Published:Updated:

வண்ணங்களில் பேசும் சூர்யா !

பா.பற்குணன் படங்கள்:சொ.பாலசுப்ரமணியன்

வண்ணங்களில் பேசும் சூர்யா !

பா.பற்குணன் படங்கள்:சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

''என் மகளுக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது... என்பதெல்லாம், அவள் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. துயரங்களே வாழ்வாகிப்போன இலங்கையின் வன்னிக்காட்டுப் பிரதேசத்திலிருந்து, இடம்பெயர்ந்து இந்தியா வந்துவிட்டாலும்... இங்கேயும் எங்களுக்கு வலி மிகுந்த வாழ்க்கையே காத்திருந்தது. இருந்தாலும், என் மகளின் தன்னம்பிக்கை எங்களுக் கும் நம்பிக்கை கொடுத்துத் தேற்றியது. இன்று என் மகள் தன் ஓவியங்கள் மூலமாக இவ்வுலகத்திடம் பேசுகிறாள். அவளைப் பற்றி எல்லோரும் சிலாகித்துப் பேசுகிறார்கள். பெற்ற பேற்றை அடைந்து விட்டோம்!''

- இளம் ஓவியரான சூர்யபிரபாவின் தந்தை விஸ்வநாதனுக்கு, கண்களில் நிறைவது நீர் அல்ல... பெருமை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓவியத்தில் மாநில, தேசிய அளவில் பரிசுகளை வென்றுள்ள இந்த தூரிகைப் பெண், அவற்றைத் தன் ஒலியற்ற உலகைக் கடந்து பெற்றிருப்பது, ஆச்சர்யம்!

வண்ணங்களில் பேசும் சூர்யா !

''அடையாறில் இருக்கும் காது கேளாத, வாய்பேச முடியாத குழந்தைகளுக்கான ஸ்ரீ பாலவித்யாலயா மழலையர் பள்ளியில் சூர்யபிரபாவைச் சேர்த்தோம். நாங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு கொஞ்சம் பேசினாள். இரண்டாம் வகுப்பு முதல் சில்ட்ரன்ஸ் கார்டன் மேல்நிலைப் பள்ளியில், இயல்பான பிள்ளைகளுடன் படிக்க அனுப்பினோம். அவர்களுடன் போட்டி போடுவது இவளுக்குச் சவாலாக இருந்தது. இருந்தாலும், கடுமையாக உழைத்துப் படித்தாள். நல்ல மதிப்பெண்கள் பெற்று, இப்போது ஸ்ரீ விக்னேஷ்வரா பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு இன்ஜீனியரிங் படித்து வருகிறாள். வழி நெடுகிலும் அவளுக்கு ஆதரவான ஆசிரியர்கள் கிடைத்ததே, அவளின் இந்த முன்னேற்றத்துக்குக் காரணம்'' என்று நன்றி பெருக்கோடு குறிப்பிட்டார் விஸ்வநாதன்,

''சிறு வயதிலிருந்தே, தான் சொல்ல நினைப்பதை வரைந்து காட்டுவாள் சூர்யபிரபா. அப்படித்தான் பழகியது தூரிகை அவளுக்கு. ஆனால், ஓவியத்துக்கான முறையான பயிற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. இருந்தாலும் பென்சில் டிராயிங், வாட்டர் கலர், ஆயில் பெயின்ட்டிங் என்று நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்து இருக்கிறாள். இந்திய செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய தமிழக அளவிலான ஓவியப்போட்டி, ஆல் இந்தியா கேமல் கான்டஸ்ட், தமிழ்நாடு ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி செலிப்ரேஷன் கமிட்டியின் ஓவியப் போட்டி என்று பல பரிசுகளைக் குவித்தாள்.

வண்ணங்களில் பேசும் சூர்யா !

சமீபத்தில்தான் ஸ்ரீ அன்னை காமாட்சி கலைக்கூடம் ஓவியப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்திருக்கிறோம். அங்கிருக்கும் ஆசிரியர்களோ, 'ஓவியத்தின் அடிப்படைகளையும், நுணுக்கங்களையும் அவளாகவே தேடித் தேடி அறிந்து வைத்திருக்கிறாள். இனி இவளுக்கு புதிதாக நாங்கள் என்ன கற்றுத் தருவது..?’ என்று இவளது அசாதாரண திறமையைக் கண்டு வியக்கின்றனர். சமீபத்தில் இவள் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தினோம். நிறைய பாராட்டுகளோடு, நன்றாக விற்பனையும் ஆயின. இதையெல்லாம் இவளுடைய திறமைக்கான அங்கீகாரமாகவே நாங்கள் பார்க்கிறோம்'' என்கிறார் சூரியபிரபாவின் அம்மா அருந்தவம் பெருமையோடு!

சூரியபிரபா பேசுவதை ஒலி, மொழியைத் தாண்டி புரிந்துகொள்கிறது நம் மனது. ''என்னால் பேச முடியும். வண்ணங்கள் மூலமாக என் எண்ணங்களைத் தெரியப்படுத்துகிறேன். என் குறைபாடுகளையும் மீறி, ஓர் ஓவியராக, பொறியியல் மாணவியாக இத்தனை தூரம் என்னை வளர்த்தெடுத்த என் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்தே என்னை இந்தளவுக்கு வளர்த்த என் அப்பா, என்னை ஒரு சாதனையாளராகப் பார்க்கத் துடுக்கும் என் அம்மா... இவர்களுக்காக நான் நிச்சயம் நிறைய சாதிப்பேன்’'

- உதிரும் புன்னகை, இன்னும் அழகாக்குகிறது சூரியபிரபாவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism