Published:Updated:

'பார்ட்டி' யைவிட, 'பணி'யே பெருசு !

சேவையில் உருகும் இளநெஞ்சங்கள்மோ.கிஷோர்குமார், படங்கள்: ரா.மூகாம்பிகை

'பார்ட்டி' யைவிட, 'பணி'யே பெருசு !

சேவையில் உருகும் இளநெஞ்சங்கள்மோ.கிஷோர்குமார், படங்கள்: ரா.மூகாம்பிகை

Published:Updated:
##~##

''மாற்றம் தேடிப் போகலாமா?''

- ஒரு கேள்வியில் தங்களின் நோக்கத்தைப் புரிய வைக்கிறார்கள், சென்னையிலிருக்கும் சவீதா பொறியியல் கல்லூரி மாணவர்கள். தங்கள் கல்லூரியில் இவர்கள் உருவாக்கிஇருக்கும் 'மாற்றம் தேடி’ என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர், செயலாளர், உறுப்பினர்கள் என்று அனைவரும் அதன் மாணவர்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது, ''இந்த சுதந்திர தினத்துக்கும் டி.வி-ல போடுற படங்களை பார்த்துட்டு, வெட்டியா தான் இருக்கப் போறோமா? எதாச்சும் செய்யலாமே..?' என்று நண்பர்களுக்குள் எழுந்த சின்ன விவாதம், ஒரு விதையாக விழ... அது ஓர் அமைப்பாக உருப்பெற்று சென்னையில் உள்ள பல அனாதை இல்லங்களுக்கும், மன நோயாளிகள் காப்பகத்துக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகள் செய்யும் அளவுக்கு இன்று வளர்ந்திருக்கிறது!

ஒரு ஞாயிற்றுக்கிழமையில்... குரோம்பேட்டை 'அரும்புகள் ஆலயத்’தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்க வந்திருந்த 'மாற்றம் தேடி’ மாணவர்களைச் சந்தித்தோம். பிருந்தா, தீபிகா, திவ்யா, அனிதா, அகல்யா, மகாராஜன், கார்த்திக், அகில் வர்மன், அர்ஜுன், முத்து பிரசாந்த் என்று வந்திருந்த பத்துப் பேர் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம்!

'பார்ட்டி' யைவிட, 'பணி'யே பெருசு !

''சுதந்திர தினத்துக்கு முதல் நாள், எங்க கிளாஸ் ஃபேஸ்புக் குரூப்ல, 'இந்த சுதந்திர தினத்துக்கும் டி.வி-ல போடுற படங்களை பார்த்துட்டு, வெட்டியாதான் இருக்கப் போறோமா? எதாச்சும் செய்யலாமே..?’னு எங்க நண்பன் லோகேஸ்வரன் போஸ்ட் பண்ணியிருந்தான். அதைப் பார்த்தப்போ, 'ஆமா... ஏதாச்சும் செய்யலாமே..?’னு எல்லாருக்குமே தோணுச்சு. மறுநாள் கிளாஸ்ல இதைப் பத்தி விரிவா விவாதிச்சோம். ஒவ்வொரு மாசமும் வகுப்பில் அனைவரும் தங்களால முடிஞ்சளவு பணத்தைப் போட்டு, தேவை இருக்கறவங்களுக்கு உதவணும்னு முடிவெடுத்தோம். அதுக்கான செயல் வடிவம்தான் 'மாற்றம் தேடி’ அமைப்பு!'' என்று அறிமுகப்படுத்தினார் அதன் நிறுவனர் மற்றும் செயலாளர் மகாராஜன். தொடர்ந்தார் பிருந்தா...

''அரும்புகள் ஆலயத்துல உள்ள ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு அப்பப்போ மதிய, இரவு உணவுகள் ஏற்பாடு பண்ணிக் கொடுக்கறது, மாணவர்கள்கிட்ட டொனேஷன் வாங்கி அவங்களுக்குத் தேவைப்படுற சின்னச் சின்ன பொருட்களை வாங்கித் தருவது, திருமுல்லைவாயில்ல இருக்கிற மனநோயாளிகள் காப்பகத்துக்கு தீபாவளி, பொங்கல்னு விசேஷ தினங்கள்ல ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுக்கிறது, விசேஷ தினங்கள்லயும் ஓய்வு தினங்கள்லயும் அவங்களோட பொழுதைக் கழிக்கறதுனு சின்னச் சின்னதா... நல்ல விஷயங்களை செய்துட்டு வர்றோம்'' என்றார் முகத்தில் பெருமையை தேக்கியபடி!

அவரைத் தொடர்ந்த திவ்யா, ''இந்த ஆகஸ்ட்14-ல 'மாற்றம் தேடி’யோட முதலாவது பிறந்தநாள். ஏதாச்சும் செய்யலாமேனு, 'ரோட்ராக்ட் கிளப்' உடன் இணைந்து, மூணு கல்லூரிகள்ல ரத்ததான முகாம் நடத்தி 342 யூனிட் ரத்தம் சேகரிச்சுக் கொடுத்தோம். 'யூத் ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ்’ என்ற அமைப்புடன் சேர்ந்து 'லைட் மியூசிக்’ ஈவன்ட் நடத்தினோம். அதன் மூலமா வந்த பணத்தை 'மை சைல்டு’ ஃபவுண்டேஷனுக்குக் கொடுத்தோம். விசேஷம் நடத்தற வீடுகள்ல மிஞ்சிப் போகிற சாப்பாட்டை, பக்கத்துல இருக்கிற காப்பகங்களுக்கு வாங்கிக் கொடுக்கிற வேலையும் செய்றோம். அடுத்தா, நவம்பர் 14 குழந்தைகள் தினத்துக்கு அரசுப் பள்ளிகள்ல போட்டிகள் வெச்சு குழந்தைகளை உற்சாகப்படுத்த தீர்மானிச்சுருக்கோம்!'' என்று உற்சாகமாக,

அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளுடன் அன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடிய அகல்யா, ''இனி ஒவ்வொரு பிறந்தநாளையும் இப்படி ஒரு ஹோம்ல கொண்டாடி, அங்க இருக்கறவங்களுக்கு சாப்பாடு, ஸ்வீட் கொடுக்கணும். கிரேட் ஃபீல்!'' என்றார் கண்கள் மின்ன.

''காலேஜ் பசங்கன்னாலே... ஃப்ரெண்ட்ஸ், பார்ட்டி, ட்ரீட், ஊர் சுத்துறதுனு நானும் இருந்திருக்கேன். அனுபவிச்சு சொல்றேன்... அதுல எல்லாம் கிடைச்ச சந்தோஷத்தைவிட, இந்தப் பணிகளில் கிடைக்குற நிறைவே தனி. இப்போ நாங்க ஃபைனல் இயர்ல இருக்கோம். இந்த அமைப்பில் முக்கியமான பதவிகளில் இருக்கற அத்தனை பேரும் படிப்பு முடிஞ்ச பிறகும், இந்த சேவையை அப்படியே தொடர் வோம்!'' என்று அமைப்பின் எதிர்காலத்துக்கும் ரூட் போட்டார் கார்த்திக்!

வாழ்க... இளநெஞ்சங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism