Published:Updated:

வாழ வைக்கும் வாழை !

பிரதீபன் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

வாழ வைக்கும் வாழை !

பிரதீபன் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

கிராமப்புறத்தில், ஏழைக் குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு படிக்கும் 'முதல் தலைமுறை மாணவர்கள்' அனுபவிக்கும் வலியும்... தாங்கும் சுமையும் பெரிது. அப்படிச் சிரமப்படும் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறது 'வாழை’ அமைப்பு! கல்லூரி மாணவர்கள், பணிபுரிபவர்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட நல்உள்ளங்கள் இணைந்து எடுத்துச் செலுத்தும் இந்த அமைப்பின் சேவைகள், பாராட்டுக்குரியவை!

''சென்னையிலிருக்கும் மாநிலக் கல்லூரியில் 2005-ம் ஆண்டில் படித்த அமுதரசன், ரமேஷ், நான் உள்ளிட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் சிலரின் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான் இந்த வாழை. இதற்கு முக்கியக் காரணமே... நாங்கள் தங்கியிருந்த விக்டோரியா ஹாஸ்டலில் கிடைத்த கண்ணீர் அனுபவங்கள்தான்'' என்று முன்னுரை தந்து ஆரம்பித்த 'வாழை’ அமைப்பின் செக்ரெட்டரி முகுந்தன்,  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஹாஸ்டலில் தங்கியிருந்த பழங்குடி இனத்தைத் சேர்ந்த கிராமப்புற மாணவர் ஒருவரின் எம்.எஸ்சி. படிப்புச் செலவுக்காக, அவருடைய வீட்டில் இருந்த ஆடுகளை விற்று பணம் அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். இவருக்கு மட்டுமல்ல... வீட்டிலிருக்கும் பல பொருட்கள் விற்கப்பட்டும், அடகு வைக்கப்பட்டும்தான் எங்களில் பலரும் டிகிரியையே முடித்தோம். இதையெல்லாம் பார்த்து ஒவ்வொரு நாளும் எங்களுக்கு கண்ணீர் பெருகும். இந்தக் கண்ணீர்தான்... படித்து நல்ல வேலையில் சேர்ந்தபோது, 'நம்மைப் போல் சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு இனி நாம் உதவ வேண்டும்!’ என்று எங்களை முடிவெடுக்க வைத்தது. நண்பர்கள் கைகோத்தோம்... 'வாழை’ முளைவிட்டது!

வாழ வைக்கும் வாழை !

கல்வியில் மிகப் பின்தங்கிய இடமான தர்மபுரியை எங்களது சேவைக்கான முதல் இடமாகத் தேர்ந்தெடுத்தோம். வறுமைச் சூழலில் வாடும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களைக் கண்டறிந்து உதவினோம். தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இப்பணியை செய்து வருகிறோம். இதில் சிறப்பு என்னவென்றால், எங்கள் அமைப்பால் வாழ்க்கையில் முன்னேறிய முதல் தலைமுறை பட்டதாரிகள், அத்துடன் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாமல், தங்களைப் போலவே கல்விக்குத் தவிக்கும் மற்ற முதல் தலைமுறை மாணவர்களை 'வாழை’ அமைப்புடன் இணைந்து ஆதரிப்பதுதான்!'' என்ற முகுந்தனைத் தொடர்ந்தார், 'வாழை’ உறுப்பினர்களுள் ஒருவரான வித்யா.

''மதுரை, தியாகராஜர் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்துவருகிறேன். எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சமூகத்துக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று விரும்பினேன். 'வாழை’ அமைப்பு பற்றித் தெரிந்ததும்... முதல் தலைமுறை பட்டதாரி மாணவியான நானும் அவர்களுடன் இணைந்து, சேவைப் பணிகளில் இறங்கினேன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர், செல்லமுடி, நெருப்பூர் உள்ளிட்ட பல கிராமங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கனூர், பொன்னங்குப்பம், துத்திப்பட்டு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் கல்விப் பணியில் இருக்கிறோம்.

வாழ வைக்கும் வாழை !

பணத்தைக் கொடுத்துப் 'படி’ என்று சொல்வதோடு நின்றுவிடாமல், புத்தகங்கள், கல்விக் கட்டணம், பள்ளிச் சீருடை என்று உதவி செய்து கொடுப்பதுடன், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு 'மென்டர்’ நியமித்து, அண்ணனாகவும், அக்காவாகவும் உடன் இருந்து அக்கறையுடன் வழிகாட்டுகிறோம். அந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வொர்க்ஷாப் நடத்தி, அதன் மூலம் தன்னம்பிக்கை ஊட்டி ஆளுமையை வளர்ப்பதற்கான பயிற்சிகளைக் கொடுக்கிறோம். மருத்துவ முகாம்கள் மூலமாக சிகிச்சை மற்றும் ஆலோசனைகளையும் வழங்குகிறோம்!'' என்று பட்டியலிட்டார் வித்யா.

''மாதமொருமுறை சந்திப்பு மட்டுமல்லாமல்... ஆறாம் வகுப்பு தொடங்கி, பத்தாம் வகுப்பு வரை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு அந்த மாணவர்களை போன், கடிதம் என்று அடிக்கடி தொடர்புகொண்டு, அவர்களின் கல்வி, குடும்ப நிலை பற்றி அறிந்துகொள்வோம். ஆசிரியர்களையும் தொடர்புகொண்டு, மதிப்பெண் முன்னேற்றங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். விடுமுறை நாட்களில் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று மகிழ்ச்சி தருவோம்!'' என்று நெகிழும் திவ்யா, படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் கல்லூரியின் இறுதியாண்டு பொறியியல் மாணவி தீபா, ''சமூக ஆர்வலர்களும் எங்களுடைய சேவையை மேலும் சிறப்பாகச் செய்ய முடிந்த அளவுக்கு நன்கொடைகளை செய்து வருகின்றனர். நடிகர் சூர்யாவின் 'அகரம்’ அறக்கட்டளை, ஆண்டுதோறும் 1 .5 லட்சம் கொடுத்து உதவிவருகிறது. எங்களைப் போல பணியாற்ற வாலன்டியர்களை நாங்கள் வரவேற்கிறோம். அப்படி வருபவர்கள்... மாதத்துக்கு இரண்டு நாட்கள் 'வாழை’க்காக ஒதுக்க வேண்டும். வாருங்கள்... நண்பர்களே... கிராமப்புற, முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக்கு விளக்கேற்றிய திருப்தியை பெறுவோம்!'' என்று அன்போடு அழைத்தார்!

'வாழை’ வளரட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism