ரெகுலர்
Published:Updated:

கொஸ்டீன்ஸ்

சிறகடிக்க வைக்கும் சிம்பிள் மேக்கப் !

##~##

''நகர வாழ்க்கைக்கு புதியவள் நான். அழுத்தமான அடர்த்தியான மேக்கப்பில் எனக்கு விருப்பம் இல்லை. அதேசமயம் முக்கிய தருணங்களில் மட்டும் அழகுபடுத்திக் கொள்வதை விரும்புகிறேன். அப்படியான மேக்கப், பார்வைக்கு உறுத்தாத வகையில்... அதேசமயம் எனது பியூட்டி ப்ளஸ்களை வெளிப்படுத்த ஏதுவாகவும் இருக்க வேண்டும். அதற்கான டிப்ஸ் கிடைக்குமா?''

- நிர்மலா, திருச்சி

ஐ.செல்வநாயகி, அழகுக்கலை நிபுணர், கோவை:

''மேக்கப் போட்டதே தெரியாத மேக்கப் அணிய வேண்டும் என்பது, இப்போதை இளசுகளின் பியூட்டி ஃபேஷன். இது தனித்துக் காட்டி, தன்னம்பிக்கை வெளிப்படுத்துவதாகவும் அமையும் என்று நம்புகிறார்கள். இதற்கான அழகுபடுத்தலுக்கு ஆரம்பத்தில் ஓரிரு முறை பியூட்டி பார்லருக்கு சென்று வரலாம். அவர்கள் அலங்கரிக்கும் விதத்தை பிறகு... நீங்களே சுயமாக பின்பற்ற முடியும்.

முதலில் உங்கள் அருகில் இருக்கும் தரமான பியூட்டி பார்லரை அணுகி, 'எனது ஸ்கின் கலருக்கு பொருத்தமான மீடியம் மேக்கப் வேண்டும்’ என்று கேளுங்கள். க்ளென்சிங் க்ரீம் மூலமாக முகத்தை சுத்தம் செய்ததும், உங்களுக்கு அலர்ஜி தராத, அதேசமயம் ஸ்கின் கலருக்கு பொறுத்தமான ஃபவுண்டேஷனை மேற்கொள்ளுங்கள். உறுத்தாத மேக்கப்பை விரும்பும் பலரும் வழுக்குவது, தங்களுக்கு உகந்த காம்பாக்ட் பவுடரை செலக்ட் செய்வதில்தான். பியூட்டி எக்ஸ்பர்ட் உதவியுடன் உங்கள் சருமத்துக்குப் பொருத்தமான காம்பாக்ட் பவுடரை தேர்ந்தெடுத்து, அதையே பயன்படுத்துங்கள். காஜல் ஐலைனர் உபயோகிக்கலாம்.

கொஸ்டீன்ஸ்

பெரும்பாலானோர் சொதப்புவது லிப்ஸ்டிக் தேர்வு மற்றும் அதை உபயோகிப்பதில்தான். லிப்ஸ்டிக்கை நேரடியாக இதழ்களில் பூசுவதற்குப் பதில்... அதற்கென இருக்கும் அவுட்லைன் பென்சிலால் உதடுகளின் விளிம்புகளில் 'அவுட்லைன்’ வரைந்து, அதற்குள் மட்டும் பிரஷ்ஷால் லிப்ஸ்டிக்கை ஒற்றினால் போதும். அவுட்லைனர் கொண்டு வரையும்போதே மேலுதட்டு V ஷேப்பை மழுங்கடிக்காது பார்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் உதட்டில் V ஷேப் இல்லையென்றாலும் பரவாயில்லை, அவுட்லைனர் கொண்டே வரைந்தும் கொள்ளலாம். முகத்துக்கு மேலே சொன்ன இந்த சிம்பிள் மேக்கப்கள் போதும்!

கேசத்தை பொறுத்தவரை 'புளோ டிரை' (Blow dry) முறையில் பொருத்தமான ஷாம்பு ப்ளஸ் கண்டிஷனர் உதவியுடன் பார்லரில் அலசிக் கொள்ளலாம். பிறகு, இதே டெக்னிக்கை வீட்டிலும் பயன்படுத்தலாம். இந்த 'புளோ டிரை' கேசம், அதிக அடர்த்தியையும் அலைபாயும் தன்மையையும் தந்து இயற்கையான கவர்ச்சிக்கு வழிசெய்யும்.

'நெயில் ஃபைலிங்' (Nail filing) முறையில் விரல்களை வடிவமாக்கிக் கொண்டு, டிரெஸ்ஸுக்கு மேட்சாக நெயில் பாலிஷ் போடலாம். அணிகலன்களைப் பொறுத்தவரை, தங்கத்தைவிட... பஞ்சாபி மற்றும் குஜராத்தி பாணியிலான ஃபேஷன் அணிகலன்களே தற்போது ஹிட். காதில் பெரிய ரிங் அணிந்தால்... கழுத்தில் சின்ன நெக்லஸ் போதும். மேட்சாக இதே ஃபேஷனில் வளையல்கள் அணியலாம்.

ஆடைகளைப் பொறுத்தவரை கலந்துகொள்ளும் நிகழ்ச்சி, அதன் பங்கேற்பாளர்கள், உங்கள் உடல்வாகு, ஸ்கின் கலர் என பல அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, ஆடையைத் தேர்ந்தெடுங்கள். பகல் எனில் சற்று அழுத்தமான வண்ணத்தில் உடுத்தலாம், மாலை எனில் உறுத்தாத நிறங்களை தேர்வு செய்யலாம்.

கொஸ்டீன்ஸ்

இயல்பான அழகு மிளிர்வுக்கு அந்த நேரத்து அலங்கரிப்பைவிட தொடர்ச்சியான உடல்நல மற்றும் அழகு பராமரிப்பை மேற்கொள்வது பலன் கொடுக்கும். இதற்கு மார்க்கெட்டில் கிடைக்கும் முன்னணி அழகுசாதன தயாரிப்புகளைவிட, நமது பாரம்பரிய தயாரிப்புகளே பெஸ்ட். அந்த வகையிலான எளிமையானதும் சுலபமானதுமான வழிமுறைகளை பின்பற்றலாம்.

கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு பவுடர் கலந்து தோசைமாவு பதத்தில் முகத்தில் வாரம் இருமுறை பூசி, அது காய்ந்ததும் குளிர் நீரில் கழுவி வருவது இதில் முதன்மையானது. சோற்றுக்கற்றாழை ஜெல்லை நீரில் நன்கு கழுவி, முகத்துக்கு மூன்று நிமிடம் மசாஜ் செய்து குளிர் நீரில் கழுவிவந்தால், அழகோடு இந்த வயதுக்கே உரிய முகப்பரு உள்ளிட்ட சருமத்தொல்லைகள் எட்டிப் பார்க்காது. முக சருமப் பொலிவுக்கு மற்றொரு எளிய உபாயம்... முட்டையின் வெள்ளைக்கருவை தடவி கழுவுவது.

இயற்கையான அழகு வெளியே அலங்கரிப்பதைவிட, உள்ளிருந்தே அதிகம் வெளிப்படும். எனவே முந்தைய இரவில் எட்டு மணி நேர தூக்கத்தை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் கூடாது. பச்சைக் காய்கறிகள், கீரை இவற்றோடு பழங்கள் சாப்பிடுவது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் மூச்சுப்பயிற்சி செய்வதும் வெறும் வயிற்றில் கால் லிட்டரேனும் குளிர் நீர் அருந்தி வருவதும் உடலின் உள் அவயங்களை துலங்கச் செய்து, அந்த ஆரோக்கியத்தை வெளியில் அழகாக மிளிரச்செய்யும். இவற்றோடு மறக்காமல் உங்களுக்கே உரித்தான தன்னம்பிக்கையையும் புன்னகையையும் கொண்டு உங்களை அலங்கரிப்பதை மறந்துவிட வேண்டாம்!''