Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

`பேட்மேன்' சேலஞ்ச் முதல் பிங்கியின் போராட்டம் வரை... கடந்த இரண்டு வார காலத்தில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன? அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்! 

14 நாள்கள்

இணையத்தைக் கலக்கிவரும் `பேட்மேன் சேலஞ்ச்’!

‘பே
ட்மேன்’ (Padman) - நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்படம். இந்தப் படம், கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் அருணாசலத்தின் வாழ்க்கையைக் கருப்பொருளாக வைத்துக் கதை சொல்கிறது. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த முருகானந்தம், மாதவிடாய் நேரங்களில் பெண்கள் தரமான சானிட்டரி பேடுகள் இன்றி சிரமப்படுவதைக் கண்டு மனம்வருந்தி, ஆய்வுசெய்து, மலிவு விலை பேடுகளைச் செய்யும் இயந்திரத்தை உருவாக்கி, அவற்றை விற்பனை செய்துவருகிறார். மாதவிடாயின்போது உபயோகிக்கும் நாப்கின் போன்ற பொருள்களின் பயன்பாடு பற்றி தொடர்ந்து பேசியும் இயங்கியும் வருகிறார். நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவியும் முன்னாள் பாலிவுட் நடிகை மற்றும் எழுத்தாளருமான ட்விங்கிள் கன்னா, ‘தி லெஜெண்ட் ஆஃப் லக்ஷ்மி பிரசாத்’ என்ற பெயரில் முருகானந்தத்தின் கதையைப் புத்தகமாக எழுதி, அதையே திரைப்படமாகவும் தயாரித்து, தன் கணவர் நடிக்க ‘பேட்மேன்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில், #பேட்மேன்சேலஞ்ச் என்கிற `ஹேஷ் டேக்’குடன், பயன்படுத்தப்படாத சானிட்டரி நாப்கின்களை கைகளில் ஏந்தியபடி செல்ஃபிகளைப் பதிவேற்றத் தொடங்கினர் இளைஞர்களும் இளம்பெண்களும். மாதவிடாய் குறித்து இப்படியாகத் தொடங்கிய இந்த ‘நாப்கின் ஃபீவர்’ உரையாடல்கள் சில நாள்களில் சூடுபிடித்தது. அடுத்த கட்டமாக... பயன்படுத்திய கறைபடிந்த பேடுகளின் படங்கள், மென்ஸ்ட்ருவல் கப்புகள், அந்த நாள்களில் பெண்கள் சந்திக்கும் உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னைகள் என்று பல கோணங்களில் ஆராயப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், உண்மை பேட்மேனான முருகானந்தத்தின் பேடுகள் தரமற்றவை, பயன்படுத்த லாயக்கற்றவை என்ற விவாதங்களும் முன்வைக்கப்பட தொடங்கியுள்ளன. `இந்தியரின் ‘அவமானத்தை’ உலக அளவில் விற்றுத்தான் பணம் சம்பாதிக்கிறார்’ என்றும் அவர்மீது குற்றம்சாட்டப்படுகிறது. எது எப்படியோ, மாதவிடாய் குறித்த ஒரு வெளிப்படையான விவாதத்துக்கு இந்தப் படம் இட்டுச் சென்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதெல்லாம் சரிதான் மக்களே... நாப்கினுக்கு 12% ஜி.எஸ்.டி என்ற அறிவிப்பை மட்டும் `ஜஸ்ட் லைக் தட்’ எப்படிக் கடந்து செல்கிறோம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

14 நாள்கள்

சிக்கலில் தவிக்கும் ‘ஒரு அடார் லவ்’!

`ப
த்மாவத்’தைத் தொடர்ந்து பிரச்னையில் சிக்கியிருக் கும் படம் மலையாள இயக்குநர் உமர் லுலுவின் `ஒரு அடார் லவ்’. இந்தத் திரைப்படத்தின் பாடல் காட்சி டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஒற்றைக் கண்ணசைவிலும், கண்ணடித்தும் கூகிள் சர்ச்சில் இந்தப் பாடலை ட்ரெண்டிங் ஆக்கினார் படத்தின் அறிமுக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ‘மாணிக்ய மலராய பூவி’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் வரிகள்தாம் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று இந்தப் பாடல், இறைத்தூதர் முகம்மது நபியின் மனைவியைப் பற்றி உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடுத்துள்ளது.

ஆனால், சி.எம்.ஏ.ஜப்பர் எழுதியுள்ள இந்தப் பாடலின் வரிகள் 1978 முதல் மலபார் இஸ்லாமியர்களால் அவர்களது திருமண வைபவங்களில் பாடப்படுவதாகவும், அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் படத்தில் பாடப்படும் அதே பாடலுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார் இயக்குநர் லுலு. பாடல் வரிகளில் தான் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் சென்சார் போர்டுதான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் லுலு. ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கும் படத்துக்கு ஏற்கெனவே தேவைக்கு அதிகமான கவனம் நடிகையின் கண்ணடி காட்சி வாயிலாகக் கிடைத்துவிட்டது.

மதம் சார்ந்த சர்ச்சைகளில் திரைப்படங்கள் அடிக்கடி சிக்குவது கலைக்கு ஆரோக்கியமானது அல்ல!

14 நாள்கள்

இந்திரா நூயி... இன்னொரு சாதனை!

டந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில், தன்னாட்சி பெண் இயக்குநர் ஒருவரைத் தலைவராக நியமிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சமீபத்தில் துபாயில் நடைபெற்ற  ஐ.சி.சி கூட்டத்தில், அதன் முதல் தன்னாட்சி பெண் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பெப்ஸி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சென்னைப் பெண் இந்திரா நூயி. சிறுவயது முதலே தனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு என்று தெரிவித்திருக்கும் நூயி, குழு ஒற்றுமை, நேர்மை மற்றும் ஆரோக்கியமான போட்டி போன்றவற்றை கிரிக்கெட்டில் இருந்தே கற்றுக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண் என்பதில் தான் பெரும் மகிழ்ச்சிகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு பந்தையும், ஒவ்வொரு ஷாட்டையும் ரசிகர்கள் இனி கவனிக்கும்படி ஐ.சி.சி-யின் பணி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  2018 ஜூன் முதல் இப்பொறுப்பில் செயல்பட விருக்கிறார் நூயி. `கூடுதல் நபர், அதுவும் பெண் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பது, நல்ல முடிவு' என்றும், `தன் அனுபவ அறிவுமூலம் ஐ.சி.சி-க்கு நூயி வழிகாட்டுவார்' என்றும் கூறியுள்ளார் ஐ.சி.சி தலைவர் சஷாங்க் மனோகர்.

ரசிகர்களின் உள்ளம் கேட்குமே மோர்!

14 நாள்கள்

சபாஷ்... சரியான முன்னெடுப்பு!

ரினா கவுல்ட் - கனடாவின் ஜனநாயக அமைப்புகளின் அமைச்சரான இவர், இந்த மார்ச் முதல் குழந்தைப்பேறு விடுமுறையில் செல்லவிருக்கிறார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிந்து, ‘பேறுகால விடுமுறையில் செல்லும் கனடாவின் முதல் அமைச்சர் இவர். அநேகமாக குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் முதல் மேற்கத்திய அமைச்சரும் இவர்தான்’ என்று கூறியிருக்கிறார். அமைச்சர்களுக்கு குழந்தைப்பேறு விடுமுறை குறித்த சட்டமோ, முன்னுதாரணமோ இல்லாத நிலையில்தான் சரியான முன்னெடுப்பாக, அவருக்கு விடுமுறை வழங்கியுள்ளார் ட்ரூடோ. அடுத்த தலைமுறைப் பெண்கள் அரசியலில் இன்னும் அதிகமாகப் பங்கெடுக்கவும், ஆர்வம்கொள்ளவுமே தான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார் ட்ரூடோ.

21 நாள்கள் மட்டுமே மருத்துவ விடுப்பு உள்ள கனடாவின் எம்.பி-க்களுக்கு பெரும் ஆறுதலாக வந்திருக்கிறது ட்ரூடோவின் இந்த நடவடிக்கை. 1867 முதல் பெண் அமைச்சர்கள் 60 பேர் கனடாவின் அமைச்சரவையில் பங்கெடுத்து இருந்தாலும், பேறுகால விடுப்பு எடுக்கும் சூழல் இதுவரை யாருக்கும் வராதது ஆச்சர்யமே!

கரினா, கரினா... விட்டாச்சு லீவு!

14 நாள்கள்

``தவறான பிம்பத்தை உடைக்க வேண்டும்!’’

2015
முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11 அன்று அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினத்தைக் கொண்டாடிவருகிறது ஐ.நா சபை. ஸ்டெம் (STEM) என்று சொல்லப்படும் சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினீயரிங் மற்றும் மேத்ஸ் படிப்புகளைப் பெண்கள் அதிக அளவில் பயிலவும், அதுகுறித்த விழிப்பு உணர்வை உலகம் எங்கும் கொண்டுவரவுமே இந்தத் தினம் பயனுள்ள வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஐ.நா சபையின் தலைவர் அந்தோனியோ குத்தெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவியல் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறையில், உலகமெங்கும் இன்னமும் 30 சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களே உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் கணக்கு சார்ந்த துறைகளில் இயங்குவது ஆண்களே என்ற பிம்பத்தைத் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் அமைத்துவருவதாக வருத்தம் தெரிவித்த அவர், வலுவான கட்டமைப்புடன் இந்தத் தவறான பிம்பத்தைப் பெண்கள் உடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உலகளாவிய வகையில் பெண்கள் அறிவியலில் திறம்பட பங்கெடுக்கத் தடையாக உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணி அமர்த்துவோர் ஆகியோரின் தவறான கருத்துகளைக் களைய வேண்டும் என்றும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக பிப்ரவரி 11 அன்று சென்னையில் ‘சயின்ஸ் அட் தி சபா’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்தமேட்டிக்கல் சயின்சஸ். சுபா டோலே, ஆர்.ராஜேஷ், குரு குமாரசுவாமி மற்றும் விஜய் கொடியாலம் ஆகிய விஞ்ஞானிகளின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. லைஃப் ஆஃப் சயின்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து, இந்தியாவின் பிரசித்தி பெற்ற 13 பெண் அறிவியல் ஆய்வாளர்களது கண்காட்சியும் நடைபெற்றது.

பெண்களுக்குக் கணக்கு வராது, அறிவியல் வராதுன்னு இனிமேலும் சொல்லிட்டிருக்காதீங்க!

14 நாள்கள்

பிங்கிக்கு ஒரு பூங்கொத்து!

ல ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் விவாகரத்து வாங்கியிருக்கிறார் 19 வயதுப் பெண் பிங்கி. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பிங்கி தன்வருக்கு 10 வயதில் ஹிம்மத் சிங் என்பவருடன் குழந்தைத் திருமணம் நடந்தது. இது போன்ற குழந்தைத் திருமணங்கள் அம்மாநிலத்தில் அதிகம் நடைபெறுவது உண்டு. ‘கவுனா’ என்ற சடங்குக்குப் பின்னர் இதுபோன்ற குழந்தைப் பெண்கள் தங்கள் கணவர் வீட்டில், கணவன் - மனைவியாக வாழத் தொடங்குவர். இந்தச் சடங்குக்குத் தொடர்ந்து ஹிம்மத் சிங்கின் குடும்பம் வலியுறுத்த, மறுத்து வந்திருக்கிறார் பிங்கி. அவரைக் கடத்தி செல்லவும் முயன்றிருக்கிறார்கள் ஹிம்மத் சிங் வீட்டார். ஒருகட்டத்தில் இந்த மிரட்டல்கள் எல்லை மீற, செய்வதறியாத பிங்கியின் தாய் மீரா, ஜோத்பூரை சேர்ந்த ‘சாரதி ட்ரஸ்ட்’ என்ற அமைப்பின் உதவியை நாடியிருக்கிறார்.

இதுபோன்ற குழந்தைத் திருமணம் நடைபெற்ற பெண்களுக்கு ஆதரவு அளித்து, விவாகரத்துக்கு வழக்குகள் தொடுத்து உதவும் சாரதி ட்ரஸ்ட்டின் நிர்வாகியான கீர்த்தி பாரதி, ஜோத்பூரில் பிங்கியைத் தங்கவைத்து, அவர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு நுழைவுத் தேர்வுக்குத் தயாராக உதவினார். அதில் வெற்றிகண்ட பிங்கி, இப்போது ஆசிரியர் பயிற்சி பட்டம் படித்து வருகிறார். இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும் படிப்பை விடவில்லை. ஜோத்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்குக் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பம் செய்திருந்த பிங்கிக்கு அவரது திருமணம் செல்லாது என்று சமீபத்தில் தீர்ப்பு அளித்து விவாகரத்தும் வழங்கி இருக்கிறது ஜோத்பூர் நீதிமன்றம். `ஒருவழியாக என் திருமணம் செல்லாது என்று தீர்ப்பு  கிடைத்துவிட்டதால், இனி நிம்மதியாகப் படித்து விரைவில் ஆசிரியர் பணியில் அமர்வேன்' என்று மகிழ்வுடன் பார்ப்பவர்களிடம் சொல்லிவருகிறார் பிங்கி.

மனமார்ந்த வாழ்த்துகள் பிங்கி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism