Published:Updated:

``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி

''இந்த வண்டி வாடகை வண்டிதாம்மா. அதுக்கு தினக்கூலி கொடுக்கணும். எனக்கு வயசாகிப் போச்சில்லையா? அதனால வண்டி தள்ளுறதுக்கு ஒரு பையன் வருவான். அவனுக்கு கூலி. எல்லாம் போக மிச்சம் இருக்கிறதுலதான் நானும் என் பேத்தியும் மானம், மரியாதையோட வாழ்ந்துட்டு இருக்கோம்.''

``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி
``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி

தினமும் எத்தனையோ மனிதர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பேருமே தங்களுக்கே தங்களுக்கான ஒரு சொந்தக் கதையை சுமந்தபடிதான் நம்மிடம் பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்க நம்முடைய காதுகளுக்கு தகுதி இருக்கிறது என்று நம்புகிற ஒரு புள்ளியில்தான், அவர்களுடைய அந்த பர்சனல் பக்கத்தை நம்மிடம் திறந்துகாட்டுவார்கள். ஜெயமணி அம்மா இந்த வகை மனுஷிதான். கடந்த 5 வருடங்களுக்கும் மேலாகச் சென்னை கெல்லீஸ் பகுதியில் தள்ளுவண்டியில் சாப்பாடுக் கடை வைத்திருக்கிற அவரும் அவர் கை மணமும் எனக்கு அறிமுகம் என்றாலும், அவருடைய கதையை மிகச் சமீபத்தில்தான் அறிந்துகொள்ள முடிந்தது. 

பகல் ஒரு மணிவாக்கில் 'அபிராமி மால்' ரோட்டில் போனால் ஜெயமணி அம்மாவைப் பார்க்கலாம். அவருடைய தள்ளுவண்டியைச் சுற்றி நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக் கொண்டிருக்க, கரண்டி நிறையக் குழம்பும் மீனுமாக பரிமாறிக் கொண்டிருப்பார். ஒரு மணி நேரத்தில் எல்லாம் விற்றுத் தீர்த்து, வீட்டுக்குக் கிளம்பி விடுவார். அப்படியொரு நேரத்தில்தான் அவருடைய கதையைச் சொன்னார். 

``பொறந்தது பெங்களூரு. நான் குழந்தையா இருந்தப்போவே அப்பா தவறிட்டாரு. எனக்குக் கல்யாணமாகிறதுக்கு முன்னாடியே அம்மாவும் தவறிட்டாங்க. பதினாறு வயசுல கல்யாணம் முடிச்சு சென்னைக்கு வந்தேன். இது நடந்தது 1980-ல். எங்க வீட்டுக்காரருக்குக் குடிப்பழக்கம் இருந்துச்சுன்னாலும் கரெக்டா வேலைக்குப் போயிடுவாரு. அவருக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். இந்த ஏரியாவுல ஆங்கிலோ இண்டியன்ஸும் நார்த் இண்டியன்ஸும் அதிகமா இருப்பாங்க. அதனால, அஞ்சு வருசம் முன்னாடி வரைக்கும் அவங்க வீடுகளில்தான் வீட்டுவேலை பார்த்துக்கிட்டிருந்தேன்'' என்கிற ஜெயமணி அம்மாவுக்கு, இதனால் பேச்சு வழக்கு இந்தியும் ஆங்கிலமும் சரளமாக வருகிறது. பிறந்தது பெங்களூரு என்பதால் கன்னடமும் தெலுங்கும் சின்ன வயதில் இருந்தே நன்கு தெரியுமாம். கூடவே தமிழும் தங்குதடையில்லாமல் பேசுகிறார். 

``கல்யாணமாகி அஞ்சு வருஷத்துல என் வீட்டுக்காரரும் தவறிட்டாரு. இதோ வெளியே போயிட்டு வர்றேன்னு சொன்னவரை பொணமாத்தான் வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தாங்க. ஒரு ஆக்ஸிடெண்ட்டில் செத்துப் போயிட்டாரு. கையில் ஒரு ஆண் குழந்தையை வைச்சுக்கிட்டு என்னப் பண்றதுன்னே தெரியலை. ஆனா, பொழைக்க வந்த இடத்துல மானத்தோட வாழணும்கிற வைராக்கியம் மட்டும் மனசுக்குள்ள இருந்துச்சு. சொந்த வீடு இருந்ததால காத்து, மழைக்கு பயமில்லை. ஆனா, ரெண்டு வயிறு இருக்கில்ல. புள்ளையை படிக்கவும் வைக்கணுமே... ரெண்டு, மூணு வீடுகளில் சமையல் வேலைக்குப் போனேன். அப்புறம் வீட்டு வாசல்ல வடை சுட்டு விப்பேன். என்னன்னவோ வேலைப்பார்த்தேன்மா. எப்படியோ புள்ளையை ஆளாக்கி, அவனுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வைச்சேன்'' என்பவரின் குரலில் உழைத்தக் களைப்பு அப்பட்டமாகத் தெரிகிறது. 

`இப்ப உங்க பிள்ளை எப்படியிருக்காருங்கம்மா' என்று அவரை ஊக்கிவிட்டேன். கதைத் தொடர்ந்தது. 

``என் புள்ளைக்கு பொண்ணு ஒண்ணு, பையன் ஒண்ணுன்னு ரெண்டு குழந்தைங்க. பேத்திக்கு கால் கொஞ்சம் வளைஞ்சி இருந்ததால, அந்தக் குழந்தையை நானே எடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். இப்ப அவ காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறா. இதுக்கு நடுவுல மகனுக்கு ஒரு ஆக்ஸிடெண்டாச்சு. மருமக பாவம், அவளும் ரெண்டாயிரம் ரூபா காசுக்கு வேலைக்கு ஓடிக்கிட்டு இருக்கா'' என்று வருத்தப்பட்டவரிடம், சாப்பாட்டுக் கடை ஆரம்பித்த கதையைக் கேட்டோம். 

``அந்த வயிற்றெரிச்சலை ஏம்மா கேட்கிறே... என் பேத்திக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட நான்  பல வருசமா வேலைப் பார்த்துக்கிட்டிருந்த இந்திக்காரம்மாகிட்டே கேட்டேன். அந்தம்மா, 'ஐ காண்ட், வொய் ஷூட் ஐ'ன்னு கேட்டுச்சு. மனசு விட்டுப் போச்சு. 'நீயுமாச்சு, உன் வேலையுமாச்சு. ரெண்டு கிலோ அரிசி பொங்கினேன்னா, அதுல வர்ற வருமானம் எனக்கும் என் பேத்திக்கும் போதும்டினு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு  வேலையை விட்டுட்டு வந்துட்டேன். அதுகப்புறம் இந்த தள்ளுவண்டி கடைதாம்மா எங்களைக் காப்பாத்திட்டு இருக்கு. ஒரு நாளைக்கு 25 பேருக்குத்தான் சமைப்பேன். ஒரு மணிபோல வந்தீங்கன்னா சாம்பார், ரசம், மீன் குழம்பு, மீன் வறுவலோட சோறு போடுவேன். வாரத்துக்கு ஒரு தடவை கோழிக்கறியும் உண்டு'' என்கிற ஜெயமணி அம்மா, சிலருக்கு இலவசமாகவும் சாப்பாடு தருகிறார். அந்த ஏரியாவில் இருக்கிற குழந்தைகள் காப்பகத்துக்கு சனிக்கிழமைதோறும் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்கித் தருகிறார். 

``இந்த வண்டி வாடகை வண்டிதாம்மா. அதுக்கு தினக்கூலி கொடுக்கணும். எனக்கு வயசாகிப் போச்சில்லையா? அதனால வண்டி தள்ளுறதுக்கு ஒரு பையன் வருவான். அவனுக்குக் கூலி கொடுக்கணும். எல்லாம் போக மிச்சம் இருக்கிறதுலதான் நானும் என் பேத்தியும் மானம், மரியாதையோட வாழ்ந்துட்டு இருக்கோம். அவ மேலே படிக்கணும்னு ஆசையா இருக்கா. எனக்கு அவ்வளவு சத்து இல்லையே. கஷ்டப்பட்டு கல்யாணத்தைப் பண்ணிடலாம்னு இருக்கேன்.  அதுவரைக்கும் நான் உயிரோட இருந்தா போதும்மா'' என்றபடி வானத்தை நோக்கிக் கும்பிடுகிறார் ஜெயமணி அம்மா. 

ஜெயமணி அம்மாக்கள்தான் வாழ்க்கைக் கடலில் குடும்பங்கள் மூழ்கிப் போகாமல் காப்பாற்றுகிற நங்கூரங்கள்!