ஸ்பெஷல் 1
Published:Updated:

அவள் 16

சிக்கன 'செல்' லம்மாக்கள் !மோ.கிஷோர்குமார்படங்கள்: பா.காளிமுத்து

மிஸ்டு கால்...
ஆறு சப்ஜெக்ட்டுக்கும் ஒரே நோட்...
மண்ணெண்ணெய் டூ வீலர்...
க்ரீம் டியூப் ஆபரேஷன்...

##~##

''சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் மில்லி மீட்டர்தான் வித்தியாசம். நமக்கு மட்டுமே பயன்படுறது சிக்கனம். நமக்குக்கூட பயன்படாதது கஞ்சத்தனம். நாங்க எல்லாம் கஞ்சூஸ் நங்கைஸ்!''னு டெரர் அறிமுகத்தோட வந்தாங்க மதுரையைச் சேர்ந்த சில காலேஜ் கேர்ள்ஸ்.

''அப்படி எதுல எல்லாம் கஞ்சத்தனம் ஃபாலோ பண்ணுவீங்க..?''னு கேட்டா, கொட்டோ கொட்டுனு கொட்டுது கேம்பஸ் லொள்ளு!

''நான் சேமிக்கிறது என்னோட மொபைல் பேலன்ஸைத்தான்!''னு ஆரம்பிச்சு வெச்சாங்க அபி.

''ஒரு போன் பண்ணிக்கிறேன் கொடேன்னு ஃப்ரெண்ட்ஸ் மொபைலைக் கேட்டா, 'அச்சச்சோ... நில் பேலன்ஸ்டி. இன்னிக்குதான் பத்து ரூபாய்க்கு டாப் அப் பண்ணலாம்னு இருக்கேன்’னு ரூமெல்லாம் போட்டு யோசிக்காமலே பஞ்சப் பாட்டு பாடிடணும். இல்லைனா... அவங்க போடற கடலையில நம்ம பேலன்ஸ் எல்லாம் ஆவியா போயிடும்.

நானெல்லாம் எல்லாருக்கும் எப்பவும் 'மிஸ்டு கால்'தான் கொடுப்பேன். கம்பெனிக்காரங்க பத்து பைசா ஆஃபர் கொடுத்தாலும், இந்த பிரின்ஸிபிளை விடவே மாட்டேன். மெஸேஜையும் சிக்கனமாத்தான் புழங்குவேன். ஒரு நாளைக்கு 100 மெசேஜ்தான் அனுப்பணும்னு கவர்மென்ட் வேற சட்டம் போட்டுருச்சா... 'க்ரூப் மெஸேஜ்’ல குட்மார்னிங், குட்நைட் சொல்ற பழக்கத்தை எல்லாம்கூட விட்டுட்டேன்.

அவள் 16

'நீ மொபைல் வெச்சுருக்கறதே வேஸ்ட்’னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் திட்டுவாங்க. ஆனா, திட்டுற அவங்க மொபைல்ல எட்டு ரூபாதான் பேலன்ஸ் இருக்கும். திட்டு வாங்குற என் மொபைல்ல 467 ரூபாய் பேலன்ஸ் இருக்கே. நான்தானே குட்..?!''னு சிக்கனச் 'செல்’லம்மாவா அசர வெச்சாங்க அபி.

''ஒரே ஒரு 80 பக்க லாங் சைஸ் நோட் வாங்கி, அதை ஆறா பிரிச்சு, அந்த செமஸ்டர்ல இருக்கிற ஆறு சப்ஜெக்ட்ஸுக்கும் யூஸ் பண்ற ட்ரிக்குக்கு சொந்தக்காரிகள்ல அடியேனும் ஒருத்தி!''னு தன்னோட கஞ்சத்தன டிரெய்லர் ஓட்டினாங்க, நிவேதிதா.

''இதை சிலர் அல்பமா பார்க்கலாம். ஆனா, இதோட அருமை அவங்களுக்கு எல்லாம் தெரியாது. ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் வேற வேற நோட் வாங்கினா, பைசா செலவாகும்ங்கிறது இல்ல எங்களோட கவலை. ஆறு நோட்டையும் தினமும் காலேஜுக்கு எடுத்துட்டு வரணும், செமஸ்டர் வரைக்கும் அதை எல்லாம் தொலைக்காம பாதுகாக்கணும். சே... எவ்ளோ சிரமங்கள்? இதுவே ஒரே நோட்ல எல்லா சப்ஜெக்ட்ஸுக்கும் நோட்ஸ் எடுத்தோம்னா, மெயின்டனன்ஸ் ஈஸி. கூடவே, 'ஏய், நேத்து கிளாஸுக்கு வரலை... உன்னோட இங்கிலீஷ் நோட்ஸைத் தாயேன்’னு பிக்கல் பிடுங்கல் ஃப்ரெண்ட் யாராச்சும் கேட்டா, 'ஐயையோ... எல்லா சப்ஜெக்ட்டும் ஒரே நோட்லதான்பா இருக்கு’னு தப்பிச்சுடலாம். இது எல்லாத்தையும் விட, கிளாஸ்ல பாடம் நடத்த நடத்த, ஒரே பக்கத்தை நாலு காலமா பிரிச்சு, நெருக்கி நெருக்கி நோட்ஸ் எடுக்கற சுகம் இருக்கே... அடடா!''னு லயிச்சுக்கிட்டாங்க நிவேதிதா.

