Published:Updated:

தங்க மங்கை ஜெனிஃபர் !

நா. சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: ப.சரவணகுமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

அது... சென்னையிலிருக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாம் பட்டமளிப்பு விழா. தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாணவர்கள், பெற்றோர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று, அடைமழை பெய்த மாதிரி விடாமல் கை தட்டியது... ஜெ.சி. ஜெபா ரோஸ் ஜெனிஃபருக்கு! 27 தங்க மெடல்கள், சான்றிதழ்கள் என தூக்க முடியாமல் அவர் தூக்கியது... ஆச்சர்ய அழகு!

இந்த ஆண்டு பிரமாண்ட வெற்றியுடன் கால்நடை மருத்துவம் முடித்துள்ள ஜெனிஃபருக்கு வாழ்த்துக்கள் சொன்னோம்!

''மத்தவங்க விருப்பத்துக்காக படிப்பைத் தேர்ந்தெடுக்காம, என் மனசுக்குப் பிடிச்சதை தேர்ந்தெடுத்துப் படிச்சதாலதான் எனக்கு இன்னிக்கு இந்த சந்தோஷம் சாத்தியமாகி இருக்கு!''

- விரியும் புன்னகையுடன் ஆரம்பித்தார் ஜெனிஃபர்.

''சின்ன வயசுல இருந்தே நாய், பூனை, முயல், கிளினு பெட் அனிமல்ஸ் மேல பிரியம் அதிகம். என் சித்தப்பா சாமுவேல்ராஜ், வெட்ரினரி டாக்டர். எந்நேரமும் ஏதாவது ஒரு பிராணியோட பொழுதைக் கழிக்கிற அவரை வேடிக்கை பார்க்கறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். விலங்குகள் உலகத்தோட சுவாரஸ்ய விஷயங்கள அவர் சொல்லிட்டே இருப்பார். 'சந்தோஷம், துக்கம், ஆதங்கம், கோபம்னு நம்மளோட மனநிலையை மனிதர்களைவிட, நாம வளர்க்கிற வாயில்லா ஜீவன்கள் நல்லா புரிஞ்சுக்கும்’னு சொல்வார். அதுபோலவே, நான் ஏதாவது சோகமா இருந்தா... அவர் வீட்டு அல்சேஷன் டாக், என் காலை காலைச் சுற்றி வந்து வாடிப்போன என் முகம் பார்த்து தவிக்கிறதை பார்க்கிறப்போ, ஆச்சர்யமா இருக்கும்.

தங்க மங்கை ஜெனிஃபர் !

இன்னொரு பக்கம், தெருவுல திரியற நாயில் இருந்து, கோவில் யானை வரை, 'அதுங்க என்ன டாக்டர் ஃபீஸா கொடுக்கப் போகுதுங்க?’னு நினைக்காம, கைக்குழந்தைக்குப் பார்க்கற மாதிரி ட்ரீட்மென்ட் கொடுக்குற சித்தப்பாவோட அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது. ஆனா, 'இப்படித்தான் நாமும் ஆகணும்’னு

தங்க மங்கை ஜெனிஃபர் !

முடிவெடுக்குற முதிர்ச்சி அப்போ எனக்கு இல்ல'' என்றவருக்கு, அந்த முடிவை கைகளில் தந்திருக்கிறது ஒரு புத்தகம்.

''ப்ளஸ் டூ படிச்சப்போ... ஸ்கூல் லைப்ரரியில ஜேம்ஸ் ஹரிடாட் எழுதின 'ஆல் திங்ஸ் பிரைட் அண்டு பியூட்டிஃபுல்’ங்கற புத்தகத்தைப் படிச்சேன். விலங்குகளோட வாழ்க்கை முறைகளை அழகா செதுக்கி எழுதியிருந்த அந்தப் புத்தகத்தோட கடைசிப் பக்கத்தைப் படிச்சு முடிச்சப்போ... 'நாம படிக்கப் போறது வெட்ரினரி மருத்துவத் துறை'னு முடிவெடுத்தேன். ப்ளஸ் டூ-ல 1,090 மார்க் வாங்கினேன். அப்பாவும், அம்மாவும் 'அந்த கோர்ஸ் படிச்சா... உடனே வேலை கிடைக்கும்’, 'இந்த கோர்ஸ் படிச்சா... நல்ல சம்பளம்’னு இழுக்காம, என் தேடலுக்கும் விருப்பத்துக்கும் பலமா இருந்தாங்க'' என்றபோது, ஜெனிஃபரின் குரலில் பெருமிதம்.

''கோயம்புத்தூர் பொண்ணு நான். சென்னையில் வந்து காலேஜ்ல சேர்ந்தப்போ, ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு. ஆனா... நண்பர்களும், பேராசிரியர்களும் என் உலகத்தை இன்னும் ஆக்கப்பூர்வமா, அர்த்தமுள்ளதா ஆக்கினாங்க. கோல்ட் மெடல் வாங்கணும்னு எல்லாம் எந்த இலக்கும் நிர்ணயிச்சு படிக்கல. என் மனசுக்கு திருப்தியா படிச்சேன். கல்லூரி நேரம் போக, மீதி நேரமெல்லாம் லைப்ரரியே கதியா கிடப்பேன். சிலபஸ் பாடங்களைத் தவிர, நிறைய ஆய்வுப் புத்தகங்களைத் தேடிப் படிப்பேன். அதெல்லாம் மதிப்பெண்களுக்காக இல்ல. இந்த ஃபீல்டுல எனக்கு இருக்கிற ஆர்வத்தினால. கூடு கட்டறதுக்காக குருவி சிறுகச் சிறுக நார் சேர்க்கறது மாதிரிதான் நானும் என் விலங்கியல் அறிவை வளர்த்துக்கிட்டேன். அதுக்கான அங்கீகாரம்தான் இந்த பதக்கங்கள்'' என்பவரின் அடுத்த இலக்கு, அடுத்த உயரம்...

''உத்தரபிரதேசம், பைரேலியில் உள்ள 'இந்தியன் வெட்ரினரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ல (M.V.Sc)படிக்கப் போறேன். கேன்சருக்கான மருந்தை விலங்கில் இருந்து கண்டுபிடிக்கணும்கிறதுதான் லட்சியம். இன்னிக்கு போலவே,  இன்னும் ஒரு நாள் என் அப்பாவும், அம்மாவும் எனக்காக பெருமைப்படுவாங்க! '23 வயசு ஆச்சு... கல்யாணம் பண்ணிக்கோ’, 'வெளி மாநிலத்துக்கு போய் படிக்க வேண்டாம்’னு எந்த தடையும் இல்லாமப் பார்த்துக்குற அவங்களுக்கு நான் தர்ற ரிட்டர்ன் அதுதான்!'' என்றவர், தன் பெற்றோரின் முகம் பார்க்கிறார்.

தங்க மங்கை ஜெனிஃபர் !

''ஜெனிஃபர் வாங்கின சர்டிஃபிகேட்டை எல்லாம் சேர்த்துத் தூக்க முடியாம நிக்கிறோம். இந்தச் சுமை எங்களுக்கு எவ்வளவு பெரிய சுகம் என்பதை வார்த்தைகள்ல சொல்லத் தெரியல!'' என்று ஜெனிஃபரின் அம்மா ஜாஸ்மின் களிப்பில் திணற, மகளை பெருமிதம் பொங்க தோள்களில் தட்டுகிறார் அப்பா ஜேசுதாஸ் !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு