Published:Updated:

மைக்கேல், மதன, காம, ராஜன்

மைக்கேல், மதன, காம, ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
மைக்கேல், மதன, காம, ராஜன்

நினைவோவியம்சந்தோஷ் - விக்னா - ஓவியங்கள் : ஷண்முகவேல்

மைக்கேல், மதன, காம, ராஜன்

நினைவோவியம்சந்தோஷ் - விக்னா - ஓவியங்கள் : ஷண்முகவேல்

Published:Updated:
மைக்கேல், மதன, காம, ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
மைக்கேல், மதன, காம, ராஜன்

``யாராக்கும் வந்திருக்கிறது?” என்றபடியே உள்ளிருந்து வந்த பாலக்காட்டுப் பெண்மணியை, `எங்கேயோ பார்த்திருக்கிறோமே!’ என்று சந்தோஷும் நானும் ஒரே நேரத்தில் மூளையைக் கசக்கிக்கொண்டோம். `திருபுரசுந்தரி கேட்டரிங்’, இப்போது சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற கல்யாண கான்ட்ராக்ட் நிறுவனங்களில் ஒன்று. சந்தோஷின் தங்கை திருமணத்துக்கு இவர்கள் சமையல்தான் வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் அடம்பிடித்ததால், இங்கே ஆஜராகியிருந்தோம். வந்த இடத்தில் இப்படி மூளையைக் கசக்கவேண்டியதாகிவிட்டது.  

மைக்கேல், மதன, காம, ராஜன்

வந்த விஷயத்தை அவரிடம் பேசிக்கொண்டே, சுற்றிலும் கண்களால் துழாவியதில் `மாமி யார்' என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். பெரிய சைஸ் படத்தில் மாலையோடு குருவாயூரப்பன் அருள்பாலித்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த போட்டோவில் பி.சி.ஸ்ரீராம் ஸ்டைல் பேக்லைட்டில் இளமையான ஜோடியாக நிற்பவர்கள் - அட, நம்ம காமேஸ்வரனும் திருபுரசுந்தரியும்.

`சுந்தரி நீயும்... சுந்தரன் நானும்...’ என என்னைப்போலவே சந்தோஷ் காதிலும் பின்னணி இசையோடு பாடல் ஒலிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். திருபுரசுந்தரி மாமி ஏதோ கேட்க, ``ஓஓஓஹோ...’’ என ராகமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

காமேஸ்வரன் மாமாவும் வந்துவிட, சந்தோஷ் உற்சாகமானான். ``உங்களை எனக்குத் தெரியும் சார். ரோட்ல யாராவது `திரிபு, திரிபு’னாக்கூட வண்டியைத் திருப்பிடுவீங்களே...’’

மாமா சிரித்தார். ``அன்னிக்குத் திரும்பின வண்டிதான். பாருங்கோ, `திருபுரசுந்தரி கேட்டரிங்’க்காக இப்ப வரை ஓடறது!’’

``உங்க மத்த சகோதரர்கள் - மைக்கேல், மதன், ராஜன் எல்லாரும் என்ன பண்றாங்க? கக்கத்தைச் சொரிஞ்சுண்டு இருப்பாரே வரதுக்குட்டி, மாமியோட திருட்டுப் பாட்டி, அப்புறம் உங்கப்பா?’’

``அவங்க எல்லாரும் அவங்கவங்க இடத்துல க்ஷேமமா இருக்கா. என்னையும் அந்த மாளிகை மாதிரி வீட்டுல இருக்கச் சொல்லி மதன் கேட்டான். எனக்கு மாளிகையைவிட இந்த மளிகைதான் பிடிக்குமோல்லியோ... அதான் முடியாதுன்னுட்டேன். நமக்கு இந்தச் சமையல், சாம்பார் தூள் வாசனைனு பழக்கமாயிடுத்து பாருங்கோ” என்றார் காமேஸ்வரன்.

``இந்த வரதுக்குட்டி…” என்று இழுத்தான் சந்தோஷ். `காமேஸ்வரா ம்ம்ம் ம்ம்ம்’ என்று அவர் இப்போதும் இழுக்கிறாரா எனக் கேட்கும் ஆர்வம் அவன் முகத்தில்.

