##~## |
''கல்லூரி செல்லும் தங்கை, அதிகம் தனிமையில் முடங்குகிறாள். எதைக் கேட்டாலும் எரிந்து விழுகிறாள். பொறுமையாக விசாரித்தபோது, அவள் இல்லாதபோது எல்லோரும் அவளைப் பற்றியே பேசுவதாகவும் சிரிப்பதாகவும் புகார் சொல்கிறாள். இதே புகாரை அவளுடைய தோழிகளிடமும் அவள் கூறியிருப்பது தெரிய வந்தது. இது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா?''
- பெயர் வெளியிட விரும்பாத வாசக சகோதரி என்.ரஹ்மான்கான், மனநல ஆலோசகர், கோவை:
''நாலு பேர் நாலு விதமாக நம்மைப் பற்றி... என்பதான சந்தேகம், நம் எல்லோரையும் கடந்து செல்வதுதான். ஆனால், எந்தவொரு முகாந்திரமும் இல்லாது... ஒரே நாளில் அடிக்கடி இந்த சந்தேகம் ஏற்பட்டால், அது தீவிர உளவியல் பாதிப்பின் ஆரம்பமாக இருக்கும். சுயமதிப்பீடு குறைவாக இருப்பவர்கள், ஏதேனும் குற்ற உணர்வில் உழல்பவர்கள், தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிப்பவர்கள், சந்தேகப்படுவதை குணமாகக் கொண்டவர்கள், கட்டுப்பாடான சூழலில் இறுக்கமாக வளர்பவர்கள்... என பல காரணிகளில் ஏதேனும் ஒரு கண்ணியில் அவர்களே அறியாமல் உளவியல் பிறழ்வாக இது நிகழ்ந்துவிடும். அடுத்தகட்டமாக மனச்சிதைவு, அதிதீவிர சந்தேக உணர்வு, அதீத மனக்கிளர்ச்சி என மற்ற சில மனநலக்கேடுகளை இதுவே வரவழைத்துவிடும்.

இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் சுலபமாக கற்பனை செய்துகொள்வார்கள். நண்பர்கள், குடும்பத்தினர்களையே எதிரியாக பாவித்து புதிய சங்கடங்களை உருவாக்கிக் கொண்டு, நாளடைவில் மேலும் சிக்கலாக்கிக் கொள்வார்கள்.
ஒரு கட்டத்தில் செய்தித்தாளில் வரும் செய்தியேகூட, தன்னைப்பற்றியே குறிப்பிடுவதாகவும், டி.வி சீரியல்கள்கூட தன்னை பகடி செய்யவே திட்ட மிட்டு ஒளிபரப்புவதாகவும் மிகையான கற்பனைக் குள் தீவிர நம்பிக்கையோடு உலா வருவார்கள். இந்தப் போக்கில் தடக்கென்று எண்ணம், சொல், செயல் எதுவுமே ஒன்றுக்கொன்று தொடர்பின்றி மாறிப்போகும் ஆபத்தும் உண்டு.

கூடுதல் புரிதலோடும் பரிவோடும் நீங்கள் அணுகினால்... அவரை மேற்படி பாதிப்புகளுக்குள் வீழாது காப்பாற்ற முடியும். அவர் பேசுவதை, புலம்புவதை எந்தவிதமான பரிகாசமும் இன்றி முதலில் காதுகொடுத்து கேட்கப் பழகுங்கள். பிறகு, அவரது போக்கிலேயே மெதுவாக யதார்த்தத்தை உணரச் செய்யுங்கள்.
இந்த முயற்சியில் பலனில்லை என்றால், அவரது நிலையில் தூக்கமின்மை, பசியின்மை, கவனச்சிதறல், சமூகத்தோடு ஒன்றமுடியாது நாளும் புதுப்பிரச்னைகள் என கூடுதல் உபத்திரவங்கள் உருவானால்... உங்கள் தங்கைக்கு மனநல மருத்துவம் அவசியம்.
ஆரம்ப நிலையில் மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றால், கவுன்சலிங் தெரபிகள் மூலமாக தனது பிரச்னைகளை சுயமாக அலசி ஆராயும் திறனையும், பிரச்னைகளில் இருந்து வெளிவருவதற்கான பயிற்சியையும் தருவார். தவறு என்று தனக்குத் தெரிவதை தவிர்ப்பது எப்படி என்ற திடமும், சுயமுன்னேற்றப் பழகுதலுமாக இந்த தெரபி அமைந்திருக்கும். கூடுதல் அவஸ்தைகளோடு சற்றே முரண்டு பிடிக்கும் நிலையில் இருப்பவருக்கு... மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து, மாத்திரைகளுடன் கூடிய மனநல கவுன்சலிங் தரப்படும்.''
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு, எந்த டிகிரி ஓ.கே...?
''ப்ளஸ் டூ படிக்கும் நான், டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, உரிய அரசுப் பதவியில் சேர வேண்டும் என திட்டமிட்டுள்ளேன். அதற்கு ஏதோ ஒரு டிகிரி படிப்பதற்கு பதில்... பொலிட்டிகல் சயின்ஸ் அல்லது பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பது புத்திசாலித்தனம் என்கிறார் அரசுப் பதவியிலிருக்கும் குடும்ப நண்பர். பின்பற்றலாமா..?''
டாக்டர் ஏ.அழகுமலை, அரசியல் மற்றும் நிர்வாகத்துறை பேராசிரியர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி, கமுதி:
''உங்கள் ஆர்வத்துக்கு உடன்பட்டு வருமெனில்... இது நல்ல யோசனையே. ஏனெனில் பல்வேறு போட்டித் தேர்வுகள் மட்டுமல்ல, மாநில அரசின் டி.என்.பி.எஸ்.சி, மத்திய அரசின் யு.பி.எஸ்.சி மற்றும் எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகளுக்கான பாடங்கள்... பெரும்பாலும் பொலிட்டிகல் சயின்ஸ், சோஷியாலஜி, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற பட்டப் படிப்புகளில் உள்ளடங்கிவிடும்.

இந்தத் தேர்வுகளை தங்களது வேலைவாய்ப்புக்கான நுழைவாயிலாக நினைத்து ஆயத்தமாகுபவர்கள், வேறு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை மேற்கொள்ளும்போது படிப்பு சுமை இருமடங்காகலாம். எனவே, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படிப்புகளையே தேர்ந்தெடுப்பது நல்ல சாய்ஸ், இரட்டிப்பு படிப்பு சுமையும் குறையும். மேலும் போட்டித் தேர்வுக்கான ஆயத்தத்தை மற்றவர்களைவிட ஆழ அகலங்களில் விஸ்தீரமாக மேற்கொள்ளவும் ஏதுவாகும்.
மேற்சொன்ன பட்டப் படிப்புகள் நீங்கள் குறிப்பிட்ட தேர்வுகளுக்காக மட்டுமல்லாது... வேலை வாய்ப்பிலும் பன்முகம் கொண்டது. முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்புகளை கூடுதலாக இதே துறையில் மேற்கொள்ளும்போது நிர்வாகம், மக்கள் தொடர்பு, ஒருங்கிணைப்பு, தகவல்தொடர்பு, கவுன்சலிங், கருத்தாக்கத் தொடர்பு, மனிதவள மேம்பாடு, சமூக ஆராய்ச்சியாளர், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியப்பணி என ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
அரசு, தனியார் வேலைவாய்ப்பு மட்டுமல்லாது சுயதொழில் வாய்ப்புகளிலும் சமூகம், நிர்வாகம், அரசியல் உள்ளடக்கிய இந்தப் படிப்புகள் அவர்களை சிறப்பாக சாணை தீட்டும். ஏட்டுப் படிப்பைத் தாண்டியும் ஒருவரின் அடிப்படை உரிமைகள் கடமைகள், சமத்துவம், விழிப்பு உணர்வு என வாழ்க்கைக்கான அத்தியாவசியங்களையும் இந்தப் படிப்புகள் தரும்.''