Published:Updated:

``ஹெச்.ஐ.வி எனக்கு எப்படி வந்ததுனு இப்ப வரைக்கும் தெரியலை'' - போராடும் திருநங்கையின் ஒரு தன்னம்பிக்கை கதை

``ஹெச்.ஐ.வி எனக்கு எப்படி வந்ததுனு இப்ப வரைக்கும் தெரியலை'' - போராடும் திருநங்கையின் ஒரு தன்னம்பிக்கை கதை
``ஹெச்.ஐ.வி எனக்கு எப்படி வந்ததுனு இப்ப வரைக்கும் தெரியலை'' - போராடும் திருநங்கையின் ஒரு தன்னம்பிக்கை கதை

2014ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்கிற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பளித்தது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இன்று திருநங்கையர் தினம். திருநங்கை என்கிற ஒரே காரணத்தினால் இந்தச் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டதுடன் இல்லாமல் ஹெச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டு தன்னுடைய வாழ்க்கையைப் போராட்டத்துடன் வாழ கற்றுக் கொண்டிருக்கிறார், திருநங்கை யமுனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருடைய வலி மிகுந்த பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்தார்.

``நான் கிராமத்தைச் சேர்ந்தவள். என்னுடைய குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்பட்டேன். ஸ்கூல் படிக்கும் போதிலிருந்து ஆம்பளை பசங்க கூட சேர்ந்து இருக்கிறது எனக்குப் பிடிக்காது. பொண்ணுங்க கூடவே இருப்பேன். நான் சூப்பரா படிப்பேங்குறதுனால, என்னோட பெண்மைத் தன்மையை எங்க வீட்டுல உள்ளவங்க பெருசா எடுத்துக்கலை. அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் நல்லா படிச்சு, பெரிய ஆளா வரணும் அவ்வளவுதான்! பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்குள்ளே இருந்த பெண்மையை முழுமையா உணர ஆரம்பிச்சேன். என் வீட்டுல உள்ளவங்க என்னைப் பையனா பார்த்தாங்க.. நான் பொண்ணா நடந்துக்க ஆரம்பிச்சேன். வீட்ல பிரச்னை ஆரம்பிச்சது.

ஸ்கூல் முடிச்சிட்டு பார்மஸி படிக்க காலேஜ் சேர்ந்தேன். வீட்ல, ஸ்கூலைவிட நான் அதிக அவமானத்தை சந்திச்சது காலேஜ்லதான். அந்த வலியைப் போக்க, என்னை மாதிரி திருநங்கையாக இருக்கிறவங்ககிட்ட பேச ஆரம்பிச்சேன். அவங்க தந்த அட்வைஸாலதான் என்னைச் சூழ்ந்த கேலி, கிண்டல்களை புறக்கணிச்சுட்டு படிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

எங்க வீட்டுல உள்ளவங்க என்னை வீட்டை விட்டு போன்னு சொல்லலை. நானாதான் வீட்டை விட்டு வெளியேறினேன். எனக்கு என்னை அங்கீகரிக்கிறவங்களோட வாழணும்னு ஆசை. எனக்கே எனக்கான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டேன். எங்க சமூகத்துல உள்ளவங்க கடை கடையா ஏறி பிச்சை எடுப்பாங்க. நானும் அதைச் செய்யப் போனேன். அப்பதான் தோணுச்சு... நாமதான் படிச்சிருக்கோமே... அப்புறம் ஏன் கடை ஏறி இறங்கணும்னு. படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையைத் தேடினேன். எனக்கு யாரும் வேலை கொடுக்கத் தயாரா இல்லை. எனக்கு சின்ன வயசுல இருந்தே கலைகள் மீது ஆர்வம் அதிகம். வயித்துப் பொழைப்புகாக கரகாட்டம் ஆடப் போனேன். நான் ஆடுற கரகத்தைப் பார்க்க எங்க ஊர் மக்கள் எல்லாம் கூடிடுவாங்க. ரொம்ப ரசிச்சாங்க. சூப்பர் ஃபேமஸ் ஆகிட்டேன். எங்க ஊர் ஆரம்பிச்சு பக்கத்து ஊர் வரைக்கும் திருவிழானா என் கரகம் பார்க்க ஆசைப்பட்டாங்க.

கரகம் ஆடி கிடைச்ச பணத்தை வைச்சு ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு போனேன். அங்கே ரத்தப்பரிசோதனை செய்து பார்த்துட்டு எனக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருக்குன்னு சொன்னாங்க. அந்த நொடி என் வாழ்க்கையே இருண்ட மாதிரி ஆகிடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியலை'' என்றவர் சில நொடி மௌனத்திற்குப் பின் தொடர்ந்தார்.

``என் மனசுக்குத் தெரியும் நான் எந்தத் தப்பும் பண்ணலைனு. ஆனா, எனக்கு எப்படி ஹெச்.ஐ.வி வந்துச்சு... எப்போதிலிருந்து இந்த நோய் இருக்குன்னு எதுவுமே தெரியலை. வெளியில் சொன்னா என்னை எப்படி நடத்துவாங்களோன்னு பயம் வேற. என்ன பண்றதுன்னு தெரியாம இருட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். நான் கரகம் ஆடிட்டு இருந்த சமயம் அரசுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுருந்தேன். போலீஸ் வேலைக்கு செலக்ட்டும் ஆகியிருந்தேன். மருத்துவ பரிசோதனை தேர்வுல எனக்கு ஹெச்.ஐ.வி இருக்கிறது தெரிஞ்சா எனக்கு அந்த வேலை கிடைக்காதுனு தெரியும். அங்க போய் அவமானப்பட நான் விரும்பலை. அதனால உடற்தகுதி தேர்வுக்கு நான் போகவே இல்லை. என் கண்ணு முன்னாடி வாழ்க்கைக் கட்டடம் சரியுறதைப் பார்த்தேன். இனி உயிரோட இருக்கிறதுல பலனே இல்லை. பேசாம செத்துப்போயிடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.

அந்தச் சமயம்தான் கிரேஸ் பானு அம்மாவுடைய அறிமுகம் கிடைச்சது. நீ இங்கே வா.. நான் உன்னைப் பார்த்துக்கிறேன்னு அம்மா சொன்னாங்க. நானும் கிளம்பி வந்துட்டேன். இப்போ அவங்கதான் எனக்கு ஆதரவு கொடுக்குறாங்க. என் சமூக மக்கள்கிட்ட எனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருக்குன்னு சொன்னா என்னை ஒதுக்கிடுவாங்களோன்னு பயந்தேன். ஆனா, இந்த விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் அவங்க எல்லோரும் என்னை ரொம்ப அன்பா பார்த்துக்கிறாங்க. அரசுப் பணியாளராகணுங்குறது என் ஆசை. இப்போ அதுக்காகக் கடினமா உழைச்சிட்டு இருக்கேன் அக்கா எனப் புன்னகைக்கிறார் இந்தத் தன்னம்பிக்கை மனுஷி!