Published:Updated:

'தாய்மாமன், தாவணி கொண்டு வாராண்டி !'

என்.சுவாமிநாதன் படம்: எல்.ராஜேந்திரன்

##~##

முதல் முறையாக தாவணி உடுத்தும் அனுபவம், பெண்களுக்குப் பேரனுபவம். தென்காசி, யு.எஸ்.பி. கல்வியியல் கல்லூரி மாணவிகள் அந்த அனுபவத்தை அரட்டையாகப் பகிர்கிறார்கள் இங்கே!

''வீட்டுல இருக்கிற குட்டீஸ் எல்லாம் ஒரு துண்டு, துப்பட்டாவை எடுத்து தாவணி, சேலைனு போட்டு விளையாடுவாங்களே... அந்த ரகம்தான் நானும். 'அவசரப்படாதடி சின்னப் பொம்பள... இன்னும் காலம் இருக்கு!’னு பாட்டிங்க எல்லாம் கேலி செய்வாங்க. பத்தாவது படிக்கும்போது முதல் முறையா தாவணி போட்ட நாளை மறக்க முடியாது. அது ஒரு ஊதா கலர் தாவணி. அதுக்கு முன்ன என்னை நான் ரசிச்சதில்ல. ஆனா, அன்னிக்கு முழுக்க, 'சுபா நீ அழகா இருக்கேடி’னு மனசுக்குள்ள சொல்ல வெச்சது தாவணிதான்'' என்று சுபா கதை சொல்ல, 'ஓஹோ!’ பாடினார்கள் பெண்கள்.

'கிளாஸ்ல எனக்குப் பட்டப் பெயர் 'போன்ஸ்’. அவ்ளோ ஒல்லி. அதனால முதல் முறையா தாவணி கட்டினப்போ, 'சூட் ஆகுமா?’னு பயந்துட்டே ஸ்கூலுக்குப் போனேன். 'சூப்பர்டீ!’னு வந்த ஒரு தோழி, 'ஆனா, ஒண்ணுடி, எங்க ஏரியாப் பக்கம் நாய்கள் அதிகம்... வந்துடாதே. எலும்புத் துண்டை துணியில சுத்தி வெச்சுருக்கறதா நினைச்சு கவ்விடப் போகுது!’னு கலாய்ச்சுட்டா'' எனச் சொல்லும்போதே உதடுகள் துடிக்கின்றன உமாதேவிக்கு.

'தாய்மாமன், தாவணி கொண்டு வாராண்டி !'

''யு.ஜி படிச்சப்போ, 'பொங்கல் செலிப்ரேஷனுக்கு கிளாஸ்ல எல்லாரும் கண்டிப்பா தாவணி கட்டிட்டு வரணும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாங்க ஃப்ரெண்ட்ஸ். ஒன்பது பின் குத்தி அந்த தாவணியை கட்ட நான் பட்ட பாடு இருக்கே... அப்பப்பா! ஒருவழியா கான்ஃபிடன்ஸ் வந்து காலேஜுக்குக் கிளம்பினா, சாயங்காலம் வீட்டுக்கு வர்றதுக்குள்ள ஆறு தடவை விழுந்து எழுந்திரிச்சுட்டேன். அதுதான் என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் தாவணி எக்ஸ்பீரியன்ஸ்!'' என்று ஃபீல் ஆனார் திவ்ய ஜெயந்தி.

''எங்க ஊர்ல முதல் தாவணி, தாய்மாமன்தான் எடுத்துக் கொடுப்பாங்க. எனக்கும் தாய்மாமன் வீட்டுல இருந்துதான் சீர் வரிசையோட தாவணி வந்தது. அப்போ எனக்கு சின்ன வயசுதாங்கிறதால, தாவணியைவிட, சீர்ல இருந்த கருப்பட்டி ஸ்வீட்டைத்தான் இப்பவும் என்னால மறக்க முடியல!'' என்று சங்கரேஸ்வரி நாக்கைச் சப்புக் கொட்டினார்.

நீண்ட நேரம் அமைதியாக இருந்த மிஸ்பா, ''நான் வெளியில் போனா பர்தாதான் போடுவேன். அதனால தாவணி எல்லாம் கட்டணும்னு தோணுனதே இல்ல. எம்.எஸ்சி படிக்கும்போதுதான் முதல் முறையா ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து தாவணி கட்டினேன். அதுக்கப்புறம் இன்னிக்குத்தான் கட்டியிருக்கேன். இது ரொம்ப ஹேப்பி, ஸ்பெஷல் ஃபீலா இருக்கு. அவள் விகடனுக்கு தேங்க்ஸ்'' என்று சொல்ல, அத்தனை பட்டாம்பூச்சிகளின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பரவசம் !

அடுத்த கட்டுரைக்கு