Published:Updated:

மெடல்..மெட்ரோ...வைதேகி !

சா.வடிவரசு படங்கள்: ப.சரவணகுமார்

##~##

''பொதுவா எல்லா மாணவர்களும் தங்களோட திறமையை நிரூபிக்கிற விதமாதான் புராஜெக்டுக்கான தலைப்பைத் தேர்ந்தெடுப்பாங்க. நான் என் புராஜெக்ட்டில் சமூக அக்கறைக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்; சென்னை மெட்ரோ ரயில் பற்றிய புராஜெக்ட் தொடங்கினேன். அதுக்காக நான் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறதைவிட, அதை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்குப் பயன்படுத்தப் போறாங்க அப்படிங்கறதுதான் எனக்கு பெரிய சந்தோஷமா இருக்கு!''

- உற்சாகமாக ஆரம்பிக்கும் வைதேகி, ஒரு ஆர்கிடெக்ட்.

சென்ற வருடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பிளான் (மாஸ்டர் ஆஃப் டவுன் பிளானிங்) பயின்ற இவர், அப்போது தன் புராஜெக்ட்டாகச் சமர்ப்பித்த 'மெட்ரோ ரயில் ஆய்வறிக்கை’, இன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டக் குழுவால் பாராட்டப்பட்டு, பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் மெடிக்கல் பிளானராகப் பணிபுரியும் வைதேகியை, வாழ்த்துக்களுடன் சந்தித்தோம்.

மெடல்..மெட்ரோ...வைதேகி !

''சின்ன வயசில் இருந்தே எனக்கு ஓவியம் வரையறதுல ஆசை. அந்த ஆர்வம்தான் என்னோட மேற்படிப்பா கட்டடத் துறையைத் தேர்ந்தெடுக்க வெச்சுது. சென்னை, 'மியாசி அகாடமி ஆஃப் ஆர்கிடெக்சர்’-ல் பி.ஆர்க் படிச்சேன். அங்க நான் ஒரு கோல்ட் மெடலிஸ்ட். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பிளான் சேர்ந்தப்போ... படிப்பு, புராஜெக்ட்னு  ரெண்டு கோல்ட் மெடல் வாங்கினேன். குறிப்பா, புராஜெக்ட்டுக்கு நான் நிறைய மெனக்கெட்டேன்னு சொல்றதைவிட, நிறைய அக்கறைப்பட்டேன்!'' என்ற வைதேகி, தன் புராஜெக்ட் பற்றிப் பகிர்ந்தார்.

''இப்போ சென்னையில மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பா நடந்துட்டு இருக்கு. ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து முனையமா கோயம்பேடு பகுதியை மாற்றுவது குறித்துதான் நான் ஆய்வு செஞ்சேன். நம் வரிப்பணத்தில்தான் இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுது. இது நம்மோட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யுறவிதமா அமைய வேண்டியது ரொம்ப முக்கியம். அதனால அனைத்து வசதிகளும் ஒருங்கே இருக்கற இடமா கோயம்பேடு இருக்கணும்னு திட்டமிட்டேன்.

மெடல்..மெட்ரோ...வைதேகி !

அதாவது மெட்ரோ ரயில் பயணிகள் அனைவரும் பயன்படுத்தும், அனைவரையும் சௌகரியப்படுத்தும் வாகன நிறுத்த வசதி, உணவு வசதி, கழிப்பிட வசதி, ஷாப்பிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும், பிற போக்குவரத்து அமைப்புகள் மூலமா மாநகரோட அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர வசதினு எல்லாத்தையும் என்னோட ஆய்வறிக்கையில் விவரிச்சேன். என் நண்பர்கள், பேராசிரியர்கள் எல்லாரும், 'இது தெளிவான, நேர்த்தியான புராஜெக்ட்’னு பாராட்டினதோட, 'மெட்ரோ ரயில் அமைப்பு நிர்வாகத்துக்கு அனுப்பி வை’னு ஊக்கமும் தந்தாங்க. நானும் அனுப்பினேன். 'உங்கள் ஆய்வுக்குப் பாராட்டுகள். எங்களின் மெட்ரோ ரயில் திட்டத்தில் உங்களின் ஆய்வு தரும் பரிசீலனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்!’னு அந்த அதிகாரிகள் பாராட்டினது, என் உழைப்புக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம்!''

- பெருமையும் சந்தோஷமும் அவர் குரலில்.

இந்த ஆய்வு மட்டுமல்ல... இதற்கு முன் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு மற்றும் அந்தமான் தீவுகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக வைதேகி, இன்னும் சிலருடன் இணைந்து உருவாக்கிய திட்டங்களும் ஹிட்.

''எம்.பிளான் படிச்சப்போ நானும் கல்லூரியைத் தாண்டிய சில நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிய டவுன் பிளான்களை கேரளா அரசு ஏத்துக்கிடுச்சு. அதுக்கான அங்கீகாரமா எங்க குழுவில் இருந்த அனைவருக்கும் அரசு வேலையையும் வழங்குச்சு கேரள அரசு. என் நண்பர்கள் எல்லோரும் அதில் சேர்ந்து பணிபுரிய, நான் குடும்பத்தை விட்டுப் பிரிய மனமில்லாம சென்னையில் இந்த தனியார் வேலையில் இருக்கேன். எங்களோட பிளான்கள் விரைவில் அந்தமான் தீவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கு. அந்தமான் தீவுகள், சீக்கிரமே உலகின் சிறந்த சுற்றுலாதலமா மாறும்!''

- இவை மட்டுமல்ல... நம் நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் தர மேம்பாடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், அதற்கான திறமையும் வைதேகியின் பேச்சில் தென்படுகிறது.

''விருப்பப்படி படிப்பைப் தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தைக் கொடுத்த என் குடும்பம், மற்றும் என்னோட ஆசிரியர்கள் எல்லோருக்கும் இதன் மூலமா நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன்!'' எனும் வைதேகியின் அடுத்த இலக்கு... குறைந்த செலவில், எளியவர்களுக்கான எழில் வீடுகளை உருவாக்குவது!

அடுத்த கட்டுரைக்கு