Published:Updated:

அழகிய பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ..! அ.தி.மு.க புள்ளிகளுக்குத் தொடர்பா?

அழகிய பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ..!  அ.தி.மு.க புள்ளிகளுக்குத் தொடர்பா?
அழகிய பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ..! அ.தி.மு.க புள்ளிகளுக்குத் தொடர்பா?

``நான் பெரும் உண்மையைச் சொல்லப் போகிறேன். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சப்போர்ட்டும், வழக்கறிஞர்கள் சப்போர்ட்டும் வேண்டும். என் உயிரே போனாலும் பரவாயில்லை. இதில் பலபேர் உள்ள இருக்காங்க. பல உண்மைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிக்குத் திரு!" என்று பகீர் கிளப்பியது ஆடியோ.  

`பொள்ளாச்சியில்  கல்லூரி  மாணவிகளைக் காதல் என்ற போர்வையில் மயக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசை பொள்ளாச்சி போலீஸார் இன்று கைது செய்தனர்’.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சி கிழக்குக் காவல்நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரும் அதைத் தொடர்ந்து வெளியான தகவலும் கடந்த சில நாள்களாக பொள்ளாச்சியைப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறது. ``பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்பவன் தன்னோடு ஃபேஸ்புக் மூலமாக நட்பாகி காலப்போக்கில் காதலிப்பதாகச் சொன்னான். நானும் நம்பி காதலித்தேன். பிறகொருநாள் நண்பர்களோடு `அவுட்டிங்’ போகலாம் என்றுகூறி திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோரோடு என்னையும் அழைத்துச் சென்றான். சென்ற இடத்தில் நான்குபேரும் சேர்ந்து, என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். செல்போனில் ஆபாசப் படம் எடுத்துவிட்டனர். 4 பேர் இருந்ததால் நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

கைது செய்யப்பட்ட வசந்தகுமார், சபரிராஜன், சதீஷ்

நான் அணிந்திருந்த செயினையும் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்" என அந்தக் கல்லூரி மாணவி புகார் கொடுக்க, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரையும் உடனடியாக  கைது செய்தது பொள்ளாச்சிக் காவல்துறை. திருநாவுக்கரசு தலைமறைவானார். 

``ஒரு கல்லூரி மாணவி மட்டுமல்ல பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அழகான பணக்காரக் கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்கள் பலர் இந்தக் கும்பலிடம் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் செல்போனில் 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி பல லட்சக்கணக்கான ரூபாய் பணம் பறித்துள்ளதாகவும் அடுத்தடுத்து வெளியான தகவல் பொள்ளாச்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுதான் முக்கியக் குற்றவாளி. சின்னப்பம் பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டில்தான் எல்லாம் நடந்துள்ளது. அவனைப் பிடித்தால்தான் அனைத்து உண்மைகளும் வெளியே வரும் அதுவரை எதுவும் சொல்ல முடியாது" என்றது காவல்துறை.

திருநாவுக்கரசு

இதற்கிடையில், வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் மிரட்டப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசின் நண்பர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து,  திருநாவுக்கரசுவிடமிருந்து ஒரு வாட்ஸ் அப் ஆடியோ வெளியானது. அதில், "இந்தப் புகார் முற்றிலும் பொய்யானது. எனக்கும் இந்தப் பொண்ணுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. மற்ற போட்டோஸ் வீடியோஸுக்கு அப்புறமா நான் விளக்கம் சொல்கிறேன். இதில் முக்கியமான கட்சிக்காரவங்களுடைய தலையீடு இருக்கு. நான் பெரும் உண்மையைச் சொல்லப் போகிறேன். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சப்போர்ட்டும், வழக்கறிஞர்கள் சப்போர்ட்டும் வேண்டும். என் உயிரே போனாலும் பரவாயில்லை. இதில் பலபேர் உள்ள இருக்காங்க. பல உண்மைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிக்குத் திரு!" என்று பகீர் கிளப்பியது ஆடியோ.  

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு முக்கியப் புள்ளியின் வாரிசும்  சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதனால்தான் திருநாவுக்கரசைப் பிடிக்காமல் போலீஸ் இழுத்தடிக்கிறது என்றும் பரபரப்போடு கிசுகிசுக்கத் தொடங்கியது பொள்ளாச்சி. இந்தப் பகீர் புரளியைத் தொடர்ந்து, பொள்ளாச்சி எம்.பி மகேந்திரன், கோவை எஸ்.பி பாண்டியராஜனை நேரடியாகச் சேர்ந்து குற்றவாளியை விரைவில் பிடிக்க மனு அளித்தார். அதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய எம்.பி மகேந்திரன், ``அ.தி.மு.கவினர் யாரும் இந்த வழக்கில் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்தவர்கள் கட்டாயமாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். திருநாவுக்கரசைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் பிடித்துவிடுவார்கள்’ என்றவர் இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று சீறினார்.

எஸ்.பி.யிடம் பொள்ளாச்சி எம்.பி மனு கொடுத்தபோது...

பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீர் ஒருபுறம், இதில் அரசியல்வாதிகளின் தொடர்பு இருக்கிறதா என்கிற விவாதம் மறுபுறம் எனப் பொள்ளாச்சி பற்றி எரியாத குறைதான். அந்த அளவுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம். இந்நிலையில்தான் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். `அதில் செவ்வாய் கிழமை (5.3.18) அன்று பொள்ளாச்சி வந்துருவேன். போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிருவாங்க. எனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. வேணும்னா சி.பி.ஐ மூலமாகூட விசாரிச்சுப் பாருங்க" என்றவர் தனக்கு அரசியல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் நிறைய எதிரிகள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சொன்னதுபோலவே இன்று பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள தன் வீட்டிற்கு, வந்த திருநாவுக்கரசை பொள்ளாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயராம் தலைமையிலான தனிப்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

திருநாவுக்கரசு ஆடியோவில் சொன்னதைப்போல இதில், அரசியல்வாதிகளின் தொடர்புகள் இருக்கிறதா, யாருடைய பெயரைச் சொல்லப்போகிறார் என்று பரபரப்பாகியுள்ளது பொள்ளாச்சி.

அடுத்த கட்டுரைக்கு