Published:Updated:

"கல்யாணமாகி, குழந்தை பிறந்துட்டா பிடிச்ச வேலையை செய்யக்கூடாதா?!" மெஹந்தி ஆர்டிஸ்ட்' ஷோபனா

"கல்யாணமாகி, குழந்தை பிறந்துட்டா பிடிச்ச வேலையை செய்யக்கூடாதா?!" மெஹந்தி ஆர்டிஸ்ட்' ஷோபனா
"கல்யாணமாகி, குழந்தை பிறந்துட்டா பிடிச்ச வேலையை செய்யக்கூடாதா?!" மெஹந்தி ஆர்டிஸ்ட்' ஷோபனா

'எனக்கு வேலைக்குப் போகணும்னு ஆசைதான். ஆனா, குடும்பத்தைப் பார்த்துகொள்வதற்காக வேலையை விட்டுட்டேன்' என்பது பல குடும்பத்தலைவிகளுடைய மனக்குரல். ஆசைப்பட்ட வேலையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என, தனக்குப் பிடித்தமான வேலையைச் செய்துகொண்டிருக்கிறார் குடும்பத்தலைவி ஷோபனா. ஷோபனாவிற்கு ஐந்து மாதக் குழந்தை இருக்கின்றது. பிரைடல்களுக்கு விதவிதமான டிசைன்களில் கண் கவரும் மெஹந்தி போடுவதுதான் ஷோபனாவிற்குப் பிடித்த வேலை. தன் மனைவியின் ஆசையை மறுக்காமல் அனுமதிக்கும் கணவர், அன்பான மாமியார் என அழகான குடும்பத்திற்கு மருமகளாக தன் பணியைச் சிறப்பாகச் செய்கிறார். பிரைடல் ஒருவருக்கு அவருடைய குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு ஷோபனா மெஹந்தி போட்டும் காட்சியை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஷோபனாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். முதுகலை பட்டப்படிப்பு படிச்சிருக்கேன். எனக்குச் சின்ன வயசிலேருந்தே டிராயிங் மேல கிரேஸ் இருந்துச்சு. என் பன்னிரண்டு வயசுல விளையாட்டாக மெஹந்தி போட ஆரம்பிச்சேன். எல்லோரும் நீ சூப்பரா போடுற.. இதையே ஏன் பிசினஸா பண்ணக் கூடாதுன்னு கேட்கவும். `அட ஆமா'ன்னு தோணுச்சு. காலேஜ் படிக்கும்போதே பகுதி நேரமா மெஹந்தி போட ஆரம்பிச்சேன். ஒருத்தரைத் தொடர்ந்து பல கஸ்டமர்ஸ் கிடைச்சாங்க. என் காலேஜ் புரொபசர்ஸூம் என் வொர்க்கைப் பார்த்துட்டு என்னை உற்சாகப்படுத்த ஆரம்பிச்சாங்க. வகுப்பு இருக்கிற சமயம் எனக்கு வேலை இருந்தா எதுவும் சொல்லாம அனுமதி கொடுத்துடுவாங்க. அப்படித்தான் என் பயணம் ஆரம்பிச்சது.

ஒரு கட்டத்துக்கு மேல படிப்பு முடிஞ்சதும் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனேன். ஐ.டி கம்பெனி வேலை கிடைச்சது. ஆனா, அதை விட மெஹந்தி பிசினஸில்தான் எனக்கு ஆர்வம் இருந்துச்சு. சரி நமக்குப் பிடிச்ச வேலையைப் பண்ணலாம்னு ஐ.டி வேலைக்குப் போகலை. அது என் வீட்டுல யாருக்கும் பிடிக்கலை. இதுல என்ன லாபம் கிடைக்கும். இதுல எப்படி முன்னேற முடியும்னு நினைச்சாங்க. ஆனா, என்னைத் தேடி பல கஸ்டமர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துக்கு மேல நான் சம்பாதிக்கிறதைப் பார்த்துட்டு என் வீட்டுல உள்ளவங்க மனசு மாறி என்னை சப்போர்ட் பண்ணாங்க. திருமணப் பேச்சு ஆரம்பிக்கும் போதுதான் நான் ஒரு செக் வைச்சேன்" என்றவர் புன்னகைத்துவிட்டுத் தொடர்கிறார்.

``வீட்டுல பார்த்த மாப்பிள்ளையிடம் நான் தெளிவாப் பேசினேன். எனக்கு என்னுடைய வொர்க் ரொம்பவே முக்கியம். அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன். அதுக்கு அவர் சம்மதிச்சார். நீங்க சம்மதிச்சா மட்டும் போதாது. உங்க ஃபேமிலிகிட்ட சொல்லி சம்மதம் வாங்குங்கன்னு சொன்னேன். எல்லோரும் சரி சொன்னதும்தான் என் திருமணமே நடந்துச்சு. என் திருமணத்துக்கு இரண்டு நாள்  முன்னாடி வரைக்கும் கூட மெஹந்தி போட போனேன். என்னுடைய புகுந்த வீடு பாண்டிச்சேரி. சென்னையில் கஸ்டமர்ஸ் இருந்தாங்கன்னா என் கணவர் என்னை விட்டுட்டுப் போவார். வேலை முடிஞ்சதும் அவரே திரும்ப வந்து என்னைக் கூட்டிட்டுப் போயிடுவார். இப்படி வேலை பார்த்துட்டு இருந்தேன்.

நான் கர்ப்பமானதும் எங்க வீட்டுல நீ வேலைக்குப் போக வேண்டாம். குழந்தைக்கு ஏதாச்சும் ஆகிடும்னு சொல்லி வீட்டுல இருக்க வைச்சாங்க. இரண்டு மாசம் வீட்டுல இருந்தேன். அதுக்கும் மேல என்னால இருக்க முடியலை. நான் மெஹந்தி போடப் போகப் போறேன்னு சொல்லி என் மாமியாருக்கும், என் கணவருக்கும் புரிய வைச்சேன். அவங்களும் என்னைப் புரிஞ்சிகிட்டாங்க. வழக்கம்போல என் கணவர் கூட்டிட்டு வந்து விட்டுட்டுப் போவார். எல்லோரும் மாசமா இருக்கிற சமயம் டிராவல் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவாங்க. உண்மையைச் சொல்லணும்னா அப்படியெல்லாம் இல்லைங்க. நான் வீட்டில் இருக்கும்போது கூட சோர்வா ஃபீல் பண்ணுவேன். கஸ்டமர்ஸ் வீட்டுக்குப் போய் மெஹந்தி போடும்போது வாந்தி வருகிற மாதிரியோ, உடல் சோர்வா இருக்கிற மாதிரியோ நான் ஃபீல் பண்ணதே இல்லை. கிளம்பும்போதே வயிற்றில் கை வைச்சு, `அம்மா வேலைக்குப் போறேன். பாப்பா சமத்தா இருக்கணும்'னு பேசிட்டுப் போவேன். மாச, மாசம் செக்கப்பில் நான் வீக்கா இருக்கேன்னோ அல்லது என் குழந்தை வீக்கா இருக்குன்னோ மருத்துவர் சொன்னதே இல்லை. எந்த வேலை பண்றீங்களோ அதையே தொடர்ந்து பாருங்கன்னு சொன்னாங்க. என் மாமியார் என்னுடைய இன்னொரு அம்மா. அவங்கதான் முழுசா என்னைப் புரிஞ்சிகிட்டாங்க. சொந்தக்காரங்க பலரும் இதெல்லாம் தேவையான்னு கேட்கும்போதே ஹர்ட் ஆனேன். அப்போ அவங்க நான் உன்னைப் புரிஞ்சுகிறேன்னு சொன்னாங்க. என் வளைகாப்பு முடிஞ்சு மூன்று நாள் மட்டும்தான் எங்க வீட்டுல இருந்தேன். மறுபடி என் புகுந்த வீட்டுக்கு வந்துட்டேன். என் கணவரும், என் மாமியாரும்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். ஒன்பதாவது மாசம் வரைக்கும் டிராவல் பண்ணி மெஹந்தி போட்டுட்டுதான் இருந்தேன். எனக்கு சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது" எனப் புன்னகைக்கிறார்.

``குழந்தை பிறந்தும் மூன்று மாசம் கழிச்சுதான் என் அம்மா வீட்டுக்கே போனேன். பாப்பா பிறந்து இருபது நாளிலேயே கஸ்டர்மர்ஸ் கேட்டாங்க. அப்போ வீட்டுக்கு வரச் சொல்லி பாப்பாவுக்கு பால் கொடுத்துட்டு மெஹந்தி போட்டு விட்டேன். மூன்று மாசம் வரை வீட்டிலேயே கஸ்டமர்ஸை வரச் சொல்லி மெஹந்தி போட்டுட்டு இருந்தேன். பாப்பா பிறந்து மூன்று மாசம் ஆனதுக்குப் பிறகு டிராவல் பண்ணி மெஹந்தி போட ஆரம்பிச்சேன். அந்தச் சமயமெல்லாம் என் மாமியார் என்கூட வருவாங்க. சென்னையில் மெஹந்தி போட வந்தா என் அம்மா வருவாங்க. அவன் வயித்துக்குள்ளே இருக்கும்போதே நான் போட்டு பழகுனதுனாலவோ என்னவோ அவன் அழுகவே மாட்டான். நான் பால் கொடுத்துட்டு மடியில் படுக்க வைச்சு மெஹந்தி போட்டுட்டு இருப்பேன். அவன் அமைதியா என் முகத்தைப் பார்த்து சிரிச்சிட்டே இருப்பான். முதல் நாள் அவனைத் தூக்கிட்டு மெஹந்தி போடப் போகும்போது எனக்குள்ளே அத்தனை கேள்விகள்! ஆனா, அவன் ரொம்ப ஸ்வீட்டா நடந்துக்கிட்டான். இரண்டாவது முறையும் அப்படித்தான் இருந்தான். அதனால இப்போ தொடர்ந்து சென்னைக்கும், பாண்டிக்கும் டிராவல் பண்ணி என் வேலையை சந்தோஷமா செஞ்சிட்டு இருக்கேன்" என்கிறார் இந்தத் தன்னம்பிக்கை மனுஷி.

``எனக்கு என் வேலையும் முக்கியம். என் பாப்பாவும் முக்கியம். சந்தோஷமா என் வேலையைச் செய்றேன். எனக்கு என் குடும்பம் பலமா இருக்கிறாங்க. நான் பியூட்டி கோர்ஸூம் படிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். சென்னையில் என் அம்மா வீடு இருக்கு. ஆனாலும், நான் படிக்க வேண்டிய இடம் தாம்பரத்தில் இருக்கிறதுனால பியூட்டி கோர்ஸ் படிக்கிற இடத்துக்குப் பக்கத்துலேயே வாடகைக்கு வீடு பார்த்துப் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இருபது நாள் கோர்ஸூக்காக என் மாமனார், என் மாமியாரும் என் கூட வர முடிவெடுத்திருக்காங்க. பாப்பாவையும் பார்த்துக்கலாம். நீயும் கோர்ஸ் படிக்கலாம்னு சொல்லியிருக்காங்க. `நீ பொண்ணு... இதுதான் பண்ணணும்னு' எந்த வரையறைக்குள்ளேயும் என் குடும்பம் என்னை அடைக்கலை. எல்லாப் பொண்ணுங்களுக்கும் பிடிச்ச வேலையைச் செய்யணுங்குற கனவு இருக்கும். அவங்களுக்கு உங்களால் முடிஞ்ச சப்போர்ட் கொடுத்தீங்கன்னா போதும் அடுத்தடுத்த கட்டத்துக்கு அவங்களால் முன்னேற முடியும்" என்கிறார் ஷோபனா.

தன் மகன் அழ ஆரம்பிக்க நன்றி கூறி நம்மிடமிருந்து விடைபெற்றார் தன்னம்பிக்கை தாய்!