Published:Updated:

"பிளவுஸ் மட்டுமே தைத்துக் கொண்டிருக்காதீர்கள் !"

"பிளவுஸ் மட்டுமே தைத்துக் கொண்டிருக்காதீர்கள் !"

பிரீமியம் ஸ்டோரி

கொஸ்டீன் ஹவர் 

'நான் கல்லூரி மாணவி, என் தங்கை பள்ளி இறுதிஆண்டு படிக்கிறார். இருவருக்கு மான வாழ்வாதாரம், எங்கள் விதவைத் தாயின் தையல் இயந்திரம்தான். 'படிப்பை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்' என்று ஓரளவு தையல் தொழிலையும் அம்மாவே கற்றுத் தந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே பழகியதால், தையல் தொழிலை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்த நிலைகளை எட்ட வேண்டும் என்பது எங்கள் ஆசை. எங்களின் சாமான்ய பொருளாதாரத்தைக் கொண்டு தையல் தொடர்பாக எந்த மாதிரியான பயிற்சி மற்றும் படிப்புகளைப் பெற்று வாழ்வில் வெற்றிஅடைய வழியிருக்கிறது?' என்ற ஈரோடு சுதமதி        யின் கேள்விக்கு, விளக்    கம் தருகிறார் திருச்சி, 'சௌம்யாஸ் ஃபேஷன் இன்ஸ்டிடியூட்ஸ்’ இயக்குநர் லக்ஷ்மி ரமேஷ்பிரபு.

"பிளவுஸ் மட்டுமே தைத்துக் கொண்டிருக்காதீர்கள் !"
##~##

''எப்போதும் எவர்கிரீனாக, நொடித்த குடும்பங்கள் முதல் மாபெரும் பொடீக் சென்டர்கள் வரை கைகொடுப்பது தையலை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள்தான். ஆனால், எவ்வளவுதான் சுயமாக ஒருவர் தையற் கலையில் வித்தகராக இருந்தாலும், நடைமுறை சார்ந்த தொழில்நுட்பங்கள், டிசைன்கள், ஃபேஷன்கள் போன்றவற்றை காலத்துக்கு ஏற்ப அப்டேட் செய்து கொள்வதைப் பொறுத்தே அவரால் போட்டிக்கிடையே நிற்க முடியும். உதாரணத்துக்கு வெறுமனே பிளவுஸ் தைப்பதைவிட... ஆரி, எம்ப்ராய்டரி, மிரர், சமிக்கி, ஜர்தோஸி, பீட்ஸ், லேஸ் என வேலைப்பாடுகள் செய்து கொடுக்கும்போது, வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறுகிறது. நெக் டிசைனில் வித்தியாசம் காட்டியே வாடிக்கையாளர்களைக் கவர முடியும்.

உங்கள் ஏரியாவில் இருக்கும் தரமான, சிறந்த தையல் பயிற்சி மையத்தில் சேர்ந்து, பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ குறிப்பிட்ட காலத்துக்கு பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். பயிற்சி மையத்தில் வழங்கப்படும் கோர்ஸ் மெட்டீரியல், அங்குள்ள இயந்திரங்களின் நவீனம், பயிற்சிக் காலம், கட்டண விவரம், வசதியான வகுப்பு நேரம், சர்டிஃபிகேட், பயிற்சி முடித்ததும் பணி வாய்ப்புகள் என பலவற்றையும் விசாரித்து சேர்வது முக்கியம்.

பயிற்சி எடுத்துக்கொண்ட நிறுவனத்திலேயே, சம்பளத்தை பெரிதாக எதிர்பார்க்காமல் சிறிது காலம் பணிபுரிவது நல்லது. கஸ்டமரை எதிர்கொள்வது, திட்டமிடுவது, சக பணியாளரிடம் வேலை வாங்குவது என்பதில் ஆரம்பித்து, மார்க்கெட்டிங் வரை அனைத்து நுட்பங்களையும் கற்றுக்கொள்ள இது உதவும். அதன்பிறகு கடைபோடுவது உள்பட அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லலாம். மகளிர் சுய உதவிக்குழுவின் ஆதரவு முதல் வங்கிக் கடன் வரை உங்களுக்கு உதவிகள் காத்திருக்கின்றன.

"பிளவுஸ் மட்டுமே தைத்துக் கொண்டிருக்காதீர்கள் !"

அடுத்ததாக, தையலின் அடுத்த கட்ட பரிணாமமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் டிசைனிங் படிப்புகளை முறையான கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முடிப்பதன் மூலம் சிகரம் தொடலாம். கல்விக் கடனுக்கான உதவிகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தற்போது பள்ளிப் படிப்பை முடிக்கவிருக்கும் உங்கள் சகோதரி 'பேஷன் டெக்’-ல் பட்டம் அல்லது பட்டயம் பெற முடியும்.

இந்தியாவில் ஃபேஷன் டெக் படிப்பில் பிரபலமானது, நேஷனல் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி நிறுவனங்கள்தான்(NIFT- National Institute of Fashion Technology). என்.ஐ.எஃப்.டி. போலவே புனே நகரில் உள்ள 'ஸ்கூல் ஆப் ஃபேஷன் டெக்னலஜி’, நொய்டா நகரில் உள்ள 'டிசைன் அண்டு இன்னொவேஷன் அகாடமி’ போன்றவையும் தரமானவை. இவற்றில் படித்தால் சர்வதேச ஃபேஷன் டாப் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கும். என்.ஐ.எஃப்.டி. நிறுவனங்கள் குடும்பத்தின் வருட வருமான வரம்பு குறைவாக இருப்பவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 75% வரை ஸ்காலர்ஷிப் வழங்குகிறது. அதாவது, உங்களது குடும்ப வருட வருமானத்தைப் பொறுத்து பத்தாயிரம் ரூபாய் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரையிலுமே கல்விக் கட்டணம் இருக்கும். டெல்லி, அகமதாபாத், மும்பை, ஹைதரபாத், கொல்கத்தா, பெங்களூரூ,  காந்திநகர், மொஹாலி, சென்னை என பெருநகரங்கள் அனைத்திலும் என்.ஐ.எஃப்.டி. நிறுவனங்கள் செயல்படுகின்றன.

பல்வேறு பலகலைக்கழகங்களில் ரெகுலர் மற்றும் தொலைதூரக் கல்வி மூலமாக ஃபேஷன் டிசைன் படிக்கலாம். இந்தப் பட்டங்களை பெற்றவர்களுக்கு, டெக்ஸ்டைல் மில்கள், சினிமா, மாடலிங், டி.வி., ஃபேஷன் ஷோக்கள் என பல்வேறு தளங்களிலும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஃபேஷன் டிசைனிங் படிப்பை முடித்தவர்கள் என்றில்லை, உங்களைப் போல எந்தவொரு பட்டபடிப்பு முடித்தவர்களும் தையல் துறையில் ஆர்வம் இருப்பவர்களாக இருந்தால் தையல் மற்றும் ஃபேஷன் துறையில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை புகுத்திடும் 'கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங்'கிலும் (CAD-Computer Aided Designing) பயிற்சி பெற்று தங்கள் திறமையை காலத்துக்கு ஏற்ப மெருகேற்றிக் கொள்ளலாம்.

கல்யாண ஆர்டர், பள்ளி கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு யூனிஃபார்ம் ஆர்டர் எடுப்பதன் மூலமும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தொழிலை விரிவு செய்யலாம்.

வாழ்த்துக்கள்!''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு