Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

கவலையூட்டும் பல் கறை...பளிச்சிட வைக்க வழி என்ன ?

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

''எனக்கு 21 வயதாகிறது. என்னுடைய பற்கள் சிலவற்றில் எப்போதும் கறை படிந்தாற் போல இருக்கிறது. டூத்பேஸ்ட், பிரஷ் என மாற்றியும் பிரயோஜனமில்லை. பல் மருத்து வரிடம் ஸ்கேலிங் செய்தால், அப்போதைக்கு மட்டுமே நன்றாக இருக்கிறது. அடிக்கடி ஸ்கேலிங் செய்யவும் கூடாது என்கிறார்கள். அசைவம் மற்றும் மசாலா வகைகள் உணவில் சேர்த்துக் கொள்வதற்கும் இதற்கும் தொடர்பு உண்டா? என் பற்களின் கறை நிரந்தரமாக நீங்க என்ன வழி?''

- கே.என்.பரிமளா, நெல்லூர்

டாக்டர் பி.செந்தில்குமார், பல் பாதுகாப்பு மற்றும் அழகு சிகிச்சை நிபுணர், சென்னை:

கொஸ்டீன் ஹவர்

''பால்பற்கள் விழுந்து, நிரந்தர பற்கள் முளைத்த திலிருந்தே இப்படி கறை உள்ளதா அல்லது சமீபத்திய வருடங்களில் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். நிரந்தர பற்கள் முளைத்ததிலிருந்தே கறை உள்ளதென்றால், அதற்கு நீங்கள் அருந்தும் நீரில் உரிய அளவைவிட, அதிகமாக இருக்கும் ஃபுளூரைடு காரணமாக இருக்கலாம். இதை ஃபுளோரோசிஸ் பல் பாதிப்பு (Dental Fluorosis) என்பார்கள். பற்கள் மட்டுமல்லாது எலும்பு களையும் இந்த அதிகப்படியான ஃபுளூரைடு உள்ள நீர் பாதிக்கும். இதற்கு மருந்து, மாத் திரை, ஸ்கேலிங் உள்ளிட்ட சாதாரண சிகிச்சை களால் பலன் இல்லை.

பற்களில் கறையைப் போக்குவதற்கு மூன்று முறைகளில் சிகிச்சை அளிக்கலாம். ஒன்று... கறை இருக்கும் பகுதிகளில், சுமார் ஒரு மிமீ அளவுக்கு டிரில் செய்து, ஏனைய பற்களின் நிறத்தை ஒட்டிய சாயல் இருப்பது போன்று மாற்றும் சிகிச்சை. காம்போசிட் ஃபில்லிங் (Composite Filling) எனப்படும் இந்த அழகு சிகிச்சை, நிரந்தரமாக நீடித்திருக்கும். கறையின் தன்மை தீவிரமாக இருப்பின் கெமிக்கல் ப்ளீச்சிங் முறையில், அதைக் குறைத்துவிட்டு, கூடுதலாக காம்போசிட் ஃபில்லிங் முறையை மேற்கொள்வது இரண்டாவது முறை. மூன்றாவது, செராமிக் வெனீரிங் (Ceramic Veneering) எனப்படும் முறையாகும். கறை உள்ள பல்லை கேப் போட்டு மறைத்துவிடுவது. கலைத்துறை பிரபலங்கள் மேற்கொள்ளும் செலவு வைக்கக் கூடிய அழகு சிகிச்சை இது. கறை மட்டுமல்லாது பற்களில் தென்படும் சிறு குறைபாடுகள், தோற்ற மாறுபாடுகளைக்கூட இதன் மூலம் மறைக்க முடியும். முதல் இரண்டு சிகிச்சைகளும் தோதுபடாது என்றால்... இந்த வெனீரிங் முழுமையாகக் கைகொடுக்கும்.

நிரந்தர பற்கள் முளைக்கும்போது, பற்கள் கறைகளற்று இருந்து, சுமார் 15 வயதுக்கு மேல் கறைகள் உருவாகியிருந்தால்... அதற்கு தண்ணீரில் உள்ள ஃபுளூரைடு காரணமாக இருக்காது. இயல்பாகவே உங்கள் குடும்பத்தினர் பற்களின் தோற்றமே அப்படியானதாக இருக்கலாம். அல்லது நீங்கள் சொல்வது போல... அசைவம், மசாலா என செயற்கை சாயமூட்டிகளின் பயன்பாடு சமையலில் அதிகமாக இருப்பதும்கூட காரணமாகலாம்.

கொஸ்டீன் ஹவர்

பற்களில் சாதாரணமாக உருவாகும் அழுக்குகள், நிற மாறுபாடுகளுக்கு முறையான சிகிச்சை எடுக்காமல், வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் தவறான செயல்பாடுகளால் கறை நிரந்தரமாகக்கூடும். அதாவது... கல் உப்பு, எலுமிச்சை, பேக்கிங் சோடா என்று பற்களின் மீது பலப்பிரயோகம் நிகழும்போது, அதன் மேற்பரப்பில் உருவாகும் சிறு கீறல்களில் மசாலா மற்றும் காபி கறை தொடர்ந்து விழுந்து, நாளடைவில் நிரந்தரமாகிவிடும். இந்த வகை பாதிப்புக்கு, ஸ்கேலிங் மூலம் பல் சுத்தம் செய்தபிறகு, உரிய பாலிஷிங் சிகிச்சையை மருத்துவரிடம் எடுத்துக் கொள்ளவேண்டும்.''

சத்து குறைபாடுதான் காரணமா?

''தற்போது ப்ளஸ் டூ படிக்கும் என் மகள், பூப்படைந்ததிலிருந்தே அடிக்கடி மாதவிலக்கு சுழற்சியில் தடுமாற்றமும் அவ்வப்போது அதிகப்படியான போக்கையும் சந்திக்கிறாள். எந்த டாக்டரை சந்தித்தாலும் பலவிதமான டெஸ்டுகள் எடுத்துப் பார்த்துவிட்டு, 'சத்துக்குறைபாடுதான்' என்றபடி இரும்புச்சத்து டானிக் மற்றும் சத்தான ஆகாரத்தைப் பரிந்துரைக்கிறார்கள். ஆனாலும் பலன் கிடைத்தபாடில்லை. மகளுடைய மாதவிலக்கு சுழற்சியை இயல்பாக்கவும், பரிபூரண பெண்மைக்குரிய சத்துக்கள் உடலில் சேரவும் அவளுக்கான உணவு முறைகளை சீரமைக்க விரும்புகிறேன். பக்கவிளைவுகள் அற்ற பாரம்பரிய உணவூட்டத்தில் அதற்கான வழிமுறைகளைத் தர முடியுமா?''

- பாக்கியம் செல்வக்குமார், மயிலாடுதுறை

டாக்டர் அன்பரசு, அரசு சித்த மருத்துவர், கிருஷ்ணராயபுரம் (கரூர்):

கொஸ்டீன் ஹவர்

''மாதவிலக்கு முடியும் நாளில், இரும்புச்சத்து இழப்பை இளம் பெண்கள் அதிகமாக உணர்வார்கள். இதை இரண்டே நாளில் சரி செய்ய முருங்கைக்கீரை உதவும். மாதவிலக்கு நாட்களில் தருவது என்றில்லாது, வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் முருங்கைக்கீரையை மகளுக்குப் பிடிக்கும் வகையில் உண்ணத் தரலாம். உங்களுக்கு பொருந்தும் எனில், வழக்கமான முருங்கைக்கீரை சமையலில் முட்டை சேர்த்துத் தருவது கூடுதல் பலனைச் சேர்க்கும். கீரைகளில் பொன்னாங்கண்ணி, புளிச்சக்கீரை போன்றவையும் இரும்புச்சத்து இழப்பை நிவர்த்தி செய்யும்.

பெண்களின் கர்ப்பப்பைக்கு வலுவூட்ட, உளுத்தங்களி செய்து தரலாம். கேழ்வரகு களியும் நல்லது. மைக்ரோ நியூட்ரியன்ஸ் அதிக இரும்புச்சத்து கொண்ட சிறுதானியங்களை அதிகளவு உணவில் சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முளைவிட்ட நவதானியங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் சத்துமாவு கஞ்சி காலையில் சாப்பிட பொருத்தமானது.

அன்றாடம் சாப்பிடும் ஸ்நாக்ஸ் உள்ளிட்ட தின் பண்டங்களுக்கு பதிலாக, பேரீச்சம்பழம், வெல்லம் கலந்த வீட்டுப்பண்டங்களை தரலாம். அதிலும் பனைவெல்லம் மிகச்சிறந்தது. எள் மிட்டாய் மாத சுழற்சி தடுமாற்றத்தை ஒழுங்காக்கும். குமார பருவத்தினருக்கு இயல்பாகவே அதிகமாக இருக்கும் உடற்சூடு, மாதாந்திரப் போக்கை தடுமாற செய்யும் என்பதால்... உடல் உஷ்ணத்தை மட்டுப்படுத்தும் வகையிலும் வாழ்க்கைப் போக்கையும் உணவூட்டத் தையும் சீரமைப்பது நல்லது. வாரத்தில் இருநாள் எண்ணெய் தேய்த்து குளிப்பது, இரவு படுக்கும்போது வயிற்றில் சிறிதளவு விளக்கெண்ணெய் தேய்த்துக்கொள்வது, இவற்றோடு இரவுகளில் தூக்கத்துக்கு பங்கம் வராது பார்த்துக் கொள்வதும் நல்ல பலன் கொடுக்கும்.''

பழியிலிருந்து தப்பிப்பது எப்படி?

''கல்லூரியில் தோழிகளிடம் சுமுகமாகவும் நல்லவிதமாகவும் நட்பை வளர்க்கவே ஆசைப்படுகிறேன். அந்த வகையில் எல்லோரிடமும் பாரபட்சமின்றி பழகுகிறேன். ஆனால் 'இவள் போட்டுக் கொடுப்பவள்’ என்ற பழி எப்படியோ விழுந்து விட்டது. என்னைப் பலரும் புறக்கணிக்கிறார்கள். இந்தக் களங்கத்திலிருந்து எப்படி மீள்வது..?''

- பெயர் வேண்டாம் ப்ளீஸ்...

கொஸ்டீன் ஹவர்

வி.கவிதா, மருத்துவ உளவியல் நிபுணர் மற்றும் சைக்காலஜி துறை விரிவுரையாளர், அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரி, கோவை:

''ஒருவரால் எல்லோருக்கும் நல்லவராக இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. எனவே, நீங்கள் உங்கள் அளவில் 'நான் ஓ.கே’ என்ற தெளிவுபெறும் பட்சத் தில், புறக்கணிப்புகளை தெம்புடன் அலட்சியப்படுத்துங்கள். இந்தத் தெளிவில் தடுமாற்றம் இருப்பின், சுய பரிசோதனையில் இறங்குங்கள். அதற்கான முதல்படியாக இந்த 'போட்டுக் கொடுக்கும்’ மனோபாவத்தின் மறுபக்கத்தைப் பார்த்துவிடுவோம்.

மற்றவர்கள் முன்பாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சி அல்லது அதீத தாழ்வு மனப்பான்மையில் உழல்பவர்களின் எசகுபிசகு நடவடிக்கைதான் இது. மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுப்பது என்பது உங்கள் திறமைகளை, நற்குணங்களைப் பொறுத்தே தீர்மானமாகட்டும். மற்றவர்களை தாழ்த்தியோ, புறஞ்சொல்லியோ கிடைக்கும் நல்ல பெயர் தேவையில்லை. பிறரைப் பற்றிய தகவல்களை கறப்பதற்கு உங்களைப் பயப்படுத்துகிற நபர்களுக்கும் உண்மையில் உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இருக்க வாய்ப்பில்லை.

கொஸ்டீன் ஹவர்

உங்களை நீங்களே நேசிக்கத் துவங்குவது அடுத்த படிநிலை. உங்களின் நிறை, குறை களை நடுநிலையான மூன்றாம் நபர் மனப் பான்மையில் நின்று பட்டியலிட்டு, ப்ளஸ் பாயின்ட்டுகளை மெருகேற்றுங்கள்; மைனஸ் பாயின்ட்டுகளை முதிர்ச்சியுடன் மழுங்கடியுங்கள். நடப்பு மனோநிலை தொடர்ந்தால், மற்றவர்கள் உங்களை வெறுப்பது ஒருபக்கமிருக்க... உள்ளுக்குள் உங்களை ஆழமான மனச்சிதைவு நோய் தாக்கும் ஆபத்து அதிகம் இருக்கிறது. கவனமாக தவிர்க்கப் பாருங்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு