Published:Updated:

'சக்தே' வித்யாவதி !

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஏழை விவசாயி மகள் !

'சக்தே' வித்யாவதி !

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஏழை விவசாயி மகள் !

Published:Updated:

'சக்தே இந்தியா’ எனும் இந்தி திரைப்படத்தையும், அதில் வரும் 'ராணி டிஸ்போட்டா’ என்ற ஹாக்கி வீராங்கனை கதாபாத்திரத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. ஒரிஸ்ஸாவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் சேர்ந்து விளையாடிய பெண்ணின் வெற்றிக் கதை அது!

அப்படி ஒரு நிஜ 'ராணி டிஸ்போட்டா’வாக

சாதித்திருக்கிறார் வித்யாவதி. கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பாப்பனம்பட்டு எனும் குக்கிராமத்தில் சாதாரண ஏழை விவசாயிக்கு மகளாகப் பிறந்து, இன்று இந்திய பெண்கள் கால்பந்து அணியில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பெண்.

'சக்தே' வித்யாவதி !
##~##

சமீபத்தில் பங்களாதேஷில் நடந்த 'தெற்காசிய விளையாட்டுப் போட்டி’யில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி சாம்பியன்ஷிப் பெற முக்கிய காரணமாக இருந்த வித்யாவதி, திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரியின் பி.காம். இறுதியாண்டு மாணவி.

''காலேஜ்ல பாராட்டு விழா எல்லாம் நடத்தினாங்க...'' என்று பூரிக்கும் இந்த இளம் நம்பிக்கையின் வார்த்தைகளில், அத்தனை பணிவு.  

''சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல எனக்கு ரொம்ப ஆர்வம். எப்பவும் கிரவுண்ட்லயேதான் கிடப்பேன். ஆனா, ஏழாவது படிக்கும்போது 'ஃபுட் பால்’ விளையாட்டு பத்தி ஆத்திச்சூடி சொல்லிக் கொடுத்து, என்னை அதுல மடை திருப்பினது எங்க ஸ்கூல் கோச் சோமைய்யா சார்தான். கஷ்ட ஜீவனத்துல இருந்த எங்க வீட்டுல நான் மட்டும் எப்பவும் ஃபுட்பால், டிரெயினிங், டோர்னமென்ட்னு அவங்களுக்கு செலவு வெச்சுட்டு இருந்தது, ஏனோ குற்ற உணர்ச்சியா இருந்தது. 'ஸோனல் லெவல்’, 'டிஸ்ட்ரிக்ட் லெவல்’னு தடதடனு வெற்றிகளைக் குவிச்சாலும், எனக்கு ஷூ வாங்கிக் கொடுக்கக்கூட சிரமப்பட்ட எங்க வீட்டோட பொருளாதார நிலைமை... என்னோட விளையாட்டு ஆர்வத்துக்கு அப்பப்போ பிரேக் போட்டுச்சு.

டோர்னமென்ட்கள்ல என்னோட திறமையைப் பார்த்த 'திண்டுக்கல் ஸ்போர்ட்ஸ் அகாடமி’... என்னை ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்க வைக்கற பொறுப்பையும், ஃபுட்பால்ல பட்டை தீட்டற பயிற்சியையும் ஏத்துக்க, 'நம்ம வறுமையில இருந்து வெளிய வர இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோம்மா...’னு வழியனுப்பினாங்க வீட்டுல. 'இதுல நாம சாதிக்கற அளவுக்கு முன்னேறணும்’னு உறுதிஎடுத்துக்கிட்டு புறப்பட்டேன்'' என்றவர், பத்தாவது முடித்த கையோடு 'திண்டுக்கல் ஸ்போர்ட்ஸ் அகாடமி’யில் அடைக்கலமாகி படிப்பு, பயிற்சிகளைத் தொடர, ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு அந்தப் பொறுப்புகளைத் தான் ஏற்றுக்கொண்டு, இவருக்கு அட்மிஷன் வழங்கியிருக்கிறது திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி.

'சக்தே' வித்யாவதி !

''காலேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம், எனக்குக் கிடைச்ச நல்ல பயிற்சியாளர்களும், என்னைக் கை தூக்கி விடற நிர்வாகமும் என் நம்பிக்கையை இன்னும் அடர்த்தியாக்கினாங்க. கடுமையான பயிற்சிகள் எடுத்தேன். ஸ்டேட் லெவல்ல பல போட்டிகள்ல சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்த என்னைக் கவனிச்சு, 'இந்தியன் ஃபுட்பால் டீம்’க்கு தேர்வு செஞ்சாங்க. ஆனா, பாஸ்போர்ட் எடுக்கக்கூட முடியாம திணறினேன். மறுபடியும் கல்லூரி நிர்வாகம்தான் உதவி செஞ்சாங்க'' என்றவர்,

''லக்னோவுல கடுமையான பயிற்சி. டிரெயினிங் முடிஞ்சு முதல் மேட்சே 'சவுத் ஏஷியன் கேம்ஸ்’ங்கிறதால, டீம்ல இருந்த பதினோரு பேரும் பொறுப்பை உணர்ந்து விளையாடினோம். அதுலயும் ஃபர்ஸ்ட் மேட்ச் இலங்கைகூட. ஆனா, இலங்கை மட்டுமில்ல... எங்களுக்கு ஆப்போசிட்டா விளையாடின எந்த டீமையையுமே ஒரு கோல்கூட போடவிடல! இலங்கைக்கு எதிரா 6, பூடானுக்கு எதிரா 18, பங்களாதேஷ§க்கு எதிரா 7, பாகிஸ்தானுக்கு எதிரா 6, கடைசியா ஃபைனல்ல நேபாளத்துக்கு எதிரா ஒண்ணுனு, ஆப்போசிட் டீம்களை கோலே போட விடாம ஜெயிச்சோம். எல்லா வெற்றிகளுக்கும் காரணம், ஒவ்வொருத்தரும் தனித்தனி பிளேயரா பிரிஞ்சு நின்னு விளையாடாம, 'எல்லாரும் இங்க இந்தியாவை ரெப்ரசன்ட் பண்றோம்...’ங்கற பொறுப்போட, குழு மனப்பான்மையோட, கவனமா விளையாடினதுதான்...'' என்று சூத்திரம் சொல்லும் வித்யாவதி,

''கூலி வேலைகளுக்குப் போற எங்கப்பா, ரெண்டு அண்ணனுங்களுக்கும், எங்கம்மாவுக்கும் 'எங்க வித்யாவதி ஜெயிச்சுட்டாளாம்’ங்கற விவரத்தை தவிர இப்பவும் இந்த விளையாட்டைப் பத்தி எதுவும் தெரியாது. ஆனா, வறுமைகூடவே வாழ்க்கையை நகர்த்திட்டு இருக்கற அவங்க முகத்துல இந்தப் பெருமையை பார்க்க முடியற சந்தோஷம்தான் எனக்கான டானிக். இன்னும் அவங்களை நிறைய பெருமைப்பட வைக்கணும். நிறைய விளையாடணும். நிறைய ஜெயிக்கணும்!''

-  கண்கள் பளபளக்கிறது வித்யாவதிக்கு!
வெற்றி உங்கள் கையில்... ஸாரி, காலில்!

- உ.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்