Published:Updated:

“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”

“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”
பிரீமியம் ஸ்டோரி
“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”

கேரம் இளவழகிஅந்த நாள்வி.எஸ்.சரவணன் - படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”

கேரம் இளவழகிஅந்த நாள்வி.எஸ்.சரவணன் - படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”
பிரீமியம் ஸ்டோரி
“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”

2008 பிப்ரவரி 17... வறுமை நிறைந்த குடும்பத்தில் பிறந்த இளவழகியின் சாதனை முகம் உலகத்துக்குத் தெரிந்த நாள். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடந்த ஐந்தாவது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை இளவழகி வென்ற தினம்.

“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”

வறுமை, பின்புலமின்மை என முடங்கிப்போவதற்கான காரணங்களைத் தேடுபவர்களுக்கு மத்தியில், உழைப்பையும் முயற்சியையும் தடுக்க இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதற்கு வாழும் சாட்சி இளவழகி. சென்னை, மாதவரத்தில் சிறுவர்களுக்கு கேரம் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

“நான் பிறந்து வளர்ந்தது சென்னை, வியாசர்பாடியில். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. நான்தான் மூத்த பொண்ணு. கேரம்போர்டை வீட்டுக்குள்ள வெச்சு பிராக் டீஸ் பண்ண முடியாத அளவுக்கு ரொம்பச் சின்ன வீடு.  அப்பா இருதயராஜ் பி.எஸ்ஸி படிச்சிருந்தும் சரியான வேலை கிடைக்காம கூலி வேலைக்குப் போயிட்டிருந்தார். அப்பாவுக்கு, தான் கேரம்ல சாதிக்கணும்னு ஆசை. அது நடக்கல. அதனால, எனக்குச் சின்ன வயசுல இருந்தே கேரம் பிராக்டீஸ் கொடுக்க ஆரம்பிச்சார். பிறகு, அப்பாவோட நண்பர் ஆறுமுகம் அண்ணாவோட வீட்டுக்குப்போய் பிராக்டீஸ் எடுத்தேன்.

பெரம்பூர், ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படிச்சுட்டு இருந்தப்ப, கேரம்ல நிறைய பரிசுகள் வாங்கினேன். அந்த ஸ்கூல் டீச்சர்ஸ் எனக்குப் பரிசா ஒரு கேரம்போர்டு வாங்கிக் கொடுத்தாங்க. என் வாழ்க்கையில் எனக்கே எனக்குனு கிடைச்ச முதல் கேரம்போர்டு அதுதான். அதுக்கு முன்னாடி எல்லாம் மத்தவங்களோட போர்டுலதான் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன். தொடர்ந்து, தேசிய அளவில், ஜூனியர், யூத் ஆகிய பிரிவுகள்ல மூன்று முறை வெற்றிபெற்றேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”

2003-ம் வருஷம் சர்வதேசப் போட்டிகளில் கலந்துக்கிற வாய்ப்பு கிடைச்சுது. ஆனா, அதுக்கு 75 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. எங்க வீட்டுல பணம் கட்டுவதற்கான வாய்ப்பே இல்ல. அப்போ ஐ.ஏ.எஸ் ஆபீஸர் கிறிஸ்துதாஸ் காந்தி சார்தான் உதவினார். அமெரிக்காவில் நடந்த போட்டியில் சிங்கிள் பிரிவில் மூன்றாவது இடம்பிடித்தேன். அதுக்கு அடுத்த வருஷம் இந்தியா, இலங்கை டெஸ்ட்டில் இந்திய அணி சார்பாக விளையாடினேன்.

“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”2005-ம் வருஷம் மாலத்தீவில் நடந்த ஏஷியன் கோப்பை மற்றும் சார்க் நாடுகளுக்கு இடையான போட்டிகளில் சிங்கிள், டபுள்ஸ் மற்றும் டீம் சாம்பியன் பட்டத்தையும் பெற்றேன். 2006-ல் டெல்லியில் நடந்த உலகக் கோப்பை கேரம்போர்டில் சிங்கிள் பிரிவில் சாம்பியன் பட்டமும் டபுள்ஸ் பிரிவில் ரன்னராகவும் வந்தேன்.

2006-ல் உலக சாம்பியன் பட்டத்தை வென்றாலும் 2008-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் வென்றது ரொம்பவே ஸ்பெஷல். பிரான்ஸ் நாட்டில் நடந்த அந்தப் போட்டிதான், என் வாழ்க்கைக்கு மிகப்பெரும் வெளிச்சம் தந்தது. ஆனா, அங்கு செல்வதற்குப் பட்ட பாடுகள் ஏராளம். அந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி சென்னையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் ஜெயிச்சேன். பிரான்ஸில் நடைபெறவிருந்த உலக சாம்பியன் போட்டிக்கு என்னையும் சேர்த்து 16 பேர் தேர்வாகியிருந்தோம். நான் பலமுறை தேசிய அளவிலான பட்டங்கள் ஜெயிச்சிருந்தேன். பாயின்ட்ஸ் அடிப்படையிலும் நான்தான் முதல்ல இருந்தேன். ஆனாலும், பிரான்ஸ் செல்வதற்கான விசா கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன.  

‘அரசு வேலையில் இருக்கணும் அல்லது திருமணமாகியிருக்கணும்; அப்போ எளிதா விசா கிடைச்சிடும்’னு சொன்னாங்க. திருமணம் ஆகாமல், எந்த வேலையிலும் இல்லாம இருந்த எனக்கு, விசா கிடைக்க பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சிக்கல் விசா கிடைக்கிறதில் மட்டுமில்ல, அங்கே போக தேவைப்பட்ட 85 ஆயிரம் ரூபாய் பணத்துக்கும் என்ன பண்ணுறதுனு தெரியலை. இந்த முறையும் கிறிஸ்துதாஸ் காந்தி சார்தான், தன் ஒரு மாதச் சம்பளமான 63 ஆயிரத்தை அப்படியே டி.டி எடுத்துத் தந்தார்.

ஒருவழியா, பிப்ரவரி 11-ம்தேதி இரவு இந்தியாவிலிருந்து புறப்பட்டு பிரான்ஸில் இறங்கினப்போ, என் லக்கேஜ் தொலைஞ்சு போயிடுச்சு. விளையாடும்போது பயன்படுத்து றதை மட்டும் என் கைப்பையிலேயே வைத்திருந்ததால அந்தப் பொருள்களும், அணிந்திருந்த ஆடையும் மட்டும்தான் கைவசம் இருந்தன. அங்கே மைனஸ் இரண்டு டிகிரி குளிர். உடம்பு வெடவெடன்னு ஆட ஆரம்பிச்சிரும். என்னோட வந்திருந்த ரஷ்மி, குமாரி இரண்டு பேரும்தான் ரொம்ப உதவியா இருந்தாங்க. அவங்களோட நைட்டியை இரவுல போட்டுக்கிட்டு என் டிரஸ்ஸைத் துவைச்சு, காயப்போடுவேன். காலையில் அதைப் போட்டுக்கிட்டு கிரவுண்டுக்கு வருவேன். பிப்ரவரி 13-ம் தேதி ஆரம்பிச்சு 17-ம் தேதி வரை நடந்த போட்டிகள்ல, அந்த ஒரு டிரஸ்ஸைத்தான் மறுபடியும் மறுபடியும் உடுத்திக்கிட்டுக் கலந்துகிட்டேன். 

“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”

19 நாடுகள்லயிருந்து அந்தப் போட்டியில கலந்துக்க போட்டியாளர்கள் வந்திருந்தாங்க. பல பிரச்னைகள் இருந்தாலும் விளையாடும் போது அதையெல்லாம் மறந்து முழுக் கவனத்தையும் அதில் மட்டுமே செலுத்தினேன். ஐரோப்பிய நாடுகள்ல நாங்க விளையாடியதை லைவ்வா டெலிகாஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க. ஃபைனலில் என்னை எதிர்த்து விளையாடினவங்க, ஹைதரா பாத்தைச் சேர்ந்த நிர்மலா மேடம். ஒருவழியா, என் சின்ன வயசுலேருந்து நானும் எங்கப்பாவும் கண்ட கனவு நனவாச்சு. பெண்கள் பிரிவில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை ஜெயிச்சேன். ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு. அப்பாவே ஜெயிச்ச மாதிரி இருந்துச்சு. டபுள்ஸ் பிரிவிலும் ரன்னராக வென்றேன். ஒரு பெரிய வெற்றியோடு இந்தியா வந்தவுடன், அப்போ ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் மேடம் டீ பார்ட்டி கொடுத்தாங்க. ரொம்பப் பெருமையா இருந்துச்சு.

`எப்படா ஊருக்கு வந்து அம்மா, அப்பா, தங்கச்சிகளைப் பார்ப்போம்'னு மனசு தவிச்சுது. 22-ம் தேதிதான் சென்னைக்கு வர முடிஞ்சுது. அப்போ முதல்வராக இருந்த கலைஞர் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்தார். அந்தப் பணத்தில் முதல் செலவு அப்பாவுக்கானதா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, அப்பா அதெல்லாம் வேண்டாம்னு சொன்னார். அப்பா மீன்பாடி வண்டி ஓட்டிட்டிருந்தார். அவருக்கு ஒரு டெம்போ வாங்கிக்கொடுத்தேன். இப்ப வரைக்கும் அந்த வண்டியைத்தான் ஓட்டிட்டு இருக்கார்.

“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு!”

கேரம் போட்டிகளில் மூன்று முறை நேஷனல் சாம்பியனான சக்திவேலுவுடன் இணைந்துதான் என் பயிற்சிகளை எடுத்தேன். பிறகு, அவரே என் வாழ்க்கைத்துணையாவும் இணைந்தார். 2010 மற்றும் 2012 ஆண்டு களிலும் நான் உலக கேரம் சாம்பியன் பட்டம் வென்றேன். 2008-ம் ஆண்டு நான் பட்டம் வென்றப்போ 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை தந்த தமிழக அரசு, ‘இனி வெல்பவர்களுக்கு 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்’னு அறிவிச்சது. ஆனா, அதுக்கு அப்புறம் ரெண்டு முறை நான் பட்டம் வென்றும், ஊக்கத்தொகை வழங்கப்படலை. பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கின என் வெற்றிகளுக்கான அங்கீகாரம் இவ்வளவு தான்.

இப்போ என் கணவருடன் இணைந்து `வேர்ல்டு கேரம் சாம்பியன் அகாடமி’ என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கி,  குழந்தைகளுக்குப் பயிற்சி அளிச்சுட்டு வர்றோம். நான் கேரம் பழக, சின்ன வயசுல ரொம்பக் கஷ்டப்பட்டேன். அந்தச் சூழல் மத்த குழந்தைங்களுக்கு ஏற்படக்கூடாதுனுதான் இந்த முயற்சி. இவங்களுக்கெல்லாம் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் முறையில் பயிற்சி அளிக்கிறோம். நிச்சயம், பெரிய சாதனையாளர்களை உருவாக்குவோம்!” 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism