Published:Updated:

வெள்ளிப் பெண் மாலா !

- சி.ஆனந்தகுமார், படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

வெள்ளிப் பெண் மாலா !

- சி.ஆனந்தகுமார், படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்

Published:Updated:
##~##

''என் உடல் வலிமை, நான் வளர்த்துக்கிட்டது. என் மன வலிமை, என் குடும்பம் வளர்த்தது!''

- அப்பா, அம்மா, தங்கை உடன் இருக்க, உற்சாகமாக ஆரம்பிக்கிறார் மாலா. கடந்த டிசம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய வலு தூக்கும் போட்டியில் (பவர் லிஃப்டிங்) வெள்ளிப் பதக்கம் பெற்று வந்துள்ள விளையாட்டு வீராங்கனை; கோயம்புத்தூர், டாக்டர் என்.ஜி.பி கல்வியியல் கல்லூரி மாணவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரூரில் இருக்கும் தன் வீட்டில், சந்தோஷத்தையும் நிரந்தர உறுப்பினராக ஆக்கியிருக்கும் மாலா, ''அப்பா போலீஸ் எஸ்.ஐ. அம்மா ஹோம்மேக்கர். தங்கை ஜெயா, இன்ஜினீயரிங் படிக்கிறா'' என்று அறிமுகப்படலம் முடித்து, தன் விளையாட்டு ஆர்வம் பற்றித் தொடர்ந்தார்...

''கரூர், புனித தெரசா ஸ்கூல்ல படிச்சப்போ, 'கோச்' வெங்கடேசன் சார், பேஸ்கட் பால் டீம்ல என்னை சேர்த்துக் கிட்டார். அப்ப நான் படிச்சுட்டிருந்தது... ஐந்தாவது.   அதுல ஸ்டேட் லெவல் பிளேயர் ஆகுற அளவுக்கு   முன்னேறினேன். அத்லெட்டான என் அப்பா, 'டீம் விளை யாட்டு நல்லதுதான். ஆனா... ஏதாவது இண்டிவிஜுவல் கேம்லயும் ஆர்வம் காட்டு’னு சொல்லிட்டே இருப்பார்.

வெள்ளிப் பெண் மாலா !

கோயம்புத்தூர், நிர்மலா பெண்கள் கல்லூரியில் யூ.ஜி. படிச்சப்போ பவர் லிஃப்டிங் அறிமுகமாச்சு. அப்பா சொல்லிட்டிருந்தபடியே அதுல ஆர்வமாகி சேர்ந்தேன். ஒவ்வொரு முறை வலு தூக்கும்போதும், ஏதோ பெருசா சாதிச்சுட்ட மாதிரி சந்தோஷமா இருக்கும். வீட்டுலயும் அவ்வளவு பாராட்டுக்கள். அந்த உந்துதல்ல தொடர்ந்து வலு தூக்கும் டோர்னமென்ட்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். 2008-ம் வருஷம் நாகர்கோவில்ல நடந்த ஸ்டேட் லெவல் டோர்னமென்ட்ல வெண்கல பதக்கம் ஜெயிச்சதுதான், என் மேல எனக்கே நிறைய நம்பிக்கை தந்தது. அடுத்தடுத்து தென்னிந்தியா, தேசிய அளவிலான போட்டிகள்னு முன்னேறினேன்.

இந்திய பவர் லிஃப்ட்டிங்  ஃபெடரேஷன், என்னை ஏஷியன் கேம்ஸுக்குத் தேர்வு

செஞ்சாங்க. போன வருஷம் ஏப்ரல் மாசம் ஜப்பான்ல ஏற்பட்ட சுனாமியால எதிர்பாராதவிதமா அந்தப் போட்டிகள் ரத்தாயிடுச்சு. உயிரைக் கொடுத்து செஞ்ச பயிற்சிகளுக்கு பலன் காண களம் இல்லாம போனதுல நான் விரக்தியாக, என் குடும்பம்தான் தொடர்ந்து நம்பிக்கை குளூக்கோஸ் கொடுத்துட்டே இருந்துச்சு. கூடவே, ஐ.ஜி. சைலேந்திரபாபு சார், கோவை, ஏஞ்சல் டெக்ஸ்ட் சிட்டி, கோவை பீல் பவுண்டேஷன், வ.உ.சி. ஜிம், என் பயிற்சியாளர் நாகராஜன்... இவங்க எல்லாரும் நல்ல நம்பிக்கையைக் கொடுத்துட்டே இருந்தாங்க.

புதுத்தெம்போட அடுத்த போட்டிக்குத் தயாராகிட்டு இருந்தப்ப, மறுபடியும் ஏஷியன் கேம்ஸுக்கான அழைப்பு. ஜப்பான்ல இருக்கற கோஃபே சிட்டியில 17 நாடுகள் கலந்துகிட்ட வலு தூக்கும் போட்டியில, 63 கிலோ எடை ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் ஜெயிச்சேன். தங்கத்தை இழந்தாலும்கூட அதுக்கு ஈடான தன்னம்பிக்கை இந்தப் போட்டியில எனக்குக் கிடைச்சுருக்கு!''

- ஆரோக்கியமான புன்னகையுடன் பேசும் மாலாவின் அடுத்த இலக்கு... காமன் வெல்த் போட்டிகள்.  

''என்னைப் போல் மிடிஸ் கிளாஸ் குடும்பங்கள்ல மின்னுற விளையாட்டு நட்சத்திரங்களை கண்டறிந்து அரசு கை தூக்கி விடணும். என் தங்கை ஜெயா... வலு தூக்குறது, பளு தூக்குறது (வெயிட் லிஃப்டிங்) ரெண்டுலயும் கலக்குறா. நான் வாங்கின பதக்கங்களால நிறைஞ்சுருக்குற எங்க வீட்டு அலமாரியில இப்போ 'எனக்கும் இடம் வேணும்’னு அவளோட பதக்கங்களும் பங்குக்கு வந்துட்டு இருக்கு. விளையாட்டு தவிர, இசையிலயும் எங்களுக்கு ஆர்வம். ரெண்டு பேரும் மெல்லிசைக் கச்சேரிகள்ல பாடுற பாடகிகள்!'' என்றபடியே தங்கையை அணைத்துக்கொள்ள, இருவரும் மெள்ள இசைத்தனர்.

வலு தூக்கும் பெண்களின் வாய்ஸ்... மெல்லினம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism