடைய நண்பர்கள் அதை வீடியோ எடுத்து முகநூலில் பதிவிட்டாங்க. அதுக்கு நிறைய வரவேற்பு கிடைச்சது. பிறந்தநாள், வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்காக நாங்களே ரெடி பண்ணின பாடல்களை என் மாணவர்களுக்கும் கத்துக் கொடுக்கிறேன். திருஷ்டி போக்குறதுக்காக நல்ல நிகழ்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் ஆரத்தி சுத்துவாங்க. அந்த சமயத்துல, அந்த நல்ல நிகழ்வுக்கு வந்திருந்த எல்லாச் சொந்தங்களுக்கும் நன்றி சொல்ற வகையில் `நன்றி பாடல்' ஒன்று ரெடி பண்ணியிருக்கோம். இதுமட்டுமில்லங்க, என் பொண்ணு பூப்பெய்தியதும் அவளுக்காகப் பாடணும்னு ஒரு 'சடங்குப்பாட்டு' ரெடி பண்ணிட்டு இருக்கேன்'' எனத் தாய்மையில் நெகிழ்கிறார், சுந்தரி.

சுந்தரியைத் தொடர்ந்து பிரியா பேச ஆரம்பித்தார்.

``என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர். வளர்ந்தது, படிச்சதெல்லாம் சென்னை. திருமணமானதும் சிங்கப்பூருக்கு வந்துட்டோம். திருமணத்துக்குப் பிறகு கொஞ்ச நாள் அக்கவுன்ட்ஸ் மேனேஜரா வேலை பார்த்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்காக நேரம் செலவழிக்கணும்னு வேலையை விட்டுட்டேன். என்னுடைய 20 வயசுல யோகா கத்துக்கிட்டேன். எனக்கு ரெண்டு பசங்க. குழந்தைங்களை சரியா வளர்க்கணுங்குறதுல ரொம்பவே உறுதியா இருந்தேன்.  நிறைய பெண்கள் திருமணத்துக்கு அப்புறம் அவங்களுக்கான வாழ்க்கையை வாழுறதையே குற்ற உணர்ச்சியா நினைக்க ஆரம்பிச்சிடுறாங்க. கடந்த 3 வருஷமா யோகா கிளாஸ் எடுக்கிறேன். இதுமட்டுமல்லாம, என் பசங்களை எந்தெந்த கிளாஸில் சேர்க்கிறேனோ நானும் அந்த கிளாஸூக்குப் போயிடுவேன். வீணை, வாய்ப்பாட்டு, பேட்மின்டன்னு எல்லாமே எனக்குத் தெரியும். 

பொதுவா பசங்களை கிளாஸ்ல சேர்த்துட்டு கடமை முடிஞ்சதுன்னு வீட்டுக்குப் போயிடுவோம்ல. அப்படி நான் இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அவங்க கூட எல்லா கிளாஸூக்கும் போனேன். அவங்க ஸ்கூலுக்குப் போன சமயம் வீட்டுல உள்ள வேலையையும் செஞ்சிடுவேன். என் பசங்க கூட எல்லா கிளாஸூக்கும் போகுறதுனால எங்களுக்குள்ள எந்த கேப்பும் இல்ல. அவனை என்னால புரிஞ்சிக்க முடியுது. ஏதாவது ஒண்ணுன்னா அம்மாகிட்ட ஷேர் பண்ணலாம்னு அவனுக்குத் தோணும்.

நானும், என் ரெண்டு பசங்களும் சுந்தரிகிட்ட பாட்டுக் கத்துக்குறோம். குழந்தைங்களை பாரம்பர்யமா வளர்க்குறது ரொம்பவே முக்கியம். அவங்களுடைய சொந்தக்காரங்க கூட எப்படி மனம்விட்டு சிரிச்சுப் பேசி மகிழ்வாங்களோ அப்படித்தான் பக்கத்து வீட்டுக்காரங்க கூடயும் பேசுறாங்க. இந்த உணர்வைத் தமிழ் மொழியால மட்டும்தான் ஏற்படுத்த முடியும். இப்பவும் நம்மளுடைய தமிழ் விளையாட்டுகளைத்தான் என் பசங்க விளையாடுறாங்க. அதைப் பார்க்கும்போதே அவ்வளவு அழகா இருக்கும். எங்களுடைய வீடுகளிலும் சிறுதானிய உணவுகள் தான் சாப்பிடுறோம். தமிழ் மொழிக்கு எங்களால் முடிஞ்ச நன்றிக்கடன் செலுத்தணும்னு நினைச்சோம். அதைத்தான் இப்போ பாடல் வடிவில் வெளிக்கொண்டு வந்துருக்கோம் என்றார். பிறந்தநாள் வாழ்த்துக்கு அவர்கள் பாடியுள்ள பாடல் வரிகள் இதோ..

வாழ்க! வாழ்க! வாழ்க!

நீண்ட நாட்கள் வாழியவே!

வளமும், நலமும் வாழ்வில் பெற்று

வானமாய் வாழியவே!

வாழிய.. வாழியவே!

நீங்களும் அந்த அழகான பிறந்தநாள் பாடலைக் கேளுங்கள்.... லிங்க் இதோ...