''நம்ம கவுண்டமணி அண்ணே சொன்ன மாதிரி, பேசாம மண்ணெண்ணெய், குரூட் ஆயில் இதையெல்லாம் டூ வீலருக்கு டிரை பண்ணலாமானு யோசிக்கிறேன். பெட்ரோல் பங்க்ல டேங்க் ஃபுல் பண்ணும்போதெல்லாம் எனக்கு பிளட் பிரஷர் எகிறுது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு ஒரு ஃபுல்ஸ்டாப் வைக்கணும்பா!''னு வேதனையோட ஆரம்பிச்ச லாவண்யா...

அவள் 16

''ஒரு காலத்துல லேடி பேர்டு சைக்கிள்ல ஹாயா சுத்திக்கிட்டு திரிஞ்சோம். டூ வீலர் வாங்கினதுக்கு அப்புறம்தான் பெட்ரோல் கவலையும் போனஸா கிடைச்சுது. பெட்ரோல் சேமிப்பை கஞ்சம்னு சொன்னாலும் பரவாயில்லை... அது காலத்தின் அவசியம். பக்கத்துல இருக்கிற இடங்களுக்கு 'நடராஜா’ சர்வீஸ், சிக்னல்ல சொகுசு பார்க்காம வண்டியை ஆஃப் பண்ணி போடுறதுனுதான் பொழப்பு ஓடிட்டு இருக்கு. பாலத்துல மேலே ஏறுறப்போ பெட்ரோல் ரொம்ப 'குடிக்குமாம்’ல... அதை ஈக்வல் பண்ணுறதுக்காக வண்டி பாலத்துல இறங்கும்போது 'அமத்தி’ போட்டுடுவோம்ல! நாங்க எல்லாம் இன்ஜினீயரிங் புலிங்க!''னு உறுமினாங்க!

''அப்பா, அம்மா வீடு நிறைய வாங்கி வெச்சுருக்கிற மத்த பொருட்கள்ல அசால்ட்டா இருந்தாலும், எங்க காஸ்மெட்டிக்ஸ் விஷயத்துல மட்டும் ஷார்ப்பா இருப்போம்!''

- விஜயலட்சுமி முறை ஆரம்பம்.

''க்ரீம் தீர்ந்துபோச்சுனா, அந்த டியூபுக்கு ஆபரேஷன் செஞ்சு, நாலா பிரிச்சு, உள்ள இருக்கிற க்ரீமை எல்லாம் வழிச்சு துடைச்சு எடுத்தே... எக்ஸ்ட்ரா ரெண்டு நாளைக்கு யூஸ் பண்ணுவேன். நெயில் பாலீஷ் கட்டியானாலும் விடமாட்டேன்... அதுல நெயில் பாலிஷ் ரிமூவர் சில டிராப்ஸ் விட்டா, மறுபடியும் லிக்விட் ஆயிடும். அதேபோல ஃபேஸ் டிஷ்யூ பேப்பரை ரெண்டா கட் பண்ணினா, ரெண்டு நாளைக்கு பயன்படுத்திக்கலாம் பாஸ்!''னு கிளாஸ் எடுத்தாங்க விஜயலட்சுமி.

''ஏண்டி இப்படி சில்லறை கேஸா இருக்கே?னு என்னை ஓட்டாத ஃப்ரெண்ட்ஸே இல்லை!''னு சிரிக்கிற வித்யா சேமிக்கிறது, சில்லறைகளை.

''திருவோடே தோத்துப் போயிடும்... அந்தளவுக்கு என்னோட ஹேண்ட் பேக்ல சில்லறை குலுங்கும். ஹலோ... என்ன இளக்காரமா சிரிக்கிறீங்க..? ஏதாச்சும் அவசரம்னா நீங்க ஆயிரமாயிரமா பணம் வெச்சுருந்தாலும் சில்லறைக் காசு போல உதவாது. பஸ் கண்டக்டர்ல இருந்து... கோயில் அர்ச்சனை சீட்டு கவுன்ட்டர் வரை சில்லறைதான் கேட்பாங்க. எமர்ஜென்சிக்கு எல்லாருக்கும் சில்லறை கொடுக்கறதாலயே எங்க கேங்ல நான் ஹீரோயின் ஆயிட்டேன். கண்ணா இதையும் கேட்டுக்கோ... சில்லறைக் காசு மாதிரி, நோட்டால பாட்டுப் பாட முடியாது!''னு பஞ்ச் வேற சொல்லி முடிச்ச வித்யாவோட பேக்-ஐ செக் பண்ணினா, 50 பைசா காயின் 11, ஒரு ரூபாய் காயின் 23, 2 ரூபாய் காயின் 9, 5 ரூபாய் காயின் 7.

கீப் இட் அப் கேர்ள்ஸ்!