Published:Updated:

கொஸ்'டீன்ஸ்'

கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்புகள்... கட்டிச் செல்லுங்கள் கிராமப் பெண்களே!

கொஸ்'டீன்ஸ்'

கொட்டிக் கிடக்கும் தொழில் வாய்ப்புகள்... கட்டிச் செல்லுங்கள் கிராமப் பெண்களே!

Published:Updated:
##~##

''குடும்பச் சூழல் காரணமாக தொலைநிலைக்கல்வி மூலம் இளநிலைப் படிப்பை மேற்கொண்டு வருகிறேன். மேற்கல்விக்கும் எதிர்காலத்துக்குமாக என் கிராமத்தில் இருந்தபடியே, என்னைப் போன்ற இளம்பெண்களை திரட்டி, தொழில் வாய்ப்பை மேற்கொள்ள ஆவலாக இருக்கிறேன். என் கனவை நிஜமாக்க வழிகாட்டுவீர்களா?''

 - க.மகாலட்சுமி, கருவேலங்குறிச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பதில் தருகிறார் வி.ஷீலா ராபர்ட், சமூக ஆர்வலர் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கான பயிற்சியாளர், சென்னை...

''உண்மையில் நகரங்களைவிட கிராமங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில்தான் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அரசு, அரசு சாரா அமைப்புகளின் பயிற்சி, நிதி உதவி என பல உதவிக்கரங்கள் கிராமங்களை நோக்கியே நீண்டிருப்பது பலர் அறியாதது. நகரங்களை போலல்லாது... கிராமங்களில் மார்க்கெட்டிங்கும் எளிது. போட்டியும் இருக்காது.

கொஸ்'டீன்ஸ்'

தையல் பயிற்சி, அழகுக்கலை நிபுணர், அழகு சாதனப்பொருள் தயாரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, வாழை நார் மற்றும் பனை பொருள் தயாரிப்பு, அழகு பாய் தயாரிப்பு, ஆபரணத் தயாரிப்பு, எம்ப்ராய்டரி மற்றும் குந்தன் வேலைப்பாடு, செல்போன் சர்வீஸ், மெழுகுவர்த்தி தயாரிப்பு, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, பேப்பர் பேக் தயாரிப்பு என சாய்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த ஐடியாக்களில் உங்களுக்கானதை தேர்வு செய்ய, முதலில் உங்கள் தோழிகளுடன் இணைந்து உங்கள் பகுதியில் கிடைக்கும் மூலப்பொருட்கள், மக்களின் தேவை இவற்றைப் பற்றி 'மினி சர்வே' ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய நவீன கிராமங்களில் திருமணம், நிச்சயதார்த்தம் மட்டுமல்ல... அன்றாடமே அழகுக்கலை மையங்கள் தேவைப்படுகின்றன. இதனுடன் இணைந்து இயற்கை அழகுசாதன பொருள் தயாரிப்பையும் மேற்கொள்ளலாம். மருதாணி ஹேர்டை, மூலிகை ஹேர் ஆயில் மற்றும் ஃபேஸ் பேக் போன்றவற்றை பிரதானமாகக் கொள்ளலாம். செம்பருத்தி, கறிவேப்பிலை, மருதாணி, நெல்லி, கரிசலாங்கண்ணி, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, பாசிப்பயறு, எலுமிச்சை, ரோஜா முதற்கொண்ட அழகுசாதன தயாரிப்புக்கான மூலப்பொருட்களை நீங்களே தயார் செய்வதும் எளிது. உங்கள் தேவை போக, மிச்சத்தை நகரங்களில் இருக்கும் அழகுக்கலை மையங்களுக்கு அருமையான லாபத்தில் விற்பனையும் செய்யலாம். திடமாகவும் தரமாகவும் இதை மேற்கொண்டால்... பிராண்ட் அடிப்படையில் சிறப்பான வருமானத்தையும் பின்னாளில் இவை பெற்றுத் தரும்.

கொஸ்'டீன்ஸ்'

அடுத்ததாக மண்புழு உரம், தாவர விலங்குக் கழிவுகளில் இருந்து உரம், பஞ்சகவ்யம் என அதிக செலவில்லாத இயற்கை இடுபொருட்களைத் தயாரித்து, பக்கத்து கிராமங்களை மையப்படுத்தியே விநியோகிக்கலாம். பனை தயாரிப்புகள், பாய் விரிப்புகள் போன்றவை, இன்று அழகு மற்றும் அலங்காரப் பொருட்களாக அதிகம் விற்பனையாகின்றன. தரையில் வழக்கமாக விரிக்கப்படும் பாய் என்பதை சற்றே முயற்சியெடுத்து அழகுபடுத்தினால்... சுவர் அலங்காரப் பொருள்களாக மாற்றலாம். இப்படி மதிப்பு கூட்டப்படும்போது உங்களுக்கான லாபம் வெகுவாக உயரும். இங்கே பட்டியலிடப்பட்ட தொழில் முனைப்பு ஒவ்வொன்றிலும் வித்தியாசமான ஐடியாக்களையும் சேர்த்துக் கொண்டால், உங்கள் கிராமத்தில் இருந்தபடியே நல்லதொரு எதிர்காலத்தைக் கட்டமைத்துக் கொள்ளலாம்.

சரி, இந்தத் தொழில் முயற்சிக்கான பயிற்சியை எங்கே இலவசமாகப் பெறுவது, யாரை அணுகுவது..?

நபார்டு வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதலான முன்னோடி வங்கிகள், சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசின் புது வாழ்வுத் திட்டம் போன்றவை மூலமாக பயிற்சிகளை இலவசமாகப் பெறலாம்.

நபார்டு வங்கி மற்றும் ஐ.ஓ.பி போன்றவை கிராமப்புற மேம்பாட்டுக்கென தனி திட்டங்கள் வைத்திருக்கின்றன. அவற்றின் கீழ், தொழில்முனைவோருக்கான பயிற்சிகளை வழங்குகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் ஐ.ஓ.பி வங்கி மதிய உணவோடு பயிற்சிகளை வழங்குகிறது. மத்திய அரசின் நிதி உதவியோடு சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம் இதே பயிற்சிகளை மாவட்டம்தோறும் இலவசமாக வழங்குகிறது.

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் ஆண், பெண் இருபாலருக்குமான சுயவேலை வாய்ப்பு பயிற்சிகளை மாநில அரசு வழங்குகிறது. மாவட்டம்தோறும் அமைந்திருக்கும் மாவட்ட திட்ட அலுவலகத்தை அணுகினால், கவுன்சிலிங் மற்றும் இலவசப் பயிற்சியை பெறலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் ஒன்று திரண்டு கோரிக்கை விடுப்பதன் மூலமும் தேவைப்பட்ட பயிற்சியை பெறலாம்.

பயிற்சிக்குப்பின் தொழில் துவங்குவதற்குத் தேவையான நிதியுதவியும் நபார்டு மற்றும் முன்னோடி வங்கிகள் மூலம் பெறமுடியும். இதற்கு உங்களது பயிற்சித் திட்ட சான்றிதழ் மற்றும் தொழில் முனைவுக்கான திட்டவரைவு போன்றவை போதுமானது. இந்த புராஜெக்ட் தயாரிப்புக்கு உங்கள் பகுதியில் செயல்படும் கிராமப்புற தொண்டு நிறுவனம் ஒன்றை அணுகினால் போதும்.

கிராமப்புற விவசாயக் குடும்ப பின்னணியில் இளையோர் மேம்பாட்டுக்கென நபார்டு வங்கி மற்றுமொரு அருமையான திட்டம் வைத்திருக்கிறது. நீங்கள் ஏற்கெனவே சுயஉதவிக் குழு, சமூகக் குழு, தன்னார்வக் குழு என ஏதாவது ஒன்றில் உறுப்பினராக இருந்தாலும் பரவாயில்லை, கிராமத்துக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் செயல்படும் விவசாயக் குழுவில் உறுப்பினராக சேருங்கள். இதன் உறுப்பினர்களுக்கு விவசாய தொழில் சார்ந்த தோட்டக்கலை, காய்கறி மற்றும் பூந்தோட்ட பராமரிப்பு போன்றவற்றுக்கான ஆலோசனை, பயிற்சி, மானியத்துடன் கூடிய நிதியுதவி போன்றவை கிடைக்கும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism