Published:Updated:

ஒரு நாள் 'ஐஸ்வர்யா ராய்’!

அவள் டீன்ஸ்

ஒரு நாள் 'ஐஸ்வர்யா ராய்’!

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

'ஃபெம் ஃபெஸ்ட் 2013 (FEM FEST 2013)’ - சென்னை, சோழிங்கநல்லூர், சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நடத்திய கல்லூரிப் பெண்களுக்கான ஜாலி திருவிழா! 'எங்க ஏரியா உள்ள வராதே!’ என்று பசங்களுக்கு 'நாட் அலவ்டு’ போர்டு போட்டுவிட்டு, போட்டிகள், நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள், சந்தோஷம் என  சென்னையின் பல கல்லூரிகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 10 ஆயிரம் இளம் பெண்கள் கொண்டாடிய ஃபெஸ்டிவல் அது!

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சியின் ஆரவாரம் கூட்டினார்கள். 'இந்தியாவின் மிஸைல் உமன்’ என்று புகழப்படும் 'அக்னி ஐந்து’ ஏவுகணையின் திட்ட இயக்குநர் டெஸ்ஸி தாமஸ்,  இந்திய அளவில் மட்டுமல்லாமல்.. உலக அளவில் பாராலிம்பிக் (Paralympic) விளையாடுப் போட்டிகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி தீபா மாலிக், 'எபிலிட்டி ஃபவுண்டேஷ’னின் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவீந்திரன்  என்று பெண்மையின் வலிமைக்கு உதாராணமான இப்பெண்கள் எல்லாம், பட்டாம்பூச்சிகளாக திரியும் கல்லூரி பெண்களுக்கு தங்கள் பேச்சால் தெம்பும் புத்துணர்ச்சியும் ஊட்டினர். அடுத்ததாக, கல்லூரி பெண்களை குஷிப்படுத்த களம் இறங்கினார்கள் நரேஷ் ஐயரும், ப்ரீத்தி ஜிந்தாவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நாள் 'ஐஸ்வர்யா ராய்’!

ஆன் ஸ்டேஜ் மற்றும் ஆஃப் ஸ்டேஜ் என்று கிட்டத்தட்ட 25 ப்ளஸ் ஈவன்ட்டுகள் நடந்தன. ஒவ்வொன்றும் செமகலக்கல்.

''வீட்டுலயே கோலம் போட்டதில்ல நான். என் பெயரை ரங்கோலி போட்டிக்கு கொடுத்த அந்த நல்லவ வாழ்க!'' என்று தன் தோழியை முறைத்தவாரே வந்த மீரா... ரங்கோலி ஏரியாவை கலவரமாக்கினார்.

'உங்களை ஒரு நாள் ஐஸ்வர்யா ராயாக நினைத்துக் கொண்டு பேசுங்கள்’ என்று 'வேர்ட் பவர்’ போட்டியில் பவித்ராவுக்கு டாபிக் தரப்பட, ''உலக அழகியா இருக்கறதால நான் எந்த நல்ல விஷயத்தை பற்றி விழிப்பு உணர்வு உண்டாக்கினாலும், அது மக்கள்கிட்ட ரீச் ஆயிடும். அதோட, இந்த 'ஒரு நாள்ல உலக அழகியா’ இருந்து செய்ற நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்துட்டு இருப்பேன். ஏன்னா, ஒரு நாள் இல்ல... நான் ஒவ்வொரு நாளும் உலக அழகிதான்!'' என்று பவித்ரா பேச, அரங்கம் அதிர்ந்தது உற்சாகக் கூச்சலில்!

ஆர்.ஜே, வீ.ஜே ஜாக்கி கார்னரில், பேசுவதற்காகவே பிறந்தோம் என்பதுபோல திரண்டிருந்தது ஒரு கூட்டம். ''என்னய்யா போனை போட்டுட்டு பொண்டாட்டிக்கு பொரி உண்டை வாங்க போயிட்டியா...'' என்று ஆரம்பித்து ஒவ்வொருவரும் தங்களின் வாய்த் திறமையை நிரூபிக்க, நடுவராக நம் 'டிடி’ (திவ்யதர்ஷினி). அவரையே டார்கெட் செய்து அனைவரும் நிகழ்ச்சியை ஓட்ட, அவரும் சரமாரியாக கவுன்ட்டர் கொடுத்து விறுவிறுப்பாக்கினார்.

ஒரு நாள் 'ஐஸ்வர்யா ராய்’!

''டிடி... எந்த கடையில இந்த டிரெஸ் வாங்கினீங்க..?'' என்று காவ்யா கேட்க,

''இது பக்கத்து வீட்டு கொடியில ஆட்டய போட்டதுமா..!' என்று வழக்கம்போல் 'டிடி’ சிரிக்க வைக்க, 'லவ் யூ டிடி’ என்று ஒரே கோரஸ் குரல்கள்.

'ஃபெம் ஃபெஸ்ட்’டின் பம்பர் பரிசான ஸ்கூட்டியை வெல்லப் போவது யாரு என்பதற்கு நடந்த 'டன் இட்' (Donit) என்ற போட்டியில், ''நீங்க ரெண்டு குழந்தைகளுக்கு தாயா இருக்கும்போது, மிக அதிக சம்பளத்தை தரக்கூடிய நிறுவனம் உங்களை வெளிநாட்டில் வேலைக்கு அழைக்குது. அதை நிராகரிக்காம... உங்க குடும்பத்தையும், குழந்தைகளையும் எப்படி சரியா பேலன்ஸ் செய்வீங்க..?''

- இந்தக் கேள்வி, லட்சுமி என்கிற மாணவிக்கு தரப்பட்டது.

''இருகரம் கூப்பினால்தான் இறைவனை வணங்க முடியும். அதேபோல கணவன் - மனைவி என்கிற இரு அஸ்திவாரமும் சேர்ந்து இருந்தாதான் குடும்பத்தை தாங்கிப் பிடிக்க முடியும். அதனால் 'குழந்தைகளை நான் பார்த்துக்கறேன்'னு சொல்லி, என்னை வழியனுப்பி வைப்பார் என் கணவர்!'' என்று அசத்தலாக பதில் சொல்லி பரிசைத் தட்டினார் லட்சுமி.

ஒரு நாள் 'ஐஸ்வர்யா ராய்’!

ஈவன்ட்டுகள் தவிர, உணவகங்கள், அழகுப் பொருட்கள், ஆடை, அணிகலன்கள் என்று மாணவிகள் ஒருங்கிணைந்து நடத்திய ஸ்டால்களிலும் ஹாட் சேல்ஸ். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பாதியை... முதியோர் இல்லத் துக்கு கொடுக்கப் போகிறார்களாம்!

''இந்த வருஷத்துக்கான 'ஃபெம் பெஸ்ட்’ ஸ்லோகன் ‘If not now, then when’. இதுக்கு ஏற்றாற்போல, நிகழ்ச்சி நடந்த இந்த ரெண்டு நாளும் சலிக்க சலிக்க சந்தோஷமா இருந்துட்டோம். ஆனாலும் சலிக்காதே! வி ஆர் வெயிட்டிங் ஃபார் பெம் பெஸ்ட் 2014!'' என்று கண்கள் சிமிட்டி கை அசைத்தார்கள் காலேஜ் கேட்பரீஸ்!

- க.பிரபாகரன்

படங்கள்: ரா.மூகாம்பிகை