Published:Updated:

கருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்!

கருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்!
பிரீமியம் ஸ்டோரி
கருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்!

வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ்இசையும் பயணமும்சாஹா

கருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்!

வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ்இசையும் பயணமும்சாஹா

Published:Updated:
கருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்!
பிரீமியம் ஸ்டோரி
கருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்!

பிடித்த இடங்களுக்குப் பயணம்.... பிடித்த நபர்களுடன் பயணம்.... இப்படிப் பயணங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். அந்தவகையில் பிடித்த உடைமைகளுடன் பயணம் செய்வதும் ஒருசிலரின் விருப்பமாக இருக்கிறது. பிரபல வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ் இந்த ரகம். 

கருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்!

நினைவு தெரிந்த நாள் முதல் வீணையைத் தன் மூன்றாவது கையாகவே பாவித்து அதனுடன் பயணித்துக்கொண்டிருக்கிறார் ஜெயந்தி. இவரது வீணை, உலகம் சுற்றி வந்திருக்கிறது. பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் நெருங்கிய உறவினரான ஜெயந்தி, வீணையைத் தேர்ந்தெடுத்தது சுவாரஸ்யமான கதை.

``வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் தங்கையும் என் பெரியம்மாவுமான பத்மாவதி அனந்த கோபாலன்தான் என் முதல் குரு. பெரியம்மா மட்டும்தான் எங்க குடும்பத்துல வீணை வாசிப்பாங்க. மற்றபடி அம்மா, அக்கா, சித்தி, மாமா, தாத்தானு எல்லாரும் வயலின் கலைஞர்கள். எனக்கு மூணு வயசிருக்கும்போது வீணை வாசிக்க ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல பெங்களூருலேருந்து சென்னையில உள்ள பெரியம்மா வீட்டுக்கு வந்து 22 வருஷங்கள் குருகுல வாசம் பண்ணி வீணை வாசிக்கக் கத்துக் கிட்டேன். வீணை மேதை டாக்டர் எஸ்.பாலச்சந்தர், என் பெரியம்மாவின் மானசிக குரு. அவர்கிட்ட கத்துக்கிற பெரிய வாய்ப்பும் அவர்கூட மேடையைப் பகிர்ந்துக்கிற அதிர்ஷ்டமும் எனக்குக் கிடைச்சது.

‘இவ்வளவு பெரிய வயலின் குடும்பத்துலேருந்து வந்த நீ வயலின் வாசிக்காம, ஏன் வீணை வாசிக்கிறே?’ங்கிற கேள்வியைப் பலரும் என்கிட்ட கேட்டிருக்காங்க. இசைக்கருவிகளை நாம தேர்ந்தெடுக்கிறதில்லை. அவைதான் கலைஞரைத் தேர்ந்தெடுக்கிறதா நான் நம்பறேன். வீணை என்கிற தெய்வம்தான் என்னைத் தேர்ந்தெடுத்ததா நினைக்கிறேன்...’’ - அவையடக்கத்துடன் பேசுபவர், தன் 15 வயதிலிருந்து தனிக் கச்சேரிகள் செய்து வருகிறார்.

‘`வீணைக்கும் எனக்குமான அந்த உறவு ஒருகட்டத்துல ரொம்பவே இணக்கமா மாறியது. என்னால சொல்ல முடியாததை வீணையின் மூலம் சொல்ல ஆரம்பிச்சேன். திரை இசைக்குப் போகாமல் கர்னாடக சங்கீத எல்லைக்குள்ளேயே இருந்தபடி வீணை இசையை எப்படியெல்லாம் பரப்பலாம் என யோசித்தேன். ஜுகல் பந்தி, வெஸ்டர்ன் மியூசிக் என எல்லாக் கலைஞர்களுடனும் இணைந்து வீணை வாசிச்சிருக்கேன்...’’ - தந்தியும் வீணையும் போலவே வீணையும் வாழ்க்கையுமாக ஒன்றியிருக்கும் ஜெயந்தி... மலேசியா, சிங்கப்பூர், பாங்காக், மொரீஷியஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், லக்ஸம்பெர்க், நெதர்லாந்து, துபாய், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா என உலகம் முழுவதும் வீணையுடன் பயணித்துவிட்டார்.

‘`நான் போனேன்னு சொல்றதைவிட, என் வீணை டிராவல் பண்ணினதுனு சொல்றதுதான் சரியா இருக்கும். 1990-ல முதன்முறையா யு.கே போனேன். வீணையை ஃப்ளைட்டுல எடுத்துட்டுப் போகணும்னா, அதுக்கேத்தபடி பெரிய மரப்பெட்டி தேவை. வீணைக்காக நான் தயார் பண்ணின அந்த மரப்பெட்டி நீளமா இருக்கும். ஆரம்ப நாள்கள்ல அந்த மரப்பெட்டியைப் பார்க்கிறவங்களுக்கெல்லாம் அது வேற மாதிரி தோணியிருக்கு. நானும் என் குருவும் ஆளுக்கொரு மரப்பெட்டியோடு போனா எல்லாரும், ‘ஐயையோ...’னு பயந்து பின்வாங்கியிருக்காங்க. பெட்டிக்கு மேல ‘இது இசைக்கருவி’னு எழுதி ஒட்டி வெச்சிருப்போம். ஒவ்வொரு ஃப்ளைட்டுலயும் ஓவர் சைஸ், ஓவர் வெயிட்டுங்கிற பிரச்னையை எதிர்கொண்டிருக்கேன்.
ஒருமுறை இதைப் பத்தி என் பெரியம்மா கிட்ட வருத்தத்தோடு சொல்லிட்டிருந்தேன். என் நிலைமை புரிஞ்சு என் பெரியம்மா எனக்காகவே பிரமாதமான ஒரு வீணையை டிசைன் பண்ணிக் கொடுத்தாங்க. அதாவது வீணையின் நாதம் கொஞ்சமும் குறையாம, அதேநேரம் அதன் அலங்காரப் பகுதிகளை மட்டும் தனித்தனியா எடுக்கிற மாதிரியான டிசைன் அது. ஃப்ளைட்டுல போகும்போது அதை ஹேண்ட் லக்கேஜாகவே வெச்சுக்கலாம். அந்த வீணையுடனான என் பயணம் வீணைக்கும் எனக்குமான உறவை இன்னும்  இனிமையானதா மாத்தினது. மக்கள், மதம், மொழிகளைக் கடந்த இசைக்கருவி இது...’’ - பெருமை பேசுபவருக்கு வீணைப் பயணம் இன்ன மும் எளிதாக மாறவில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்!

‘`ஒருமுறை யு.கே டூர் முடிச்சுட்டு இந்தியா திரும்பிக்கிட்டிருந்தேன். மான்செஸ்டர்ல ‘நீங்க இதை எடுத்துட்டுப் போக முடியாது’னு சொல்லிட்டாங்க. வந்து இறங்கினதும் சென்னையில எனக்கு சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கப் போறாங்க. கூடவே  45 ராகங்களை 2 மணி நேரம் நான் தனியா வாசிக்கணும். அதுக்கு வீணை டாப் ஃபார்ம்ல இருக்கணும்.

‘வீணையை வெச்சுட்டுப் போயிடுங்க... இல்லைனா லக்கேஜ்ல போடுங்க’ன்னு சொல்லிட்டாங்க. அந்தமுறை என் வீணையை ரொம்ப மென்மையான பெட்டியில வெச்சு எடுத்துக்கிட்டுப் போயிருந்தேன். அதனால லக்கேஜ்ல வைக்க பயம். தனியா ஸீட் வாங்கறேன்னு கெஞ்சியும்கூட அனுமதிக்கலை. கடைசியா ‘ஃப்ளைட் போர்டு பண்ற வரைக்கும் வெச்சுக்கோங்க. அப்புறம் லக்கேஜ்ல மேல் பகுதியில வைக்கிறோம்’னு சொன்னாங்க.  வீணைக்கும் எனக்குமான அந்த உறவுங்கிறது தாய்க்கும் குழந்தைக்குமான உறவுங்கிறதை அவங்களுக்குப் புரியவைக்க முடியலை. முழுப் பயணத்துலயும் அழுதுகிட்டே வந்தேன். லக்கேஜ்ல வந்த வீணையைத் திறந்து பார்க்கவே அவ்வளவு பயம். அப்புறம் மனசைத் திடப்படுத்திக்கிட்டுத் திறந்து பார்த்தா நல்லவேளையா வீணைக்கு ஒண்ணும் ஆகலை. அலங்காரப் பகுதி மட்டும் உடைஞ்சிருந்தது. அது வெறும் அழகுக்கானதுதான்னாலும் என்னால தாங்கிக்க முடியலை. வீட்டுக்கு வந்து வீணையை எடுத்து வாசிச்சுப் பார்த்த பிறகுதான் எனக்கு உயிரே வந்தது...’’ - இப்போதும் படபடப்பு குறையவில்லை ஜெயந்தியின் வார்த்தை களில்.

‘`ஒவ்வொரு வீணைக் குள்ளேயும் ஒரு தெய்வம் இருக்கும். வீணையை வெறும் மரம், கருவினு நினைச்சுத் தீண்டினா, அது நமக்கு எந்த சிக்னலையும் தராது. ‘நாட் ரீச்சபிள்’னு சொல்லிடும். அதுக்குள்ள இருக்கிற தெய்வத்தைப் பூஜிச்சுக் கிட்டே இருந்தால்தான் அது நமக்குக் கைகூடும். ரொம்ப நாள் கொஞ்சாம, தூக்காம இருந்தா மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிற குழந்தை மாதிரிதான் வீணையும். அது மூச்சுவிடும். அதுக்கும் ஜெட்லாக் இருக்கும். களைப்பா இருக்கும். தந்தியை மாத்தணும். எல்லாத்தையும் கவனிக்கணும்... குழந்தை வளர்ப்புக்கு நிகரான அக்கறை அவசியம்’’ - வீணையைக் கருவி என்றெண்ணாமல் கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர் என்கிறார் ஜெயந்தி.

‘`சங்கீதம் என்பது எப்படித் தொடர் பயணமோ, அதே மாதிரியானதுதான் வீணைக்கான பெட்டிகளைத் தேடித் தேடிச் செய்யறதும். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் இந்த இசையும் பயணமும் என்னிக்குமே எனக்கு அலுப்புத் தட்டாது.’’

இசையில் தொடருதம்மா வாழ்க்கை! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism