Published:Updated:

'நீர்ப்பறவை' ராகவி!

கே.தீபிகா,படம்: ப.சரவணகுமார்

'நீர்ப்பறவை' ராகவி!

கே.தீபிகா,படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

சென்னை, அயோத்தியா நகர் ஹவுஸிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருக்கிறது அந்த மிகப்பெரிய சாதனையாளரின்... சின்னஞ்சிறு வீடு!

கப்போர்டு முழுவதும் பரிசுக் கோப்பைகள், கேடயங்கள், ஹாலின் நான்கு சுவர்களிலும் மாட்டப்பட்டிருக்கும் சான்றிதழ்களை நாம் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருக்க...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நீர்ப்பறவை' ராகவி!

''எங்களுக்கு இந்த வீடு போதும். ஆனா, என் பொண்ணோட பரிசுகளும் சர்டிஃபிகேட்களும்தான் கொஞ்சம் பெரிய வீடு கேட்குதுங்க!''

- பெருமையில் சிரித்தார் ராகவியின் அப்பா     டி.மணிபால்!

ராகவி... சென்னை, தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பி.காம் மாணவி. இரண்டு வயதில் நீந்த ஆரம்பித்தவர், இன்று  மாநில, தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பரிசுகள் குவித்துக் கொண்டிருக்கும் நீர்ப்பறவை!

''எங்கப்பா, சென்னை மாநகராட்சியில மேஸ்திரியா வேலை பார்க்கிறார். அம்மா இல்லத்தரசி. என் அக்கா ரம்யா, பி.காம் ஃபைனல் இயர் படிக்கிறாங்க  என்னோட பெரியம்மா பசங்க சின்ன வயசுல இருந்து நீச்சல் கத்துக்கிட்டு இருந்தாங்க. அதைப் பார்த்த என் அப்பா என்னையும், அக்காவையும் மெரினா பீச்ல இருக்கிற ஸ்விம்மிங் பூலுக்கு நீச்சல் பயிற்சிக்கு கூட்டிட்டு போவாங்க. பெரியம்மா பசங்க கே.எஸ்.இளங்கோ சார் கிட்டதான் பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. அப்படித்தான் எனக்கு அறிமுகமானார் கோச் கே.எஸ். இளங்கோ சார். என்னோட ரெண்டு வயசுல இருந்து இப்பவரைக்கும் கிட்டத்தட்ட 16 வருஷமா நீந்திக் கிட்டே இருக்கேன். பிரெஸ்ட் ஸ்ட்ரோக்தான் என்னோட ஸ்பெஷல்.

நீச்சல்ல முதன் முதலா பரிசு வாங்கினப்ப, மூணு வருஷம் ஒன்பது மாசம்தான் என்னோட வயசு! அப்போ எனக்கு பயிற்சியாளரா இருந்த கே.எஸ்.இளங்கோ சாருக்கும், நான் பயிற்சி எடுத்த அக்வாட்டிக் கிளப்புக்கும் சமர்ப்பிக்கிற நன்றிகள்ல இருந்துதான் தொடங்கும் என் வெற்றிகள்.

சென்னை, மாநகராட்சி நீச்சல் குளத்துல ஆறு கிலோ மீட்டர் தொடர்ந்து நீந்தி என்னோட அஞ்சு வயசுல முதல் சாதனையைப் பதிவு செய்தேன். மாவட்டம், மாநிலம் எல்லாம் கடந்து, 2008-ம் வருஷம், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்ல தேசிய அளவில் முதல் தங்கத்தை வாங்கினேன். தொடர்ந்து மூணு வருஷமா 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுல தேசிய அளவுல முதலிடம் என்கிட்டதான் இருந்துச்சு. இதுக்கெல்லாம் காரணம் என்னோட இப்போதைய கோச் கிரிஷ் சார்னால தான்.

2011-ம் வருஷம், 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் சீனியர் பிரிவுல தங்கம் வாங்கினேன். அதே வருஷம் போபால்ல நடந்த 200 மீட்டர் பிரிவில் 2 நிமிஷம் 46 நிமிடம், 92 மைக்ரோ செகண்ட்ஸ்ல ரெக்கார்ட் பிரேக் பண்ணி, தேசிய அளவுல புதிய சாதனை படைச்சேன். மாநில அளவிலும் பட்டர்ஃப்ளை, இண்டிவிஜுவல்னு ரெண்டு பிரிவிலயும் ரெக்கார்ட் பிரேக் செய்திருக்கேன். இந்த தொடர் வெற்றிகள்தான்... ஸ்பான்ஸர் கிடைக்கச் செய்துச்சு. சர்வதேச ஸ்விம்மிங் சாம்பியன் அக்னீஸ்வரரோட அப்பா ஜெயபிரகாஷ் சார்தான் எனக்கு கிராண்ட் ஸ்பான்ஸர். அந்த உதவிகளால வெளிநாட்டுப் போட்டிகள்லயும் கலந்துக்க முடிஞ்சுது.

'நீர்ப்பறவை' ராகவி!

துபாய்ல சர்வதேசப் போட்டியில கலந்துக்கிட்டு உலக அளவுல 24-ம் இடம்... டெல்லி, காமன்வெல்த் போட்டியில 16-வது இடம்னு தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கேன். அடுத்த மாசம், புனேவுல சீனியர் நேஷனல் ஸ்விம்மிங் போட்டி நடக்கப் போகுது. எங்க வீட்டு கப்போர்டு இன்னும் ஒரு தங்கத்தை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கு!''

- உறுதி கொடுத்து சிரிக்கிறார் ராகவி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism