Published:Updated:

16 கோர்ஸுகளுக்குச் சொந்தக்காரி மதுமிதா - இந்தியாவின் முதல் திருநங்கை ஹெச்.ஆர்.

16 கோர்ஸுகளுக்குச் சொந்தக்காரி மதுமிதா  - இந்தியாவின் முதல் திருநங்கை ஹெச்.ஆர்.
16 கோர்ஸுகளுக்குச் சொந்தக்காரி மதுமிதா - இந்தியாவின் முதல் திருநங்கை ஹெச்.ஆர்.

"நான் பணிபுரிந்த அலுவலகத்திலும் உண்மையைச் சொல்லி என் திறமையைப் பார்ப்பதாக இருந்தால் மட்டும் தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறேன் என்றேன். என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். ஆண் ஹெச்.ஆராக பணிபுரிந்த நான் அன்றுமுதல், இந்தியாவின் முதல் திருநங்கை ஹெச்.ஆர் என்கிற நிலைக்கு உயர்ந்தேன்."

``நான் அடைய வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. மற்றவர்களின் சீண்டலுக்கும் கிண்டலுக்கும் காதுகொடுக்க ஆரம்பித்தால் நான் எனக்கான அடையாளத்தைத் தொலைத்துவிடுவேன். மொத்தத்தில் வாழ்க்கையை வாழவேண்டும் என்று ஆசைப்படுறேன். அழுது தீர்க்க எனக்கு நேரமும் இல்லை. அவசியமும் இல்லை'' என அமைதியான குரலில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் மதுமிதா கோமதிநாயகம். எம்.பி.ஏ, எம்.பில் உள்பட 16 சர்டிபிகேட் கோர்ஸ்களை முடித்து, சமூகம் சார்ந்த செயல்பாடுகளால் அடையாளம் காணப்படுபவர். தன் உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாறுபாடுகளால் திருநங்கையாக மாறியவர். வலி கடந்த தன் வெற்றிப் பயணத்தை நம்மிடம் பகிர்கிறார்.

``பிறப்பால் நான் ஒரு ஆண். அம்மா, அப்பா, தங்கை, நான். இதுதான் எங்க குடும்பம். என்னுடைய சிறு வயதிலிருந்தே எங்கள் தெருவில் இருக்கும் பெண் தோழிகளுடன்தான் எப்போதும் விளையாடுவேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, என் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை நான் உணரும் முன் இந்தச் சமூகம் தெரிந்துகொள்ள ஆரம்பித்தது. எனக்கு 9 வயது இருக்கும். அம்மாவுடைய சேலை, வளையல் எல்லாவற்றையும் அணிந்துகொண்டு கண்ணாடி முன் நின்று அலங்கரித்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்துவிட்டு அப்பா அடித்த அடி இப்போதும் ஞாபகம் வருகிறது. 

அந்த அடியினால் பயந்த எனக்கு இப்போது வரை சேலை மீது ஈர்ப்பே வரவில்லை. அப்பா மீது தவறில்லை. எந்த அப்பாவால் தன் மகனின் இந்த திடீர் மாற்றத்தைச் சட்டென ஏற்றுக்கொள்ள முடியும் சொல்லுங்கள். இது திருநங்கைகளுக்கான சாபம். எங்களுக்கான வேதனை, வலி... நாங்கள்தான் அனுபவிக்க வேண்டும்'' என அமைதியாகித் தொடர்கிறார்.

``நான் எனக்குள் நடந்த மாற்றத்தை உணர ஆரம்பித்தபோது எனக்கு வயது 13. ஆனால், வீட்டில் அதை வெளிப்படையாகச் சொல்ல பயம். என் பெற்றோர் என்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டால், அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம். தீவிர முடிவுக்குப் பிறகு எனக்கான வலி, வேதனை, உண்மைகளை எனக்குள்ளே புதைக்க ஆரம்பித்தேன். என் நடை உடை பாவனையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட அப்பா, என்னை மருத்துவரிடம் அழைத்துப் போனார். எக்காரணம் கொண்டும் மருத்துவரிடம் உண்மையை வெளிக்காட்டக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். என்னைப் பரிசோதித்த மருத்துவரும் ஒன்றும் இல்லை என்று அனுப்பினார்'' என்று சிரிக்கிறார் மதுமிதா.

``உடன் படித்தவர்களால் மன அழுத்தத்துக்கு ஆளானேன். என் வகுப்பு ஆசிரியர்கள் முதற்கொண்டு என்னைக் கிண்டல் செய்வார்கள். தண்ணீர் குடித்தால்தானே பாத்ரூம் வரும். மாணவர்கள் கிண்டல் செய்வார்கள் என்பதால் பள்ளி படித்த காலத்தில் தண்ணீரே குடிக்க மாட்டேன். சேர்த்து வைத்து வீட்டுக்கு வந்து அருந்துவேன். இந்த அழுத்தமெல்லாம் போதாது என்று என் பெற்றோர்களுக்கு இந்தச் சமூகம் தந்த மன வேதனை அளவில்லாதது. `இவனெல்லாம் எங்க உருப்பட போறான்' என்று அவர்கள் தினமும் அழ காரணமாக இருப்பார்கள் சுற்றியிருப்பவர்கள். எனக்கும் அப்பா அம்மாவை வருத்தப்பட வைக்க வேண்டும் என்று ஆசையா என்ன... எதிலும் மனம் ஒன்றாமல் பல முறை தற்கொலை எண்ணத்துக்குப் போயிருக்கிறேன்.

ஒருநாள் நான் அழுவதைப் பார்த்த ஒரு திருநங்கை அம்மா என்னிடம் வந்து பேசிய வார்த்தைகள் மட்டுமே நான் இன்று உங்கள் முன்னால் நிற்பதற்குக் காரணம். `எங்க வீட்டில் உண்மையைச் சொல்லிதான் நான் தெருவில் நிற்கிறேன். நீ வாழ வேண்டிய வயசில் இருக்க. இப்ப உண்மையைச் சொன்னா இந்தச் சமுதாயம் உன்னைக் கேலி, கிண்டல்களாலே அழிச்சுரும். போ போய் படி. எந்தப் படிப்புக்காக உங்க அம்மா அழுதாங்களோ, அதே படிப்பால் அவங்களை சந்தோஷப்படுத்து'ன்னு சொன்னாங்க. சாதிக்கவேண்டும் என்ற வெறி மனசு முழுக்க பரவ, சோர்ந்து போன கால்களுடனும் வலி நிறைந்த மனதுடனும் என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு ஓடி வந்தேன். தட்டில் சாப்பாட்டோடு என்னைக் காணவில்லை என்று அழுதுகொண்டிருந்தார் என் அம்மா. அவர் கண்களில் என் எதிர்காலம் பற்றிய பயத்தை உணர்ந்தேன்.

எதைப்பற்றியும் யோசிக்காமல் இனி ஒழுங்காகப் படிப்பேன் என்று அம்மாவுக்குச் சத்தியம் செய்தேன். வேறு பள்ளி மாறினாலும் சமூகத்தின் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் அம்மாவுக்காகச் சகித்துக்கொண்டேன். என் வேதனைகளை என் வீட்டார் அறியாதபடி மறைத்து வாழத் தொடங்கினேன். கல்லூரி படிப்பு முடித்ததும் ஒரு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டாளராக பணிக்குச் சேர்ந்தேன். உடல் மன அளவில் பெண்ணாக உணர்ந்த பிறகு, ஓர் ஆணாக வாழ்கிற நரக வேதனையை அனுபவித்தேன். 

அறுவை சிகிச்சைதான் என் வலிகளுக்கு ஒரே தீர்வு என்பதை உணர்ந்தேன். சிகிச்சை முடிந்ததும் என் தங்கையிடம் விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவள் திருமண வாழ்க்கை என்னைப் பயமுறுத்தியது. ஓர் அண்ணனாக அவளுடைய கல்யாண பொறுப்புகளைச் சிரத்தையோடு செய்து முடித்தேன். மார்பக வளர்ச்சி வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஓவர் கோட்டுடன்தான் வெளியில் செல்வேன். பாத்ரூம் செல்வதெல்லாம் நரக வேதனை.

திருமணம் முடிந்து எங்கள் வீட்டுக்குத் தங்கை வந்தபோது அழுதுகொண்டே என் நிலையை விளக்கினேன். பெரிய அதிர்ச்சியை அனுபவித்தவள் என்னை ஏற்றுக்கொண்டாள். என் பெற்றோர்களிடமும் உண்மையைச் சொன்னேன். ஆரம்பத்தில் அப்பா ஏற்றுக்கொள்ளவே இல்லை. `நீ தனியா இரு, எங்களுக்கு உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சுனா... நாங்களே உன்னை வந்து பார்க்கிறோம்' என்றார்கள். அம்மா என்னை ஏற்றுக்கொள்வதில் மிக உறுதியாக இருந்தார். அவரே என் அப்பாவையும் சம்மதிக்க வைத்தார். அவர் இல்லையென்றால் என்னால் இன்று என் வீட்டில் இருக்க முடியாது. நான் பணிபுரிந்த அலுவலகத்திலும் உண்மையைச் சொல்லி என் திறமையைப் பார்ப்பதாக இருந்தால் மட்டும் தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறேன் என்றேன். என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். ஆண் ஹெச்.ஆராக பணிபுரிந்த நான் அன்றுமுதல், இந்தியாவின் முதல் திருநங்கை ஹெச்.ஆர் என்கிற நிலைக்கு உயர்ந்தேன்.

இப்போது மரம் வளர்த்தல், காடுகள் பாதுகாத்தல், குழந்தைகள் நலன், விலங்குகள் பாதுகாத்தல் என என்னுடைய சமூகப் பணி தொடர்கிறது. பல பள்ளிகளில் சென்று பாலினம், சட்டம், குட் டச், பேட் டச், சிறுசேமிப்பு சார்ந்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறேன். திருமண வாய்ப்புகள் இப்போது வருகின்றன. ஆனால், என் நோக்கம் சமூக சேவையில் மட்டும்தான் நிலைகொண்டிருக்கிறது. அதை நோக்கியே என் பயணம் இருக்கும்'' என்றார் தெளிவாக.

பின் செல்ல