ஸ்பெஷல் 1
Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

கொஸ்டீன் ஹவர்

##~##

''என் அண்ணனின் மகள், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே அவள் அத்தனை புத்திசாலி, சமர்த்து. ஒவ்வொரு

விஷயத்தையும் அவள் அணுகும், அலசும், முடிவெடுக்கும் விதத்தில் பலமுறை எங்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறாள். எனவே, அவள் விஷயத்தில் நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை. இந்நிலையில், 'என்னுடன் படிக்கும் ஒரு மாணவனை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அவனையே திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று சமீபத்தில் மிகச்சாதாரணமாக சொல்லிவிட்டு, வழக்கமான படிப்பில் அவள் பிஸியாக... குடும்பமோ கலங்கிப் போயிருக்கிறது.

அவளது பிரியத்துக்குரிய அத்தையான என்னிடம் பிரச்னையை ஹேண்டில் செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். ஒளிவுமறைவில்லாத 14 வயது இன்டலக்சுவல் சிறுமி, 'காதல்' என்ற பெயரில் எடுத்திருக்கும்  முடிவை எப்படி மாற்ற முடியும்?'' என்று ஓசூரைச் சேர்ந்த வாசகி ஒருவர் பதற்றத்துடன் கேட்டிருக்கிறார்.

இவருக்கு அக்கறையுடன் வழிகாட்டுகிறார் திருச்சியில் பெற்றோர் - மாணவர் - ஆசிரியர் நல்லுறவுக்காக செயல்படும் 'பேரன்ட்ஸ் டிரஸ்ட்’ அமைப்பின் மேலாண் இயக்குநரும், வழக்கறிஞருமான தி.ஜெயந்திராணி.

கொஸ்டீன் ஹவர்

''நீங்கள் யூகித்திருப்பது போல, புத்திசாலி பெண்ணை வழிப்படுத்துவது சற்று சிரமமானதே. குடும்பத்தினரின் இரண்டாம் தர நாடகங்களோ, பாசாங்கோ அவளிடம் எடுபடாது. அவளுடைய வழியிலேயே சென்று, மாற்ற முயற்சிப்பதுதான் சிறப்பானது. முதலில் எந்த உடனடி எதிர்பார்ப்பும், குதர்க்கமும் இன்றி அவளிடம் பேசுங்கள். அதைவிட அதிகமாக அவளைப் பேசவிட்டுக் கேளுங்கள். அப்படியே அவளது எதிர்காலம், கனவு, லட்சியம் போன்றவற்றையும் கிளறிவிடுங்கள். பெண்கள் சொந்தக் காலில் நிற்பது எவ்வளவு முக்கியம் என்கிற விவாதத்தைப் பொதுவில் கொண்டு செல்லுங்கள். அவளது தற்போதைய முடிவால்... அவளது லட்சியம், கனவு எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாகும் என யோசிக்கவிடுங்கள்.

சிறிய இடைவேளை கொடுத்து நடைமுறைப் பிரச்னைக்கு வாருங்கள். அவளது ஸ்திரமான எதிர்காலமே குடும்பத்தாரின் எதிர்பார்ப்பு என்பதால், அவள் தற்போது எடுத்திருக்கும் முடிவு, அதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என உரையாடலைக் கொண்டு செல்லுங்கள். இந்த சின்ன வயதில் தன் வாழ்க்கை இணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை சம்பந்தப்பட்ட இருவரும் மறுபரிசீலனை செய்யும் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்த்துங்கள். திருமண வயதுக்கு இன்னமும் அதிக வருடங்கள் இருப்பதால், அவள் இல்லாவிட்டாலும் அந்தப் பையன் இன்னொரு சிறப்பான பெண்ணைச் சந்தித்து, அவள் குறித்த தனது பழைய முடிவுக்காக வருந்தவோ, அதை மறுபரிசீலனை செய்யவோ அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதைப் பக்குவமாக புரிய வையுங்கள்.

கொஸ்டீன் ஹவர்

மற்றொரு பக்கம்... வாழ்க்கையில் நிலையாக அவள் செட்டிலாக இப்போதைய மதிப்பெண்களையும் புத்திசாலித்தனத்தையும் தாண்டி, பல சிக்கலான கூறுகள் இருக்கின்றன என்பதைப் புரிய வைக்க நடைமுறை உதாரணங்களைக் காட்டுங்கள்.

இந்த இடைவெளியில், அவளது மன ஆசுவாசத்துக்காக யோகா, தியானம் போன்றவற்றைப் பழகச் செய்யலாம். பேச்சு, எழுத்து போன்ற இலக்கியம் சார்ந்தும் அவளது பங்களிப்பை அதிகமாக்கலாம். அவளது வாசிப்பு ரசனையைச் செதுக்கி, நல்ல நூல்களால் ஓய்வு நேரத்தை அர்த்தமுள்ளதாக்கலாம். நண்பர்கள் வட்டத்தை ஆராய்ந்து அநாவசிய மானவர்களை அவள் ஆமோதிப்போடு களை எடுக்கலாம்.

முழுக்கவும் படிப்பு, வீட்டாரின் மதிப்பெண்கள் எதிர்பார்ப்பு என நெருக்கடிக்குள்ளாகும் குழந்தைகள்... வெளியில் சமர்த்தாக தென்பட்டாலும் உள்ளுக்குள் நிம்மதி இழந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கான அமைதியும் உளதிடமும் கிடைக்கும்போது, பாட மதிப்பெண்கள் மட்டுமல்லாது வாழ்க்கையின் எல்லா மட்டத்திலும் அசத்த ஆரம்பிப்பார்கள்.

கொஸ்டீன் ஹவர்

அவசியம் எனில், அந்த மாணவனின் பெற்றோரிடமும் பேசிப் பார்ப்பது, இருவரையும் வேறு வகுப்புகளில் அமர்த்துவது அல்லது பள்ளி மாறுதல் குறித்து யோசிப்பது போன்றவையும் உங்கள் மேல் நடவடிக்கையின் அம்சங்களாக இருக்கட்டும். இவற்றையெல்லாம் மீறி அவளது காதல் பிடிமானம் திடமாக இருக்குமானால் நிச்சயம் அவளது எதிர்பார்ப்பை எந்த ஏமாற்றமும் இன்றி நிறைவேற்ற முயலுங்கள். அதாவது, இந்த முடிவை அவளுக்கு உணர்த்தி, உங்கள் தரப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்.

இந்த முயற்சிகள் கட்டாயம் அவளது முடிவை உரசிப் பார்க்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவளுடைய குடும்பத்தினரின் அரவணைப்பு அவளை இன்னமும் தன் குடும்பம் சார்ந்து நெகிழச் செய்யும். 'உன்னை நம்புகிறேன்... உன் உணர்வுகளை மதிக்கிறேன்’ என்பதை மட்டும் எப்படியாவது ஆதுரமாய் அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும்... பதில் மரியாதையையும் நம்பிக்கையும் அவள் நிச்சயமாய் காப்பாற்ற முயல்வாள். அதுவே மதிப்பெண்களையும் புத்திசாலித்தனத்தையும்விட உயர்வானது என்பதையும் ஒரு கட்டத்தில் நிச்சயம் உணர்வாள்!''