Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

மார்பகப்புற்று வந்தால்.. மார்பகத்தை அகற்றிவிடுவார்களா ?

பிரீமியம் ஸ்டோரி
##~##

''36 வயதாகும் என் அக்காவுக்கு மார்பகப்புற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்பகப்புற்று என்றாலே மார்பகத்தை அகற்றிவிடுவார்களா? மரபு காரணமாக எனக்கும் அந்த பாதிப்புக்கான வாய்ப்பு உண்டா..?''

- காரைக்கால் மாணவி ஒருவர்

கொஸ்டீன் ஹவர்

டாக்டர் அருண் சேஷாசலம், புற்றுநோய் மற்றும் கீமோதெரபி நிபுணர், திருச்சி:

''புற்று கண்டறியப்பட்ட அனை வருக்குமே மார்பகம் அகற்றுதல் அவசியமில்லை. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்ட மார்பகப்புற்றுக்கு பல்வேறு கூட்டு சிகிச்சை முறைகளின் மூலம் முழு நிவாரணம் பெற நவீன மருத்துவத்தில் வழி இருக்கிறது. அலட்சியம், அறியாமை என வளரவிடப்பட்ட நாட்பட்ட புற்று மட்டுமே நிலைமையை சிக்கலாக்கும்.

மார்பகப்புற்றில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. கட்டியின் சைஸ் 2 செ.மீ-க்கு குறைவாக இருக்கும் முதல் நிலை, 2 - 5 செ.மீ-க்குள் இருக்கும் இரண்டாவது நிலை, 5 செ.மீ-க்கு மேலாக நெறிக்கட்டியுடன் தலைகாட்டும் மூன்றாவது நிலை, மூன்றாவது நிலையுடன் கூடுதலாக கல்லீரல், நுரையீரல், எலும்பு, மூளை போன்ற உள் உறுப்புகள் ஏதேனுக்கும் புற்று பரவும் நான்காவது நிலை. முதல் இரண்டு நிலைகளில் மார்பக அகற்றத்துக்கு அவசியம் ஏற்படாது. அடுத்த இரண்டு நிலைகளில் பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சைக்காக அகற்றப்படலாம். எனவே, ஆரம்ப நிலையில் சுதாரித்து... மருத்துவ சிகிச்சையை நாடினால் இழப்புகளைத் தவிர்க்கலாம்.

இந்தியப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களில் எட்டில் ஒருவருக்கு மார்பகப்புற்று

கொஸ்டீன் ஹவர்

கண்டறியப்படுவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. ரத்த உறவுகளில் புற்று கண்டறியப்பட்டால், வயதைப் பொறுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மெமோகிராம் எனப்படும் மார்பக ஸ்கிரீனிங் அவசியம். நாற்பது வயதைத் தொட்ட பெண்கள் இந்த பரிசோதனையை வருடந்தோறும் செய்துகொள்ளலாம். சுயபரிசோதனையை முதல்முறை மருத்துவ ஆலோசனைப்படியும், பின் அவ்வப்போது தொடர்ச்சியாகவும் செய்து சோதித்துக் கொள்ளலாம்.''

கொட்டிக்கிடக்கும் ஸ்காலர்ஷிப்... பயன்பெறுவது எப்படி?

''கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதுதான் எனக்கு சமூக அடிப்படையிலான ஸ்காலர்ஷிப் உண்டு என்பது தெரியவர, அதற்காக விண்ணப்பித்துக் காத்துள்ளேன். விட்டுப்போன முந்தைய இரண்டு வருடங்களுக்கான ஸ்காலர்ஷிப்பையும் தற்போது பெற வழியுள்ளதா? கல்வி உதவித்தொகைகள் பற்றிய விவரங்களும் தேவை...''

- என்.சுஷ்மிலா, மதுரை

ஷெரீன், இயக்குநர், வெளிச்சம் கல்வி இயக்கம், சென்னை:

கொஸ்டீன் ஹவர்

''கல்லூரியில் படிக்கும்போது என்றில்லை... படிப்பு முடிந்த பிறகும்கூட குறிப்பிட்ட காலக்கெடுவில் விண்ணப் பித்தால்... ஸ்காலர்ஷிப்புகளை கேட்டுப்பெற முடியும். இதற்கு உங்களுடைய தகுதி, குறிப்பிட்ட கல்லூரியின் மாணவி என்பதற்கான சான்று, முந்தைய ஆண்டுகளில் குறைந்தது 75% வருகைப்பதிவு ஆகியவை இருந்தால் போதும்.

பிற்பட்டோர் நலம், ஆதிதிராவிடர் நலம், சிறுபான்மையினர் நலம் என பல்வேறு கல்வி உதவித்தொகைகளை உங்களுக்கு வழங்குவது அரசாங்கம்தான். இடையில் நின்று முறையாக பெற்றுத்தருவது மட்டுமே கல்லூரிகளின் பணி. மாணவர்கள் தங்களுக்கான ஸ்காலர்ஷிப்புகளை அழுத்தமாகக் கோரிப் பெறுவது அவர்களின் உரிமை. இதில் கல்லூரிகள் தவறினாலோ, தாமதம் இழைத்தாலோ உரிய அரசுத்துறையில் முறையீடு செய்யலாம்.

சமூகம் சார்ந்து மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வழக்கமான ஸ்காலர்ஷிப்புகள் தவிர்த்து, முதல் தலைமுறையினருக்கான கல்வி உதவித் தொகை, பெண்களுக்கான சிறப்பு உதவித்தொகை, சிறுபான்மையினருக்கானது என ஏராளமான கல்வி உதவித்தொகைகள் நடப்பில் இருக்கின்றன. அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவரங் களைப் பெறலாம்.

தவிர... எல்.ஐ.சி., ஹெச்.சி.எல்., அசோக் லேலண்ட், டாடா ஃபவுண்டேஷன், இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் என ஏராளமான தனியார் வழங்கும் ஸ்காலர்ஷிப்புகளும் உள்ளன. இந்நிறுவனங்கள் அவ்வப்போது தினசரி மற்றும் தங்கள் இணையதளங்களில் அதற்கான விண்ணப்பத்தை வெளியிட்டு, சில பரிசீலனைகளுக்குப் பிறகு ஸ்காலர்ஷிப்புகளை வழங்குகின்றன.

மாணவர் உயர்கல்விக்கான எங்களது    வெளிச்சம் அமைப்பின் வலைப்பூ பக்கத்தில் (http://velichamstudents.blogspot.in/) இந்த ஸ்காலர்ஷிப் தகவல்களின் தொகுப்பு கிடைக்கிறது. ஹாட்லைன் (96981-51515) எண்ணில் தொடர்பு கொண்டும் உரிய சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளலாம்.''  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு