Published:Updated:

''அம்மாவுக்கு நான் யாருனு தெரியும்... ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டதில்லை'' - திருநங்கை ஸ்வேதா

''அம்மாவுக்கு நான் யாருனு தெரியும்... ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டதில்லை'' - திருநங்கை ஸ்வேதா
''அம்மாவுக்கு நான் யாருனு தெரியும்... ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டதில்லை'' - திருநங்கை ஸ்வேதா

"ஒருநாள் என் கூடப் படிச்ச என்னோட பள்ளி சீனியரைப் பார்த்தேன். அவர் என்னை ஸ்கூல் படிக்கும்போது கிண்டல் பண்ணுவார். ஆனா, நான் அவரைப் பார்க்கும்போது அவர் திருநங்கையாக மாறியிருந்தார். எனக்கு பயங்கரமா அதிர்ச்சியாகிடுச்சு."

திருநங்கைகள்... இந்தச் சமூகத்தில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை தங்களுடைய வாழ்க்கையில் அன்றாடம் அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறார், திருநங்கை சுவேதா. இவர் சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு (Born 2 Win) என்கிற அமைப்பை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரிடம் பேசினோம்.

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். சின்ன வயசுலேயே என்னுடைய அப்பா இறந்துட்டாங்க. எங்க வீட்டுல அம்மா, நான், அக்கா மட்டும் தான்! அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டு எங்களைப் படிக்க வைச்சாங்க. என்னுடைய பன்னிரெண்டாவது வயதில் என் உடம்பில் மாற்றத்தை உணர்ந்தேன். ஆனா, அந்தச் சமயத்துல எனக்கு என் உடம்பில் நான் உணர்கிற மாற்றம் என்னன்னு எனக்குத் தெரியலை. திருநங்கைகள் அப்படியிருப்பாங்கங்குற புரிதலும் இல்லை. நான் படிச்சதும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்! என் நடவடிக்கையைப் பார்த்து ஸ்கூல்ல பசங்க கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, அதை நான் பெருசா எடுத்துக்கிட்டது இல்லை. என்னுடைய பதினெட்டு வயசு வரைக்கும் எனக்குள்ள இருந்த உணர்வைப் பற்றி யாரிடமும் பகிர்ந்துக்காமல் இருந்தேன். ஒருநாள் என் கூடப் படிச்ச என்னோட பள்ளி சீனியரைப் பார்த்தேன். அவர் என்னை ஸ்கூல் படிக்கும்போது கிண்டல் பண்ணுவார். ஆனா, நான் அவரைப் பார்க்கும்போது அவர் திருநங்கையாக மாறியிருந்தார். எனக்கு பயங்கரமா அதிர்ச்சியாகிடுச்சு. அவங்களும், நானும் நண்பர்களானோம். அதுக்கு அப்புறமாதான் நான் திருநங்கைன்னு வெளியில் சொன்னேன்'' என்றவர் சில நொடி மௌனத்திற்குப் பின்னர் தொடர்ந்தார்.

''அதுக்கப்புறமா மனசளவுல ஒரு தெளிவு கிடைச்சது. எங்கம்மாவுக்கு என் மனசு, அதுல ஏற்படுற மாற்றம் பத்தியெல்லாம் தெரியும். ஆனா எந்த வார்த்தையும் என்கிட்ட கேட்டுகிட்டதில்லை. நானும் என்னைப் பத்தி விவரிச்சு அம்மா மனசை நோகடிச்சதில்லை. ஆனா ஒரே வீட்லதான் இருக்கேன். அந்தளவுக்கு என்னை என் அம்மா நேசிக்கிறாங்க. என்னுடைய திருநங்கை சமூகத்தில் நான் வித்தியாசமானவள். ஆசைகள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும்.. அந்த ஆசைகளை ஒரு வட்டத்துக்குள் வைச்சிகிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். என்னால முடிஞ்ச உதவியை என் சமூகத்துக்கு பண்ணனும்னு நினைச்சேன். அதை இப்போ வரைக்கும் பண்ணிட்டு இருக்கேன். 

என் சமுகத்தில் கூட நான் நிறையப் புறக்கணிப்புகளையும், வீண்பழிகளையும் எதிர்கொண்டிருக்கேன். எந்த தனிநபரையும் ஒதுக்கக் கூடாது எல்லோரும் சாதிக்கிறவங்கதான் என்பதை தெரியப்படுத்துற மாதிரி வாழ்ந்துகாட்டணும்னு நினைச்சேன். 2013-ல் சாதிக்க பிறந்தவர்கள் சமூக அமைப்பு (Born 2 Win) என்கிற அமைப்பை தொடங்கினேன். பிப்ரவரி 15-ம் தேதி வந்தா இந்த அமைப்புக்கு ஏழு வயசாகுது. இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கான விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து நடத்திட்டு இருக்கேன். ஏதோ ஒரு மூலையில் சாதிச்சிட்டு இருக்கிற திருநங்கைகளை அடையாளப்படுத்தும் விதமா 'இது சிகரம் தொட்ட திருநங்கை' என்கிற விழாவை நடத்துறேன். இதுவரைக்கும் 110 திருநங்கைகளை அடையாளப்படுத்தியிருக்கேன். அக்டோபர் மாசத்துல Born 2 Win-ன்னு சாதிச்ச திருநங்கைகள் பற்றி நான் எழுதின புத்தகத்தையும் ரிலீஸ் பண்ணப் போறேன். சில நல்ல உள்ளங்கள் ஹெல்ப் பண்றாங்க. அவங்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிச்சிக்கிறேன். 

அதுல குறிப்பிட்டு சொல்லணும்னா எனக்குப் பக்க பலமா இருக்கிறது என் தோழி திவ்யா சாரதியும், மலைகா குஹனும்! பல ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும்போது இவங்க எனக்கு ஆறுதலா இருக்காங்க. அதுபோக, நான் ஒரு தனியார் புராஜெக்ட்டில் ஒர்க் பண்றேன். அதில் வருகிற பணத்தை வைச்சு என் ஃபேமிலியையும், இந்த அமைப்பையும் பார்த்துக்கிறேன். இந்தியாவிலே டிரான்ஸ் காலாண்டர்ன்னு 2014-ல் பண்ண ஆரம்பிச்சோம். ஒரு காலண்டர் 500 ரூபாய். அதை விற்று அதில் கிடைக்கிற வருமானத்தை வெச்சு திருநங்கைகளுக்கு மட்டுமல்லாமல் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கும் ஹெல்ப் பண்றேன். எனக்கு பெண் குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். அப்பா இல்லாம படிக்க வசதியில்லாத பெண் குழந்தைங்களுடைய கல்விக்கு என்னால முடிஞ்ச உதவிகளைத் தொடர்ந்து செஞ்சுட்டு வர்றேன். நிறைய திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன் என்றவரின் பேச்சில் அத்தனை பெருமிதம்!

எனக்கு என் அம்மா ஃபுல் சப்போர்ட்டா இருக்காங்க. நான் எனக்குள்ள இருக்கிற பெண்மையை உணர்கிறேன். அதை வெளிக்காட்டிக்கணுங்குற அவசியமில்லைன்னு நினைச்சிட்டு சந்தோஷமா என் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். தொடர்ந்து என் சமூகத்தைச் சேர்ந்தவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யணுங்குறது மட்டும்தான் இப்போதைக்கு என் இலக்கு" என்கிறார், ஸ்வேதா.

அடுத்த கட்டுரைக்கு