Published:Updated:

இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்? #GoodParenting

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்? #GoodParenting
இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்? #GoodParenting

இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்? #GoodParenting

``என்ன புள்ள வளர்த்திருக்க, பெரியவங்களுக்கு இடதுகையால கொடுக்குறான்?" இந்தக் கேள்வியை இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருமே எதிர்கொண்டிருப்பீர்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே வலது கைப் பழக்கம் உள்ளவர்களே அதிகம் நிறைந்திருக்கின்றனர். எனவே, அதுதான் இயல்பானது என்ற எண்ணம் உருவாகிவிட்டது. அதனால், இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் பல்வேறு விசாரணைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இதனால், குழந்தை பிறந்த சில மாதங்களில், அது இடது கையால் ஏதேனும் எடுத்தாலோ, சாப்பிட்டாலோ பெற்றோருக்குப் பதற்றம் தொற்றிவிடுகிறது. உடனே, அந்தக் குழந்தையை வலது கைப் பழக்கத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்ற முயல்கிறார்கள். இது சரிதானா? இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை டாக்டர் சசித்ரா தாமோதரனிடம் கேட்டோம். 

``குழந்தை வளர்ப்பு குறித்து கூடுதல் கவனம் குவிந்துள்ள இந்த நேரத்தில் இந்தக் கேள்வி முக்கியமானது. முதலில், ஒரு குழந்தைக்கு இடது கைப்பழக்கம் உள்ளது என்றால், அதை ஒரு குறைபாடு என்றோ, நோய் என்றோ நினைப்பதை விட்டொழிக்க வேண்டும். இடது கைப் பழக்கம் என்பது அந்தக் குழந்தை, தாயின் கருவில் இருக்கும்போதே முடிவான ஒன்று. அதற்கு மரபணு சார்ந்த விஷயங்களே காரணம். அதனால், அது அந்தக் குழந்தையின் பழக்கத்தால் வருவது என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. 

ஒரு குழந்தை, அது பள்ளிக்குச் செல்லும் வயதில்தான் இடதுக் கைப் பழக்கமுடையது என்பதைக் கண்டறிய முடியும். சில பெற்றோர்கள், சிறு குழந்தைகள் இடது கையால் ஏதேனும் பொருளைத் தூக்கினாலே, "அடடா! நம் பிள்ளை இடது கைப் பழக்கமுடையது போலிருக்கே?" என்று கவலைப்படத் தொடங்கிவிடுகின்றன. இது சரியான முறை அல்ல. குழந்தைகள் இரண்டு கைகளாலும் விளையாடவும் பொருள்களைத் தூக்கவும் செய்வார்கள்.

நமது மூளையின் இடது பகுதி, உடலின் வலது பக்க பாகங்களையும் வலது பக்க மூளைப் பகுதி, உடலின் இடது பக்க பாகங்களையும் இயக்கி வருகிறது. இதுதான் அடிப்படையான காரணம். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் நுண்மையான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள், வெற்றிபெறுவார்கள் என்பதைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. உலகமே வியந்த நகைச்சுவை கலைஞர் சார்லி சாப்ளின், அறிவியலில் கொடிகட்டிப் பறக்கும் பில் கேட்ஸ், கிரிக்கெட்டில் ஒரே ஓவரின் ஆறு சிக்ஸர் விளாசிய யுவராஜ் சிங் என்று இடது கைப் பழக்கம் உள்ளவர்களில் வெற்றிபெற்றவர்களின் பட்டியல் மிக நீண்டுகொண்டே செல்லும். அதனால், தங்கள் குழந்தை இடது கைப் பழக்கம் உள்ளதே என்று பெற்றோர்கள் வருத்தமோ பதற்றமோ அடைய வேண்டியதில்லை. 

இடதுக் கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை, கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு மாற்ற முயலக் கூடாது. அது அவர்களின் மூளையின் செயல்திறனைப் பாதிக்கும். எனவே, மற்றவர்களின் பேச்சினைக் கேட்டு அதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். மேலும், சிலர் வலது கையால் கொடுப்பதும், பெறுவதுமே நாகரிகம், பண்பாடு என்று சொல்கின்றனர். நம்மைப் பொறுத்தவரை இரண்டு கைகளும் நம் உடலின் உறுப்புகள். அதில் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. செய்யும் செயலில் எவ்வளவு திறமையோடு இயங்குகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். இந்த எண்ணத்தைப் பெற்றோர்கள் தங்கள் மனத்தில் பதியச் செய்வதோடு, குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சமூகத்தில் தாழ்வு மனப்பான்மை இன்றி வளர்வார்கள். 

மனிதர்கள் பயன்படுத்தும் பலவித கருவிகள், வலது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனாலும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சிரமப்படுவார்களே என்று நினைக்கக்கூடும். ஆனால், கருவிகளை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் ஏதுவாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவதே இந்த விஷயத்தில் நியாயமான செயல்பாடாக இருக்கும். அதற்கும் பெற்றோர்கள் தயக்கமின்றி முன்வர வேண்டும்" என்கிறார் டாக்டர் சசித்ரா தாமோதரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு