ரெகுலர்
Published:Updated:

நாங்களும் டைரக்ட் பண்ணுவோம் பாஸ்...!

ரா.ராபின் மார்லர் படங்கள்: ஜெ.முருகன்

##~##

''சினிமாவில் பாகவதர் காலம் தொடங்கி, 'பவர் ஸ்டார்' காலம் வரை கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் ஆண்கள் ஆதிக்கம்தான். விரல்விட்டு எண்ணும் அளவுக்கே பெண் இயக்குநர்கள் இருந்திருக்காங்க. நாங்க எல்லாரும் எதிர்காலத்தில் அதை மாற்றி காட்டப் போறோம் நோட் பண்ணிக்கோங்க!''

- பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மாஸ் கம்யூனிகேஷன் மாணவிகள் சலம்ப, அவங்களோட ஒரு டேக், கேமரா, ஆக்ஷன்தான் இந்தக் கட்டுரை!

அவசர அவசரமா விஷ§வல் லேபுக்கு கிளம்பிய 'லேடி ஸ்பீல்பெர்க்ஸ்’ கூட்டணியோட நாமளும் சேர்ந்துக்க, ஒரு கேமரா, குடை, தெர்மாகோல், ஸ்டேண்ட் சகிதம் வெயில்ல தேடலை ஆரம்பிச்ச கூட்டம், மர நிழலில் ஹால்ட் ஆனது.

''என்னங்க... இதுதான் 'லேப்’பா?''னு நாம கேட்க,

''யூ ஸீ... நாங்க படம் எடுக்கப் போறோம். பட்... லைட்டிங் சரி இல்ல''னு பாரதிராஜா ரேஞ்சுக்கு வானம் பார்த்து யோசனையில் ஆழ்ந்தாங்க தன்யா.

''ஓ.கே... கதை என்ன?''னு நாம் அடுத்த கேள்வியைப் போட,

நாங்களும் டைரக்ட் பண்ணுவோம் பாஸ்...!

''அது சஸ்பென்ஸ்''னு சொல்லிட்டு, மொபைலில் பிஸி ஆனாங்க கேர்ள்ஸ். காது தீயற அளவுக்கு பேசி முடிச்ச பிறகு, ஒருவழியா ஆரம்பிச்சுது கதை டிஸ்கஷன்.

''5 பாட்டு, 6 ஃபைட் ஸீன், பஞ்ச்  டயலாக் பேசி 10 பேரை பந்தாடும் ஹீரோ, கடலில் மூழ்குற கப்பலோட நங்கூரத்தை வயிற்றில் கட்டிக்கிட்டு, நீச்சல் அடிச்சு கரையை அடைஞ்சு, கப்பலை காப்பாத்துறதுனு தமிழ் சினிமாவோட மொக்கை மரபுகளை உடைச்சு, நாங்க எடுக்கப் போறது எதார்த்தப் படம்!''னு சித்ரா 'பெப்’ ஏத்த,

'ரட்சகன்’ படத்துல வர்ற நாக்கு பூச்சி போல திடீர்னு எல்லோருக்குள்ளும் ஒரு வேகம் வந்து... ''ஹே நான் டைரக்டர், நீ கேமராமேன், நீ லைட்டிங் பார்த்துக்கோ, ஜனனி நீதான் ஹீரோயின்!''னு திடீர் தலை ஆனாங்க நதி.

நாங்களும் டைரக்ட் பண்ணுவோம் பாஸ்...!

''ஓபன் பண்ணினா, காலேஜ் பொண்ணுங்கள... காலேஜ் பசங்க ராகிங் பண்றாங்க, பொண்ணுங்க எல்லாம் ஃபீல் பண்ணும்போது, திடீர்னு ஒரு ஏலியன் வந்து பசங்கள அடிச்சு போட்டு ஹீரோ ஆகுது. எப்புடி இன்ட்ரொடக்ஷன் ஸீன்?''னு சவிதா கேட்க,

''ஏய், அந்த ஏலியனுக்கு வேற ஆள் வேணாம்ப்பா... நீயே நடிச்சுடு!''னு மொக்கை மேல மொக்கையா அடுக்கினாங்க கேர்ள்ஸ்.

அடுத்தாப்ல... ''ஓபன் பண்ணினா...''னு தன் பங்குக்கு ஒரு கதை ஆரம்பிச்சாங்க சித்ரா.

''ஹீரோயின் ஒரு சைக்கிள்ல போறா. திடீர்னு வண்டி பஞ்சர் ஆயிடுது. அந்த இடத்துல 'இயக்கம் - சித்ரா’னு போடுறோம். சைக்கிள் எப்படி பஞ்சர் ஆகுதுங்கறதுதான் கதை.''

''சரி அது ஃபிரன்ட் டயரா... பேக் டயரா..?''னு இந்தக் கதையில் டவுட் வேற கிளம்ப,

''அங்கதான் வைக்கிறோம் ட்விஸ்ட்!''னு பீதியைக் கிளப்பினாங்க சித்ரா.

நாங்களும் டைரக்ட் பண்ணுவோம் பாஸ்...!

''டிஸ்கஷன்ல ரொம்ப டயர்டு ஆகிட்டோம்...''னு கேன்டீன் பக்கம் ஒதுங்கின கேர்ள்ஸ், அங்கே வியாபாரத்தை ஜோராக்கிட்டு 'பேக் டு த ஃபீல்டு’ வந்தாங்க.

''அது என்ன ஹீரோ மட்டும் 50 வயசுல ஸ்கூல், காலேஜ் எல்லாம் போறாங்க, ஹீரோயின்ஸ் போகக் கூடாதா? குஷ்பு, அம்பிகா, ராதா இவங்க எல்லாம் ஸ்கூல்ல படிக்கற மாணவிகள் மாதிரி ஒரு கதை எழுதணும்''னு தன்யா பேனா எடுக்க, நல்லவேளையா அதை பறிச்சி ஒளிச்சு வெச்சு உலகத்தை காப்பாத்தினாங்க ஜனனி.

''எங்கிட்ட ஒரு சூப்பர் ஒன் லைன் இருக்கு. ஆனா, அதை வெளியில் சொன்னா வேற யாராச்சும் எடுத்துடுவாங்க. ஸோ, இன்னும் மூணே வருஷத்துல டைரக்டா ஸ்க்ரீன்ல பார்த்துக்கோங்க. அப்போ இந்த கற்பகத்தோட இடம், தமிழ் சினிமாவில் டாப் ரேங்க்ல இருக்கும். என்னோட ரசிகர் மன்ற வேலைகள், பேனருக்கு பாலபிஷேகம் பண்ற பொறுப்புகளை எல்லாம் நீங்கதான் பார்த்துக்கணும் கேர்ள்ஸ்!''னு கற்பகம் 'நான்ஸ்டாப்’பா பேசிட்டே போக,

''ஏய்''னு கேர்ள்ஸ் அவங்களத் துரத்த, அது ஒரு ஆக்ஷன் எபிசோட்!