Published:Updated:

வயது பதின்மூன்று.... பொறுப்பு சி.இ.ஓ..!

டீன் ஏஜ் பெண்ணின் அனிமேஷன் அசத்தல்

வயது பதின்மூன்று.... பொறுப்பு சி.இ.ஓ..!

டீன் ஏஜ் பெண்ணின் அனிமேஷன் அசத்தல்

Published:Updated:
வயது பதின்மூன்று.... பொறுப்பு சி.இ.ஓ..!

வண்ணம் குழைத்து, தூரிகைப் பிடித்து ஓவியம் தீட்டிய காலம் மலையேறிவிட்டது. இது டேப்லட் (tablet) டிராயிங், மவுஸ் பெயின்ட்டிங், ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் என மாறிவிட்ட டிஜிட்டல் யுகம்! மின்னல் வேகத்தில் இப்படி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமுறையின் மிக இளம் பிரதிநிதியாக ஜொலிக்கிறார்... சென்னை, வேலம்மாள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி சிந்துஜா. ஆம், இந்தக் குட்டிப்பெண், சென்னையில் இயங்கும் 'செப்போன்’ எனும் அனிமேஷன் நிறுவனத்தின் சி.இ.ஓ. (C.E.O) எனும் முக்கியமான பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்!

'சின்ன வயதில் திறமையை வளர்த்துக் கொண்டால், பெரியவளானதும் நல்ல வாய்ப்புகள் வரும்...’ என்ற போதனைகளைப் பழசாக்கி, 'திறமை இருந்தால் வயதைப் பொருட்படுத்தாமல் கிரீடம் சூட்ட இந்த உலகம் தயாராகவே இருக்கிறது’ என அப்டேட் செய்திருக்கும் சாட்சி சிந்துஜா!

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் கார்ட்டூன் சேனலில் 'டாம் அண்ட் ஜெர்ரி’ பார்க்கும் குழந்தைகள் மத்தியில்... இவர் அனிமேஷன் படங்கள் உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?!

''என் அப்பா, கேரிகேச்சரிஸ்ட். அந்த ஆர்ட் மேல இருந்த ஆர்வத்தால, தான் பார்த்துக்கிட்டிருந்த ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலையவே உதறிட்டு,

##~##

முழுநேர ஓவியரானவர். அதனால இந்த மீன் குஞ்சுக்கும் ஸ்கூல் படிக்கும்போதில் இருந்தே வரையறதுல நிறைய ஆர்வம். சிக்ஸ்த் ஸ்டாண்டர்டு படிக்கும்போது ஸ்கூல்ல நடந்த ஒரு போட்டிக்காக 'பூச்சிகளை வதைக்காதீர்’ங்கிற தலைப்புல அனிமேஷன் படம் எடுத்தேன். எனக்கு இருந்த கம்ப்யூட்டர் பரிச்சயத்தை வெச்சு, சுலபமான அனிமேஷன் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி, நான் பண்ணின அந்த முயற்சிக்கு, முதல் பரிசு கிடைச்சுது. அதுதான் என்னோட ஆர்வத்தை அனிமேஷன் பக்கம் திருப்பிவிட்டுச்சு.

வயது பதின்மூன்று.... பொறுப்பு சி.இ.ஓ..!

பிறகு, எங்க வீட்டு கம்ப்யூட்டர்ல நானே வொர்க் அவுட் பண்ணிப் பார்த்து, நெட்ல தேடினு அனிமேஷன் பத்தி நிறைய கத்துக்கிட்டேன். எங்கப்பாவும் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணினார். எந்த கிளாஸுக்கும் போகாமலேயே... இப்போ அனிமேஷன்ல நான் ஒரு குட்டிப் புலி!'' என்று சிரிக்கும் சிந்துஜா, சி.இ.ஓ. எனும் அளவுக்கு முன்னேறியது..?

''என்னோட திறமையைப் பார்த்து சந்தோஷப்பட்ட எங்க ஸ்கூல்லயும், வீட்டுலயும் நான் அனிமேஷன்ல பல முயற்சிகள் எடுக்கறதுக்கு முடுக்கினாங்க. அதுல ஒரு முயற்சியாதான் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கறதுக்காக, போன வருஷம் புவி வெப்பமயமாதல் பத்தின விழிப்பு உணர்வு ஏற்படுத்த தீர்மானிச்சேன். அதுக்காக 'ஸ்பென்ஸர் பிளாஸா’ல பல பேர் முன்னிலையில எட்டு மணி நேரத்துல மூன்றரை நிமிட அனிமேஷன் குறும்படம் எடுத்தேன்.

திறமைகள் எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சு ஊக்குவிக்கற தன்னார்வ தனியார் நிறுவனமான 'டென்த் பிளானெட்’டோட நிறுவனர் குமரன்மணி, என்னோட இந்த முயற்சிக்காக ரொம்பப் பாராட்டினார். கூடவே, 'உன்னால இன்னும் நிறைய சாதிக்க முடியும்’னு நம்பிக்கை கொடுத்து, 'டென்த் பிளானெட்’ நிறுவனத்தோட துணை நிறுவனமா 'செப்பான்’ங்கற அனிமேஷன் நிறுவனத்தை ஆரம்பிச்சு, அதுக்கு 'ஹானரரி சி.இ.ஓ.’ அப்படிங்கற பொறுப்புல என்னை நியமிச்சு, எனக்குக் கீழ ஆறு டீம் மெம்பர்களையும் அப்பாயின்ட் பண்ணிட்டார்!''

வயது பதின்மூன்று.... பொறுப்பு சி.இ.ஓ..!

- பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்கும் வயதையே முழுமையாக தாண்டாதவராக இருக்கும் சிந்துஜா, நம்மிடம் தன்னுடைய பயோகிராபி சொன்னார் கண்கள் படபடக்க!

கற்பனைத்திறன் என்பது அனிமேஷன் துறையில் வேலை செய்பவர்களுக்குப் போதும். ஆனால் ஒரு கம்பெனியின் சி.இ.ஓ. என்ற பதவியில் இருப்பதற்கு அதுமட்டும் போதாதே?!

''என்னோட வொர்க்கிங் ஸ்டைலைப் பார்த்தா, இந்தக் கேள்விக்கு உங்களுக்கு பதில் கிடைக்கும். கார்ப்பரேட் நிறுவனத்தோட செயல்பாடுகள், டீம் மேனேஜ்மென்ட், கிளையன்ட் மேனேஜ்மென்ட், வொர்க் அலாட்மென்ட்னு எல்லா விஷயங்களையும் நான் கத்துக்கிட்டேன்னு சொல்ல மாட்டேன்... கத்துட்டே இருக்கேன். என் டீம்ல இருக்கற ஆறு பேரும், எப்பவும் என்னை சின்ன பிள்ளையா ட்ரீட் செஞ்சதே கிடையாது. என் திறமைக்கு மதிப்பு கொடுக்கறாங்க. அவங்களுக்கு என்னோட ஆயிரம் தேங்க்ஸ்!'' எனும் சிந்துஜா,

'' 'செப்பான்’ ஆரம்பிச்சு ரெண்டு மாசம் ஆகுது. இப்போ எங்க டீம் உருவாக்கிட்டிருப்பது, 'தி.நகர் விர்ச்சுவல் ஸ்ட்ரீட் (ஜி ஸீணீரீணீக்ஷீ ஸ்வீக்ஷீtuணீறீ stக்ஷீமீமீt)’. அதாவது, தி.நகரோட முக்கிய பிரச்னை... ஜன நெருக்கடி. அதுல வழி தெரியாம போய் மாட்டிக்காம இருக்க, வீட்டுலயிருந்து கிளம்பறதுக்கு முன்ன இந்த 'விர்ச்சுவல் ஸ்ட்ரீட்’ல மௌஸை கிளிக்கினா, சந்துகள் உட்பட எந்தெந்தக் கடைகள் எங்கெங்க இருக்குனு தி.நகரே திரையில் வரும். கடைகள் 'டை-அப்’ வெச்சுட்டா, அந்தக் கடையோட ஃப்ளோர், செக்ஷன் வரை உள்ளே போய் பார்க்கலாம். செல்ல வேண்டிய இடத்தைத் தீர்மானிச்சு, வழி பார்த்துட்ட பிறகு, சிஸ்டத்தை ஷட்டவுன் செஞ்சுட்டு நேர்ல போகலாம். நல்லா இருக்குதானே எங்க புராஜெக்ட்?!'' - ஆர்வமாகக் கேட்கிறார் சிந்துஜா.

'

வயது பதின்மூன்று.... பொறுப்பு சி.இ.ஓ..!

'செப்பான்ங்கற ஜப்பானிய சொல்லுக்கு, 'பொழுதுபோக்கு’னு அர்த்தம். எங்க அக்கா ஜப்பானிய மொழி படிக்கறாங்க. அவங்கதான் இந்த பேரை செலக்ட் பண்ணிக் கொடுத்தாங்க'' என்ற சிந்துஜா, நமக்கென பிரத்யேமாக இரண்டே நிமிடங்களில் வரைந்த கார்ட்டூன் மட்டும் இங்கே...

''கனடால இருக்கற 'வான்கூவர் ஃபிலிம் ஸ்கூல்’ல அனிமேஷன் படிக்கணும்னு ஆசைப்படறேன். 18 வயசுக்குள்ள அதுக்கான பணத்தை நானே சம்பாதிச்சுடணுங்கறதுதான் இப்போ என்னோட கோல். படிச்சுட்டு வந்து, இந்தியாவுல அனிமேஷனுக்கான மார்க்கெட்டை உருவாக்கி, வேலை தேடி வெளிநாடு போற நம்ம அனிமேட்டர்களுக்கு இங்கேயே வேலை கொடுக்கணும்ங்கறதுதான் என்னோட லட்சியம்!'' - சின்னக் குரலில் சொல்கிறார் சிந்துஜா!

பதின்மூன்று வயதிலேயே இவ்வளவு செய்தவர், இருபத்துமூன்றில் அதையும் செய்ய மாட்டாரா என்ன?!

- மோ.அருண் ரூப பிரசாந்த்
படங்கள்: பொன்.காசிராஜன்