Published:Updated:

விஷ் யூ ஹேப்பி நியூ இயர்...

வழுக்கு மரமேறிய வாலைக் குமரிகள் !

பிரீமியம் ஸ்டோரி
விஷ் யூ ஹேப்பி நியூ இயர்...

''எல்லாரும் நியூ இயரை கேக் வெட்டி கொண்டாடுவாங்க, புது டிரெஸ் போட்டு கொண்டாடுவாங்க. ஆனா, வழுக்கு மரம் ஏறி கொண்டாடினவங்களப் பார்த்திருக்கீங்களா? பார்த்ததில்லைனா... எங்க காலேஜுக்கு வாங்க!''னு இன்ட்ரஸ்ட்டிங்கா ஒரு இன்விடேஷன் வெச்சாங்க சேலம், ஏ.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரி கேர்ள்ஸ்!

'வாவ்... வித்தியாசமா இருக்கே!’னு கேமராவோட ஹால்ட்டானோம் காலேஜுல. கொண்டாட்டத்துக்கான காரணம் சொன்னார் காலேஜோட நிறுவனத் தலைவர் கைலாசம். ''இப்பவெல்லாம் நம்மளோட பாரம்பரியப் பண்டிகைகளைக்கூட ஹோட்டலுக்குப் போய், ஷாப்பிங் பண்ணி, கேக் வெட்டி, கார்டு கொடுத்துனு வெஸ்டர்ன் ஸ்டைல்ல கொண்டாட ஆரம்பிச்சுட்டோம். இதனாலயே மாக்கோலம் போட்டு, பலகாரம் பண்ணி, பெரியவங்க கால்ல ஆசீர்வாதம் வாங்கினு திருநாட்களை கொண்டாடற நம்ம வழக்கமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுட்டு வருது. அதனாலதான், வெஸ்டர்ன் பண்டிகையான இந்த ஆங்கிலப் புத்தாண்டை, தமிழ் மரபுல கொண்டாட முடிவெடுத்தோம்.

இந்த தலைமுறைக்கு வாய்மொழியா மட்டுமே தெரிஞ்சிருக்கிற

##~##

'வழுக்கு மர’ விளையாட்டை நடத்தலாம்னு ஆலோசனை பண்ணினப்போவே... மாணவ, மாணவிகள்கிட்ட அத்தனை உற்சாகம். இதோ... வழுக்கு மரம் ரெடி. இனி விளையாட்டைப் பாருங்க...''னு வழி விட்டார் சார்.

அம்பது கிலோ கேக்கை வெட்டி அதகளம் பண்ணி சாப்பிட்டுட்டு தெம்போட வந்த ஸ்டூடன்ட்ஸ் பட்டாளம்... 22 அடி உயர வழுக்கு மரத்தை சுத்தி நிக்க, ஆரம்பமாச்சு விளையாட்டு. முதல்ல பாய்ஸோட டர்ன். ஆளாளுக்கு போட்டி போட்டு ஏற, அதே வேகத்துல இறங்கனு தத்தளிக்க, போதாக்குறைக்கு தண்ணியை வேற அவங்க மேல ஊத்தினாங்க அவங்களோட 'நண்பேன்டா’ ஃப்ரெண்ட்ஸ். 'ஐடியா!’னு ஒரு 'அபிஷேக் பச்சன்’ வந்து யோசனை சொல்ல, கீழ அஞ்சு பேர், அவங்களுக்கு மேல நாலு பேர், மேல மூணு பேர், மேல ரெண்டு பேர், கடைசியா ஒருத்தர்னு ஏறி ஒருவழியா வழுக்கு மரம் மேல இருந்த மாலையை எடுக்க, வின் வின் வின் பண்ணிட்டாங்கப்பா!

அடுத்தது, கேர்ள்ஸ் டர்ன். 'பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்’னு புறப்பட்டுச்சு ஒரு படை. ''உங்களுக்கு ஒரு சலுகை. உங்க மேல தண்ணி ஊத்த மாட்டாங்க''னு லெக்சரர்ஸ் அறிவிப்புக் கொடுக்க... கோமதி, புனிதா, அகிலா, சண்முகப்ரியா, காயத்ரி, நந்தினி, வைஷ்ணவி, மீனா அண்ட் கோ களத்துல புகுந்துச்சு!

விஷ் யூ ஹேப்பி நியூ இயர்...

'ஏய்ய்ய்ய்ய்...’னு சுத்தி நின்ன பொண்ணுங்க கத்தி 'பெப்’ ஏத்த, வழுக்கு மரத்தை சுத்தி சடசடனு பிரமிட் மாதிரி நின்னாங்க பொண்ணுங்க. மறுபடியும் உடல்களை ஏணியாக்கி ஒருத்தர் மேல ஒருத்தர்னு ஏற, கிளாப்ஸ் காதைப் பிளந்துச்சு. ஆனா, நடுவுல நின்ன ஒரு பொண்ணு எடை தாங்க முடியாம வளைய, ஓடிப் போன மேம்ஸ் அந்தப் பொண்ணை தாங்கிப் பிடிச்சுக்க, அதுதான் அந்த நாளோட சென்ட்டிமென்ட் செகண்ட்ஸ்!

விஷ் யூ ஹேப்பி நியூ இயர்...

ஒருவழியா வைஷ்ணவி தரதரனு மேல ஏறி மாலையை எடுக்க, கூட்டம் 'ஓ!’னு குலவை போட, கீழ இறங்கின வைஷ்ணவி முகத்துல அத்தனை உற்சாகம்! ''பெண்களால முடியாதது எதுவும் இல்ல. இப்ப பார்த்தீங்கனா...''னு திடீர்னு 'மைக்’ இல்லாமலே முழங்க ஆரம்பிச்ச வைஷ்ணவியை, ''ஏய்... ஓவர் ஸீன் உடம்புக்கு ஆகாது!''னு கேர்ள்ஸ் கலாய்க்க, மாலையாலேயே அவங்கள அடிக்கத் துரத்தினாங்க வைஷ்ணவி!

''இதுவரைக்கும் எத்தனையோ நியூ இயர் கொண்டாடி இருக்கோம். ஆனா, இந்த மாதிரி நாங்க சந்தோஷமா இருந்ததே இல்ல. அவ்ளோ த்ரில், ஜாலி, சிரிப்பு! இந்த கொண்டாட்டத்தை எப்பவும் மறக்க மாட்டோம்!''னு சொன்ன கேர்ள்ஸ் முகத்துல அத்தனை மகிழ்ச்சி!  

- ப.பிரகாஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு