ஸ்பெஷல் 1
Published:Updated:

படிப்புக்கு உதவுது பார்ட் டைம் வேலை !

மோ.கிஷோர்குமார் படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து

##~##

''எத்தனை நாளைக்குத்தான் சேமிச்சு வைக்கிறதுக்கு எறும்பையும், செல்ஃப் ஹெல்ப்புக்கு குருவியையும் உதாரணமா சொல்லிட்டு இருப்பீங்க..? இனி எங்களையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க!''

 - இப்படி தன்னம்பிக்கை ஸ்டேட்மென்ட் விடுறாங்க கல்லூரி மாணவிகள் சிலர். படிக்கும்போதே பார்ட் டைம் ஜாப் பார்த்து, படிப்புச் செலவுகளை சமாளிக்கறதோட, சேமிச்சும் வைக்கிற அந்தச் சமர்த்துகள் சிலர் பேசுறாங்க இங்கே...  

திரௌபதி, எம்.ஏ, தமிழ், மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி: ''என்னோட கல்லூரிப் படிப்புக்கு உதவுறது, பல குழந்தைகளோட பள்ளிப் படிப்புதான். அதாவது... ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் எடுத்துச் சம்பாதிக்கிற காசுலதான் என்னோட காலேஜ் ஃபீஸைக் கட்டுறேன். எங்க வீட்டுல படிக்க வைக்க வசதி இல்லாததால, என் ரெண்டு அண்ணன்களோட படிப்பும் பாதியிலேயே நின்னுடுச்சு. என்னை பத்தாவது வரைக்கும் படிக்க வெச்சது பாட்டிதான். அவங்க இறந்துட்டதால, அதுக்குப் பிறகு என் படிப்பு கேள்விக்குறியாக, மெடிக்கல் ஷாப்ல பார்ட் டைம் வேலை பார்த்து ப்ளஸ் டூ முடிச்சேன். எலெக்ட்ரிக்கல் கடையில கம்ப்யூட்டர் ஆபரேட்டரா வேலை பார்த்துட்டே கல்லூரியில சேர்ந்தேன். இப்போ 'ஹோம் சர்வீஸ்’ மாதிரி சில வீடுகளுக்கே போய் ஸ்கூல் பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுக்குறேன்.

படிப்புக்கு உதவுது பார்ட் டைம் வேலை !

இப்படி சம்பாதிக்கிற காசை எல்லாம் காலேஜ் ஃபீஸ் கட்டினதுபோக, சீட்டு போட்டு சேமிச்சு வெக்கிறேன். இப்போ பத்தாயிரம் வரைக்கும் சேர்ந்திருக்கு. எம்.ஏ முடிச்சு ஒரு நல்ல வேலையில சேரணும்... இட்லிக் கடை நடத்திட்டு கஷ்டப்படுற எங்கம்மாவுக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்து, நல்லாப் பார்த்துக்கணும்.

செலவு செய்யுறது ஈஸி. ஆனா, சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம். இதைப் புரிஞ்சுக்கிட்டாலே சேமிக்கற பழக்கம் தன்னால வந்துடும்!''

படிப்புக்கு உதவுது பார்ட் டைம் வேலை !

சகுந்தலா தேவி, டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட், மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி காலேஜ்: ''எங்கப்பா, அம்மா திருப்பூர் பனியன் கம்பெனியில வேலை பார்த்தவரைக்கும் எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு. அங்க ஒரு கட்டத்துல தொழில் டல்லடிச்சதால மதுரைக்கே வந்துட்டாங்க. என் கல்லூரிப் படிப்புச் செலவு, எங்க குடும்பத்துப் பொருளாதார சூழலை மீறினதா இருந்தது. அதனால, என்னோட ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை வெச்சே பார்ட் டைம் வேலை தேடினேன். பெரிய பீட்ஸா ஷாப்ல வேலை கிடைச்சுது. காலையில காலேஜ், சாயங்காலம் பீட்ஸா தயார் பண்ணுறதுனு மூணு வருசமா வண்டி ஓடிட்டு இருக்கு. இந்த மூணு வருஷத்துல படிப்புச் செலவுக்காக வீட்டுல ஒரு பைசா வாங்கினது இல்ல. மீதி பணத்தை சேர்த்தும் வெச்சுருக்கேன். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கச்சி இருக்காங்க. அவங்களையும் படிக்க வைக்கணும். அதுக்கு என்னோட சேமிப்புதான் மூலதனம்!''

மோனிகாஸ்ரீ, பொறியியல் இறுதியாண்டு, சேது பொறியியல் கல்லூரி, விருதுநகர்: ''என்னோட இன்ஜினீயரிங் படிப்பு, அடிக்கடி குட்டி குட்டிச் செலவுகள் வைக்கும். ரெக்கார்ட் நோட் வாங்குறது, ஜெராக்ஸ் எடுக்கறதுனு வாரத்துக்கு நூறு, இருநூறு ஆகும். என்னோட செமஸ்டர் ஃபீஸ் மட்டும்தான் அப்பா கட்டுவாங்க. இந்தச் செலவுகளை எல்லாம் அப்பாவை தொந்தரவு பண்ணாம நானே என் சேவிங்ஸ்ல இருந்து சமாளிச்சுப்பேன். இந்த சேமிப்புப் பழக்கம் என்னோட ஸ்கூல் டேஸ்லயே ஆரம்பமானது. எட்டாவது படிச்சப்போ, 'சஞ்சாயிகா சிறுசேமிப்புத் திட்டத்து’ல சேர்ந்து பணம் சேர்த்து வைக்க ஆரம்பிச்சேன். அதுதான் இப்போ வரைக்கும் தொடருது. வீட்டுல கொடுக்கிற பாக்கெட் மணி, பிறந்தநாள், தீபாவளினு வீட்டுப் பெரியவங்க ஆசீர்வதிச்சுக் கொடுக்கற பணம், நான் டியூஷன் எடுத்துச் சம்பாதிக்கறது... இதெல்லாம்தான் என் சேமிப்புக்கு சப்போர்ட்.

அப்புறம்... ஒரு டிப்ஸும் சொல்லிக்கலாமா..? காசை கண்ணு முன்னாடி சேர்க்க வேண்டாம். மனசு அலைபாயும். விரயமா வீண் செலவுகள் பண்ணிட வாய்ப்பு இருக்கு. அதனால முடிஞ்ச வரைக்கும் பேங்க்லயோ இல்ல தெரிஞ்சவங்ககிட்டயோ கொடுத்து வைக்கலாம்!''

படிப்புக்கு உதவுது பார்ட் டைம் வேலை !

ரேவதி, முதுகலை டூரிஸம் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட், மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி காலேஜ்: ''மிஸ் ரேவதியா இருந்து, யூ.ஜி, டூரிஸம் படிச்சு... இப்போ மிஸஸ் ரேவதியா பி.ஜி, டூரிஸம் பண்றேன். எங்க குடும்பம் லோயர் மிடில் கிளாஸுங்கிறதால காசு சேர்த்து வைக்கணும்னு சொல்லிச் சொல்லியே வளர்த்தாங்க. அந்த சேமிப்புப் பழக்கம் பல சமயத்துல எனக்கு உதவியா இருந்திருக்கு. ப்ளஸ் டூ கடைசி எக்ஸாம் முடிச்சதோட ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்து சம்பாதிச்சு சேர்த்து வெச்ச பணம்தான், காலேஜ்ல சேர்ந்து ஃபீஸ் கட்ட உதவிச்சு.

படிப்பும் பார்ட் டைம் வேலையும் தொடருது. யூ.ஜி முடிக்கும்போது எனக்கு கல்யாணம் ஆச்சு. கணவரோட ஊக்குவிப்பால பி.ஜி படிக்கிறேன். ஆனா... அப்பா, அம்மாகிட்டயோ, கணவர்கிட்டயோ எதுவும் எதிர்பார்க்காம, நான் சம்பாதிக்கிற காசுலயே நான் படிக்கிறேன்ங்கறது எனக்குப் பெருமையாவும், தன்னம்பிக்கையாவும் இருக்கு!''

எட்டுத் திக்கும் பரவட்டும் இவர்களின் சேமிப்பு யுக்தி!