Published:Updated:

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி

`இரவு இறுதிக் காட்சி, வழக்கம் போலவே சுசீலா சுந்தரியைப் புதைப்பதில் நிறைவுபெற்றது. இந்தியாவில் ‘ஹத யோகி’கள் வழக்கமாகச் செய்யும் வித்தைதான் என்றாலும் சுசீலா யோகி அல்ல; சாதாரணப் பெண். ஆனால், உடல் வலுவும் மனத் துணிவும்கொண்ட பெண். வங்காளப் புலிகளை அடக்கி அவற்றுடன் விளையாடுவது, மண்ணுக்குள் புதைக்கப் பட்ட பின் எழுந்து வருவது, குதிரையேற்றம் என்று பல வித்தைகளைச் செய்பவர்’ என்று 1919-ம் ஆண்டில் `தி இந்து’ நாளிதழ் சுசீலாவைப் பற்றி எழுதியிருந்தது. வெற்றியின் உச்சத்தில் நின்றுகொண்டிருந்த இந்த சுசீலாவே, இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண். 

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி

1879-ம் ஆண்டு வங்காளத்தின் சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒன்றான ராம்பாகன் அருகில் பிறந்தார் சுசீலா. அந்தக் காலகட்டத்தில் `வீழ்ந்த பெண்களின் புகலிட'மான ராம்பாகனிலேயே வளர்ந்த இவர், `தி கிரேட் பெங்கால் சர்க்க'ஸில் பணிபுரிந்த அபனிந்திர கிருஷ்ண பாசுவின் கண்களில் விழுந்தார். அவர்மூலம், சுசீலாவின் அசாத்திய திறமையைக்கண்ட பெங்கால் சர்க்கஸின் உரிமையாளர் பிரியநாத் போஸ், அதுவரை பெண்களின் பங்கேற்பு இல்லாத சர்க்கஸ் உலகில் புதிய
முயற்சியாக இவரை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். ஜிம்னாஸ்டிக்ஸும் குதிரையேற்றமும் டிரபீஸும் சுசீலாவுக்குக் கற்றுத்தரப்பட்டன. நான்கடி ஆழத்தில் குழிவெட்டி இவரைப் புதைத்து, பத்து நிமிடங் களுக்குப் பின் வெளியேற்றிக் காண்பித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக வித்தைகள் கைவர, சர்க்கஸ் செல்லும் இடமெல்லாம் சுசீலாவும் பயணித்தார். 1896-ம் ஆண்டு ரேவா நாட்டு தர்பாரில் சர்க்கஸ் வித்தைகளைக் குழு காண்பிக்க, அதில் மயங்கிய மன்னர், தன் இரு புலிகளைப் பரிசாக வழங்கினார். போஸின் மனதில் புலிகளைக் கண்டதும் முதலில் தோன்றியவர் சுசீலாதான். லட்சுமி, நாராயணன் என்று பெயரிடப்பட்ட அந்தப் புலிகளுடன், சுசீலாவின் பயணம் தொடங்கியது. மெதுவாக அந்த வங்காளப் புலிகளின் கூண்டுகளுக்குள் சென்று அவற்றைப் பழக்க ஆரம்பித்தார் சுசீலா.

கூடவே ஒரு சிங்கமும் சேர்ந்துகொள்ள, இரண்டு புலிகள் மற்றும் ஒரு சிங்கத்துடன் வித்தைகள் செய்யக் கற்றுக்கொண்டார். அவற்றுக்கு நிற்க, உட்காரக் கற்றுத் தந்ததுடன், வாய்களைப் பிளந்து கைகளை உள்ளே வைத்தும், அவற்றுடன் மல்யுத்தம் செய்தும் 1901-ம் ஆண்டு முதல் வித்தை காட்டத் தொடங்கினார். வங்காளமே வாய் பிளந்தது. 1901 நவம்பர் 21 அன்று  `தி இங்கிலீஷ்மேன்’ நாளிதழ், `கைகளில் சாட்டையோ, வேறு உபகரணமோ இல்லாமல் கூண்டுக்குள் நுழையும் சுசீலா, புலிகளுடன் மிக சாதாரணமாக விளையாடுவதைப் பார்க்கவே அச்சமூட்டுவதாக உள்ளது’ என்று எழுதியது.

1902 ஏப்ரல் 1 அன்று ‘முஸ்லிம் கிரானிக்கிள்’ எனும் நாளேடு, ஒருபடி மேலே போய், `புடவை கட்டி, செருப்பு அணிந்து, வீடுகளுக்கு வெளியே எங்கும் தலைகாட்டாத மெல்லிய மனம்கொண்ட வங்காளப் பெண்களில் ஒருவர், இத்தனை துணிவுடன் ஆள் தின்னும் புலிகளை வீட்டு நாய்களைப் போல் பாவித்து விளையாடுவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது’ என்று சுசீலா பற்றி எழுதியது.

அழகாகச் சென்றுகொண்டிருந்த சுசீலாவின் வாழ்க்கையில், ஐரோப்பிய நாடகத் தயாரிப்பாளர் ஒருவர் மூலமாகப் புயல் வீசத் தொடங்கியது. சர்க்கஸில் பிரபலமாகும்போதே, உடன் பணிபுரிந்த `கிழக்கத்திய நாடுகளின் ஹூடினி’ என்று புகழப்பட்ட கணபதி என்ற சாகச வீரருடன் இணைத்துப் பேசப்பட்ட சுசீலா, ஐரோப்பா செல்லும் ஆசையில் அந்த நாடகத் தயாரிப் பாளருடன் செல்ல போஸிடம் அனுமதி கேட்டார். `ஏதோ தவறு’ என்று உள்ளுணர்வு சொல்ல, அனுமதி மறுத்தார் போஸ்.

சுசீலாவின் துணிவு இறுதியில் வெல்ல, தன் வாழ்நாள் முழுக்க ஈட்டிய பணத்துடன், ஐரோப்பிய தயாரிப்பாளரைத் தேடி சர்க்கஸில் இருந்து ஓட்டம் பிடித்தார். சிறிது நாள்கள் அவரது பணத்தைச் செலவழித்த அந்தத் தயாரிப்பாளர், பணம் கரைந்ததும் சுசீலாவுக்குத் தெரியாமலே ஐரோப்பாவுக்கு கப்பல் ஏறிவிட்டார். திணறிப்போனார் சுசீலா. வேறு வழியின்றி மீண்டும் போஸைத் தேடி வந்தார். புலிகள், சிங்கத்தின் மேல் அமர்ந்து விளையாடிய சுசீலாவை, துர்க்கை அன்னையின் மறு உருவமாகப் பார்த்த வங்காளத்தின் பொதுமக்கள், இதுபோன்ற குழப்ப முடிவுகளால் அவர்மீது கடும் கோபம் கொண்டனர். முக்கியமாக, வங்காளத்தின் இந்து அமைப்பினர் சுசீலாவின் சர்க்கஸ் வித்தைகளையும் தி கிரேட் பெங்கால் சர்க்கஸையும் புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தி வந்தனர்.

தன் பெரும் பிரியத்துக்குரிய மாணவி வேலையின்றி தெருவில் நிற்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத போஸ், மீண்டும் சுசீலாவைப் பணியில் அமர்த்தினார். ஆனால், ஒரு முதலாளியாக போஸினால் அத்தனை எளிதில் பணியாள் சுசீலாவின் துரோகத்தை மன்னிக்க முடியவில்லை. விளைவு - சுசீலா ஏற்கெனவே வாங்கிய சம்பளத்தில் பாதி மட்டுமே தர ஒப்புக்கொண்டார். சிங்கப்பூர், பினாங்கு, ஜாவா, பர்மா, சிலோன் என தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வருடம் ஒருமுறை பயணித்து நிகழ்ச்சிகளை நடத்தியது தி கிரேட் பெங்கால் சர்க்கஸ். ஒருகட்டத்தில் புலிகளில் ஒன்று இறந்துவிட, ஃபார்ச்சூன் என்ற புலியை வாங்கினார் போஸ். அதிகம் பழக்கப்படாத ஃபார்ச்சூன், சுசீலாவை சர்க்கஸ் காட்சி ஒன்றின் போது கடுமையாகத் தாக்கிவிட, நடக்க இயலாமல் தன் மீதி வாழ்நாளை படுக்கையிலேயே கழித்தார் சுசீலா. அதிலிருந்து மீளாமலேயே, 1924-ம் ஆண்டு தன் 45-வது வயதில் இறந்துபோனார். எந்த சிங்கம் புலிகள்மீது அதீத நம்பிக்கையும், அன்பும் வைத்திருந்தாரோ, அவற்றின் மீதான அளவு கடந்த அன்பும் அசட்டையுமே அவரது உயிரைக் குடித்துவிட்டன.

துணிவின் மறு உருவமாக, இன்றும் வங்காளத்தின் கதாநாயகியாக நினைவுகூரப்படுகிறார் சுசீலா சுந்தரி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!