Published:Updated:

தொண்டுக்காக ஒரு தொடர் ஓட்டம்!

அவள் டீன்ஸ்

தொண்டுக்காக ஒரு தொடர் ஓட்டம்!

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

'ஜாலி, கேலி, சினிமா, மொபைல், ஃபேஸ்புக், காபி ஷாப் என பொழுதைக் கழிப்பவர்கள் கல்லூரி மாணவர்கள்' என்று இன்றைய யூத்களை அடையாளப்படுத்துகிறீர்களா?

 'பாஸ்... அதையெல்லாம் கொஞ்சம் மாத்திக்கோங்க...' என்று அத்தகைய எண்ணங்களைத் தூள்தூளாக்கி, தங்களுக்கு மரியாதையைக் கூட்டுகிறார்கள் திருச்சி என்.ஐ.டி பொறியியல் கல்லூரி மாணவர்கள். 'அபெக்ஷா' அமைப்பின் மூலம் அவர்கள் நிறைவேற்றி வரும் சமூகக் கடமைகளும், சேவைகளும் நிறைய!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அபெக்ஷாங்கற இந்தி வார்த்தைக்கு,  தேவைனு அர்த்தம். ஏழைகளோட தேவைகளுக்கு உதவணும்ங்கற நோக்கத்தோட எங்க காலேஜ் சீனியர்ஸ் சிலர் ஆறு வருஷத்துக்கு முன்ன இந்த அமைப்பை உருவாக்கியிருக்காங்க. அது, இப்ப எங்க கைக்கு வந்திருக்கு. இப்போ இந்த அமைப்பில் மொத்தம் 120 பேர் இருக்கோம். நான், கல்லூரியில சேர்ந்ததிலிருந்து மூணு வருஷமா இதோட உறுப்பினர்'' என்று 'அபெக்ஷா’ உருவான கதை சொன்ன அதன் தற்போதைய தலைவர் ஜோதி பிரகாஷ், செயல்பாடுகள் பற்றியும் பேசினார்.

''எங்க கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே அரசு உதவிபெறும் இடைநிலைப் பள்ளி இருக்கு. அந்த மாணவர்களுக்கு தினமும் மதியத்திலிருந்து மாலை வரை வகுப்புகள் எடுக்குறோம். அந்த ஸ்கூல்ல கம்ப்யூட்டர் வரை எல்லா வசதிகளையும் அரசு செய்து கொடுத்திருந்தாலும், அதெல்லாம் முழுமையா அந்தக் குழந்தைகளுக்குப் பயன்படாம இருந்தது. அந்தக் குறையைப் போக்கி ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்களோட கம்ப்யூட்டரின் அடிப்படை விஷயங்கள் முதல் போட்டோஷாப், சி, சி போன்ற கம்ப்யூட்டர் மொழிகளையும் எங்களுக்குத் தெரிஞ்ச வரை கத்துக் கொடுக்கிறோம். எங்களோட பயிற்சிக்கு பிறகு முன்னேற்றம் இருப்பதை ஆசிரியர்கள் சொல்லி பாராட்டினப்போ, சந்தோஷமா இருந்துச்சு'' என்றார் ஜோதி பிரகாஷ்.

தொண்டுக்காக ஒரு தொடர் ஓட்டம்!

'அபெக்ஷா’வின் துணைத் தலைவர் ஷெர்லி, ''பக்கத்தில் உள்ள கிராமங்கள், தஞ்சாவூர், திருச்சி பகுதிகள்ல உள்ள மனநல காப்பகங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள்னு எங்களோட அன்பும் சேவையும் நீளுது. பேசி, சாப்பிட்டு, விளையாடினு அன்பா நாலு வார்த்தை பேசுற ஜீவன்களைத்தான் அவங்க எதிர்பார்க்கறாங்க. மாதத்தில் ஒருநாள் ஏதாவது இல்லத்துக்குப் போயிடுவோம். சிறப்புக் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்றவங்க, முதியோர்கள்னு நாள் முழுக்க அவங்களோட செலவிடுவோம். கூடவே, அன்றைய நாளுக்கான உணவுச் செலவு, தேவையான பொருட்களுக்கும் நாங்க பொறுப்பேத்துக்குவோம்.

தொண்டுக்காக ஒரு தொடர் ஓட்டம்!

இந்திய அளவில் பிரபலமான பெஸ்டெம்பர், பிரக்யான் போன்ற கலை, அறிவு திருவிழாக்கள்ல எங்க அமைப்பு சார்பா சில போட்டிகளை நடத்தி, அதில் கிடைக்குற பணத்தோட,  மாணவர்களும் நிர்வாகமும் தர்ற நிதி உதவியையும் சேர்த்து வெச்சுதான், இதுமாதிரியான உதவிகளை செய்துட்டு வர்றோம். ஒவ்வொரு முறை விடைபெறும்போது அவங்க கண்கள்ல தெரியுற சந்தோஷமும் நன்றியும்தான் அடுத்தடுத்து இதுபோன்ற விசிட்களை ஏற்பாடு செய்ய எங்களுக்குத் தூண்டுகோலா இருக்கு'' என்றார் ஷெர்லி கண்கள் பனித்து

மாணவர் பார்த்திபன், ''திருமண நாள், பிறந்தநாள்னு இல்லங்களுக்கு பணம் அனுப்புறதவிட, நேரடியா போய் அவங்களைப் பார்த்துக் கொடுத்தோம்னா, ஆத்ம சந்தோஷம்னா என்னனு நாம தெரிஞ்சுக்கலாம். காபி ஷாப்களும், தியேட்டர்களும் தர்ற சந்தோஷத்தைவிட இந்த விசிட்கள் தர்ற திருப்தி அதிகம் என்பதை கல்லூரி மாணவர்களான நாங்க அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கோம்'' என்று பரவசமானார்.

''நாங்க படிச்சு முடிச்சு இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறிட் டாலும், எங்க ஜூனியர்ஸ் 'அபெக்ஷா’வுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பாங்க. இது ஒரு தொடர் ஓட்டம்'' என்று ஒரே குரலில் சொல்கிறார்கள் 'அபெக்ஷா’வினர்!

- பி.விவேக் ஆனந்த்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்