Published:Updated:

தகதிமிதா கேர்ள்ஸ்!

தகதிமிதா கேர்ள்ஸ்!

தகதிமிதா கேர்ள்ஸ்!

தகதிமிதா கேர்ள்ஸ்!

Published:Updated:
##~##

வெஸ்டர்ன், ராக்,பெல்லி, சல்சா,ஹிப்ஆப்என்று நடனங்களைப்பொறுத்தவரை இன்றைய இளசுகள் பல படிகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு நடுவேயும்... நம்முடைய பாரம்பரிய நடனமான பரதம் கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் குறையாமல்தான் இருக்கிறது... என்பதற்கு உதாரணம், இந்தப் பெண்கள்தான். இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் என பலவிதமான படிப்புகள்... இன்ஜினீயர் உள்ளிட்ட பலவிதமான வேலைகள்... என வெவ்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருந்தாலும்... இந்தப் பெண்கள் எல்லோருக்குமான ஒற்றுமையே... பரதம் கற்றுக் கொள்வதுதான்!

 ஏன் இந்த பரத ஆர்வம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாம்பலம், 'ரெட்சித்த நிருத்யாலயா’ நடனப் பள்ளியில், குரு விஜய் மாதவனிடம் பரதம் கற்றுக்கொண்டிருக்கும் அந்தப் பெண்களிடமே கேளுங்களேன்...

சென்னையில், தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினீயராக வேலை பார்க்கிறார் அபர்ணா ரமணன், ''பரத நாட்டியம் எங்கம்மாவோட நிறைவேறாத ஆசை. அதனால, என்னை இதுல சேர்த்துட்டாங்க. ஆறு வயசுல அரங்கேற்றம் பண்ணிட்டேன். ஒன்பது வயசுல குன்னக்குடி வைத்தியநாதன் சார் முன்னால ஆடினது, மறக்க முடியாத அனுபவம். 'ஆடும்போது கொடுக்குற ஒவ்வொரு முக பாவனையும் இதயத்துல இருந்து கொடுக்கணும்’னு சொல்வார் என் குரு. அதை சின்ஸியரா ஃபாலோ பண்றேன். நம்ம பாரம்பரிய நடனத்தை, உலகம் பூரா எடுத்துப் போகணும்கிறதுதான் என் டார்கெட்!'' என்கிறார் கண்கள் விரித்து.

தகதிமிதா கேர்ள்ஸ்!

''என் பேரு பத்மா ஸ்ரீரங்கன். பிரின்ஸ் வெங்கடேஸ்வரா இன்ஜீனியரிங் காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன்...'' என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் பத்மா,

''வைஜெயந்திமாலா மேடத்தை பார்த்துதான் நாட்டியத்துல ஈர்ப்பு. பதினோராம் வகுப்புப் படிக்கும்போதே என் அரங்கேற்றம் நடந்துடுச்சு. அடையாறு, ஆனந்தபத்மனாப சுவாமி கோயில் ஸ்வாதி தினநாள் விழாவில் ஆடினது பரவச அனுபவம். அதேபோல, காசிவிஸ்வநாதர் கோயிலில் 'விசித்திர வைபவம்’  நிகழ்ச்சி நடந்த அன்று தனி நடனம் ஆடி, அத்தனை பேர்கிட்டயும் பாராட்டு வாங்கினது ஆசீர்வாதம். எதிர்காலத்தில் நாட்டியப் பள்ளி ஆரம்பிக்கணும்கிறதுதான் லட்சியம்!'' என்று சலங்கையைக் கட்டிக்கொண்டார்.

சென்னையில் உள்ள 'ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங்'கில் ஃபைனல் இயர் பி.ஆர்க் படிக்கும் ஷ்ருதிலஷ்மி, ஐந்து வயதில் இருந்து நடனம் கற்றுவருகிறார்.

''ஒன்பதாவது படிக்கும்போது அரங்கேற்றம் பண்ணினப்போ, எதைப் பற்றி பண்றதுனு யோசிச்சேன். பக்தி பகுதியில் பண்றது ரொம்பக் கஷ்டம்னு நான் தயங்க, 'உன்னால முடியும்’னு நம்பிக்கை கொடுத்தார் என் குரு. கண்ணப்ப நாயனார் கதையை அரங்கேற்றத்தில் ஆடினேன். அவ்ளோ பாராட்டுகள். அதில் தொடங்கி ஏறும் மேடை எல்லாம் பாராட்டுகள் வாங்கிட்டு இருக்கேன். ஒரு வாரம் நாட்டிய கிளாஸுக்கு போகலைனா, என்னால நார்மலா இருக்க முடியாது. அந்தளவுக்கு ஐ லவ் பரதம்! இதுக்கு மேல காரணம் சொல்லத் தெரியல'' என்று சிரிக்கிறார் ஷ்ருதி!

தகதிமிதா கேர்ள்ஸ்!

''நான் துபாய்ல இருந்தப்போ என்னோட முதல் குரு நடராஜன். அப்புறம் இந்தியா வந்து குரு விஜய்மாதவன்கிட்ட நாட்டியம் கத்துக்குறேன்.  இவரோட ஸ்டூடன்ட்ஸ்ல நான்தான் முதலில் அரங்கேற்றம் பண்ணினேன். ஆல் இந்தியா லெவல் சம்ஷ்காரபாரதி நிகழ்ச்சி, வி.டி.எஸ் ஆர்ட்ஸ் அகாடமி நிகழ்ச்சினு கலந்துட்டு பரிசு வாங்கினேன். இது எல்லாத்தையும்விட பெருமையா நான் நினைக்கறது... மார்கழி உத்சவம் சமயத்தில் என் குருவுக்கு நட்டுவாங்கம் பண்ணினது. தர்மஸ்தலா, 'விஜிரை’ விழாவின்போது நான், என் குரு, என் குருவோட குரு மூணு பேரும் ஒரே மேடையில் ஆடினது... பொக்கிஷ தருணம். என் குரு உருவாக்கிய 'பாரதியின் சன்மதம்’ என்கிற டி.வி.டி-யில் நானும் இருக்கேன்'' - பெருமிதம், அமெரிக்காவின் அரிஸோனா ஸ்டேட் யுனிவர்ஸிட்டியில் எம்.எஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் சௌமியாவின் பேச்சில்!

எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் பி.காம்., இரண்டாம் வருட மாணவி ஹேமமாலினி. ''தஞ்சாவூர் பிரகதீஸ்வரார் கோவில்ல ஆடணும்கிறது ஆசை. அது இன்னும் ஈடேறல. கே.கே நகர் ஐயப்பன் கோயிலில் தீபம் திருநாளுக்காக தனி நாட்டியம் ஆடினது சந்தோஷம். 'ஒளவை ஹோம்’ல ஆதரவு இல்லாத குழந்தைகள் முன்னாடியும், 'விஷ்ராந்தி’ முதியோர் இல்லத்துலயும் ஆடினது, அதைவிட சந்தோஷம். 'இதைவிட பெரிய ஸ்டேஜ் வேற எதுவுமே இல்ல’னு மனப்பூர்வமா உணர்ந்தேன்!'' என்று உருகினார் ஹேமமாலினி.

சென்னையில் உள்ள 'எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரி'யின் இரண்டாம் ஆண்டு மாணவி ரூபா, ''என் கசின் கல்யாணத்துக்கு லால்குடி ஜி.ஜெயராமன் வந்திருந்தாங்க. இது எனக்கு கடைசி நிமிடம் வரை தெரியாது. தெரிஞ்சதும், அவர் கம்போஸ் பண்ணின பாடலுக்கு அவர் முன்னிலையில் ஆடினேன். என்னைப் பாராட்டினதோட, மறக்காம என் குருகிட்டயும் என்னைப் பாராட்டி சொல்லியிருக்கார். நட்டுவாங்கம் கத்துக்கணும்கிறதுதான் என் ஆசை'' என்று அடுத்த கட்டத்துக்கு அடிபோட்டார்!

தகதிமிதா கேர்ள்ஸ்!

- கே.அபிநயா   படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism