Published:Updated:

எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்!

எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்!
பிரீமியம் ஸ்டோரி
எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்!

மறக்க முடியாத பெண்கள்வி.எஸ்.சரவணன் - படம் : ஜெ.வேங்கடராஜ்

எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்!

மறக்க முடியாத பெண்கள்வி.எஸ்.சரவணன் - படம் : ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்!
பிரீமியம் ஸ்டோரி
எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்!

‘வீட்டைத்தாண்டிச் செல்லக் கூடாது’ என்று வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் கால்கள், உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாக தடம் பதித்த அனுபவம் இது. 50 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிற சல்மா, 
2000-ம் ஆண்டுக்குப் பிறகு எழுத வந்த பெண்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதோடு, பஞ்சாயத்துத் தலைவி, சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர், வாரியத் தலைவர் என அரசியலிலும் பயணம் செய்துவருபவர். 

எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்!

கடல் பார்க்கிறது பெருங்கனவு!

“திருச்சிக்கும் மதுரைக்கும் நடுவுல இருக்கு எங்க ஊரு துவரங்குறிச்சி. எங்க ஊருப் பொண்ணுங்களை வெளியூர்ல கட்டிக்கொடுக்க மாட்டாங்க. கல்யாணத்துக்குச் சேலை எடுக்க திருச்சிக்குப்போக மாட்டாங்க, பிரசவத்துக்கு மதுரைக்குக் கூட்டிட்டுப்போக மாட்டாங்க. கேட்டா, ‘அது நம்மூருக்கு ராசி இல்ல’ன்னு சொல்லு வாங்க. பள்ளிக்கூடத்துல படிச்சுட்டிருந்த எங்களுக்கெல்லாம் சென்னைக்குப் போறதும், கடல் பார்க்கிறதும் பெருங்கனவா இருந்துச்சு. ஆறாவது படிக்கும்போது, ஒரு கல்யாணத்துக்காக சென்னைக்குப் போன பெரியப்பாகூட நானும் போக அப்பாகிட்ட கெஞ்சிக் கதறி பெர்மிஷன் வாங்கினேன். சென்னைலதான் முதன் முதலா டி.வி-யைப் பார்த்தேன்.

பூட்டிய கதவுகளிலிருந்து மீட்பு

பெண்களுக்கு எப்போதும் பூட்டப் பட்டே இருக்கும் வீட்டின் கதவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தேன். 2001-ம் வருஷம் எங்க ஊரு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஜெயிச்சேன். அதனால, இலங்கைக்குப் போற வாய்ப்பு கிடைச்சது. அதுவரை நான் தனியா எங்கேயுமே போனதில்லை. கூட ஒரு நபர் வர அனுமதி கிடைச்சதால, என் தம்பியைக் கூட்டிட்டுப் போனேன். முதல் விமானப் பயணம்... காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.

அரசியல் பெண்களைப் பார்த்தேன்!

2005-ம் வருஷம் பஞ்சாயத்துப் பெண் தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானுக்குப் போகிற வாய்ப்பு கிடைச்சது. அந்த 18 நாள்கள் பயணத்தை என் வாழ்க்கையில மறக்க முடியாது. ஏன்னா, நான் வாழ்ந்துட்டு இருக்கிற பகுதியில இஸ்லாமியப் பெண்கள்னா எப்படி இருப்பாங்கனு தெரியும். பாகிஸ்தான் பெண்களிடம் பெரிய மாற்றத்தைப் பார்த்தேன். சுதந்திர மனப்பான்மையோட இருந்தாங்க. அங்கே `பஞ்சாயத்து ராஜ்'ஜில் ஏற்கெனவே பெண்களுக்கு 33% தந்திருந்ததால கூட்டங்களுக்கு, ஆண்களை விடவும் அதிகமான எண்ணிக்கையில பெண்கள் வந்தாங்க. அரசியல் விஷயங்களைத் தெளிவா பேசினாங்க. ராத்திரி 12 மணிவரைகூட இருந்தாங்க. குறிப்பா, பர்தா இல்லாம, சுடிதார் போட்டுட்டு வந்தாங்க. இஸ்லாமாபாத்தில் பொண்ணுங்க இன்னும் மாடர்னா டிரஸ் போட்டுட்டு இருந்தாங்க. ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதிகள்ல அப்படி இல்லை. ஒரே மதத்தைச் சேர்ந்த பெண்கள் இப்படி மூன்று வகையான வாழ்க்கையில் இருப்பது, எனக்குள் நிறைய சிந்தனைகளைத் தந்தது.

40 வயதானால் என்ன?

2007-ல் புத்தகக் காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவுக்குப் போனேன். அங்கெல்லாம், ‘40 வயசு ஆகிட்டா எல்லாமே முடிஞ்சுடுச்சு’னு நினைக்கிற ஒரு பெண்ணைக்கூட நான் பார்க்கலை. நார்வேயில் 65 வயசுப் பெண்மணி ஒருவர், தன் வேலையைவிட்டுட்டு யுனிவர் சிட்டியில படிக்கப்போறதா சொன்னார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்!

2010-ல் தெற்காசியாவின் பெண் அரசியல் வாதிகள்ல 12 பேரை அமெரிக்காவுக்கு அழைச்சிருந்தாங்க. அந்த நாட்டு அரசு, எங்களைக் கவனிச்சிக்கிற பொறுப்பை 75 வயது தாண்டிய இரண்டு பெண்களிடம் கொடுத்திருந்தாங்க.  பனி கொட்டும் விடியற்காலையில், அவங்க ரெண்டு பேரும் யூனிஃபார்மோடு எங்களுக்கு முன்னாடியே புறப்பட்டுத் தயாரா இருந்தாங்க. அவங்களையெல்லாம் பார்க்கப் பார்க்க, வயதை வெறும் எண்ணாகக் கடக்கிற கலாசாரத்தை நாமும் பழகிக்கணும்னு முடிவு செஞ்சேன்.

இழப்புகள் தளர்த்தாத கம்பீரம்!

அதே அமெரிக்கப் பயணத்துக்கு பாகிஸ்தான் - கராச்சியில் துணை சபாநாயகராக இருந்த பெண் ஒருவரும் வந்திருந்தாங்க. ஆளுமையான உருவம். அஞ்சாத பேச்சு. ஆனா, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கியிருந்த விடுதிக்குப் போயிருந்தப்போ, அவங்க கதறி அழுதுட்டாங்க. அப்புறம்தான், ஒரு கார் விபத்தில் தன் ரெண்டு குழந்தைகளையும் அவங்க இழந்ததும், இந்தச் சிறுமிகளைப் பார்த்ததும் குழந்தைகள் ஞாபகம் வந்து அழுததும் தெரியவந்தது. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இழப்பைச் சந்திச்ச பிறகும் தன் கம்பீரத்தைக் குறைச்சுக்காம இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்துப் பெருமைப்பட்டேன்.

நெகிழவைத்த எளிமை!


2010-ல், சமூக நல வாரியத் தலைவியாக இருந்தபோது, வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றேன். அகர்தலாவில்  என்னை வரவேற்க அங்குள்ள ஓர் அரசு அலுவலர் காத்திருந்தார். ஐம்பது வயதுடைய அந்தப் பெண்மணி, கைத்
தறிப் புடவை அணிந்து எளிமையாக இருந்தார். நான் இருந்த நான்கு நாள்களும் அத்தனை இடங்களுக்கும் எவ்வித சுணக்கமும் இல்லாமல் அழைத்துச்சென்றார். காலை முதல் இரவு வரை என்னுடனே இருந்தார். தன் மேலதிகாரிகளிடம் அந்தப் பெண்மணி காட்டும் பணிவு என்னை வியக்க வைத்தது. இதில் என்ன வியப்பு என உங்களுக்குத் தோன்றலாம். அந்தப் பெண்மணி திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் மனைவி.

கொலையாளியை மன்னித்த தாய் மனசு!

2013-ல் நெதர்லாந்து போனபோது, பாலஸ் தீனத்துப் பெண்மணி ஒருவரைப் பார்த்தேன். ராணுவத்தில் இருந்த அவங்க பையன், எதிர் தரப்பால கொலை செய்யப்பட, அரசாங்கத்திடம் கொலையாளியை மன்னிக்கச் சொன்ன அம்மா அவங்க. `இன்னொரு தாய்க்கும் மகனை இழந்த வலி வேணாம்'னு நினைச்சாங்களாம். அப்போதிலிருந்து இப்போதுவரை அந்நாட்டுப் பிரச்னை தீர குரல்கொடுத்துட்டு இருக்காங்க. தாய்மையின் பூரணத்தை அவங்ககிட்ட தரிசித்தேன்.

மரணத்தை எதிர்கொள்ளும் துணிச்சல்!

2015-ல் அமெரிக்கா போனப்ப, ஆர்மேனிய நாட்டு எழுத்தாளர் மரீனைப்  பார்த்தேன். நிறைய சிக்கல் உள்ள நாட்டில், அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதுவதில் கொஞ்சமும் பயப்படாதவங்க. கேன்சரால் பாதிக்கப்பட்டுத் தன் இரண்டு மார்பகங்களையும் இழந்திருந்த நிலையிலும், வாழ்க்கையைப் பற்றிப் புகாரோ, சலிப்போ இல்லை. ‘அடுத்து எப்போ பார்க்கலாம்’னு அவங்ககிட்ட கேட்டப்போ, ‘எனக்கு வரும் மிரட்டல்களைப் பற்றி உனக்கே தெரியும் இல்லையா..? எதுவும் நடக்கலாம். கூடவே, என் உடல்நிலை. வாய்ப்பிருந்தா பார்ப்போம்’னு அவங்க சொல்ல, `மரணத்தை எதிர்கொள்வதில் இவ்வளவு துணிச்சலா'ன்னு பிரமிச்சுப் போயிட்டேன். அவங்க அடிக்கடி சொல்ற ஒரு விஷயம், ‘தானா சாப்பிடறதிலேயோ, தனியா ஒரு விஷயத்தை அனுபவிக்கிறதிலேயோ என்ன மகிழ்ச்சி இருக்கு?’ இந்த வரியை என்னோட அடி மனசுல புதைச்சு வெச்சுக்கிட்டேன்.

பயணங்கள்தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்திருக்கு. பாரிஸ்ல பார்த்த காட்சி இது... பனி கொட்டிட்டே இருக்கும். வெவ்வேறு நாடுகள்லேருந்து வந்த அகதிகள் சாலையிலேயே வசிப்பாங்க. பச்சைக் குழந்தைங்களெல்லாம் பனியில கெடந்து வாடும். சில குழந்தைங்க இறந்தும் போயிடும். இதையெல்லாம் பார்த்தால், ‘இந்த உலகம் எல்லோருக்குமானது இல்லையா?’ என்ற கேள்வி நம்மைத் தொந்தரவு செய்துட்டே இருக்கும். யாரையும் வெறுத்துடாம எல்லோரையும் நேசிக்கணும்னு பயணங்கள் அழுத்தமா மனசுல பதிய வெச்சிருக்கு!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism