Published:Updated:

“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”

“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”
பிரீமியம் ஸ்டோரி
“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேஅவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேஅவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”
பிரீமியம் ஸ்டோரி
“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”

கேள்விக்கணைகளால் எதிராளியை நிலைதடுமாறச் செய்கிற நக்கீரர். எத்தனை பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் அவர்மீதான தன் அபிமானத்தையோ, வெறுப்பையோ காட்டிக்கொள்ளாத நெறியாளர். ஊடகவியல் துறையில் கால்பதிக்க விரும்புவோருக்கான உதாரண மனிதர்.  

“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”

அதிரடி ஆளுமையாகவே நாமறிந்த ரங்கராஜ் பாண்டே, ஒருவரைப் பற்றிப் பேசும்போது மட்டும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உருகுகிறார்; மறுகுகிறார். `அவருக்குள் இப்படியும் ஒரு மென் உணர்வா?’ - வியக்கவைக்கிற அவரது விவரிப்பில் வியாபித்திருக்கிறது தாய்ப்பாசம்.

அவளும் நானும்

`` ‘ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்’ என்று சொல்வார்கள். என் வெற்றிக்குப் பின்னால் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் நான் கடந்து வந்த எல்லாப் பெண்களுமே எனக்கு மிகப் பெரிய வரங்களாக அமைந்தார்கள். அவர்களில் முதலும் திடமுமான பெண் என் தாய்.

அம்மாவின் பெயர் பாகீரதி. கங்கையின் பெயர் அது. அம்மா அவரின் பெற்றோருக்கு ரொம்பவே அதிர்ஷ்டமான பெண் என்பதால் `பாஹ்மணி' என்றும் சொல்வார்களாம்.

நான் நன்றாகக் கேள்வி கேட்கிறேன், நன்றாகப் பேசுகிறேன், நன்றாகத் தமிழ் பேசுகிறேன் என்றெல்லாம் பாராட்டுகிறவர்கள் ‘என் அம்மாவுக்குத் தமிழே தெரியாது’ என்கிற தகவலைக் கவனிக்க வேண்டும். அம்மாவுக்கு இந்தியில்கூட அவ்வளவு நிபுணத்துவம் கிடையாது. வட்டார வழக்கு மொழியான போஜ்புரிதான் அவருக்குத் தெரியும். ஆனால், ஓர் அம்மாவாக அவர் என்மீது காட்டிய, கொட்டிய பாசம் வார்த்தைகளால் வடிக்க முடியாதது...’’ - பாண்டேவின் பேச்சில் வழக்கமாக நாம் பார்க்கிற பரபரப்பு இல்லை. அம்மாவின் நினைவைப் பகிரும்போது அத்தனை நிதானம்.

‘`அம்மா என் அப்பாவிடம் என்னை நிறையப் போட்டுக்கொடுப்பார். அப்பா என்னை வெளுத்துக் கட்ட நிறைய துணை நிற்பார். நான் சொல்கிற பொய், சால்ஜாப்புகளை, பொய் என அம்பலப்படுத்துவார். அதற்கும் சேர்த்து இரண்டு அடி கூடுதலாக விழும். அவை எல்லாவற்றையும் தாண்டி, வெறும் பாசத்தை மட்டுமே அறிந்த பெண் அவர். என்னுடைய தாய் மட்டுமல்ல... உலகத்திலுள்ள எல்லாத் தாய்களும் அப்படித்தான். தாய் என்றாலே பாசம்தான். தாய் தனி, பாசம் தனி எனப் பிரிக்க முடியாது. தாய் என்றால் பாசம், பாசமென்றால் தாய். இரண்டு வார்த்தைகள் ஒரு வார்த்தையாகவே மாறிய விஷயம் இது.

அம்மாவுக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. மொழி தெரியாது. உலக நடப்புகள் தெரியாது. விவரம் தெரியாது. சூட்சுமம் தெரியாது. தந்திரம் தெரியாது. கிருத்திமம் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பாசம் ஒன்றுதான். நான் கதைப் புத்தகம் படிக்கிறேனா, பாடப் புத்தகம் படிக்கிறேனா எனத் தெரியாது. என் கையில் புத்தகம் இருந்தாலே ‘எம்புள்ளை படிக்கிறான்’ என அம்மா உற்சாகமாகிவிடுவார்.

அம்மா எந்தளவுக்கு வெள்ளந்தியானவர் என்றால், நான் எங்கேயாவது ஊருக்குக் கிளம்பினால் ‘என்னை மறந்துடாதடா’ என்பார். உலகத்தில் எந்தத் தாயும் தன் மகனைப் பார்த்து `என்னை மறந்துடாதே' எனச் சொல்ல மாட்டார். என் அம்மா சொல்வார். அவருக்கு அவ்வளவு பாசம். வேலையாக இருந்து நம்மை நினைக்காமலிருப்பதும் மறப்பதற்குச் சமம் என நினைப்பார். அப்படிச் சொல்லும் ஒவ்வொரு முறையும் நான் அவருக்கு ஒரே பதிலைத்தான் சொல்லியிருக்கிறேன்... ‘லூசு.... அம்மாவைப் போய் பிள்ளைங்க மறப்பாங்களா?’ 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”

நாங்கள் ஐந்து பிள்ளைகள். மூத்தவர் அக்கா. நான்தான் கடைசி. ஐந்து பேருக்கு உணவைப் பிரித்துக் கொடுத்தால் யாருக்குமே வயிறு நிறையாமல் போகும். ஆனால், ஐந்து பேருக்கு அன்பைக் கொடுத்தால் அது நிறைந்து கொண்டே போகும் என்பதற்கு உதாரணம் அம்மாவும் நாங்களும். வீடுகளில் சகஜமாக வருகிற மாமியார் - மருமகள் சண்டை எங்கள் வீட்டிலும் வந்திருக்கிறது. என் சகோதரருக்கும் அம்மாவுக்கும் பிணக்கு வந்தபோது அம்மா சொன்ன வார்த்தைகள்... ‘என்கூடப் பிணக்கு இருந்தா என்ன? அவ புருஷனை அவ நல்லாத்தானே பார்த்துப்பா... அப்படி என் பையன் சந்தோஷமா இருந்தா சரிதான்.’ இந்தக் குணத்தைத் தாயைத் தவிர வேறு யாரிடத்திலும் பார்க்க முடியாது. 

என் வாழ்க்கையின் மிகவும் துரதிர்ஷ்டமான, ஈடுசெய்ய முடியாத இழப்பொன்று உண்டு. 2012 ஜூன் மாதம் அம்மா தவறிவிட்டார். ஒன்றுக்கு ஐந்து பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும் என் அம்மா இறந்தபோது ஐவரில் ஒருவர்கூட அவர் பக்கத்தில் இல்லை. அதை அம்மாவுக்கான கொடுந்துயரமாகவும் எங்களுக்கான பேரிழப்பாகவும் நினைக்கிறேன். ‘மறந்துடாதே.... மறந்துடாதே...’ என்று சொல்லிக்கொண்டே இருந்தவருக்கு இறக்கும்போது ஒருவர்கூட அருகில் இருக்க முடியாமல் போய்விட்டதே...

நான் வேலைக்குச் சேர்ந்த ஏழாவது நாளில் அம்மா தவறியிருந்தார்... பீஹாரில் இறந்ததால் என்னால் உடனடியாகக் கிளம்ப முடியவில்லை. அம்மாவைச் சடலமாகப் பார்த்தபோது ‘லூசு.... லூசு....’ என்றுதான் கதறி அழுதேன். அம்மா இறந்தபோது நான் எப்படி அப்படி அழுதேன் என இன்று எனக்கு வியப்பாக இருக்கிறது. பாசத்தைத் தவிர வேறொன்றும் அறியாத அவரை அப்படி விட்டுவிட்டோமே என்கிற கவலை இருந்தது.

கல்யாணச் சாவு எனக் கேள்விப்பட்டிருப் பீர்கள். அம்மாவினுடையது அப்படியொரு கல்யாணச் சாவு. சொல்வதற்கே வியப்பாக இருக்கும். அம்மா நோய்வாய்ப்பட்டு ஒரு நாள்கூட மருத்துவமனையில் படுத்ததில்லை. எப்போதும் ஜெபம் பண்ணிக்கொண்டே இருப்பார். கையில் ஜெபமாலை இருக்கும். அதைச் சுற்றிக்கொண்டே இருப்பார்; அப்படியே தூங்கிவிடுவார். எழுந்திருக்கும் போது மாலை சுற்றுவார். 24 மணி நேரமும் கடவுளின் பெயரை உச்சரிப்பதுதான் அவரின் வேலையாகவும் வாழ்க்கை முறை யாகவும் இருந்தது. அப்படியொரு சந்தர்ப் பத்தில்தான் இறந்துபோனார். அம்மா பீஹாரில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாட்டில் தன் பெரும்வாழ்க்கையைக் கழித்தவர். மரணத்துக்காகவோ, என்னவோ தன் தாய்வீட்டுக்குப் போனார். எந்த வீட்டில் பிறந்தாரோ, அந்த வீட்டிலேயே இறந்தார். அதற்கு முந்தைய தினம், கிட்டத்தட்ட 10, 20 வருடங்களுக்குப் பிறகு கங்கையில் குளித்து விட்டு வந்திருந்தார். அவர் பிறந்த அதே சகோதரர் வீட்டில்தான் உயிர் பிரிந்திருக்கிறது. மாடியில் சத்யநாராயணா பூஜை நடந்திருக்கிறது.  எல்லாக் கதவுகளையும் திறந்து வைக்கச் சொல்லி பூஜை சத்தம் தன் காதுவழி கேட்டுக்கொண்டே இருந்தபடி நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், வலது கையில் மாலையுடன் இறந்திருக்கிறார். என் அப்பா மிகப் பெரிய பக்திமான். நெற்றியில் நாமமின்றி அவரைப் பார்க்க முடியாது. ‘இந்த மாதிரி மரணம் எனக்கே அமையுமானு தெரியலையேடா’ என்றார்.  இப்படி மரணம் அமைய வேண்டும் என விரும்பத்தகுந்த மரணம் அது. வலியின்றி, வேதனையின்றி அடுத்தவருக்குச் சிரமம் தராத மரணம். 

“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”

சிலருக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம். நான்கு தோழிகள் இருக்கலாம். ஏழு சகோதரிகள் இருக்கலாம். ஆனால், எல்லோருக்கும் ஒரு தாய்தான். தாயின் கருவறை ஒன்றே ஒன்றுதான். அதற்கு மாற்று கிடையாது. நம் வாழ்க்கையில் எங்கு சிக்கல் நடக்கிறது தெரியுமா? நமக்கு விவரம் தெரிந்த பிறகும் தாய்க்கு வயதான பிறகும் அவள் பிள்ளைகளுக்குச் சுமையாகத் தெரிகிறாள்.  நமக்கு விவரம் தெரியாதபோதும் தான் சரியான வயதில் இருந்தபோதும் நம்மைப் பாசத்துடன் வளர்த்தவள் அவள் என்பதை மறந்துவிடுகிறோம். `எனக்குப் பசிக்கிறது, எறும்பு கடித்துவிட்டது, என்னை யாரோ கிள்ளிவிட்டார்' என்று சொல்லத் தெரியாதபோது, என் அழுகைக்கான காரணம் பசியா, எறும்புக்கடியா, யாரோ கிள்ளியதா எனச் சரியாகக் கணிக்கக்கூடியவளாக இருந்திருக்கிறாள் தாய். குழந்தைக்கும் தாய்க்குமான தனிமொழி அது. நாம் வளர்ந்து, அவளுக்கு வயதாகும்போது சுமையாகப் பார்க்கிறோம். அதைவிடப் பெரும் துயரம், பெரும் அநீதி, பெரும் குற்றம் வேறெதுவும் இருக்க முடியாது.

அம்மாவின் இழப்பிலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்று சொல்வதே அநீதிதான். காயங்கள் ஆறிவிடும். வடுக்கள் ஆறுவதில்லை. வடுக்களைக் கடந்து அடுத்த வேலைகளைப் பார்ப்போம். அதற்காக அந்த வலி தீர்ந்துவிட்டதாக அர்த்தமில்லை. அம்மாவின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. என் மனைவி அற்புதமானவர். குடும்பமும் நான் சந்தித்த பெண்களும் எனக்குக் கொடுப்பினையாகவே இருக் கிறார்கள். ஆனால், அம்மா என்கிற இடம் இணையில்லாதது. அதை நெஞ்சில் சுமந்த படியே நடந்துகொண்டிருக்கிறேன்.

இந்தப் பேட்டியின்போதுகூட என் சிந்தனை அம்மாவிடம்தான் நிற்கிறது. `எனக்கே வயதாகி விட்டதோ... அதிகம் உணர்ச்சி வசப்படுகிறேனோ' என்றுகூடத் தோன்றுகிறது. அம்மாவைப் பற்றிய நினைவில் உணர்வுகள் மேலெழும்போதே அம்மா இல்லை என்பதை புத்தி அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறது. எனக்குக் கிடைக்கிற பாராட்டு களிலும்  சீராட்டுகளிலும் தாலாட்டுகளிலும் நான் அம்மாவை நினைக்கத் தவறுவதில்லை. நான் வெளியூரில் இருந்தபோதெல்லாம் என் சந்தோஷத்துக்காகவே வாழ்ந்தவர் அம்மா. இப்போதும் அவர் எங்கிருந்தாலும் என் சந்தோஷத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்றே நம்புகிறேன்.

இன்று நான் தொட்டிருக்கும் உயரத்தில்  என் மனைவி, அவரின் சகோதரிகள், என் சகோதரிகள் என எல்லோருக்கும் பெருமிதம். ஆனால்,  என் அம்மா என்னை ஒருநாள்கூட டி.வி-யில் பார்க்காமல் போய்விட்டாரே என்பது எனக்குப் பெரிய இழப்பு. தன் மகன் டி.வி-யில் பேசுவான் என்பதே அம்மாவுக்குத் தெரியாது. அவர் கொடுத்துக்கொண்டிருந்த அளவற்ற பாசத்தை எனக்கான செய்தியாகப் பார்க்கிறேன். அதனால்தான் என் பணியிலும், எங்கள் விருந்தினர்களை நடத்துவதிலும்   மாற்றுக் குறைவாக நடத்தக் கூடாது என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அப்படி நடத்தியிருந்தால் எந்த விருந்தினரும் இரண்டாவது முறை வந்திருக்க மாட்டார். கடுமையான கேள்விகள் கேட்கப்பட்டாலும் அதற்கு உள்நோக்கம் இருக்கக் கூடாது; நல்நோக்கம் மட்டும்தான் இருக்க வேண்டும். உட்பொருள் இருக்கக் கூடாது; அவமரியாதை இருக்கக் கூடாது. எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தி எனக்கு என் தாய்ப்பாசம் மூலம் கிடைத்தது. என் சக பணியாளர்களிடம், நான் சந்திக்கும் பெண்களிடம், என் மனைவியிடம், அவரின் சகோதரிகளிடம், என் சகோதரிகளிடம் என நான் போகுமிடமெங்கும் அன்பை மட்டுமே விதைக்க வேண்டும் என நினைக்கிறேன். அந்தத் தொடர் முயற்சிக்கான வலுவான ஆரம்பப் புள்ளியும் அடித்தளமும் என் தாய் தந்ததுதான்....’’ - கம்பீரக் குரல் உடைகிறது அவருக்கு; மனம் கனக்கிறது நமக்கு.

 நானும் அவளும் 

``தொடர்ந்து பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது!’’

“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்!”

‘`நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அவள் விகடனை நான் ஒரு பத்திரிகையாளராகப் பார்த்திருக்கிறேன். ஒரு வாசகனாகப் பார்த்ததில்லை. பெண்களுக்கான பத்திரிகை எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது, அதில் என்னவெல்லாம் இருக்கிறது, என்ன இல்லை எனக் கவனிப்பேன். இதற்கு முன்பிருந்த பெண்களுக்கான மாத இதழ்கள், மாதமிருமுறை இதழ்களும் வேறு மாதிரியான காகிதங்களிலும், வழவழப் பக்கங்களும் இல்லாமலிருந்தபோது, இதில் எப்படி முயற்சி செய்கிறார்கள் என்று கவனித்திருக்கிறேன். யூஸர் ஃப்ரெண்ட்லி என்பது போல வாசகர்களை உடனே கவரக்கூடியதாக இருந்தது. காரணம், அதைத் தந்த குழுமம்.

`உன் நண்பர்களைச் சொல்... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்றொரு பிரபல வாசகம் உண்டல்லவா? `அவள் விகடன்' அப்படித்தான். அவள் விகடனின் வீச்சுக்கு விகடன் குழுமம் என்கிற தாய் முக்கியமான காரணம்.

அவள் விகடனின் வாசகர் எண்ணிக்கையோ, வீச்சோ எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால், அவள் விகடன் தொடர்ந்து பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக் கிறது என்பதைப் பத்திரிகையாளராகப் பார்க்கிறேன்.

இன்று ஊடகங்களும் பெண்களும் மல்ட்டி டைமன்ஷனலாக மாறிவிட்டபோது, அவள் விகடன் போன்ற ஒரு பத்திரிகையை நடத்துவதே சவால்தான். அதை வெற்றிகரமாக நடத்துவது இன்னும் சிறப்பான விஷயம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism