Published:Updated:

அக்காவுக்கு வெண்கலம்... தங்கைக்கு தங்கம்!

அக்காவுக்கு வெண்கலம்... தங்கைக்கு தங்கம்!

அக்காவுக்கு வெண்கலம்... தங்கைக்கு தங்கம்!

அக்காவுக்கு வெண்கலம்... தங்கைக்கு தங்கம்!

Published:Updated:
##~##

''எனக்கு போட்டி... என் தங்கச்சிதான்!''

 - அக்கா அபர்ணா சொல்ல, செல்லமாக அவரைக் கட்டிக்கொள்கிறார் தங்கை புவனேஸ்வரி! செஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் கலக்கிக் கொண்டிருக்கும் திருச்சிப் பெண்கள்!தஞ்சாவூர், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஐ.டி. இன்ஜினீயரிங் முடித்துவிட்டு டி.சி.எஸ்-ல் பணியில் இருக்கிறார் அபர்ணா. புவனேஸ்வரி, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். பிறந்த மண்ணில் பெற்றோருடன் இருவரும் குஷியாக இருந்த தருணத்தில் அவர்களைச் சந்தித்தோம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எனக்கு 10 வயசுலதான் செஸ்ல ஆர்வம் வந்துச்சு'' என்று ஆரம்பித்த அபர்ணா,

''வீட்டுல அப்பாவும் அம்மாவும் செஸ் விளையாடுவாங்க. அதைக் கவனிச்சுதான் நானும் கத்துக்கிட்டேன். அப்படியே ஸ்கூல்ல செஸ் போட்டிகளில் கலந்துகிட்டு ஜெயிச்சேன். ப்ளஸ் ஒன் படிக்கும்போது, செஸ் விளையாட்டில் எனக்கு ஒரு சின்ஸியாரிட்டி வந்துச்சு. அதைப் பார்த்த அப்பா, ஒரு பயிற்சியாளரை ஏற்பாடு செஞ்சார். அப்புறம் டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட், நேஷனல், காமன்வெல்த்னு படிப்படியா வெற்றிகள். போன வருஷம் காமன்வெல்த் போட்டியில கலந்துகிட்டு வெண்கலம் வாங்கினேன். அப்போ நான் யார்கிட்ட தோற்றேன் தெரியுமா? சாட்சாத் என்னோட அன்பு தங்கச்சி புவனேஸ்வரிகிட்டதான்!'' என்று சர்ப்ரைஸ் கொடுத்த அபர்ணா, இப்போது செஸ் போட்டிகளுக்கான ஜூனியர் பயிற்சியாளராக அகில இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அக்காவுக்கு வெண்கலம்... தங்கைக்கு தங்கம்!

''இப்போ புவனேஸ்வரி பேசுவா...'' என்ற அபர்ணா, தன் தங்கையின் கைகளைக் கோக்க, தொடர்ந்தார் புவனேஸ்வரி...

''சின்ன வயசுல நான் விளையாட கூப்பிட்டா வராம, அக்கா எப்பவும் செஸ் போர்டுலயே உட்கார்ந்திருப்பா. அதனாலயே எனக்கு செஸ் பிடிக்காது. ஸ்கூல்ல த்ரோ பால் சாம்பியன் நான். நேஷனல் லெவல் த்ரோ பால் பிளேயர். ஒருநாள் அக்கா மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்துக்கிட்டப்போ, நானும் போயிருந்தேன். லீக் போட்டியில ஒருத்தருக்கு மட்டும்கூட விளையாட ஆள் இல்லை. எனக்கு செஸ் விளையாடத் தெரியும்ங்கிறதால, சரினு உட்கார்ந்தேன். அந்தப் போட்டியில ஜெயிச்சுட்டேன். அடுத்த போட்டியில தோத்துட்டாலும், செஸ் மேல எனக்கு புதுசா ஆர்வம் உண்டானது. வீட்டுல அக்காவோட விளையாட ஆரம்பிச்சேன். ஒரே வருஷத்துல ஸ்டேட் லெவல் போட்டிகள்ல ஜெயிக்கிற அளவுக்கு வளர்ந்தேன்.

அக்காவுக்கு வெண்கலம்... தங்கைக்கு தங்கம்!

'அடுத்த வருஷம் டென்த்... அதனால போட்டிகளுக்கெல்லாம் போகக் கூடாது'னு எங்க ஸ்கூல்ல சொல்லிட்டாங்க. அப்பதான், நான் மாநில அளவுல செஸ்ல ஜெயிச்சத பாராட்டி,  ஏ.கே.கே.வி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல இருந்து எனக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தாங்க. உதவிகள் தேவைனா தொடர்பு கொள்ளவும் சொல்லியிருந்தாங்க. அதைப் பயன்படுத்திக்கிட்டு, அந்த ஸ்கூலுக்கு இடம் மாறிட்டேன். இருந்தாலும்,  நண்பர்களைப் பிரியறது ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அப்போ, 'வாழ்க்கையில ஒண்ணை ஜெயிக்க... இன்னொண்ணை இழந்துதான் ஆகணும்’னு அக்கா சமாதானப்படுத்தினாங்க.

அந்த வருஷம் சிங்கப்பூர்ல நடந்த காமன்வெல்த் போட்டியில நாலாவது இடமும், கிரீஸ் நாட்டுல நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில ஆறாவது இடமும் பிடிச்சேன். அதன்பிறகு ஆசிய அளவில் முதலிடம், நேஷனல் அளவில் தங்கம் ஜெயிச்சேன். தென் ஆப்பிரிக்காவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் எனக்கும் அக்காவுக்கும் சரியான போட்டி. இறுதியா நான் தங்கம் வெல்ல, அக்கா வெண்கலம் ஜெயிச்சா. அக்காவையே ஜெயிச்சுட்டதால அந்த வெற்றி எனக்கு தவிப்பா இருக்க, 'சூப்பர்!’னு கட்டிப் பிடிச்சு வாழ்த்தினா அக்கா. எனக்கு ரோல் மாடல், என் அக்காதான்!'' என்று அபர்ணாவைப் பார்க்கிறார் புவனேஸ்வரி.

''வெளிநாடுகள்ல நடக்குற போட்டிகளுக்கு எங்கம்மாதான் கூட்டிட்டுப் போவாங்க. அவங்களுக்கு வெளியுலகம், விளையாட்டு எக்ஸ்போஸர்கள் இல்லைனாலும், எங்களுக்காகவே எல்லாத்தையும் கத்துக்கிட்டாங்க. போட்டியில ஜெயிக்கணும்னு எந்த பிரஷரும் கொடுக்காம, உற்சாகப்படுத்துறதை மட்டுமே செய்வார் எங்கப்பா. எங்களோட எல்லா வெற்றிகளும் இவங்க ரெண்டு பேருக்கும்தான் சமர்ப்பணம்!''

- பெற்ற மனம் குளிர வைத்தனர் சகோதரிகள்.

''எங்க பொண்ணுங்க ஸ்டேட், நேஷனல், ஆசியா, காமன்வெல்த் வரை தங்கம் ஜெயிச்சுட்டாங்க. அடுத்த இலக்கு, உலக சாம்பியன்தான். அந்த வெற்றிகளுக்காக காத்துட்டு இருக்கோம்!'' என்றபோது, அவர்களின் பெற்றோரான ராஜா - சித்ரா தம்பதியின் கண்களில் பெருமிதம்!

சியர்ஸ் கேர்ள்ஸ்!

- பி.விவேக் ஆனந்த்   படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism