Published:Updated:

``போலீஸ் ஆவேன்னா... அநியாயமா கொன்னுட்டாங்க!’- சௌமியாவின் தாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``போலீஸ் ஆவேன்னா... அநியாயமா கொன்னுட்டாங்க!’- சௌமியாவின் தாய்
``போலீஸ் ஆவேன்னா... அநியாயமா கொன்னுட்டாங்க!’- சௌமியாவின் தாய்

`மாவட்ட ஆட்சியர் புகார் எண்ணில் புகார் பதிவு செய்த பிறகுதான், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை, கவுன்சலிங் வழங்காமல் நெருக்கடியான மனநிலைக்கு சௌமியாவைத் தள்ளியுள்ளனர். இதுவே அவர் உயிரிழக்கக் காரணம்.’

ர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த சிட்லிங் இயற்கை வளம் நிறைந்த மலைக் கிராமம். அதன் நான்கு புறமும் வனம் சூழ்ந்திருக்கும். கோட்டப்பட்டியிலிருந்து சிட்டிங் மலைக் கிராமத்துக்குச் செல்ல மூங்கில் மரங்களையும், வனப்பகுதியையும் 10 கி.மீட்டர் கடந்து செல்ல வேண்டும். அந்தக் கிராமத்தில்தான் மாணவி சௌமியாவுக்குத் துயரமான நிகழ்வு நடந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழக அரசின் நிர்வாகமும் செயலற்றுப் போனதை அவரது மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

சௌமியாவின் அப்பா அண்ணாமலைக்கும், அம்மா மலருக்கும் ஆடு வளர்ப்பதுதான் தொழில். அந்த வருமானத்தில்தான் தனது மகனையும், மகளையும் வளர்த்து வந்தார்கள். படிப்பில் சுட்டியான மகள் சௌமியாவை மட்டும் ப்ளஸ் டூ வரை படிக்க வைத்துள்ளனர்.  பாப்பிரெட்டிபட்டியிலுள்ள மலைவாழ் மாணவர்களுக்கான விடுதியில் தங்கிப் படித்து வந்தார் சௌமியா.  

தீபாவளி விடுமுறைக்காக, நவம்பர் 3-ம் தேதி சௌமியாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் அண்ணாமலை. நவம்பர் 5-ம் தேதி, வழக்கம்போல ஆடு மேய்ப்பதற்காக சௌமியாவின் பெற்றோர் காட்டுக்குச் சென்றனர். பகல் 2 மணி அளவில் இயற்கை உபாதைக்காகத் தன் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் ஆற்றங்கரைக்குத் தனியாகச் சென்றுள்ளார் சௌமியா. அங்கு, அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ் ஆகியோர் மது போதையில் சௌமியாவைப் பாலியல் வல்லுறவு செய்தனர். பாலியல் தாக்குதலுக்கு ஆளான சௌமியா, வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். அன்றைய தினமே, பெற்றோருடன் சென்று கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால், ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் அந்தப் புகாரை அலட்சியமாகத் தட்டிக் கழித்துள்ளார்.  

காவல் நிலையத்திலிருந்த சில நல்ல உள்ளங்களின் உதவியால், சௌமியாவின் தந்தை அண்ணாமலை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பிறகே, அடுத்தநாள் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். மாணவியின் புகாரின்படி, போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், `பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சி’ என்றுதான் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மருத்துவப் பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு மாணவி சௌமியா அழைத்துச் செல்லப்பட்டார். சாதாரணமாக செக்அப் செய்துவிட்டு, தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்துள்ளனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சௌமியாவை வெளிநோயாளிகளுக்கான வார்டில் செக்கப் செய்துவிட்டு, மறுநாள் வருமாறு கூறியுள்ளனர். மகள் இருக்கும் நிலையில் ஊருக்குச் சென்றுவருவது சிரமம் என்று பெற்றோர் கதறியுள்ளனர். அவர்களிடம் டீல் பேசிய காவல்துறை, அண்ணாமலையிடம் 4,000 ரூபாயை வாங்கியதுடன், இதை வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர். 

பிரச்னை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்ற `அக்கறையுடன்’ தர்மபுரி குறிஞ்சி நகரில் உள்ள வள்ளலார் இல்லத்தில் சௌமியாவை 6-ம் தேதி மாலை 5 மணிக்கு ஒப்படைத்துவிட்டு, பெற்றோரை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காததால், சௌமியா உடல் அளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதைக் கண்டு பதறிய காப்பக நிர்வாகிகள், நவம்பர் 7-ம் தேதி நண்பகல் 2 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போதும்கூட, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.

சௌமியாவுக்கு என்ன நடந்தது என்பதை காவல்துறையும் தெரிவிக்கவில்லை. அவருக்கான சிகிச்சை என்ன என்பதைப் பற்றிக் காப்பகமும் அக்கறை கொள்ளவில்லை. இதனால், அவருக்குக் கடைசி நிமிடம் வரை சாதாரண சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது. நவம்பர் 10-ம் தேதி காலை சௌமியா உயிரிழந்தார். 

`பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால், மூளையில் நீர்கோத்து, மூளையில் இருக்கும் நரம்பு வீக்கம் அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது’ என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சௌமியா இறந்த பிறகுதான், அவருக்கு நேர்ந்த கொடுமைகள் வெளியே தெரிய வந்தன. இந்த மரணத்துக்கு நீதி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான `டெல்லி' பாபு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, `சௌமியாவின் இறப்பு குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்படும்’ என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மகேஷ்குமார் ஆகியோர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

``பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள். நடந்த குற்றம் என்ன என்பதை முறையாக விசாரிக்காமலேயே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது காவல் துறை. தகவல் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதிலேயே மாவட்டக் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் குறியாக இருந்துள்ளது’’ என டெல்லிபாபு ஆதங்கத்துடன் தெரிவித்தார். 

தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு மற்றும் உண்மை அறியும் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமயந்தி, ``சாராய வியாபாரியின் மகனான ரமேஷைக் காப்பாற்றவே, சௌமியாவின் புகாரை பதிவுசெய்யாமல் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் அலட்சியப்படுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர் புகார் எண்ணில் புகார் பதிவு செய்த பிறகுதான், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை, கவுன்சலிங் வழங்காமல் நெருக்கடியான மனநிலைக்கு சௌமியாவைத் தள்ளியுள்ளனர். இதுவே அவர் உயிரிழக்கக் காரணம். இதற்கு மாவட்ட காவல்துறை, மருத்துவத்துறை, காப்பகம் முக்கியக் காரணமாக உள்ளதை தெளிவாக அறிய முடியும். குறைந்தபட்சம் அந்த மாணவிக்கு வீட்டின் அருகில் ஒரு கழிப்பறை இருந்திருந்தால் கூட, அந்த மாணவி காப்பாற்றப்பட்டிருப்பார். மாணவி சௌமியாவின் மரணத்துக்குத் தமிழக அரசு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அனைவரின்  மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். 'பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சி' என்பதை பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக மாற்றி விசாரிக்க வேண்டும்’’ என்றார் வேதனையுடன். 

அழுதுகொண்டே இருந்த சௌமியாவின் தாய் மலரிடம் பேசினோம். உடைந்த குரலில் பேசத் தொடங்கிய அவர் ``எங்க பொண்ணுக்குப் படிப்புல ஆர்வம் அதிகம். படிச்சுப் பெரிய போலீஸ் அதிகாரியா வருவேன்னு அடிக்கடி சொல்லுவா. ஆனா, எங்க பொண்ணை இப்படி அநியாயமா கொன்னுட்டாங்க. போலீஸும்தான் என் மக சாகுறதுக்குக் காரணம்"  எனத் துடித்தார். அவரது அழுகையும், ஆற்றாமையும் அந்த வனமெங்கும் எதிரொலித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு