Published:Updated:

'விட்டாச்சு லீவு... கிராமத்தைத் தேடு...!

சமூக அக்கறையோடு வலம்வரும் கல்லூரி இளசுகள்

'விட்டாச்சு லீவு... கிராமத்தைத் தேடு...!

சமூக அக்கறையோடு வலம்வரும் கல்லூரி இளசுகள்

Published:Updated:

''அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்ல, சமீபத்துல 'இன்டர்நேஷனல் சைஃப் காம்படிஷன்’ நடந்துச்சு. மொத்தம் 39 நாடுகளைச் சேர்ந்த 1,500 கல்லூரியில இருந்து கலந்துக்கிட்டாங்க. அதுல சர்வதேச அளவுல 4-ம் இடத்தையும், இந்திய அளவுல முதலிடத்தையும் நாங்க வாங்கியிருக்கோம்ல!''

- முகமெல்லாம் பெருமை பூக்கச் சொல்கிறார்கள் சென்னை, லயோலா கல்லூரி மாணவிகள்.

'விட்டாச்சு லீவு... கிராமத்தைத் தேடு...!
##~##

'சைஃப்' (SIFE -Students In Free Enterprise)...சர்வதேச அளவில் செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். உலகெங்கும் உள்ள பல கல்லூரிகளிலும் தன் வேரை ஊன்றி இருக்கும் இந்த அமைப்பில் மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து, குழுக்களாக பிரித்து பல பகுதிகளுக்கும் அனுப்பி, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவச் செய்வதுதான் அமைப்பின் நோக்கம். தொழில் முனைவோராக்குவது, ஏற்ற தொழிலை எடுத்துச் சொல்வது, முதலீட்டுக்கான யோசனைகளைத் தருவது, மார்கெட்டிங் கற்றுத் தருவது என்று விளிம்பு நிலை மக்களுக்கான அனைத்து வேலைகளையும் 'சைஃப்' குழுக்கள் செய்கின்றன! அதற்குத்தான் விருது பெற்றிருக்கிறது... லயோலா கல்லூரியின் 'சைஃப்’!

''பிழைப்புக்காக கிராமத்துல இருந்து நகரத்துக்கு மக்கள் இடம்பெயருறப்ப, ரெண்டு பிரச்னைகள் ஏற்படுது. ஒண்ணு, கிராமத்தோட இயற்கை வளங்கள் பயன்படுத்தபடாம போகுது. ரெண்டு, நகரத்துல அந்த மக்களால 'ஸ்லம்’ பகுதி உருவாகுது. மக்கள் நகரத்துக்கு வராம, கிராமத்துலயே இயற்கை வளங்களை மேம்படுத்தி எப்படி தொழில் முனைவோர் ஆகலாம்னு வழிகாட்ட களத்துல இறங்கினோம். அதெல்லாம் சுவாரஸ்ய ரகம்'' என்று 'லயோலா சைஃப்’ அட்வைஸர் புரொபசர் ஜோஸ்பின் ஜெயசாந்தி சொல்ல, அதன் விவரங்களைப் பகிர்ந்தார் 'கோர் மெம்பர்’களில் ஒருவரான தெரசா மினு டொமினிக்.

'விட்டாச்சு லீவு... கிராமத்தைத் தேடு...!

''திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்ல பனைமரத் தொழிலாளர்கள் அதிகம் இருக்காங்க. பதநீர் இறக்கி கருப்பட்டிக் காய்ச்சறதுதான் தொழில். போதுமான வருமானமில்லாததால வாங்கின கடனை சரிவர அடைக்க முடியாம சிரமப்படுறதுதான் காலகாலமா அவங்களோட தலையெழுத்தா இருக்கு. அவங்கள்ல 34 குடும்பங்களை தத்தெடுத்து பண உதவி செஞ்சு, தொழிலை நிமிர்த்தினதோட, கருப்பட்டியிலிருந்து ஜாம் தயாரிச்சு, நவீன முறையில விற்பனை செய்யவும்... பனை அமுது விற்கவும் சொல்லிக் கொடுத்தோம். நல்லா, முன்னேற ஆரம்பிச்சுட்டாங்க. அந்தக் குடும்பங்கள்ல இருந்து ராஜா, சிரின் ரெண்டு பேரை தத்தெடுத்து லயோலா காலேஜ்ல பி.ஏ., சோஷியாலஜி படிக்க வெச்சுக்கிட்டிருக்கோம்'' என்று தெரசா நிறுத்த,

''லயோலா கல்லூரி பூச்சியியல் ஆராய்ச்சி மையத்துல வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய் கலந்து கண்டுபிடிச்ச 'பொன்னீம்'கிற இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை, திருநெல்வேலி பக்க விவசாயிகளுக்கு வழங்கினோம். நல்ல மகசூல் கிடைச்சு, எங்க மேல நம்பிக்கை வரவே... இயற்கை விவசாயம் பண்ண அவங்களை ஊக்கப்படுத்த ஆரம்பிச்சோம். விளைபொருள் விற்பனையை சுலபமாக்க, அஞ்சு கிராமங்களைத் தத்தெடுத்து அவங்களுக்கு வேன், டீசல் வசதிகளையும் செஞ்சு கொடுத்திருக்கோம். கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதிகூட ஏற்படுத்தி கொடுத்திருக்கோம்'' என்றனர் அன்புக்கரசி, கௌதமி.

''பாசிமணி விற்கிற நரிக்குறவர்கள், கஷ்டத்துல இருக்கற மக்கள், உதவிகளுக்காக ஏங்கித் தவிக்கிறவங்கனு பல மாதிரியானவங்களுக்கும் எங்க குழுக்கள் உதவி செய்துகிட்டு இருக்குது. கேம்பஸ்குள்ள சின்னச் சின்ன சந்தோஷங்களையே ரசிச்சிட்டிருந்த மாணவர்களுக்கு, இந்த சேவைகள் எல்லாம் ஆத்ம திருப்தினா என்னனு புரிய வெச்சிருக்கு'' என்கிறார் புராஜெக்ட் கோ-ஆர்டினேட்டர் சாம்சன் துரை.

''படிச்சுக்கிட்டே எப்படி இதெல்லாம்..?'' என்று அந்த மாணவிகளிடம் கேட்டோம்...

''வீக் எண்ட், தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல், செமஸ்டர் ஹாலிடேஸ்னு எங்களோட எல்லா விடுமுறை தினங்களும் இந்த மக்களோடதான். கூடவே, காலேஜ்லயும் சில ஸ்பெஷல் பர்மிஷன்கள் தருவாங்க. மனசிருந்தா மார்க்கம் இருக்கும் பாஸ்!'' என்றனர் மலர்ச்சியாக!

- க.நாகப்பன்
படங்கள்: வி.செந்தில்குமார்