``இந்த வரதுக்குட்டி, இப்பெல்லாம் கக்கத்தைச் சொரிஞ்சுண்டு சமையல்கட்டு பக்கம் சுத்துறதில்லை. ஸ்வச் பாரத்தை தீர்க்கமா ஃபாலோ பண்றான், அதான்” சிரித்தார்.

``எங்க பாட்டி நைன்டீஸ்ல கொஞ்சம் பெட் ரெஸ்ட் எடுக்கிற மாதிரி ஆகிடுத்து. அந்தத் தலைகீழா சரிஞ்ச மலை வீட்டுல கரணமெல்லாம் அடிச்சாளோல்யோ?! பிபி ஏறிடுத்து. க்ளைமாக்ஸ் முடிஞ்சப்புறம் அப்படியே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண வேண்டியதாப்போச்சு. டிஸ்சார்ஜாகி வீட்டுக்கு வரும்போதுகூட டாக்டரோட ஸ்டெதாஸ்கோப்பைத் திருடிட்டு வந்துட் டாள்னா பாத்துக்கோங்கோ. கொஞ்சம் நாள்ல போய்ச் சேர்ந்துட்டா’’ என்று உள்ளங்கையைக் குவித்து மேல்நோக்கிக் காட்டிய திரிபுவின் கண்கள் லேசாகக் கலங்கிவிட்டன. ``திருப்பிவைக்காத திருபுரசுந்தரி ஆகிட்டேன்.”

``உங்கப்பா?” என்றேன் நான்.

``எந்த அப்பாவைச் சொல்றேள், பெத்த அப்பாவா... வளர்த்த அப்பாவா?” என்றார் காமேஸ்வரன்.

``ஓ ஸாரி, ரெண்டு பேரும்தான்.”

``பெத்த அப்பா, மதன்கூட இருக்கார். அவருக்குச் சித்தசுவாதீனம் இன்னும் திரும்பலை. நான் அடிக்கடி போய் மிளகு கஷாயம் எல்லாம் வெச்சுக் கொடுத்துட்டு வருவேன். வளர்த்த அப்பா இன்னும் என் கூடத்தான் இருக்கார். சமையல்லேர்ருந்து ரிட்டையர்டு ஆகிட்டார்.”

``என்ன மாமி, கல்யாணத்துக்கு முன்னாடி காமேஸ்வரன் மாமாவுக்கு அவ்வளவு பெரிய மளிகை லிஸ்ட் கொடுத்தவங்க நீங்க. இப்போ எப்படி?” என்றான் சந்தோஷ்.

``ஹா... ஹா..!’’ என்று சிரித்தார் திருபு மாமி. காமேஸ்வரன் குறுக்கே புகுந்து, ``அது ஆத்துக்கு மளிகை வாங்கக் கொடுத்த லிஸ்ட். இப்போ கேட்டரிங் வேற. நான் தோள்ல லிஸ்ட் போட்டுண்டு ஸ்கூட்டர்ல கடைக்குப் போனா, லிஸ்ட் பேப்பர் நீளமா அரை கிலோமீட்டர் வரைக்கும் பின்னால பறக்கும்னா பாத்துக்கோங்கோ!’’  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மைக்கேல், மதன, காம, ராஜன்

மாமாவுக்கும் மாமிக்கும், இப்போதைய திருமணங்களில் திணிக்கப்பட்டிருக்கும் அதீதமான ஆடம்பரங்கள் பற்றிய மனக்குறை இருப்பதைக் கண்டுகொண்டோம்.

``இப்ப ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பிளாஸ்டிக் பாட்டில் தண்ணி தந்துடச் சொல்றா. ஆயிரம் பேருக்கான பந்தினா 1,500 பாட்டிலானும் செலவாகறது. அத்தனையும் கடைசியில மலையாட்டம் குவிஞ்சு, ஹூம்... கல்யாணத்துக்கு வந்தவாளுக்கு சின்ன செடி பரிசா கொடுத்துட்டா மட்டும் பூமியைக் காப்பாத்திட்டதா நினைச்சுடுறா...”

``இந்தச் செலவெல்லாம் உங்களைப்போல கான்ட்ராக்ட்காரர்கள் ஏத்திவிட்டதுதானே?”

``உண்மைதான். ஆனா, எங்களுக்கு இது பிசினஸ். அதையும் இதையும் சொல்லி ஆசை காட்டத்தான் செய்வோம். அதுக்கெல்லாம் மசிஞ்சிடறதா? உதாரணத்துக்குச் சொல்றேன், மாப்பிள்ளை `காசி யாத்திரை’ போறதுன்னா என்ன? பையன் படிப்பு முடிஞ்சதும் `காடு, மலை எல்லாம் தாண்டி காசிக்குப் போறேன்’னு கிளம்பணும். அதுக்காக செருப்பு, மிருகங்கள்கிட்ட இருந்து பாதுகாத்துக்க கையில தடி, இளைப்பாற விசிறி, வெயிலயிருந்து பாதுகாத்துக்க குடை... அப்படிக் கிளம்பும்போது, பொண்ணப் பெத்தவர் எதிரில் வந்து `காசிக்குப் போக வேண்டாம். என் பொண்ண உங்களுக்குக் கன்னிகாதானம் பண்ணித்தர்றேன்’னுவார். இந்தச் சடங்கை இப்ப எப்படி நடத்துறோம் தெரியுமோ?”

திருபுவே தொடர்ந்தார், ``காசி யாத்திரை போறவருக்கு அகலமா மயில் கண் வேஷ்டி, அங்கவஸ்திரம்... பிடிச்சுண்டு போக குடைகூடச் சாதாரணமா இருக்கப்படாதுன்னு பட்டுத்துணியில ஜரிகை பார்டர் வெச்சு ஸ்பெஷலாத் தர்றோம். பித்தளை பூண் போட்ட கைத்தடி. அத்தனையும் பொண்ணாத்துக்காரா செலவுல.  இதெல்லாம் தாண்டி, குடையைப் பிரிச்சதும் உள்ளிருந்து ரோஜாப்பூ கொட்டணும். கேமராக்காரா இதெல்லாம் கேட்கிறா இப்போ. சொன்னா சிரிப்பேள்... காசி யாத்திரைக்கு இன்னொரு பேர் உண்டு, `பரதேசி கோலம்’னுவா.”

``மாப்பிள்ளை அல்லது பெண் அழைப்புனு வெக்கிறதே `இன்னாரோடு சம்பந்தம் பண்றோம். நாளை கல்யாணம்னு அறிவிச்சு, யாருக்காவது ஆட்சேபணை இருக்கா’னு தெரிஞ்சுக்கத்தான். அர்த்தமெல்லாம் மாறிப்போய், காருக்குப் பதிலா குதிரை பூட்டிய சாரட் வண்டியில கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை - பொண்ணு ரெண்டு பேத்தையும் ஏத்தி, மேளதாளத்துக்குப் பதிலா சினிமா பாடல்கள் வாசிச்சு எல்லாரும் தலைவிரிகோலமா முன்னாடி ஆடிண்டே போறா. நாம ஏன் நம்ம பாரம்பர்யத்தை விட்டுட்டு வடநாட்டுக்காராளக் காப்பியடிக்கணும்?”

மாமி வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந் தாலும், அவர் பேசுவதில் அர்த்தமிருந்ததால் நாங்களும் வாயடைத்துப்போயிருந்தோம். எல்லா சமூகங்களிலுமே எளிமையான சடங்குகளால் நிறைந்த, இருவர் இணையும் `கல்யாணம்’ என்னும் வைபவம், இப்போது இரு குடும்பங்கள் தங்கள் அந்தஸ்தைப் பறைசாற்றும் விழாவாக  மாறியிருக்கிறது.

``ரிசப்ஷனுக்கு வாசல்ல என்னெல்லாம் ஸ்டால் போடுவீங்க?” என்ற சந்தோஷ், இவர் சொல்லப் போவதில் தேவையற்றதை நீக்கிவிடும் முடிவுக்கு வந்திருந்தான்.

``முதல்ல ஐஸ்ல செய்த பிள்ளையார். அதைத் தாண்டியதும் காய்கறிகளால் பொம்மையெல்லாம் செஞ்சு கொலுபோல வைப்போம்.”

``இதெல்லாம் யாராவது பார்க்கிறாங்களா என்ன?”

``பார்க்கிறதில்லைதான். ஆனா, ஃபேஷனாச்சே!”

``அடுத்து சாப்பாடுதானே?”

``நன்னா சொன்னேள் போங்கோ. பேல்பூரி, பானிபூரி, பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் ஸ்டால்லாம் தாண்டித்தான் சாப்பாட்டுக்குப் போகணும்.”

சந்தோஷுக்குக் குழப்பமாகி விட்டது. ``இதெல்லாம் சாப்பிட்டா, எப்படி சாப்பாடு சாப்பிட முடியும்?”

``அட... எத்தனைக்கெத்தனை அயிட்டங்களோ அத்தனை உசத்தி உங்காத்துக் கல்யாணம்!’’

``உணவு வீணாகாதா?”

``அதைப் பத்தியெல்லாம் யாருக்குக் கவலை? நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், சப்பாத்தி, தோசை, புதினா சாதம், மூணு நாலு ஸ்வீட்...” என்று திருபுரசுந்தரி மாமி அடுக்கிக்கொண்டேபோக, எனக்கு ஒரு நிமிஷம் தலைசுற்றியது. அநேகமாக `ரிசப்ஷன் சாப்பாடு’ என்ற பெயரில் கண்டதையும் சாப்பிட்டு, கடைசியில் வயிறு நிறையாமல் வீட்டுக்கு வந்து தயிர் சாதம் சாப்பிட்டதுதான் அதிகம்.

மாமியே தொடர்ந்தார். ``நம்ம தென்னிந்திய வழக்கமே, நல்ல தலைவாழை இலை போட்டு, சாப்பாடு பரிமாறதுதான். அதென்ன ஃபேஷனோ, பஃபே சாப்பாடுங்கிறா. அதிதி தேவோ பவ – விருந்தினர்கள் தேவர்களுக்குச் சமானம்னுவா. ஆனா நாம, வந்திருக்கவாள தட்டை ஏந்திப் பிச்சை எடுக்கவிடுறோம். அதிலும் வயசானவாளும் கைக்குழந்தைக்காராளும் தட்டைப் பிடிச்சுண்டு பேலன்ஸ் பண்ணிச் சாப்பிடத் திண்டாடுறதைப் பார்த்தா பாவமா இருக்கு!”

``பத்து சேர் போடுறோமே மாமி?”

``நன்னா சொன்னேள். நூறு பேத்துக்கு பத்து சேர்னா, இதென்னா விருந்தா... மியூசிக்கல் சேர் போட்டியா?”

``உண்மைதான். ஒரு வேளைதானே என்று பஃபே ஏற்பாடு செய்கிறோம். அந்த ஒரு வேளை மட்டும் கல்யாணத்துக்கு வருபவர்களைச் சரியாகக் கவனிக்காததுபோலதானே ஆகிறது...’’

எனக்கு, அவர் வேறு என்னென்ன மாற்றங்களை எல்லாம் எதிர்க்கிறார் எனத் தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்தது. ``மாமி, நீங்க ரொம்பப் பட்டிக்காடா யோசிக்கிறீங்க. இப்ப கான்ட்ராக்ட் கல்யாணத்துல, வாசல்ல நிற்கக்கூட அழகழகா கல்லூரிப் பெண்களை நிறுத்துறாங்களே!”

``முன்னெல்லாம் வாசல்ல நிற்கிற பொண்டு, பொடிசைப் பார்த்தாலே யாராத்துக் கல்யாணம்னு தெரிஞ்சுடும். இப்ப சம்பளம் கொடுத்து யூனிஃபார்ம் போட்டு நிறுத்திவைக்கிறோம். வந்தவாள `வாங்கோ’னு சொல்லவும், தாம்பூலம் தரவும் உறவுக்காரா இல்லைன்னா, அப்புறம் என்ன கல்யாணம் அது? அடுத்து இன்டர்நெட்ல பண்ணிப்பா. நமக்கு கூப்பன் வந்துடும். அந்த ஹோட்டல்ல போய்ச் சாப்பிட்டுக்கவேண்டியதுதான்.”

ஆதங்கத்தைக்கூட நகைச்சுவையாக மாற்றத் தெரிந்த திருபு மாறவேயில்லை. காமேஸ்வரன் மாமா கொடுத்து வைத்தவர் தான்.

சந்தோஷ், சம்பிரதாயத்தை மீறாத எளிமையான பாரம்பர்ய உணவுப்பட்டியலை அவரிடம் நீட்டினான். திருபுரசுந்தரி மாமி குதூகலமானார்.

``உங்களைப்போல யாராவது வந்து மாத்தணும்னுதான் சார் ஆசைப்படுறேன்.”

``பிரேமத்தின் தீபங்கள் பாட... சொர்க்கத்தில் ஆனந்தம் தேட, இரு உயிர்களும் அவ்வுயிர்களை வாழ்த்த அன்புள்ளம்கொண்ட சொந்தபந்தங்களும் போதும். அந்தச் சொந்தங்களிடம் நம் பகட்டைக் காட்டி, எதையோ நிரூபிப்பதற்குப் பதிலாக எளிமையான திருமணத்தை நடத்திக்காட்டுவதன் மூலம் முன்னுதாரணமாகி அவர்கள் பாரத்தையும் குறைக்கலாம்!” - சந்தோஷின் குரலில் தெளிவு இருந்தது.

``யூ மீன்..?”

``ஐ மீன், வாட் ஐ மீன்!” மகிழ்வோடு அந்தத் தம்பதியிடமிருந்து விடை பெற்றுக்கொண்டோம்.

மைக்கேல், மதன, காம, ராஜன் வெளியான ஆண்டு: 1990

நடிப்பு: கமல்ஹாசன், குஷ்பு, ஊர்வசி, ரூபிணி இயக்கம்: சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்

மைக்கேல், மதன, காம, ராஜன்

“அஞ்சு பிள்ளைங்க... ஆத்துக்காரரோட சந்தோஷமா இருக்கேன்!”

`மை
க்கேல் மதன காமராஜன்' திருபுரசுந்தரியிடம் (ஊர்வசி) இந்தக் கற்பனை பற்றிப் பேசினோம்.

“எங்களுக்குக் கல்யாணமாகி 27 வருஷங்களாச்சு. கணவன் மனைவிங்கிற உறவைத் தாண்டி, இப்போ நானும் காமேஷ்வரனும் பிசினஸ் பார்ட்னர்ஸ். என் வீட்டுக்காரர் பெரிய பெரிய கல்யாண ஆர்டர்களில் சீஃப் குக். நான் ஆர்டருக்கு முந்தைய நாளே இந்தப் பூக்கோலம், மண்டப அலங்காரம் மாதிரியான விஷயங்களைப் பார்த்துக்குவேன். இருந்தாலும், என் ஃபேவரைட் டிபார்ட்மென்ட், ஊறுகாய்தாங்க. எங்க சமையல் கம்பெனிக்கு ‘த்ரியம்பகம்’னு பெயர் வெச்சு நடத்துறோம்.”

“குழந்தைங்க...?”

“ ‘சுந்தரி நீயும்... சுந்தரன் ஞானும்’ பாட்டுல வருவானே ஒரு பையன்... அதுமாதிரி எங்களுக்கு மூத்ததா ஆம்பளைப் பையன். அடுத்து ஒரு மகள், மூணாவதா ஒரு பையன். அதுக்குப் பிறகு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க... ஆக மொத்தம் அம்சமா அஞ்சு புள்ளைங்க!”

‘`பாட்டி எப்படி இருக்காங்க?”

“ஆர்வமா கேட்கறீங்க... பாட்டி காலமாயிட்டா. அவ சாகுறவரைக்கும் அந்தத் திருட்டுப் பழக்கத்தை விடலை. அவ திருடுன பொருள்களையெல்லாம் ஒரு ரூம்ல சேர்த்து வெச்சிருக்கோம். எல்லாம் அவ ஞாபகமாதான். கொடுமை என்னன்னா... இந்த ரூமுக்கு விருந்தாளிங்க யாராவது வந்தா, தொறந்து காட்டவும் முடியலை;  இருக்கிற பொருள்களை ஒளிச்சுவைக்கவும் முடியலை.”

‘`கடைசியா, குடும்பமா ஒண்ணு சேர்ந்தீங்களே... எல்லோரும் கூடத்தான் இருக்காங்களா?”

“மைக்கேல், மதன், ராஜூ அவங்கெல்லாம் அவா அவா குடும்பத்தோட நல்லா இருக்காங்க. மைக்கேல் மட்டும் மோடியோட அந்த டீமானிடைசேஷன் டைம்ல ரொம்பக் கஷ்டப்பட்டான். இப்போ பணம் நிறைய சேர்ந்துட்டதுனால, அந்த பீம்பாயோட சேர்ந்துக்கிட்டு அரசியலுக்குப் போயிட்டான்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism